மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஐவகை நிலங்கள் – பகுதி – 8

முனைவர். ந. அரவிந்த்

May 29, 2021

தமிழகத்தின் நிலங்கள் அதன் தன்மையை வைத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்து வகைகளாக சங்ககாலத்தில் பிரிக்கப்பட்டது. குறிஞ்சி மக்கள் தேன் எடுத்தல், கிழங்கு எடுத்தல் போன்ற தொழில்களை செய்தனர். முல்லை நில மக்கள் ஏர் உழுதல், மாடு மேய்த்தல் போன்றவற்றை செய்தனர். மருதநில மக்களின் முக்கிய தொழில் உழவு தொழிலாகும். நெல் மருத நிலத்தின் முக்கிய பயிராகும். நெய்தல் இன மக்கள் மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் போன்றவற்றை செய்துவந்தனர். பாலைநிலத்தில் எந்த விவசாயமும் செய்ய முடியாது. அதனால் அவர்கள் உணவிற்காக மற்ற நான்கு நில மக்களையும் சார்ந்திருந்தனர். இதன்மூலம் தமிழர்களின் பிரதான தொழில் விவசாயம் என்று தெரிகிறது. ஐந்தில் நான்கு வகை நில மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். பாலைநில மக்கள் விவசாயம் செய்த மக்களை சார்ந்து வாழ்ந்து வந்தனர்.

siragu-aivagai-nilam1

தோரா புத்தகத்தின்படி, இப்ராகிம் என்ற ஆபிரகாமின் மகன் பெயர் ஈசாக்கு. ஈசாக்கின் மகன்கள் ஏசா மற்றும் யாக்கோபு. யாக்கோபிற்கு 12 மகன்கள் இருந்தனர். யாக்கோபின் காலத்தில் அவர்கள் வாழ்ந்து வந்த நாட்டினில் பஞ்சம் வந்ததால் அவருடைய மகன்கள் எகிப்து நாட்டிற்கு தங்களின் சகோதரன் யோசேப்பின் மூலமாக இடம் பெயர்ந்தனர். யாக்கோபின் வம்சத்தினர் பஞ்சம் காரணமாக சென்றாலும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். புதிய மன்னர் வந்த பின்னர் அடிமை வாழ்க்கை வாழ்ந்தனர்.

400 ஆண்டுகள் எகிப்து தேசத்தில் அடிமைப்பட்டிருந்த அந்த மக்கள் அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்ப இறைவன், மூசா என்ற மோசேயையும் அவருடைய மரணத்திற்குப் பின்னர் யோசுவாவையும் தேர்ந்தெடுத்து வழி நடத்தினார். செங்கடலையும், பாலை நிலங்களையும், மலைகளையும், யோர்தான் நதியையும், எரிகோ மதிலையும் 40 வருடங்கள் கடந்து கடைசியில் கானான் தேசம் வந்தடைந்தனர். மோசே மரணமடைவதற்கு முன், தான் வழி நடத்தி வந்த மக்களை வாழ்த்தி அவர்கள் எந்தெந்த பகுதிகளை ஆட்சி செய்ய வேண்டுமெனவும் இறைவன் பெயரில் ஆசிகளை வழங்கினார்.

அதன்படி, யோசேப்பு மற்றும் அவனுடைய சகோதரர்கள் வானத்தின் செல்வத்தாலும், பனியாலும், ஆழ்நிலத்தின் நீரூற்றுகளாலும், கதிரவன் வழங்கும் கனிகளாலும் பருவங்கள் விளைவிக்கும் பயன்களாலும், பண்டைய மலைகளின் உயர் செல்வங்களாலும், என்றும் உள்ள குன்றுகளின் அரும் பொருள்களாலும் நிறைந்த நிலங்களை பெறுவார்கள். அதன்படி, மருத நில பகுதிகளான விவசாய நிலங்களும் மற்றும் குறிஞ்சி நிலமாகிய மலைகளும், அவை சார்ந்த இடங்களான குன்றுகளும் யோசேப்பு மற்றும் அவனுடைய சகோதரர்களுடையவை.

அடுத்ததாக, செபுலோனுக்கும் அவனை சேர்ந்தவர்களும் கடல் பகுதிகளிலும், மணற்பாங்கான பாலை நிலங்களையும் பெறுவார்கள். அதன்படி, அவர்கள் நெய்தல் மற்றும் பாலை நிலங்கள் பெறுவார்கள் என்று வாழ்த்தினார்.

அடுத்ததாக, காத்து என்பவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து புயத்தையும் தலையையும் பீறிப் பிளந்திடுவான் என்று மோசே வாழ்த்தினார். அதற்கு, காட்டிற்கு அரசன் சிங்கம். அந்த காடு மற்றும் காடு சார்ந்த பகுதிகளை காத்து என்பவன் பெறுவான் என்று அர்த்தம்.
அதற்கு பின்னர் மோசே, தான் மக்களை வழி நடத்தி வந்த பொறுப்பினை யோசுவாவிடம் கொடுத்துவிட்டு கானான் தேசத்தினை அடைவதற்கு முன்னரே மரணமடைந்தார்.

அவர்கள், தங்களின் சொந்த தேசம் வந்த பின்னர், யோசுவா தான் வழி நடத்தி வந்த மக்களுக்கு மொத்த தேசத்தையும் பங்கிட்டு கொடுத்தான். அதன்படி, நப்தலி கலிலேயக் கடலையும், யாக்கோபு குடும்பத்தார் வயலும் வயல் சார்ந்த இடங்களையும் பெற்றார்கள். யோசுவா, யோசேப்பின் புத்திரர்களுக்கு மலை தேசத்தையும், காடுகளையும் பங்கிட்டு கொடுத்தான். எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, மலை நாட்டையும், வறட்சியான மற்றும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் கொடுத்தான். மனாசேயின் எல்லை சமுத்திரம் வரை இருந்தது. பென்யமின் கோத்திரத்தாருக்கு அருகில் பாலை நிலம் இருந்தது.

தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகியவை உள்ளன. திருநெல்வேலி மாவட்டமானது குறிஞ்சி பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைகளையும், முல்லை பகுதியான களக்காடு முண்டந்துரை காடுகளையும், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பாபநாசம் முதல் மருதூர் அணைக்கட்டு வரை உள்ள மருதம் பகுதிகளையும், நெய்தல் பகுதியான உவரி கடற்கரையையும் மற்றும் பாலை நிலமான திசையன்விளை பகுதிகளையும் உள்ளடக்கியது.
ஊருக்கு எப்படி ஆறு அழகோ அதுபோல் ஐவகை நிலங்கள் இருப்பது நாட்டிற்கு அழகு. தொலை தூரத்தில் உள்ள இரு தேசங்களில் ஐவகை நிலங்களும், அதனை சார்ந்த தொழில்களும் இருப்பது அதிசயமே.

தொடரும்…


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐவகை நிலங்கள் – பகுதி – 8”

அதிகம் படித்தது