மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஒரு யானை ஒரு ராஜா (சிறுகதை)

மா.பிரபாகரன்

Nov 4, 2017

Mother with daughter in the park

ஒரு காட்டில் யானை ஒன்று இருந்தது, நீண்ட தந்தங்களுடன் கரியமேகம் ஒன்று தரைக்கு இறங்கி வந்தது போன்று கம்பீரமாக இருக்கும். அது காட்டின் ஒரு நீர்நிலைப் பிரதேசத்தைத் தனதாக்கிக் கொண்டு அதில் வசித்து வந்தது. அந்தப்பகுதியில் மான்கள், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி போன்ற தாவரஉண்ணிகளை மட்டுமே யானை அனுமதிக்கும், மற்ற விலங்குகளை அனுமதிக்காது. ஒவ்வொரு நாளும் தனது வழித்தடத்தில் யானை மகிழ்ச்சியாக உலாச் செல்லும். அவ்வாறு செல்லுமபோதுசமயங்களில் சிங்கம், சிறுத்தை புலி போன்ற மிருகங்கள் எதிர்படும். ஆனால் அவைகள் யானையைக் கண்டு அஞ்சிப் பின்வாங்கிவிடும்.

அந்தக் காட்டில் நரிகள் கூட்டம் ஒன்று இருந்தது. அந்த நரிகளுக்கு யானையின் களிப்பும், மதர்ப்பும் பிடிக்கவில்லை. அது அவைகளுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. அவைகள் யானையை வீழ்த்த எண்ணின் ஒரு நாள் கூட்டமாக அவைகள் யானையை எதிர்கொண்டன யானை சிறிதும் அஞ்சவில்லை. நரிகளைப் பந்தாடியது. நரிகள் ஓடி ஒளிந்தன, யானையை நேருக்குநேர் எதிர்கொள்ள முடியாது என்பதை அவைகள் புரிந்து கொண்டன, யானையை வீழ்த்த அவைகள் சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்தன.

கோடைகாலம் வந்தது. காட்டில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. யானை வசித்து வந்த பிரதேசத்தின் நீர்நிலையும் வற்றியது. தண்ணீர் மிகவும் வற்றி ஒரு குட்டை போல் ஆனது. ஒருநாள் யானை தூங்கிக் கொண்டிருந்த சமயம்,நரிகள் அந்தக் குட்டைக்கு வந்தன. அதில் இறங்கித் தண்ணீரை உழப்பின் அடிமண்ணை குட்டைக்குள்ளேயே அங்கும் இங்கும் வாரி இறைத்தன. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அந்தப்பகுதியைச் சேறும் சகதியுமாக்கி விட்டுச் சென்றன. இரவு முழுவதும் ஊறிய மண் புதைமண்ணாகிப் போனது.

காலையில் யானை நீர் அருந்த வந்தது. அது நீரின் தோற்றம் மாறியிருப்பதைக் கவனித்தது. ஆனால் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நடந்து வந்த யானை குட்டையில் கால் வைத்தது. சேறு நெகிழ்ந்து கால் சிக்கிக் கொண்டது. காலை விடுவிக்கும் போராட்டத்தில் யானை மேலும் பலமாகச் சிக்கிக் கொண்டது. மறைவிலிருந்து நரிகள் வெளிவந்தன் சேற்றில் புதைந்த யானையை அவைகள் எளிதாக வென்றுவிட்டன.

நிவேதா ஐந்து வயதுச் சிறுமி,அவள் தூங்க வேண்டும் என்பதற்காகத்தான் அம்மா இந்தக் கதையைச் சொன்னார். ஆனால் அவள் கொட்டக்கொட்ட விழித்திருந்தாள். அவளுக்கு கம்பீரமான யானை நரிகளிடம் சிக்கிக் கொண்டது பிடிக்கவில்லை. அவள் அம்மாவிடம் “யானை என்னம்மா பாவம் செஞ்சுச்சு! நரிங்க ஏன் சூழ்ச்சி பண்ணனும்! அதுங்க செஞ்சது தப்பில்லையா?”– என்று கேட்டாள். அம்மா நிவேதாவிடமிருந்து இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அவளை சமாதானப்படுத்தும் விதத்தில் இப்படிச் சொன்னார். “நரிகள் செஞ்சது தப்புதான்! ஈனச்செயல்னு கூட சொல்லலாம்! அதுனாலதான் மனுஷங்கள்ல ரொம்பத் தந்திரமானவங்களை ‘குள்ளநரி’ ன்னு சொல்றாங்க! ஆனா யானையைப் பத்திச் சொல்லும் போது ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்’-அப்படீனு சொல்றாங்க! கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே! நீ இதைப் புரிஞ்சுக்கணும்ங்குறதுக்காகத்தான் நான் இந்தக் கதையைச் சொன்னேன்!”– என்றார் அம்மா.

“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களேன்னா என்னம்மா அர்த்தம்!”- நிவேதா கேட்டாள்.

“புரியலையா உனக்கு? அதுக்கு ஒரு கதை சொல்றேன் கேள்” – என்று இன்னொரு கதை சொல்ல ஆரம்பித்தார் அம்மா.

மரகதநாட்டை மகேந்திரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். சிறப்பாக ஆட்சி செய்த அவன் நீண்டகாலம் பதவியிலிருந்தான். இதனால் மன்னரின் சொந்த சகோதரன் தான் அரியணை ஏற முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தான். அவன் சூழ்ச்சி செய்து மன்னரை வீழ்த்தினான். அவரை நாடு கடத்தினான். நாடு கடத்தப்பட்ட மன்னரும் ஒரு மலைக்காட்டில் வசித்து வந்தார்.

மன்னர் வசித்து வந்த காட்டை ஒருநாள்புலவர் ஒருவர் வழிப்போக்காகக் கடந்து சென்றார். அவர் மன்னரைக் கண்டார். புலவர் ஒரு நாடோடி. தேச தேசமாக சுற்றுபவர். அவருக்கு மன்னர் ராஜ்யத்தை இழந்தது தெரியாது. மன்னர் ஏதோ காட்டுக்கு வேட்டையாட வந்திருப்பதாக எண்ணிவிட்டார். அவர் மன்னரைத் துதி பாடி நின்றார். துதிபாடிய புலவருக்குப் பரிசில் தர வேண்டுமே? மன்னரிடம் வாளைத் தவிர வேறெதுவுமில்லை. போர்களம் பல கண்ட வெற்றிவாகை சூடிய ராசியான வாள் அது.அதனால்தான் ராஜ்யத்தை இழந்தபோதும் மன்னர் வாளை மட்டும் விடாது தன்னோடு வைத்திருந்தார். மன்னர் சிறிதும் தயங்கவில்லை, புலவருக்கு வாளைப் பரிசாகத் தந்து விட்டார். மன்னர் வாளைத் தந்த பின்புதான் புலவருக்கு நிலமையின் விபரீதம் புரிந்தது. கொடுத்தப் பொருளைத் திரும்பப் பெறுவது அரசதர்மம் இல்லையே? அதனால் புலவர் வாளைத் திருப்பித் தந்த போதும் மன்னர் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

இந்தக் கதையைச் சொல்லிவிட்டு அம்மா நிவேதாவைப் பார்த்தார். “ஏம்மா! மன்னர் தன்னோட நிலமையை புலவர்கிட்ட எடுத்துச் சொல்லியிருக்கலாம் இல்லையா?”– நிவேதா கேட்டாள்.

“மன்னர் நினைச்சிருந்தா புலவர்கிட்ட தன்னோட நிலமைய எடுத்துச் சொல்லியிருக்கலாம்! வாளைப் பரிசாகத் தர வேண்டிய அவசியமில்லை! ஆனா அப்படி செஞ்சா தன்னைத் துதிபாடிய புலவரை ஏமாத்துன மாதிரி ஆயிரும்! தன்னோட நிலை தாழ்ந்தாலும் உயர்ந்த சிந்தனை உள்ளவங்க செயலும் உயர்வாத்தான் இருக்கும்! அதுனாலதான் மன்னர் தனது வாளையே புலவருக்குப் பரிசாக் கொடுத்தாரு! இதைத்தான் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களேன்னு சொல்றது!”– என்றார் அம்மர்

நிவேதாவின் முகத்தில் இப்போதும் கேள்விக்குறிகள் தொக்கியிருந்தன. அவள் அம்மாவிடம் “ராஜாவும் நல்லவர்! யானையும் நல்ல யானை! பிறகு ஏம்மா அவங்க இப்படி ஒரு கஷ்டத்தைச் சந்திக்கனும்! அவங்க சந்தோசமா வாழ்ந்திருக்க வேண்டாமா?”–என்று கேட்டாள்.

“இன்னும் கதை முடியலை! கதையோட முடிவு தெரிஞ்சா நீ இப்படிக் கேட்க மாட்ட! யானையைக் கொன்ற நரிகள் வாழ்ந்த காட்டுல ஒருநாள் ஊழிப் பிரளயம் உண்டாச்சு! அப்ப ஏற்பட்ட பெருவெள்ளத்துல நரிகள் வாழ்ந்து வந்த குகை இடிஞ்சது! நரிகள் எல்லாம் பாறைக்கு அடில நசுங்கிக் கோரமா செத்துப்போச்சு! ‘பாவம் செஞ்சவங்களுக்கும் கடவுளே தண்டனை கொடுப்பாரு’-ங்குறதுக்கு இது ஒரு உதாரணம்!”– என்றார் அம்மா.

“அப்ப அந்த ராஜா கதை…?”– கேட்டாள் நிவேதா.

“அவர் விசயத்துல அற்புதம் நடந்துச்சு! புலவர் வாளோட நேராக நாட்டுக்குப் போயி ராஜாவோட சகோதரனைச் சந்திச்சாரு! மன்னரோட கொடையுள்ளத்தைக் கண்ணீர் மல்க எடுத்துச் சொன்னாரு! உங்களோட ஆசையை வெளிப்படையாச் சொல்லியிருந்தா மன்னர் ராஜ்யத்தை விட்டுக் கொடுத்துருப்பாரு! அதுக்காக சூழ்ச்சி செஞ்சு அவரை நாடு கடத்தனும்ங்குற அவசியமில்லைனாரு! அரசகிரீடம் ஒரு முள்கிரீடங்குறதை அந்த சகோதரனும் உணர்ந்திருந்தாரு!. அவர் மன்னரைத் திரும்ப அழைச்சு நாட்டை ஒப்படைச்சாரு! மன்னர் சகோதரனைப் பழி வாங்கலை! அவரையும் அரவணைச்சிக்கிட்டு மேலும் பல ஆண்டுகள் சிறப்பா ஆட்சி செஞ்சாரு! ‘தர்மம் தலைகாக்கும்’-ங்குறதுக்கு இது உதாரணம்! என்றார் அம்மா இரண்டு கதையும் எப்படி இருந்தது என்ற பாவனையில் அவர் நிவேதாவைப் பார்த்தார். நிவேதா பதில் சொல்லவில்லை. அவள் அம்மாவின் இந்த பதிலில் திருப்பதியுற்றிருந்தாள் என்பதை அவள் கண்களைத் தழுவிய தூக்கம் காட்டியது.


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஒரு யானை ஒரு ராஜா (சிறுகதை)”

அதிகம் படித்தது