மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஓடப் பறவை(கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jul 31, 2021

siragu odapparavai1

 

தாளமிடும் காற்றை பிடித்தடைத்து

தளையிட நினைப்போர்,

தரையிறங்கும் வெண்ணிலவின் நிழலை

நீட்டித்து வைத்திருக்க நினைப்போர்,

நீருக்குள்…

 

தோரணங்கள் காற்றில் ஆடுகிற ஓசையில்,

நெஞ்சில் புதைத்து வைத்திருந்த

உணர்வு மேகங்கள்

மூளையின் நரம்புகளுடன்

இடியென மோதின…

 

இடிக்குப் பின் மழை பெய்யாது

என எவர் சொன்னது?

சொன்னவரின் கண் மறைத்துப்

பொழிகிறது கண்ணீர்

திவலைகள்;

 

திவலைகள் தொடுவானம்

பறந்திட ஓடம் தயாரித்தது;

ஓடத்தின் ஓரத்தில் இறக்கைகள்

மனதின் வேரிலிருந்து  செய்யப்பட்டு

இணைக்கப்பட்டன;

 

நீரில் நீந்தும் ஓடம்

இறகுகளுடன் பறந்தது வானத்தில்;

வானமே வியப்பானது

புதுவகை பறவை கண்டு;

 

ஓடப் பறவை ஏற்றிச் சென்றது

என் எண்ணங்களின் நிறங்களை;

எண்ணங்களின் நிறங்கள்

பார்த்து முகிலினங்கள் கூட

மறைந்து போயின!!

 


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஓடப் பறவை(கவிதை)”

அதிகம் படித்தது