மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஒரு நெசவாளிக்கு அரசு வேலை கிடைத்த போது (சிறுகதை)

இராமியா

Sep 10, 2022

siragu oru nesavaalikku2

1973ஆம் ஆண்டு மதுரை மாநகரில் அந்த நெசவாளர்கள் குடியிருப்புப் பகுதி வழக்கம் போல் தான் இயங்கிக் கொண்டு இருந்தது. ஆனால் அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த சில நண்பர்கள் மட்டும் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டும், மகிழ்ச்சியையும் கோபத்தையும் துயரத்தையும் ஒரு சேர வெளிப்படுத்திக் கொண்டும் இருந்தனர். செய்தி இது தான். சந்திரசேகரன் ஒரு நெசாவாளி. ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு எல்லாம் எழுந்து தறியில் அமர்ந்து நான்கு மணி நேரம் நெய்வான். பின் தறியில் இருந்து இறங்கி குளித்து, சாப்பிட்டு விட்டுப் பள்ளிக்கூடம் செல்வான். நான்கரை மணிக்குப் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து 5 மணிக்குத் தறியில் அமர்ந்தால் மீண்டும் நான்கு மணி நேரம் தறி நெய்வான். அப்படி அவன் தறி நெய்துதான் அவனும் அவனுடைய தாய் தந்தையரும் இரு தங்கைகளும் கொண்ட குடும்பம் வாழ்ந்து கொண்டு இருந்தது. இவ்வளவு இடர்ப்பாடுகளுக்கு இடையில் பள்ளி இறுதித் தேர்வில் அவன் 600க்கு 487 மதிப்பெண்கள் எடுத்து இருந்தான்.

அந்தக் காலத்தில் 600க்கு 400 மதிப்பெண்கள் எடுப்பது என்பதே மிக நன்றாகப் படிப்பவர்களால் தான் முடியும். இவன் 487 மதிப்பெண் எடுத்தது பற்றி வியப்பு அடையாதோரே இல்லை. அவனை மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் அவனுடைய வீட்டுக்கே வந்து அவனுடைய பெற்றோர்களைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவனால் கல்லூரிப் படிப்பை எட்ட முடியாத நிலை கண்டு வருந்தினர். பள்ளிக்கூடம் ஐந்து நிமிட நடை தூரத்தில் இருந்ததால் அவனால் எட்டு மணி நேரம் தறி நெய்து கொண்டு பள்ளிக்கும் செல்ல முடிந்தது. ஆனால் மிக அருகில் உள்ள கல்லூரிக்குச் சென்று வரவே போக வர இரண்டு மணி நேரம் தேவைப்படும். மேலும் பள்ளியில் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும்போது கவனிப்பதின்மூலம் மட்டுமே அவனால் அவ்வளவு விசயங்களையும் உள்வாங்க முடிந்தது. கல்லூரியில் / உயர் கல்வியில் அப்படி முடியாது. படிப்பதற்கு என்றே நேரம் தேவைப்படும். அப்படி என்றால் வருமானம் செய்வதற்காகத் தறி நெய்வது யார்? அவனுக்கு இருந்த குடும்பச் சூழ்நிலையில் உயர் கல்வி பற்றிக் கற்பனை கூட அவன் செய்தது இல்லை. ஆகவே அவனுக்கு எந்த விதமான ஏமாற்றமும் ஏற்படவில்லை.

சில நண்பர்கள் மட்டும் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டும் மகிழ்ச்சியையும் கோபத்தையும் துயரத்தையும் ஒரு சேர வெளிப்படுத்திக் கொண்டு இருக்க எப்படி முடியும் என நினைத்தவர்கள் இந்நிகழ்வுடன் பொருத்திப் பார்த்து அப்படி ஒரு சூழல் இதுதான் என நினைத்தால் அது அரை குறைப் புரிதலே. உண்மையில் அவனுடைய நண்பர்கள் அப்படி ஒரு கலவையான மனநிலையில் இருந்ததற்கு இதை விட மோசமான மற்றொரு சூழ்நிலையில் தான்.

சில நாட்கள் கழித்து, தொலைப்பேசித் துறையில் இருந்து வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து, சந்திரசேகரன் தொலைப்பேசி இயக்குபவர் வேலைக்கு விண்ணப்பித்தான். நான்கு மாதங்கள் கழித்து அவனுக்கு வேலை நியமன ஆணை வந்தது. பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்களே அரசு வேலை கிடைக்காமல் திண்டாடும் காலத்தில் பள்ளி இறுதிப்படிப்பு மட்டுமே படித்த சந்திரசேகரனுக்கு அரசு வேலை கிடைத்தது கண்டு பலர் மகிழ்ச்சி அடைந்தனர். சொல்லப் போனால் சிலருக்குப் பொறாமை கூட ஏற்பட்டது. ஆனால் நண்பர்களின் மகிழ்ச்சியும் சிலருடைய பொறாமையும் ஒரு நாளுக்கு மேல் நீடிக்கவில்லை. அவனுடைய வேலை நியமன ஆணையில் இருந்த நிபந்தனைகள் அவ்வேலையை அவன் ஏற்க முடியாதபடி பெரும் தடையாக இருந்தன. அந்த வேலையை ஏற்கும் முன் தேனியில் மூன்று மாதங்களும், கோயம்புத்தூரில் நான்கு மாதங்களும் பயிற்சி பெற வேண்டும் என்பதும் பயிற்சிக் காலத்தில் ஊதியம் இல்லை என்பதுமே அந்த நிபந்தனைகள். அதாவது ஏழு மாதங்கள் வருமானத்திற்கு வழி இல்லை. இந்நிலையில் அவனால் என்ன செய்ய முடியும்? மிக அரிதாகக் கிடைத்த வாய்ப்பினைக் கைவிடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இதை அறிந்ததும் நண்பர்கள் அனைவரும் வருந்தினர். பொறாமைப்பட்டவர்களும் தங்கள் பொறாமையை மறந்து வருந்தவே செய்தனர்.

ஆனால் நெசவு வேலை செய்யும் அவனுடைய வகுப்பறை நண்பன் ஜெயப்பிரகாஷ் எப்படியும் அவனை நெசவு வேலையில் இருந்து வெளியே கொண்டு வந்து அரசு வேலையில் அமர்த்தி விட வேண்டும் என்று துடியாய்த் துடித்தான். அப்பகுதியிலேயே வாழ்ந்து கொண்டு இருந்தவர்களில் அதிகமாகப் படிக்கிறவன் குபேந்திரன் என்பவன். அவன் அவர்களை விட நான்கு வயது மூத்தவன். பொறியியல் பட்டப்படிப்பு படித்துக் கொண்டு இருந்தான். அவனை அப்பகுதியில் உள்ளோர் பாபு என்று செல்லமாக அழைப்பார்கள். ஜெயப்பிரகாஷ் குபேந்திரனிடம் வந்து “பாபு! நாம் எப்படியும் சந்திரசேகரனை அந்த வேலைக்கு அனுப்பி ஆக வேண்டும். நான் சரியாகப் படிக்காதவன் தறி நெய்கிறேன். நன்றாகப் படிக்கும் அவன் ஏன் இந்த தறிக் குழியில் வேக வேண்டும்? இந்தப் பகுதியிலேயே நீ தான் அதிகம் படித்தவன். ஆகவே நீ தான் எடுத்துச் சொல்லி அவனை வேலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றான்.

குபேந்திரனும் சந்திரசேகரனின் வீட்டுக்குச் சென்று அவர்களுடைய பெற்றோரைக் கண்டு பேசினான். மகனுக்குக் கிடைத்து இருக்கும் அரிய வாய்ப்பை நழுவ விட வேண்டும் என்று அவர்கள் மட்டும் நினைப்பார்களா? பயிற்சிக் காலமான ஏழு மாதங்களில் எப்படி காலத்தைத் தள்ளுவது என்று கேட்டார்கள். அவனால் மறுமொழி சொல்ல முடியாமல் வெளியே வந்து விட்டான். அங்கு ஆவலுடன் காத்து இருந்த ஜெயப்பிரகாஷிடம் ஏழு மாதங்கள் காலம் தள்ளுவது எப்படி என்று தெரியாத நிலையில் அவனை எப்படி வேலைக்கு அனுப்புவது என்று தெரியாமல் அவனுடைய பெற்றோர்கள் திணறுவதைக் குபேந்திரன் எடுத்துக் கூறினான்.

இதைக் கேட்ட ஜெயப்பிரகாஷ் “பாபு! நாம் எல்லாம் எதற்கு இருக்கிறோம்? நாம் எல்லாம் சேர்ந்து அவனை ஏழு மாதங்கள் மட்டும் நாங்கள் பார்த்துக் கொண்டால் அவன் தறிக் குழியில் வெந்து கிடப்பதில் இருந்து தப்பி விடுவானே? நான் தான் நன்றாகப் படிக்காதவன், தறிக் குழியில் வெந்து கிடக்கிறேன். நன்றாகப் படித்த அவன் ஏன் வெந்து கிடக்க வேண்டும்?” ஜெயப்பிரகாஷின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. ஜெயப்பிரகாஷின் சொற்கள் குபேந்திரனுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தது போல் இருந்தது. ஒரு ஏழுமாதங்களுக்கு நண்பர்கள் இணைந்து ஒருவனைப் பார்த்துக் கொள்ள முடியுமே என்ற யோசனை “நன்றாகப் படிக்காதவன், நன்றாகப் படிக்காதவன்” என்று அடிக்கடி புலம்பிக் கொள்ளும் ஒருவனுக்குத் தோன்றிய யோசனை அதிகமாகப் படித்த தனக்குத் தோன்றாமல் போனதே என்று தன் மீதே கழிவிரக்கம் கொண்டான். அவனுடைய நட்பின் ஆழத்தைக் கண்டு வியந்து இனி எப்படியும் சந்திரசேகரனை அரசு வேலைக்கு அனுப்பி விட வேண்டும் என்று உறுதி கொண்டான்.

மீண்டும் அவன் சந்திரசேகரன் வீட்டுக்குச் சென்றான். இம்முறை ஜெயப்பிரகாஷ் உட்பட மற்ற நண்பர்களையும் அழைத்துச் சென்றான். ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தும் பயன்படுத்த முடியாத நிலையினால் சோர்ந்து போயிருந்த சந்திரசேகரனும் அவனுடைய பெற்றோர்களும் வந்தவர்களை வியப்புடன் பார்த்தனர். அவனுடைய பெற்றோர்களிடம் பயிற்சிக் காலமான ஏழு மாதங்களில் சந்திரசேகரனுடைய பராமரிப்புக்கான செலவை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஏற்றுக் கொள்வதாகவும், குடும்பச் செலவை ஈடுகட்ட அவனுடைய தாயார் செய்யும் பாவுப் பிணைப்பு (ஒரு பாவு அறுத்த பின் இன்னொரு பாவு நீட்டுவதற்கு முன் இரண்டு பாவுகளிலும் உள்ள இழைகளை இணைப்பது) வேலையை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்றும், அந்த ஏழு மாதங்களில் திரைப்படம் போவது புலால் உணவு உண்பது இன்னும் இது போன்ற செலவுகளைக் குறைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினான்.

இதைக் கேட்ட அவனுடைய தாய் சிறிது நேரம் அசைவற்று இருந்தார். இவற்றை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்த அவனுடைய தங்கைகள் இருவரும் தாங்களும் பள்ளிக்குப் போகும் நேரம் தவிர மிகுதி நேரங்களில் கூலிக்கு நூல் சுற்றுவதாக முன் வந்து கூறினர். இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த அவனுடைய தந்தையின் கண்களில் நீர் வழிந்தது. அவர் ஒரு நீண்ட கால  நோயாளியாக இருந்தார். அவரால் எழுந்து நடமாட மட்டுமே உடலில் வலு இருந்ததே ஒழிய ஓடி ஆடி வேலை செய்யும் திறனை இழந்து இருந்தார். அப்படியும் அவர் பாவு நீட்டும் வேலையில் உதவி செய்து தன்னால் முடிந்த அளவு சம்பாதிக்கிறேன் என்று கூறவும் சந்திரசேகரன் அழுதே விட்டான். அவனுடன் சேர்ந்து நண்பர்களும் அழுதனர். சிறிது நேரம் கழித்து அனைவரும் சேர்ந்து சந்திரசேகரனை அரசு வேலைக்கு அனுப்புவது என்று முடிவு செய்தனர்.

அவ்வாறு முடிவு செய்து விட்டு வெளியே வந்த உடன் இன்னும் பல நண்பர்கள் கூடி விவாதித்தனர். மாதாமாதம் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த தொகையைக் கொடுப்பது என்று முடிவு செய்தனர். கூட்டிக் கழித்துப் பார்த்த போது அத்தொகை போதாது என்று தோன்றியது. குபேந்திரனுடைய நண்பர்கள் சிலர் ஒரு சங்கம் அமைத்துக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் தங்களால் முடிந்த பணத்தைப் போட்டு ஏழைக் குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணம் கட்டுதல், புத்தகங்கள் அளித்தல் போன்ற உதவிகளைச் செய்து கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் சந்திரசேகரனின் நிலைமையை விளக்கி மாதாமாதம் அவனுக்குப் பண உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். முதலில் புரிந்து கொள்ளாமல் மறுத்த அவர்கள் விரிவான விளக்கத்திற்குப் பிறகும் உதவியைக் கடனாகத்தான் கேட்பதாகவும் கூறிய பின் ஒப்புக் கொண்டனர், இந்த உதவி நண்பர்களுக்கு மிகுந்த மன அமைதியை அளித்தது.

சந்திரசேகரனுக்குப் பயிற்சிக் காலம் முடிந்த பின் மதுரையிலேயே வேலை செய்ய முதல் வேலை நியமன ஆணை கிடைத்தது கண்டு அனைவரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். அவனும் பயிற்சிக் காலத்தில் தான் பெற்ற கடன்களை எல்லாம் முதல் ஆண்டில் அடைத்து முடித்தான். வாழ்க்கையின் அசாதாரணப் பிரச்சினைகள் தீர்ந்த உடன் அஞ்சல் வழியில் மேற்படிப்பு படித்தான். அதன் மூலம் போட்டித் தேர்வுகளுக்குத் தகுதி பெற்று அவற்றில் எல்லாம் தேர்வு பெற்று உயர் பதவிகளை அடைந்தான். அதனால் வேறு ஊர்களுக்கும் வேறு மாநிலங்களுக்கும் சென்றான். அவனைப் பற்றி அனைத்துமே நல்ல விதமாகக் கேள்விப்படவே அவன் மீது நண்பர்கள் அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று. நண்பர்களும் அவரவர்க்குத் திருமணம் குடும்பம் என்றாகியும், நகர்மய வளர்ச்சியினால் நெசவுத் தொழில் செய்தவர்கள் புறநகர்ப் பகுதிகளை நோக்கிப் பல திசைகளில் சிதறிச் சென்று விட்டனர்.

பொறியாளரான குபேந்திரன் சென்னையில் வேலை கிடைத்துச் சென்றவன் ஓய்வு பெற்ற பின்,  மற்ற குடும்பப் பிரச்சினைகள் தீர்ந்த பின் நாற்பத்து ஆறு ஆண்டுகள் கழித்து மதுரைக்குத் திரும்பி வந்தான். வந்த பின் பழைய நண்பர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முயன்றான். பல நண்பர்களின் தொடர்பு கிடைத்தது. கவலைக்கு உரிய செய்தியாக இருவர் மரணம் அடைந்து இருந்தனர். ஆனால் சந்திரசேகரனைப் பற்றியும் அவனுடைய குடும்பத்தைப் பற்றியும் எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. யாரைப் பற்றி யாரிடம் எந்த விதமான செய்தி இல்லாவிட்டாலும் ஜெயப்பிரகாஷிடம் சந்திரசேகரனைப் பற்றிய செய்தி உறுதியாகக் கிடைக்கும் என்று நினைத்த அவனுக்குஏமாற்றமே மிஞ்சியது.வேறு யாரிடம் இருந்தாவது அவனைப் பற்றிய செய்தி கிடைக்குமா என்று பல விதமாக முயன்று பார்த்தும் பயன் ஏதும் கிடைக்கவில்லை.

இப்படியாக நாட்கள் சென்று கொண்டு இருந்த போது ஒரு ஞாயிறு அன்று அந்த நெசவாளர் குடியிருப்பில் இருந்த அனைத்து நண்பர்களையும் ஒரு மதிய உணவுக்கு விருந்துக்கு அழைத்துப் பேசலாம் என விரும்பி அனைவரையும் அழைத்தான். நண்பர்களும் மகிழ்ச்சியுடன் வர ஒப்புக் கொண்டனர். குபேந்திரன் அந்த நாளுக்காகக் காத்திருந்த போதுதான் கூடுதல் மகிழ்ச்சி தரும் விதமாக அவனுடைய அலைப் பேசியில் எதிர்பாராத ஒரு அழைப்பு வந்தது. அவன் 1988 – 89ஆம் ஆண்டில் பிரிட்டன் அரசின் தேர்வின் பேரில் அந்த அரசின் உதவித் தொகை பெற்று உயர் கல்வி கற்கச் சென்று இருந்தான். அப்பொழுது அவனுடன் படித்த சூடான் நாட்டு மாணவி சால்வா எல்சயீத் (Salwa Elsaeed) என்பவள் தொடர்பு கொண்டாள். அவர்தன் அலுவல் நிமித்தமாகச் சென்னை வந்து இருப்பதாகவும், என்னைக் காண விரும்பி நான் வேலை பார்த்த அலுவலகத்துக்குச் சென்று விசாரித்ததாகவும் அவர்கள் மூலம் என்னைப் பற்றிய விவரங்கள் கிடைத்தன என்றும் கூறினாள். வரும் ஞாயிறு அன்று மதுரைக்கு வந்து சந்திக்க முடியுமா என்றும் கேட்டாள். அன்று தன் நண்பர்களை வீட்டுக்கு அழைத்த நாளாக இருந்தது. அதுவும் நல்லதே என்று நினைத்த குபேந்திரன் சரி என்று ஒப்புக் கொண்டான்.

அந்தக் குறித்த நாளும் வந்தது. குபேந்திரன் காலையில் விமான நிலையத்திற்குச் சென்று சால்வாவை அழைத்து வந்தார். சால்வா தான் தங்குவதற்கான விடுதியைப் பற்றி விசாரித்தபோது எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தன் வீட்டிலேயே தங்கலாம் என்று குபேந்திரன் கூற, தான் அன்று இரவே சென்னை திரும்ப வேண்டும் என்று சால்வா தெரிவித்தாள். இருவரும் தங்கள் பழைய நினைவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். அங்கு செய்யப்பட்டு வைத்து இருந்த ஏற்பாடுகளைப் பார்த்து “நான் ஒருத்தி தானே வந்து இருக்கறேன். ஆனால் பத்துப் பதினைந்து பேர்கள் வருவது போல ஏற்பாடு செய்து இருக்கிறாயே?” என்று அவள் கேட்க, அவன் தன் நண்பர்களையும் அன்று அழைத்து இருப்பதைத் தெரிவித்தான். அப்படி என்றால் தன்னுடைய வரவு ஒரு இடையூறா என்பது போல் அவள் பார்க்க, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்றும் அது ஒரு நல்வாய்ப்பு என்றும் அவன் கூறினான். அப்படிப் பேசிக் கொண்டே காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டார்கள்.

சிறிது நேரத்தில் பழைய நண்பர்கள் வந்து சேர்ந்து விட்டனர். குபேந்திரன் அனைவரையும் வரவேற்று ஒருவருக்கு ஒருவரை அறிமுகம் செய்து வைத்தான். சால்வா பேசியதை நண்பர்களுக்கும், நண்பர்கள் பேசியதை சால்வாவுக்கும் மொழி மாற்றிக் கூறும் பொறுப்பை குபேந்திரனும் அவனுடைய மனைவி சுமதியும் திறம்படச் செய்தனர். பேச்சின் இடையில் சந்திரசேகரனைப் பற்றிய பேச்சு அடிக்கடி வரவே சால்வா அவனைப் பற்றி விசாரித்தாள்.

சந்திரசேகரன் பள்ளியில் படிக்கும் போது தினமும் எட்டு மணி நேரம் தறி நெய்த விவரமும், அப்படியும் மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்று தேறியதும், அதிக மதிப்பெண்கள் பெற்றாலும் மேற்கொண்டு படிக்க முடியாத குடும்பச் சூழலைப் பற்றியும், பின் அரசு வேலை கிடைத்தும் போக முடியாத சூழ்நிலையைப் பற்றியும், பின் ஜெயப்பிரகாஷின் கடும் முயற்சியால் அவ்வேலைக்குப் போக முடிந்தது பற்றியும் அவளிடம் விவரமாகத் தெரிவித்தான். அதன் பின் அவன் தான் பட்ட கடன்களை எல்லாம் தீர்த்த பின் அஞ்சல் வழியில் மேற்கொண்டு படித்ததும், பின் போட்டித் தேர்வுகள் எழுதி உயர் பதவிகளை அடைந்ததும், அதன் பின் அவனைப் பற்றியும், அவன் குடும்பத்தைப் பற்றியும் எந்த விவரமும் தெரியவில்லை என்றும் கூறினான்.

அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்த சால்வா இவர்களில் ஜெயப்பிரகாஷ் யார் என்று கேட்டாள். ஜெயப்பிராஷைக் காட்டிய உடன் தன் கையில் இருந்த மோதிரத்தைக் கழற்றி ஜெயப்பிராஷின் கையில் அணிவித்தாள். தன் வாழ்நாளில் இது வரை, தான் சரியாகப் படிக்காததால் கீழ் நிலை வேலையில் இருப்பது சரி என்றும் நன்றாகப் படித்த தன் நண்பன் அவ்வாறு கஷ்டப்படக் கூடாது என்ற பக்குவமான மனநிலை வாழ்வின் இறுதி நிலையில் உள்ளவர்களுக்கு இருப்பதே சிரமம். அப்படி இருக்க பதின்ம வயதிலேயே அந்த மனப்பக்குவம் இருந்திருக்கறது என்றால் அதற்கு உலக அளவில் ஒரு விருது அளிக்க வேண்டும். ஆகவே தன்னால் முடிந்த ஒரு சிறு பரிசாகத் தன் மோதிரத்தை அளித்ததாகச் சிரித்துக் கொண்டே கூறினாள்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஒரு நெசவாளிக்கு அரசு வேலை கிடைத்த போது (சிறுகதை)”

அதிகம் படித்தது