மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

“ஔவைப்பாட்டி”

தேமொழி

Jul 7, 2018

 முன்னுரை:

 siragu avvai1

தமிழ்ப்புலவர் ஔவையாரை அறியாத தமிழரே இருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தால் அவர்கள் பள்ளி செல்லும் வயது வராத சின்னஞ்சிறு மழலையர் பட்டாளம் மட்டுமே. அகரமுதல என அ, ஆ, இ  என்ற எழுத்து வரிசையைப் படிக்கத் தொடங்கும் வயதில் ‘ஔ’ என்ற எழுத்துக்கு எடுத்துக்காட்டாக அனைவரும் படித்து வருவது ஒரு மூதாட்டியாகக் காட்டப்படும் ஔவையாரையே. அதற்கு மேல் அவரைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்த அந்த வயது முதற்கொண்டும் பின்னர், ‘ஆத்திச்சூடி’ என்ற நீதி நூல் கூறும் “அறம் செய விரும்பு” “ஆறுவது சினம்” “இயல்வது கரவேல்” என்று அவர் பாடல்களைப் படிக்கத் தொடங்கி விடுவோம். ஆக, ஔவையாரின் பாடல்கள் தெரியாத தமிழரே கிடையாது என்றும் உறுதியாகச் சொல்லலாம்.

பொதுவாகப் பலரும் அவரைப் பற்றி கொண்டிருக்கும் கருத்து:

“ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது” (ஔவையார்: https://ta.wikisource.org/s/34) என்பதையே ஒட்டியிருக்கும்.

இக்கருத்து கீழுள்ளவை போல பல்வேறு வகைக் குறிப்பாகவும் ஔவையார் குறித்த கட்டுரைகளில் இடம் பெறும்.

- ஔவைப்பாட்டி ஒரு மூதாட்டி அவர்தான் தமிழின் வழிகாட்டி.

- ஔவைப்பாட்டி தம் ஆத்திச்சூடியில் 16 இடங்களில் எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது, எப்படிப் பேசக் கூடாது என்று எடுத்துரைக்கின்றார்.

- ஔவைப்பாட்டி சுந்தரருக்கு முன்னால் பிள்ளையார் உதவியுடன் கயிலை மலைக்குச் சென்றவர்.

- சங்கத்தமிழ் மூன்றையும் தனக்குத் தருமாறு கடவுளிடம் வேண்டினார்  ஔவைப்பாட்டி.

- ஔவைப்பாட்டி சொன்ன மூதுரைகள் இன்றும் நமக்கு வழிகாட்டியாக உள்ளன.

- பாடல்கள்  பல பாடிய தமிழ் மூதாட்டி.

எனப் பல குறிப்புகள் ஔவையார் குறித்து அறிவோம். பிறகு தமிழிலக்கியம் குறித்து அதிகம் அறிய நேரும்பொழுதுதான் ஔவையார் எழுதிய இலக்கியங்களாக நாம் அறிபவை யாவும் வரலாற்றில் பலவேறு காலகட்டங்களில் எழுதப்பெற்றவை என்று அறிவோம். அப்பொழுது ஒரே ஒரு ஔவையார் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து பாடல் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து பலவேறு பெண்பாற் புலவர்களுக்கும் ஔவையார் என்ற பெயர் இருந்திருக்கிறது, அவர்களும் பல்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள் என்ற தெளிவு பிறக்கும்.

பற்பல ஔவையார்கள் குறித்து ஓர் பார்வை:

தமிழ் இலக்கிய வரலாற்றில் எத்தனை ஔவையார்கள் இருந்திருப்பார்கள் என்பது இன்றும் தொடரும் ஒரு ஆய்வு. பெரும்பாலோர் மூன்று ஔவையார்கள் இருந்திருந்தார்கள் என்ற கருத்துள்ளவர்கள். வரலாற்றில் முதலில் அறியப்படுபவர் சங்ககாலத்தில்  வாழ்ந்தவராக அறியப்படும் புலவர்.

சங்ககால ஔவையார்:

இவர் ஒரு பாண்மகள் அல்லது பாடினி. இவர் தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின் உற்ற நண்பர். அதியமான் வாழ்ந்த காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. அதியமானின்  வீரத்தையும் கொடையையும் புகழ்ந்து ஔவையார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் பலவுண்டு. அத்துடன், தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, அதியமான் மகன் பொகுட்டெழினி என்னும் பல அரசர்களைப்பற்றியும்  பாடியுள்ளார். ஔவையார் அதியமானையும் பிற மன்னர்களையும் பாடிய பாடல்கள் எனப் புறநானூற்றில் மட்டுமே 31 பாடல்கள் உள்ளன. புறநானூறு மட்டுமன்று, புறநானூற்றுப் பாடல்களுடன் சேர்த்து குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்னும் எட்டுத்தொகை நூல்களில் உள்ளவற்றையும் கணக்கில் கொண்டால் சங்ககால ஔவையார் 59 பாடல்களைப் பாடியுள்ளார்.

மேலும் சில ஔவையார்கள்:

சங்ககால ஔவையாருக்குப் பிறகு, எட்டாம் நூற்றாண்டில் சமய இலக்கியங்கள் வளர்ச்சியுற்ற நாயன்மார்கள் காலத்தில் ஒரு ஔவையார் சிவ பக்தியோடு வாழ்ந்ததாகவும் தெரிகிறது. சேரமான் பெருமாள் என்றும் கழறிற்றறிவார் நாயனார் என்ற பெயரிலும் அறியப்படும் சேரமான் தனது நண்பர் சுந்தரருடன் கயிலை செல்ல விரும்பி அவரைத் தொடர்ந்தார் எனவும், அதுபோலவே தானும் கயிலை செல்ல விரும்பிய ஒளவையாருக்குப் பிள்ளையார் உதவி செய்தார் என்றும் ‘விநாயகர் அகவல்’ பாடியவர் இந்த ஔவையார் என்றும் அறியப்படுகிறது.

மற்றுமொரு ஔவையார் பன்னிரண்டாம் நூற்றாண்டில், இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவையில் கம்பர், செயங்கொண்டார், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், சேக்கிழார் காலத்தில் இருந்ததாகவும் அறியப்படுகிறது. இவருக்கும் கம்பருக்கும் இடையில் போட்டி நிலவியது என்று வெண்பா வடிவில் உள்ள தனிப்பாடல்களும் பல இவர் பெயரில் அறியப்படுகிறது. தனிப்பாடல்களில் 70 க்கும் மேற்பட்ட பாடல்கள் இவர் எழுதியதாகத் திரட்டப்பட்டுள்ளன.

தண்ணீருங் காவிரியே! தார்வேந்தன் சோழனே

மண்ணாவதும் சோழ மண்டலமே- பெண்ணாவாள்

அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு.

என்பதும்

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்

கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னாய் அது.

என்பதும்

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்.

ஆகியன இக்கால ஒளவையாருடன்  இணைத்து அறியப்படும் பாடல்கள்.

சற்றேறக்குறைய இக்காலத்தைச் சேர்ந்தவராக அறியப்படும் மற்றொரு ஔவையார்  துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.  மாணவர்கள் எளிய முறையில் கற்கும் வகையில் நீதிக்கருத்துகள் கொண்ட ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நூல்கள் இவர் இயற்றிவை.

மேலும் ஒரு ஔவையார் ‘பந்தன் அந்தாதி’  சிற்றிலக்கியம் யாத்தவர் என்ற கருத்தும் உண்டு.

வாழ்ந்த காலம் அடிப்படையில் ஔவையார்களைப் பிரித்து அறிவது சிக்கலானது என்றக் கருத்தில்:

சங்கப் பாடல்கள் (3 -ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பாட்டும் தொகையும் நூல்கள்);  தனிப்பாடல்கள் (12-ஆம் நூற்றாண்டு); நீதி நூல்கள் (நல்வழி, மூதுரை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன்);  சமய நூல்கள் (விநாயகர் அகவல், ஔவையின் ஞானக்குறள்); சிற்றிலக்கியம் (பந்தன் அந்தாதி) பாடிய ஔவையார்கள் என்று பகுப்பவரும் உள்ளனர்.

அகவற்பாக்கள் பாடிய சங்ககாலப் பாடல்கள் தொகுப்பிற்குரிய ஔவையார் குறித்தும், நீதிநூல்கள் தொகுப்பை இயற்றிய பிற்கால ஔவையார் குறித்தும் கருத்து முரண்கள் இருப்பதாக ஆய்வாளர்களிடம் கருத்துக் குழப்பமில்லை. மற்றவர் குறித்து அறுதியிட்டுக் கூறத் தயக்கம் நிலவுவதும் தெரிகிறது. சுருக்கமாக,ஔவையார் என்ற பெயரில் அறியப்படும்  புலவரின் பாடல்களையும் காலத்தையும் தெரிந்து கொள்ள விழைவதே தனியொரு ஆய்வுக்குத் தகுதியானதாக அமைகிறது.

தமிழிலக்கிய வரலாற்றில் காலத்தால் முதலில் அறியப்படுபவர் சங்க கால ஒளவையாரே. இவரும் இவர்காலத்தில் வாழ்ந்த கபிலர், திருவள்ளுவர் என யாவரும் உடன்பிறப்புகள் என்று பிற்காலத்தில் புனையப்பட்ட ‘கபிலர் அகவல்’ நூலில் காணப்பெறும் தொன்மக்கதையும் உண்டு. ஔவையார் என்ற புலவரின் பெயர் பலநூற்றாண்டுகளின் இடைவெளிகளில் காணப்பட்டாலும் அவர் ஒருவரே,  அவர் அவ்வாறு பலநூறு ஆண்டுகள் வாழ அதியமான் கொடுத்த நெல்லிக்கனி காரணமென்றும், அவர் ஔவை ஒரு மூதாட்டி  என்று அறியப்படுவதும் அதற்கு ஒரு காரணமாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது. மற்றொரு வகையில் சிவனிடமும், பிள்ளையாரிடமும், முருகனிடமும் உரையாடியவராகவும்,  திருமணத்தை விரும்பாத இவர் இளமைக்காலத்திலேயே முதுமையை இறைவனிடம் வேண்டி, இறைவன் அருளால் முதுமை அடைந்தார் என்றும் இயற்கைக்கு ஒவ்வாத கருத்துகளும் இவர்மேல் ஏற்றப்பட்டுள்ளன. இவ்வாறு இவர் விரைவில் முதுமையடைந்தார் என்பதற்கு இக்காலத்தில் அறியப்படும் ‘புரோஜெரியா’ (Progeria) என்ற மரபணு நோய் தாக்கத்தினால் என்று சொல்வது கூடப் பொருந்தாது என்று தோன்றுகிறது.

இவரை “ஒளவைப்பாட்டி” என்று குறிப்பிடப்பட்டதே மூதாட்டியாக இவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, பிற்காலத்தில் ஔவையை மூதாட்டி என அழைக்க முற்பட்டார்கள் என்று கருதுவதற்கும் வாய்ப்புள்ளது. சங்ககாலத்தில் ‘பாட்டி’ என்ற சொல் குறிப்பிட்ட பொருள் குறித்து அறிந்துகொள்வது ஒளவைப்பாட்டி யார் என அறிந்து கொள்ள உதவக்கூடும்.

சங்ககாலத்தில் பாட்டிஎன்ற சொல்லின் பொருள்:

சங்கஇலக்கிய நூல்களிலும் தொல்காப்பியத்திலும் “பாட்டி” என்ற சொல் அக்காலத்தில்  காட்டிய பொருள் என்ன என்ற ஒரு தேடலில், அச்சொல் பாடல்கள்  பாடும் பாண்மகள் ஒருவரைக் குறிக்கும் சொல்லாகவே காணப்படுகிறது.

“பாணன் பாட்டி இளையர் விருந்தினர்

கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப”

      தொல்காப்பியம்: பொருளதிகாரம், கற்பியல் – 52

என்ற தொல்காப்பிய வரிகளுக்கு “பாட்டி யென்பது பாடினி யென்றவாறு” என்று உரைநூல் பொருள் பகர்கிறது. மனையறம்  பேணும் தலைவன் தலைவியர் தம் வாழ்க்கையில் கற்பு வாழ்க்கையில் தோழி முதற்கொண்டு கண்டோர் வரை  பன்னிருவர் அவர்களது இல்வாழ்க்கை சிறக்க உதவுவர். அப்பபன்னிருவருள்  பாணன் மற்றும் பாட்டி என்போரும் இடம் பெறுகின்றனர். தலைவனிடம் தலைவி கொண்ட ஊடல் தீர்க்க பாணன் உதவுவான். அவ்வாறே அவர்களது ஊடலைத் தீர்க்க  பாடினியும் உதவுவாள். பண் பாடுபவனைப் ‘பாணன்’ என்றழைப்பதும், பண் பாடுபவளைப் ‘பாடினி’ என்றோ அல்லது ‘பாட்டி’ என்றோ அழைப்பது சங்க கால வழக்கம்.

siragu avvai2

[குறிப்பு: தொல்காப்பியம் மரபியல் விலங்குகளின் பெண்பாற் பெயர்களைக் குறிக்கும் பொழுதும் "மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே" என்றும் குறிப்பிட்டு,  பின்னர், பாட்டி என்பதை "பாட்டி என்ப பன்றியும் நாயும்" (தொல்காப்பியம்: பொருளதிகாரம்,மரபியல்) என்றும் விவரிக்கிறது. பன்றி நாய் ஆகியவற்றின் பெண்பாற் விலங்குகள் பாட்டி என்று அழைக்கப்படும் என்பது இங்குப் பொருந்தாது என்பதால் தவிர்த்துவிடுவோம்.]

மேற்காட்டிய தொல்காப்பியம் தவிர்த்து, பாட்டி என்ற சொல் பாண்மகளைக் குறிக்கும் என்பதற்கான சங்ககால இலக்கியச் சான்றுகளை அகநானூறு, பரிபாடல், மதுரைக்காஞ்சி ஆகியவற்றிலும் காணலாம். ‘பாட்டி’ (ஒருமை) என ஓரிடத்திலும், ‘பாட்டியர்’ (பன்மை) என இருவிடங்களிலும் காணக் கிடைக்கின்றன. பாட்டி என்பது பாண்மகள், பாடும் பெண் என்ற பொருளையே காட்டும் வரிகள் இவை.

“வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு ‘பாட்டி’

ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு”

 அகநானூறு: 196, 4-5; பரணர், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது.

வேட்டைக்குச் செல்வதை மறந்து உறங்கும் துணைவனுக்கு, அவனது துணைவியான  ‘பாட்டி’ (பாடினி) அகன்ற ஆம்பல் இலையில் சுடச்சுடச் சோறும் அத்துடன் பிரம்பின் இனிப்புடன் கூடிய புளிப்பினையுடைய திரண்ட பழத்தினையும் சேர்த்து உணவிட்டதை விவரிக்கின்றன பாடலின் இந்த வரிகள்.

“வரையா வாயில் செறாஅது இருந்து,

பாணர் வருக! ‘பாட்டியர்’ வருக!

யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக!

      மதுரைக் காஞ்சி: 748 – 750, மாங்குடி மருதனார்

பாண்டியன் நெடுஞ்செழியனின் அரண்மனையானது எவரும் உள்ளே நுழையத் தடை செய்யப்படாத வாயிலைக் கொண்டது. சினம் என்ற குணம் சிறிதும் இன்றி, அனைவருக்கும் அவன் கொடை வழங்கினான். பண்ணிசைத்துப் பாடும் பாணர்களே வருக, பாட்டியரே வருக, புதுப்புது பாடல்களைப் பாடும் புலவர்களும்,  இசைக்கருவி இசைப்பவர்களும்  வருக வருக என்று அனைவரையும் வரவேற்றுப் பொருள் வழங்கினான் பாண்டியன்.

 “பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின் சேம

மட நடை ‘பாட்டியர்’ தப்பி தடை இறந்து”

      பரிபாடல்:  10/36-37, கரும்பிள்ளப் பூதனார்

சிறந்த பூவின் மேல் மொய்க்கவரும் வண்டினைப் போல, தன்னைக் காவல் காக்கும்  தளர்நடை நடக்கும் பாட்டியரிடமிருந்து தப்பித்து, தடைகளை மீறிக் காதலரை எதிர்கொள்ளச் செல்லும் காதலி பற்றி கூறும் வரிகள் இவை.

பாணர்களில் ஆடவரைச் “சென்னியர், வயிரியர், செயிரியர், மதங்கர், இன்னிசைகாரர், பாணரென்ப” எனப் பிங்கல நிகண்டும், பாணர்களின் பெண்டிரைப் “பாடினி, விறலி, பாட்டி, மதங்கி, பாடல் மகடூஉ பாண்மகள்” எனத் திவாகரமும் குறிப்பிடுகின்றன என்று  ச. பாலசுப்பிரமணியன் தனது “பாண் மகளிர்” என்றக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.  பாண் குலத்தின் பாடும் மகளிரை விறலி, பாடினி, பாடியர், பாடுமகள், ஆடல் மகள், கிணைமகள், பாட்டி, பாணிச்சி எனும் பெயர்களில் குறிப்பிட்டதைச் சங்க இலக்கியங்களில் இருந்து அறிய முடிகிறது.

வாள்நுதல் விறலியான பாடினி ஔவையார்:

மன்னன் அதியமானின் குடும்பத்துடன் நட்புடன் நெடுங்காலம் தொடர்பு கொண்டவர் சங்ககால ஔவையார். அதியமான் தனக்குப் பிறந்த மகனைப் பார்க்க போர்க்கோலம் பூண்ட தோற்றத்தில் வந்ததையும் பாடியவர்,பிற்காலத்தில் அதியமானின் மகன் பொகுட்டெழினி இளைஞனாக வளர்ந்து அந்த இளைஞனின் காதலைப் பெற முடியாத மங்கையர் அவனுக்குப் பகையாவார்கள் என்ற பெருமிதத்துடன் அவன் வீரத்தையும்,   அந்த மகன் தனது தந்தைக்கு உதவும் பண்பு கொண்டு ஒரு வண்டியின் சேமஅச்சுக்கு ஒப்பச் செயல்படுவதையும் புகழ்ந்து பாடியவர்.  போர்கள் பலவற்றில்  வெற்றி பெற்றிருந்தும், சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னனுடன் நடந்த போரில் அதியமான் தோல்வியுற்று இறந்த பொழுது,  அவனுக்கு நடுகல் நாட்டப்பட்டு அதில் மயிற்பீலி சூட்டப்படும் காட்சி கண்டு துயரம் தாங்காமலும் கையறுநிலையில் பாடினார்.

அதியமானும் ஔவையும் கொண்டிருந்த நட்பு இலக்கியத்தில் தனிச்சிறப்பிடம்  பெற்ற ஒரு நட்பு. தனக்குக் கிடைத்த, நீண்ட வாழ்வைத் தரும் என்று கருதப்பட்ட ஓர் அரிய நெல்லிக்கனியை அதியமான் ஔவைக்குக் கொடுத்து உண்ணச் செய்ய, உண்மை அறிந்ததும்  மன்னனின் அன்பில் நெகிழ்ந்து பாடியவர் ஔவையார்.

 “மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்

பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,

ஆதல் நின்னகத்து அடக்கிச்,

சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.”

      புறநானூறு: 91, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோர்: அதியமான் நெடுமான் அஞ்சி.

அதியமான் நெடுமான் அஞ்சியே! பழைய பெரிய மலைப்பிளவின்கண், மிகுந்த உயரத்தில் சிறிய இலைகள் கொண்ட நெல்லிமரத்தில் காய்த்திருந்த அரிய இனிய சிறு  நெல்லிக்கனியை உண்டால் நீண்ட ஆயுள் கிட்டும் என்ற அதன் சிறந்த பயனை என்னிடம் குறிப்பிடாது, உனக்குள்ளேயே மறைத்து வைத்து நான் நெடுநாள் வாழ விரும்பி எனக்கு அதனை மனமுவந்து அளித்து விட்டாயே! நீ வாழ்க மன்னவா, என்று பாராட்டிப் பாடுகிறார்.

ஔவை குறிக்கும் இதே நெல்லிக்கனி செய்தியை சிறுபாணாற்றுப்படையைப் பாடியவரான இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரும் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.

 “மால் வரைக்

கமழ் பூஞ்சாரல் கவினிய நெல்லி

அமிழ்துவிளை தீம்கனி ஔவைக்கு ஈந்த

உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்

அரவக் கடல் தானை அதிகனும்”

      சிறுபாணாற்றுப்படை: 99 – 103, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

போரில் அதியமான் நெடுமான் அஞ்சிப் பெற்ற விழுப்புண்களைக் கண்டு பெருமிதம் கொண்டவர் ஔவையார். அதியமானின் தூதுவராகவும் செயல்பட்டுள்ளார். விறலியரிடம் அவன் கொடைச்சிறப்புக்கூறி அவனிடம் சென்று பரிசில் பெற ஆற்றுப்படுத்தியுள்ளார். ஔவையின் பாடலுக்குரிய பரிசிலை உடனே அளிக்காது அதியமான் வேண்டுமென்றே காலம் தாழ்த்திய பொழுது அவனைச் சினந்தும் பாடியுள்ளார். ஔவையார் ஒரு பாண்மகளாக அறியப்பட்டாலும் அவர் பாடல்கள் புனையும் புலவராக மட்டுமல்லாமல், தமிழக அரசியலில் தாக்கம் கொடுக்கும் வகையில் செயலாற்றியுள்ளதைப் புறநானூற்றுப் பாடல்கள் காட்டுகின்றன. அவர் அதியமானின் தூதுவர் என்ற பொறுப்பை ஏற்றவராகத் தொண்டைமானிடமும்  மற்ற மன்னர்களிடம் சென்று, அவர்களிடத்து அதியமானின் ஆற்றலையும் போர்த்திறனையும் அறிவுறுத்தி அதியமானுடன் அவர்கள் தொடுக்க முற்பட்ட போர்களைத் தடுக்க முயற்சித்ததையும் புறநானூற்றுப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

ஔவையார் தாம் ஒரு பாவலர்  என்பதை அவரே பகரும் புறநானூற்றுப் பாடல்கள் வழி கிடைக்கும் சான்றுகளைப் பார்ப்போம் . . .

“காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;

மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.”

      புறநானூறு: 206, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோர்: அதியமான் நெடுமான் அஞ்சி.

ஒருமுறை ஔவையாரின் பாடலுக்குப் பரிசில் வழங்காமல் வேண்டுமென்றே வள்ளல்தன்மை கொண்ட அதியமான் காலம் நீட்டித்தான். அச்செய்கையால் மனம் நொந்திருந்த ஔவையார் இப்பொழுது தராவிட்டால் என்ன, அதியமான் நமக்கு அளிக்கவிருக்கும் பரிசில் யானையின் துதிக்கையில் இருக்கும் உணவு போன்றது. அது நிச்சயம் யானையின் வாய்க்குள் செல்வது போல நமக்கு நம் பரிசில் வந்தே தீரும் என்று தன்னை அமைதிப்படுத்திக்கொண்டார்(புறநானூறு: 101). இந்நிலையில் அதியமானைச் சந்திக்க அவனது அவைக்குச் சென்ற ஔவையை வாயில் காவலன் வாயிலிலேயே தடுத்து நிறுத்த முற்பட்டான். இத்தகைய செய்கையால் வெகுண்டெழுந்த ஔவையார் “வாயிலோயே! வாயிலோயே!” என அவனை அழைத்து, “நான் எனது யாழையும் மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக்கொண்டு புறப்படப்போகிறேன். கற்றறிந்தோருக்கு எங்குச் சென்றாலும் சோறு கிடைக்கும், நான் இனி அதியமானிடம் இருக்கப்போவதில்லை” என்று சினந்து கூறுகிறார். இப்பாடலில் இவர் “காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை” என்று தனது யாழையும் அதற்குண்டான பையையும் சுமந்து வெளியேறுவேன் என்பதிலிருந்து அவர் யாழ் மீட்டிப் பாடும் பாண்மகள் என்பதும் புலனாகிறது.

“சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;

பெரியகட் பெறினே

யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;”

      புறநானூறு: 235, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோர்: அதியமான் நெடுமான் அஞ்சி.

இப்பாடல் காட்டுவது, அதியமான் இறந்த பிறகு துயரம் தாளது கையறு நிலையில் அதியமானின் கொடைத் தன்மையை  நினைத்துப் புலம்பிப் பாடும் ஔவையின் கூற்று. சிறிதளவு கள் இருக்கும்பொழுது அதனை எமக்குத் தருவான். கள் பெருமளவு இருந்தால் தானும் கள் அருந்தி எமக்கும் கள் அருந்தக் கொடுத்து “நாம் பாட அதைக் கேட்டு மகிழ்வானே என் அதியமான்”  என நினைவு கூர்கிறார் ஔவையார்.

“இழை யணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்

மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி!

பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,

வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!”

      புறநானூறு: 89, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோர்: அதியமான் நெடுமான் அஞ்சி.

“பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என, வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!”, அதாவது, எம்முடன் போர் செய்யும் ஆற்றல் உள்ளோர் இருக்கின்றனரா உமது அகன்ற நாட்டினிலே என்று என்னைப்பார்த்துக் கேட்கும் போர் செய்யும் படையை வைத்திருக்கும் வேந்தரே, எங்கள் அதியமான் நாட்டில் வெகுண்டெழுந்து போரிடும் வீரர்களும், காற்றின் ஒலி முரசின் மீது தாக்கும்பொழுது அது போர்ப்பறையின் ஒலி என்று எண்ணிப் போர் செய்யத் துடித்தெழும் அரசன் அதியமானும் உள்ளான் என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

இப்பாடலின் தொடக்கத்தில் பகையரசர் ஔவையை “இழை யணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல் மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி!” என்றழைத்து வினவுவதாக ஔவையார் குறிப்பிடுகிறார். இந்த விவரிப்பு நமது மனதில் காலம் காலமாக ஒளவை குறித்து கதைகேட்டு உருவாக்கிக் கொண்டுள்ள  ஒரு மூதாட்டி உருவத்துடன் சற்றும் பொருந்தாதது. “அழகிய நல்மணிகள் பதித்து உருவாக்கப்பட்ட அணிகலனை அணிந்து, இடையை ஓர் பக்கம் வளைத்து உயர்த்தி, கண்மை தீட்டிய விழிகளையும், அழகிய நெற்றியையும் கொண்டவளாக நடனமாடும் இளம்பெண்ணான விறலியே” என்று ஔவையை அழைத்தாராம் அந்த எதிரி நாட்டு வேந்தர் என்கிறார் ஔவையார்.

முடிவுரை:

ஆக, பாட்டி என்னும் சொல் பாண்மகள் அல்லது பெண்பாற் விலங்கினத்தைக் குறிக்கும் சொல்லாகப் பழந்தமிழில் இருவேறு பொருள்களையும், முதுமையையும் உறவுமுறைப்பெயரையும் குறிக்கும் சொல்லாக  தற்காலத்தமிழில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமையும் தெரிகிறது. இது காலப்போக்கில் மொழிப்பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றமன்றி வேறில்லை. இதனாலேயே ஔவையைக் கிழவியாகச் சித்தரிக்கின்ற மரபு தோன்றியிருக்க வேண்டும் என்று ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளையும், பேரா. ந.சுப்பிரமண்யமும் குறிப்பிட்டு உள்ளனர் என்று “ஆய்வு: நீதி பாடிய ஒளவையாரும் அறம்செய்தலும்” கட்டுரையில் பா.சத்யா தேவி குறிப்பிடுவது இக்கருத்தை வலியுறுத்துகிறது. பாட்டி என்ற சங்ககால சொல்லிற்கு அக்காலத்தில் வழங்கிய பொருள் ‘பாண்மகள்’ என்பதை அறியாத காரணத்தினால்  ஒளவைப்பாட்டி என்றவுடன் அவரை மூதாட்டியாக்கி, பாட்டி என்ற உறவுமுறையையும் அவர்மீது ஏற்றியுள்ள நிலைக்குப் பாடினி ஒளவை இலக்காகியுள்ளார் என்பது  தெளிவு. ‘காக்கைப்பாடினி நச்செள்ளையார்’ என்பது போல ‘பாடினி ஒளவையார்’ என்று குறிப்பிட்டிருந்தாலோ, ‘குறமகள் இளவெயினி’ என்பது போல ‘பாண்மகள் ஒளவை’ என்று குறிப்பிட்டிருந்தாலோ ஔவைக்கு இலக்கிய உலகில் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது.

கட்டுரையைத் தொடர்ந்து ஒரு பின்னிணைப்பாக  . . . சிந்தனையின் நீட்சி:

இடையில் சிறந்த அணிகலன்களுடனும், மைதீட்டிய அழகிய விழிகளுடனும், ஒளிபொருந்திய நெற்றியுடனும் ஒயிலாக நடனமாடும் தோரணையில் இடையை நெளித்து நின்ற இளம்பெண்ணாகப் புறநானூறு காட்டும் விறலி ஔவையின் உருவம் ஒருவிதம்.

இதற்கு மாறாக, ஒளவை என்ற ஒரே பெயரில் காலம்தோறும் பல பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளார்கள் என்ற உண்மையைச் சற்றும் பொருட்படுத்தாது.விநாயகர் அகவல் பாடியவரும் சேரமான் பெருமாள் நாயனார் மற்றும் சுந்தரருடன் கயிலை செல்ல விரும்பிய எட்டாம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சிவபக்தரான ஒளவை என்ற புலவர் ஒருவருடன்;  அவருக்கு முற்காலத்திலும், அவருக்குப் பிற்காலத்திலும் வாழ்ந்திருக்கக்கூடிய மற்றும் சில ஔவைகளுடன் ஔவையை இணைத்து, கபிலர் அகவல் கூறும் ஔவையின் பிறப்புக் கதையையும் சற்றே சரிவிகிதத்தில் கொஞ்சம் இணைத்து,  திரைக்கதை ஒன்றை உருவாக்கி(இதற்கு வாசனின் ஜெமினி ஸ்டுடியோவில் ஒரு கதைக்குழுவே கதை கட்ட பணியாற்றியுள்ளது!!!),

“கன்னிப்பருவம் போதும் போதும், அன்னை உருவம் அருள்வாய் அருள்வாய்” என்று இளவயது ஒளவை குசலகுமாரியின் வடிவில் பிள்ளையார் முன் கதற, ஒரு ஒளிப்பிழம்பை ஔவையின் மீது  பிள்ளையார் பாய்ச்சிய உடனே,

 “அன்பினால் எனைத் தடுத்தாட்கொண்ட அண்ணலே ஏ…ஏ… சரணம்…

அன்பினால் எனைத் தடுத்தாட்கொண்ட அண்ணலே ஏ…ஏ… சரணம்… சரணம் …”

என்று பாடிய வண்ணம்,  பட்டையடித்துக் கொட்டையணிந்த கே.பி. சுந்தரம்பாள் என்றொரு மூதாட்டியாக  ஒளவைப்பாட்டி உருமாறித் தமிழ்த்தொண்டு செய்யப் புறப்பட்டுவிடுபவராக காட்டப்படும் ஔவையோ மற்றொரு விதம். மனதில் இவ்வாறு  ஆழப் படிந்துவிட்ட மூதாட்டி  ஔவையின் உருவத்திற்கும் சங்ககால ஔவைக்கும் எந்த ஒரு  தொடர்பையும்  காண இயலவில்லை.

நிலைமை இவ்வாறிருக்க,  இத்தகைய முறையில் முதுமையடைதல் இயற்கைக்கு மாறான ஒரு செயல் என்பதைச் சொல்லவும் தேவையில்லை. இது போன்ற பொய்க்கதைகளைப் புனைவதும், புராணக்கதைகள் என்றப் போர்வையில் பரப்புவதும் சமூகப் பொறுப்பற்ற ஒரு செயல் என்பதில் ஐயமுமில்லை.   இக்காலத்தில் இது போன்ற வரலாற்றுப் பிழைகள் கொண்ட கதைகளை மக்கள் எதிர்க்கத் துணிந்திருப்பது வரவேற்கத் தக்கதொரு  விழிப்புணர்வு என்றுதான் பாராட்ட வேண்டும்.

(I) சான்றாதாரங்கள்:

பாண் மகளிர், ச. பாலசுப்பிரமணியன்

http://www.muthukamalam.com/essay/literature/p137.html

நீதி பாடிய ஒளவையாரும் அறம்செய்தலும், முனைவர்.பா.சத்யா தேவி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=4141:2017-09-12-22-23-01&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

பழந்தமிழ் இலக்கியங்களில் பெண் நிகழ்த்துநர்கள், கோ.பழனி

http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-jun18/35309-2018-06-14-05-39-54

(II)ஆய்வுக்கு உதவிய தளங்கள்:

[1] தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா,  http://tamilconcordance.in

[2] தமிழ் இணையக் கல்விக்கழகம்,  http://www.tamilvu.org/ta/நூலகம்   -  நூல்கள்: தொல்காப்பியம்-பொருளதிகாரம், அகநானூறு, பரிபாடல், மதுரைக்காஞ்சி, புறநானூறு, சிறுபாணாற்றுப்படை.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- ““ஔவைப்பாட்டி””

அதிகம் படித்தது