மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கடவுளும் கழுதையும் (பாகம் -2) (வெற்றியின் இரகசியம்)

வேம்பையன் தொல்காப்பியன்

Apr 1, 2013

கருத்துப் பஞ்சில் காகித நூல்

     இந்தக் கட்டுரை எழுதுவதை எடுத்துக் கொண்டால் கட்டுரைக்கு ஒரு கரு தோன்றுவது, அதை வளர்த்து விரித்து கயிறு திரித்து காதில் பூ சுத்த மாதிரி கொண்டு வர யோசிப்பது எல்லாம் கடவுள் வேலை. அதை உட்கார்ந்து எழுதுவது கழுதை வேலை.

 

     என்றாலும் கருவை வளர்க்கும் கடவுள் வேலைக்குள் அவற்றைக் குறிப்பெடுக்கும் கழுதை வேலையும் உள்ளது. எண்ணங்களை அப்படியே புத்தகம் ஆக்கும் கருவி வந்து விட்டால் தேவலை. அதுவரை குறிப்பு எடுக்காவிடில் தானாக‌ வந்த சிந்தனைகள் மீண்டும் வரும் என்று உத்தரவாதம் இல்லை.

 

     எனவே பயணம் செய்யும் போது தோன்றுவதைக் குறித்துக் கொள்ளணும். கழிவறைக்குப் போகும் போதும் காகிதம் பேனாவுடன் போகணும். எங்க எப்ப ஐடியா வரும்ன்னு யார் கண்டா? மலச்சிக்கலும் கூடாது. மனச்சிக்கலும் கூடாது. மலச்சிக்கலுக்கு மருந்தும் மனச் சிக்கலுக்கு மருந்தும் பட்டினி தான். அதாவது உள்ள போறதைக் கவனிக்கணும், கன்ட்ரோல் பண்ணனும். அது கிடக்கட்டும். இப்படித் தான், நம்ம‌ கட்டுரை வண்டி, கருத்துச் சந்திப்பு நிலையம் (station) வந்து விட்டால் முதற்பாதையிலிருந்து (main track) விலகிப் பக்கப் பாதைக்குப் (side track) போய் விடும். பிறகு இழுத்து முதற்பாதைக்குக் கொண்டு வரவேண்டும். இதுவும் வெற்றிக்கு ஒரு குறிப்பு தான். பக்கச் சிந்தனைகள், செயல்கள் எவ்வளவு வந்தாலும் செய்தாலும் முதன்மைப் பாதையை மறந்து விடாமல் மீண்டும் மீண்டும் அதில் வந்து சேர்ந்து விட வேண்டும்.

 

     படுக்கைக்கு அருகிலும் பேப்பர் பேனா வைத்துக் கொண்டு கனவில் வருவதையும் காகிதத்தில் புடிச்சு வைக்கணும். கருத்துகள் மனதில் விறுவிறுப்பாக ஓடும் போது அது கடவுள் வேலை தான். ஆனால் அதைக் குறித்து வைக்கும் கழுதை வேலையைச் செய்யச் சோம்பல் பட்டால் எல்லாம் காற்றில் கலந்து காணாமல் போய் விடும்.

 

     நல்லவனுக்கும், திருடனும் என்ன வித்தியாசம்? மாட்டிக்கிட்டவன் திருடன். மாட்டிக்காதவன் நல்லவன். அது போலப் புத்தகம் எழுதுன‌வருக்கும் எழுதாதவருக்கும் என்ன வேறுபாடு? சிந்தனைகளைக் குறிப்பெடுத்தவர் எழுத்தாளர். காற்றுல விட்டவர் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறவர். அடடா, வெற்றியின் இன்னொரு இரகசியத்தை இப்படிக் கொட்டிட்டேனே. இது தான் தோல்வியின் இரகசியம். வெற்றி என்பது தோல்வியின் (தோல்விக்கான‌) பலவீனத்தைப் புரிந்து வைத்திருந்தால் தான் முடியும்.

 

     பாருங்க, நாம் சொல்லக் கூடாதுன்னு நினைக்கறது முன்னாடி வாயில் வந்து விடுகிறது. பாம்பு கீரிப்பிள்ளை சண்டையை முதலிலேயே விட்டா கூட்டம் கலைஞ்சு போய் விடும். இன்னும் எவ்வளவோ கும்மி அடிக்க வேண்டி இருக்கு. சரி போகட்டும், நம்ம விசயத்துக்கு வருவோம்.

 

     நடந்து போகும் போது தோணும். தொடர்வண்டியில் போய் உட்கார்ந்து எழுத எடுத்தா அதற்குள் மறந்து விடும். குறிப்புகள் எடுக்கும் கழுதை வேலையிலும் எப்படி முக்கியமான சொற்களைப் பயன்படுத்திச் சுருக்கமாகக் குறித்துச் சிந்தனை ஓட்டத்தைச் சிறைப்படுத்தி வைப்பது, ஓடுகிற இரயிலில், பேருந்தில் நின்று கொண்டே எழுதுவது எப்படி என்பதெல்லாம் கடவுள் வேலை தான்.

 

     பயணச் சீட்டின் பின்னால் குறித்து வைத்து விட்டு அதை மறந்து போய்த் தூக்கி எறிந்து வருத்தப்பட்டதும் உண்டு. தண்ணீர் பஞ்சத்தில் மழை நீரைச் சேமிப்பது போல் இயற்கை பொழியும் கருத்துகளைப் பிடித்துத் தேக்கிக் கொண்டால் பயன் உண்டு. பிரபஞ்சத்தின் செய்திகள் (messages) இப்போது இக்கட்டுரையின் வாயிலாக‌த் தங்களுக்கு வழிந்து கொண்டுள்ளன.

 

     ஆக, இப்படி அப்படிச் செய்த‌ குறிப்புகளை எடுத்து வைத்துக் கொண்டு விரிவாக எழுத ஆரம்பித்தால் குறிப்பு எடுத்த போது பிரமாதமாகத் தோன்றியது இப்போது குப்பையாகத் தெரியுது. என்னவோ நிறைய அப்போது பொங்கி வந்தது, எழுத உட்கார்ந்தா அஞ்சு வரிக்கு மேல நகர மாட்டேங்குது. கழுதை வேலை தான். கடவுள் கொடுத்ததைக் கழுதை சுமக்க மறுக்கிறது.

 

கழுதைக் கிட்ட வேலை வாங்க கடவுளால் தான் முடியும். அதாவது கழுதை வேலையிலுள்ள கடவுள் கூற்றைக் காட்டிக் கழுதைக்கு உற்சாக மூட்டினால், பிறகு பாருங்க, கழுதை குதிரையாப் பறக்கும்.

 

     குறிப்புகளிலிருந்து எழுதும் கழுதை வேலையில் வாக்கிய அமைப்பு, பத்திகளின் வரிசை, பொருள் தொடர்ச்சி, உட் தலைப்புகள், இடையில் விடும் கதைகள், வரை படங்கள் எனப் பல கடவுள் வேலைகள் உள்ளன. குறிப்புகளைப் பார்த்து அப்படியே தட்டச்சு செய்து விட முடியாது.

 

     அதே போல் புத்தகத்தைப் பதிப்பு செய்பவர் பணியிலும் அட்டைப்படம் உருவாக்குவோர் பணியிலும் ஒளி அச்சு அமைப்பவர் பணியிலும் அச்சிடுவோர் பணியிலும் தைத்துப் பைண்டிங் செய்வோர் பணியிலும் கடவுள் பங்கும் கழுதை பங்கும் கலந்தும் ஒன்றினுள் ஒன்றாக மீமீளப் (recursively) பொதிந்தும் உள்ளன.

 

     காய்கறி நறுக்குதல், பாத்திரம் கழுவுதல், வீடு கூட்டுதல், வண்டியைக் கழுவுதல் என எந்த வேலையிலும் கழுதைக்கு அதில் உள்ள கடவுள் பங்கைக் கண்டு இன்பம் வந்து விட்டால் போதும். பிறகு கழுதைக்குள்ளும் கடவுள் வந்து விடும். அதே போல் கடவுளுக்குள் கழுதைப் பங்கைக் கண்டு,  கடவுளுக்கு அதன் முக்கியத்துவம் புரிந்து விட்டால் கடவுள் கழுதையாக அலுக்காது உழைப்பார். வேலை முழுதாக, முறையாக, வெற்றியாக அமையும்.

 

உள்ளீடும் உறையீடும் (content and form)

 

     இரண்டு (சமையல், கட்டுரை / புத்தகம் எழுதுதல்) எடுத்துக் காட்டுகள் பார்த்தோம். நீங்கள்  இங்கு தொட்டுக் காண்பித்ததைத் (touch) தூக்கி வளர்த்துத் (develope) தொடர் வண்டியே (train) விட்டு விடுவீங்க‌. என்னா, நம்ம கட்டுரையின் வாசகர்கள் புத்திசாலிகள். இல்லை என்றால் இந்த மாதிரிக் கட்டுரையைப் படிப்பாங்களா? ஐஸ் வைக்கிறேன்னு சிலர் நினைக்கலாம்.

 

ஒருத்தர் எப்படிப் பட்டவர் என்பதை அவர் படிப்பன எப்படிப் பட்டன என்பதைக் கொண்டே சொல்லி விடலாம்.

 

       இது முக்கியமான வாக்கியம். இது மாதிரி எல்லோருக்கும் தெரிஞ்ச கருத்தைப் பொன்மொழி ஆக்கிச் சொல்றது வெற்றியின் மற்றுமொரு இரகசியம். அதாவது வடிவம் (உறை), உள்ளடக்கம் இரண்டும் முக்கியம்.

 

       உள்ளடக்கம் அதே தான். புதுசா என்ன இருக்கு இங்க சொல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அதே கருத்துகளைத் தான் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு இருக்கோம். ஆனா, அதைப் புதுப்புது வடிவத்தில் கொடுத்து நம்மை நாமே ஏமாத்திக்கிறது தான் வாழ்க்கை. கவனிங்க, இது பொன்மொழியைப் பற்றிய பொன்மொழி.

 

     இந்தக் கட்டுரையின் உப தலைப்பு ‘தோல்வியின் இரகசியம்’ன்னு போட்டிருந்தாலும் பொருத்தமாகவே இருக்கும். ஆனா, ஒரு வாகசகரும் படித்திருக்க மாட்டார்கள்! வெற்றியின் இரகசியமும் தோல்வியின் இரகசியமும் (உள்ளடக்கம்) ஒன்று தான். ஆனால் எந்த உபதலைப்பில் (வடிவத்தில்) வாசகர்களை இழுக்கும் என்பதும் தெரிந்த ஒன்று தான்.

 

கட்டு, காட்சி, கதை

 

     சாப்பாட்டுக்கு முக்கியமா மூன்று தேவை. பார்க்க நல்லா இருக்கணும் . வாசனையா இருக்கணும். சுவையா இருக்கணும். கண், மூக்கு, நாக்குக்குப் போகக் கடைசியா அது உடம்புக்கு நல்லதா (ஊட்டம்) இருக்கணும் என்பது அவ்வளவு முக்கியமில்லை!

 

     முதல் மூன்றும் (கட்டு, காட்சி, கதை – packaging, display, advertisement) நல்லா இருந்தால் நாலாவது (பொருள் product) நல்லா இருக்கும் என்று அடுத்தவங்கள நம்ப வைக்கிறது (விற்பனைத் தந்திரம்) வெற்றிக்கு வழி! சுவைக்குச் சொன்னது போக‌ப் பார்த்தால் (joking apart), உள்ளடக்கம் (சமைத்த பண்டம்) எந்த வடிவத்தில் (பார்க்க, முகர, சுவைக்க) கொடுக்கப்படுகிறது என்பதன் முக்கியத்துவத்தைப் புரிஞ்சுக்கணும். கட்டு, காட்சி, கதை, பொருளின் தரம், அமைப்பு எல்லாவற்றிலும் கடவுள் வேலையும், கழுதை வேலையும் உள்ளன என்பதைச் சொல்லத் தேவையில்லை.

 

        பொதுவாகக் கடவுளின் பங்கு கலையாகவும் (கற்பனை, ஆக்கத்திறன்) கழுதையின் பங்கு வேலையாகவும் (சலிப்பான, திரும்பத் திரும்ப அதையே செய்யும் உழைப்பு) பார்க்கப்படுகின்றன. அது ஒரு வசதியான உழைப்புப் பிரிவே. அதில் ஏற்றத் தாழ்வு மதிப்பீடுகள் இருப்பதும் சமுதாயச் சக்கரம் சுழலத் தேவையான விசை அழுத்த‌ வேறுபாடே (potential difference for the flow). அதையே முழு உண்மை என்றும் எதார்த்தம் (reality) என்றும் கொள்வது தோல்விக்கு வழி வகுக்கும்.

 

கலையும் வேலையும்

 

      ஒரே செயல் ஒரு சமயம் வேலையாகவும் (கழுதைப் பங்கு) மறு சமயம் கலையாகவும் (கடவுள் பங்கு) படுகிறது. ஓய்வு என்பது வேறு வேலையே (rest is change of work) என்று சொல்வதைப் போன்று கலையும் வேலையும் அணுகும் மனப்பான்மையைப் பொறுத்ததே.

 

      இதைச் சொல்லும் போது அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெய்னின் ‘டாம் சாயர் வேலிக்கு வெள்ளை அடித்த கதை (Towm Sawyer whitewashes the fence)  நினைவுக்கு வருகின்றது.

 

      டாம் சாயர் (Tom Sawyer) ஒரு பத்து வயது பையன். அவன் அத்தை அவனை விளையாட விடாமல் வேலிக்கு வெள்ளை அடிக்கப் பணிக்கிறார். ஒத்த வயது பையன்கள் வந்து பார்த்தால் வேலைத் தண்டனைக் கிடைத்ததாகக் கேலி பண்ணுவார்கள். என்ன செய்வது? அப்படிக் கேலி செய்யும் ஒரு பையனும் வந்தே விட்டான்.

 

        உடனே, அவனைக் கவனிக்காது வெள்ளை அடிப்பதில் முழு ஈடுபாட்டுடன் இருப்பதாக நடித்தான், டாம். வந்த பையன் எதிர்பார்த்தது போல் டாமைக் கேலி செய்தான். ஓர் ஆப்பிளைக் கடித்த வண்ணம், ‘என்ன டாம், வேலையில் மாட்டிக்கிட்டியா?’ என்றான்.

 

         ஓரக் கண்ணால் ஆப்பிளைக் கண்டதும் நாக்கில் எச்சில் ஊறினாலும் வந்தவன் பேசியது காதில் விழாதது போல் டாம் வெள்ளை அடிப்பதில் மும்முரமாக இருந்தான். பையனுக்கு வியப்பாக இருந்தது. பக்கத்தில் சென்று மீண்டும் ஒரு முறை சீண்டினான்.

 

      டாம் அப்போது தான் கவனித்தது போல், ‘என்னது, வேலையா? யார் செய்யிறா? இது மிகவும் முக்கியமான பொறுப்பு. சாமான்யத்தில் யாருக்கும் கிடைக்காது. அத்தை என்னை நம்பிக் கொடுத்துள்ளார்கள். ரொம்பக் கவனமா செய்யணும். எல்லோராலும் செய்ய முடியாது. நம்மைப் போன்ற சிறுவர்களுக்கு இது போன்ற பொறுப்பான வாய்ப்புகள் தினமும் கிடைக்குமா?…..’ என்று அளந்தான்.

 

      பிறகு கேட்க வேண்டுமா வந்த பையன் தனக்குக் கொஞ்ச நேரம் (ஆப்பிளுக்கு மாற்றாக) வெள்ளையடிக்க வாய்ப்புக் கொடுக்கும் படி டாமைக் கெஞ்ச, இவன் மிஞ்ச, கடைசியில் டாம் மரத்தின் மேல் சாய்ந்து ஆப்பிளைக் கடித்துக் கொண்டு வெள்ளையடிக்கும் பையனை ‘அப்படி அல்ல, இப்படி…இன்னும் கொஞ்சம் இங்கே…’ என்று விரட்டிக் கொண்டு இருந்தான்.

 

        அன்று அப்பக்கம் வந்த சிறுவர்கள், அவர்களின் விளையாட்டுப் பொருள்களைக் கொஞ்ச நேரம் வெள்ளையடிக்கும் ‘அரிய’ வாய்ப்பிற்காக டாமிடம் பண்ட மாற்று செய்து கொண்டார்கள். வெள்ளையடிக்காமல் விளையாடப் போயிருந்தால் கூட டாம் இவ்வளவு துய்த்திருக்க மாட்டான். வெள்ளையடிக்கும் (சலிப்பான) வேலை விரும்பிச் செய்யும் விளையாட்டுக் கலையாக மாறி விட்டது. ஆக, எது வேலை இல்லையோ அது கலை. எது கலை இல்லையோ அது வேலை.

 

       அடுத்தவர் கதையை இங்கே குறுக்கில் விட்டுப் பக்கத்தை நிரப்புவதை அப்படியே பக்கமாகக் கவனித்துக் கொள்க. தேர்வில் பத்திகளைக் கூட்ட இது உதவும். ஆனால் அப்படியே அதே வாக்கியங்களை எழுதி விடக் கூடாது. அதை நம் வாக்கியங்களில் கூட்டிக் குறைத்து ஓட்ட வேண்டும். மேலும் சமையலில் நண்பர்களைக் காய்கறி நறுக்க வைத்த சாமார்த்தியம் எங்கிருந்து வந்தது என்பது இப்போது புரிகிறதா?

 

       டாம் அவன் நண்பர்களை ஏய்த்து விட்டான். ஆனால் அதைச் சரியாகச் செய்ய வேண்டுமானால் அவன் முதலில் தன்னைத் தானே ஏய்த்துக் கொள்ள வேண்டும். ஆப்பிளுடன் வந்த பையனை அலட்சியம் செய்து ஆசை வலையில் விழ வைக்க டாம் உண்மையிலேயே வெள்ளையடிக்கும் வேலையை தனக்குத் தானே கலை ஆக்கிக் கொண்டான். முதலில் தன்னைத் தானே நம்ப வைத்துக் கொண்டான். அடுத்தவர்கள் நம்மை மூளைச் சலவைச் செய்யும் முன் நம்மை நாமே மூளைச் சலவைச் செய்து கொண்டு விட்டால் நமக்கு வெற்றி தானே.

 

       இல்லை. இல்லை. அவன் சும்மா நடிக்கத் தான் செய்தான் என்று நீங்கள் நினைக்கலாம். படிக்கும் நமக்குத் தான் அது கதை. டாம் அடுத்த பையனுக்கு, வெள்ளையடிப்பது அற்புதமான கிடைத்தற்கரிய வேலை என்று காட்டுவதற்கு, அப்படி நம்ப வைப்பதற்கு அதில் உள்ள கடவுள் பங்கை கண்டு அறிந்து செய்து காட்டாமல் முடியாது. அதாவது நான் நண்பர்களிடமிருந்து கத்தியை வாங்கிக் காய்கறிகளை நறுக்கிக் காண்பித்தது போல.

 

       பொய் (நடிப்பு) சொல்லாமல் வாழ முடியாது. ஏனென்றால் வாழ்க்கையே ஒரு நடிப்பு. அதைப் பற்றி அடுத்தக் கட்டுரையில் வைத்துக் கொள்ளலாம் என்று பதிப்பாளர் சொல்லி விட்டார். அதனால் அதை விட்டு விடுவோம். (அடுத்தக் கட்டுரைக்கு இப்போதே மார்க்கெட்டிங் நடப்பதைக் கவனிக்கவும்.) இங்கு குறிப்பிடுவது வெள்ளைப் பொய். அதாவது அடுத்தவர்களைக் கெடுக்காமல் நம் வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளக் கூறும் வசதிக்கான பொய். சில உரசல்களைத் தவிர்ப்பதற்காகவும் முரண்பாடுகளை, சிக்கல்களை மேலும் வளர்க்காமல் இருப்பதற்காகவும் சொல்லும் பக்குவப் பொய்.

 

       அடுத்தவர்களைக் கெடுக்க, பழி போடச்சொல்லும் பொய்களைச் சொல்லலாமா வேண்டாமா, சொல்வதனால் எப்படிச் சொல்வது என்பதை நாம் புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. அதை நாம் எல்லோரும் சிறப்பாகச்(!)செய்து வருவதால் தான் உலகம் சுபிட்சமாக(!) இருக்கிறது.

 

அப்படி நம்பும்படி வெள்ளைப் பொய் சொல்ல நாம் முதலில் அதை  முழுக்க நம்ப வேண்டும். விற்பனை முகவர்களுக்கு (agent) இது கை வந்த கலை. ஆனால் அனைவருக்கும் தேவையான வெற்றியின் இரகசியம்.

 

வழக்கம் போல் வண்டி பக்கப் பாதையில் சென்று விட்டது. கடவுள் (unfettered creativity) பக்கப் பாதையில் விட்டால் போய் கொண்டே இருப்பார். கழுதை (discipline) தான் அவரைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மீண்டும் தலைப்புக்கு வருவோம்.

 

      பள்ளி, கல்லூரிப் படிப்பிலும் ஆராய்ச்சி, அலுவலகம் தோட்டம் துப்புரவுப் பணியிலும் இதே கடவுள் கழுதை தான். புதிய பாடங்கள், யோசனைகள், திட்டங்கள் சிந்தனையைக் கிளறும்; ஆர்வத்தைக் கூட்டும்; பரவசத்தை ஏற்படுத்தும். அதனால் கடவுள் போல் ஆக்க அலைகள் அகத்தில் எழும். அவற்றைத் தொடர்ந்து பொதிந்துள்ள கழுதை வேலைகளைப் புறக்கணித்தால் ஆடி அடங்குவதற்குப் பதிலாக ஆடாமலேயே அடங்கி விடும்.

 

மேற்கண்ட வரை படம் எப்படிக் கடவுளும் கழுதையும் கட்டிப் பிடித்துக் கொண்டு புரளுகிறார்கள் என்பதை விளக்கியிருக்கும். இதை மேலும் ஓர் எடுத்துக் காட்டில் பொருத்திப் பார்ப்போம்.

                                                                                                                                                                                                                                 (தொடரும்….)

 

Tammy also wants to educate parents on some of the look at the website special language, similar to a secret code, that many of today’s children are using

வேம்பையன் தொல்காப்பியன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கடவுளும் கழுதையும் (பாகம் -2) (வெற்றியின் இரகசியம்)”

அதிகம் படித்தது