கடவுள் : இருப்பும் தற்காலமும் (பாகம் – 2)
ஆச்சாரிMay 1, 2013
ஆதிதொன்ம உருவாக்கங்கள் குறிப்பிடும் இயற்கையியல் தெய்வங்கள் இன்று பெருவாரியாக மக்கள் மனங்களில் பதிவிரக்கம் செய்ப்பட்ட நிலையில், தெய்வம் கோயிலுக்குள் இருப்பதாக இல்லை. மாறாக மக்களுக்குள் வாழும் முக்கிய செயல்பாடாக நிற்கிறது. ஆக, தற்பொழுது மக்களின் எல்லாவித கொரூர செயல்பாடுகளோடும் கடவுள் வாழ்கிறார். சில விடுதலைச் செயல்திட்டங்களின் பேரில், தன்னை அவர் வெளிப்படுத்தியும் கொள்கிறார். இங்கு கடவுள் என்பவர், நம்மோடு வாழ்பவரா? நமக்காக வாழ்பவரா? என்ற, கருத்தியலில் யாருக்கும் கேள்வி எழவில்லை. மாறாக, கடவுள் இருக்கிறார் என்ற தர்க்கத்தில் மட்டும், நம்பிக்கை ஊன்றியிருக்கிறது. இந்த மாதிரியான பொது புத்தியிலிருந்து, சற்று மாற்றி யோசிப்பவர்கள் கிறித்தவர்கள். இவர்கள் வரலாற்றில் கடவுள் மனிதனாக வாழ்ந்தவர். மனிதத் துயரங்களில் பங்குகொண்டு – போராடி – சிலுவை சுமந்தவர், என்பது நியாயமானதாக இருக்கிறது. இருந்தும், ஏசு உயித்தெழுந்த நிகழ்வு கேள்விக்குள்ளானதே? சற்று நம்பகத்தன்மை அற்றதே.
பொதுவாக மனிதன் உணர்வுகளால் ஆனவன் என்கிறது அறிவியல். எனவே தான் மனிதனை உணர்வுகளுக்கு ஆட்பட்டவனாக்கி – விடை சொல்ல முடியாத ஒரு புதிர் உணர்வு -என்று மனித உணர்வுக்கு விளக்கம் தருகிறார் ஐன்ஸ்டீன். இஃது அவருக்கேற்பட்ட மாபெரும் வியப்பும் உண்மையுமாகும். இதே விளக்கம் மனிதனுக்குள் ஒரு பெரும் துயரத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த மாறுபட்ட உணர்வுநிலைக்கான காரணம் என்ன என்று புத்தரைக் கேட்ட போது அவர் சீடர்களுக்கு அளித்த பதில் பின்வருமாறு இருக்கிறது.
அது எதுவாகவோ இருக்கட்டும் இப்போழுது உன்னால் தீர்க்க முடியாது. உடனடியாக உனக்கு இருக்கும் துயரங்கள் பற்றி ஆராய்ச்சி செய். துயரங்களைத் தீர்க்க வழி கண்டுபிடி. இதைத்தான் இப்பொழுது உன்னால் செய்ய முடியும். கடவுள் என்று சொல்லி அதற்கு ஒரு உருவம் கொடுத்து, அப்புறம் கோயில் கட்டி, புரோகிதரை வைத்து மந்திரம் சொல்லி, பல மூடத் தனங்களை தொடர்ச்சியாகச் செய்து, உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டு, இதன் மூலமாகவும் உன்னுடனான துயரங்களை பெருக்கிக் கொள்ள முடியுமே ஒழிய, தீர்த்துக்கொள்ள முடியாது. ஆகவே அந்த இருட்குகையிலிருந்து வெளிச்சத்திற்கு வா. இங்குள்ள உலகத்தை பார். இங்குள்ள சிக்கலைப் புரிந்துகொள்.
இங்கு புத்தர் சொன்ன அதேக் கருத்தியலைத் தான் திராவிட இயக்கத்தவர்களும் சொல்லிவந்திருக்கிறார்கள். உன் உள்மன நிலையில், எது உண்மை என்று உனக்குப்படுகிறதோ அதை மட்டும் செயல்படுத்து என்பதே, திராவிட இயக்கச் சிந்தனையாக இருக்கிறது.
இங்கு, இன்னொரு உளவியல் சார்ந்த கருத்தும் தேவைப்படுகிறது. பொதுவாக, மனிதனின் உள்மனப் பதிவில் எந்தமாதிரியான காட்சியுருக்கள் பதியும் என்றால், நம்மால் அதிகமாக அசைபோடப்பட்ட, அல்லது செயல்படுத்த இயலாத, ஒருவித பூடகமான நிகழ்வுகள் மட்டுமே உள்மன நிலையில் பதிவாகும் என்கிறது உளவியல். அந்தவகையில் நமக்கு கிடைக்கும் தொல்-பழம் பெரும்வழிபாடு, முன்னோர் வழிபாடு (பதுக்கை). இந்த முன்னோர் என்ற சொல், பெரும்பாலும் நம் தாய் – தந்தையரையோ அல்லது குடும்பத்தாரையோ அல்லது நம்முடன் நெருங்கி, ஐக்கியமாகிப்போன உறவினர்களையோ, நண்பர்களையோ குறிப்பதாகிறது. இப்படி நம்மோடும் நம்முணர்வோடும் ஐக்கியமானவர்களின் பிரிவோ, மறைவோ நம்மை ஒருவித உள்மன நினைவுக்குள் அழுத்தி – மீண்டும் மீண்டும் அவர்களைப் பற்றியச் சிந்தனை நம்முள் எழ காரணமாகின்றன. இது ஒருவித அற்புதமான உணர்வும்கூட. இதை எந்த பகுத்தறிவுக்கும் உட்படுத்தி நம்மால் புறந்தள்ள முடிவதில்லை.
எனவே, இம்முறை வழிபாடும், நம்மை கடவுள் என்ற பொதுநிலை தர்க்கத்தோடு பிணைத்துள்ள சூழல் இங்கு கவனிக்கத் தக்கதாகிறது. ஒருவகையில் நம் தமிழ் சமூகத்திற்கான கடவுள் வழிபாட்டு முறைமை நம் முன்னோர்கள் மீது நமக்கிருந்த உளவியல் பாதிப்பு என்று ஏற்றுக் கொண்டாலும், நமக்கான உணர்வுகள், அது சார்ந்த வழிபாட்டு முறைமைகள் அல்லது சடங்குகள் பற்றிய கருத்தாக்களில் இடைச்சறுகளாக, புரோகிதர்கள் அல்லது பூசாரிகள் எப்படி வந்தார்கள்? என்ற மிக முக்கியமான கேள்வி எழுகிறது. ஏனெனில், கடவுளை நாம் பேசுகிறோமா? பரப்புகிறோமா? என்ற கேள்வி இவர்களால்தான் எழுகிறது. மேலே சொன்ன உளவியல் நமக்கு பாடமாகவும், சிலருக்கு படும்பாடாகவும் (நோயாகவும்) இருப்பதுண்டு. இப்போதைக்கு நமக்கும் கடவுளுக்குமான உறவை பிற, சமூக பரப்புகளில் பேசி -அதன் மூலம் கடவுளை, கடவுள் நம்பிக்கையைப் பரப்பி – தன்னையும், தன் தேவையையும் பாதுகாத்துக் கொள்ளும் புரோகிதர்களை, உளவியல் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் என்ற, நிலையில் நிருத்தி விட்டு வரலாம். ஏனெனில், நம்பிக்கையை மூடநம்பிக்கையாக மாற்றவும், அல்லது எது நம்பிக்கை? எது மூடநம்பிக்கை? என்ற குழுப்பத்தை நம்மில் பலருக்குள் விதைக்கவும் செய்தவர்கள் இவர்கள், என்பதால் இவர்களை வியாதிஸ்தர்கள் என்று சொல்லுவதில் தவறொன்றுமில்லை.
நிகழ் நிலைக்கு நிறைவாக
இயற்கை என்னும் மாபெரும் வரலாற்று இயக்கத்தின் கீழ்தான், வாழ்க்கை இருக்கிறது. எதையும் தனக்கென வைத்துக்கொள்ளாது இயற்கை, தன்னைத் திறந்து எல்லாவற்றையும் தருகிறது. இயற்கை அழிக்கவும், ஆக்கவும் செய்யும் பேரியக்கம். இஃது அழிக்கும் எதுவும் முற்றாக அழிந்து போவதில்லை. ஏனெனில், எல்லா அழிவையும் ஒரு வித ஆக்கமாகவே இயற்கை செய்துவருகிறது. ஆக, இயற்கை எல்லாவுமாக இருக்க, கடவுளும் அதன் செயல்பாடும் இயற்கையாகவே பார்க்கப்படுகிறது. இப்படி பார்க்கப்படும் பார்வை ஒருவித அறிவுநிலைப் பார்வை. மனிதனின் ஆளுமைக்குள் இயற்கையின் பேராற்றலோடு எத்தனையோ பண்புகளும், ஆற்றாமைகளும் படைக்கப்பட்டுள்ளன. பேய் பிசாசு போன்ற வேற்றுணர்வுப் பார்வைகளும் நமக்கு இப்படித்தான் தோன்றின. இதில் கற்பனையின் பங்கு கணிசமானதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே தன்மையின் கீழ்தான் நம் தமிழ் இதிகாசங்களையும், புராணங்களையும், சில காப்பிய – கதாப்பாத்திரங்களையும் பார்க்கமுடிகிறது.
உதாரணமாக,
சிலப்பதிகாரத்தில், கண்ணகி மதுரை எரிய சாபமிட்டு, அவள் வார்த்தைப் கற்புப்பதுமையில் பலித்து, மதுரை எரிய, அதைக்கண்ட மதுரை மாநகரக் காவல்தெய்வம் (மதுராபதி) கண்ணகியின் சினத்தைக் கண்டு, அஞ்சி பின் – அவளிடம் கெஞ்சி கேட்டு நெருப்பிலிருந்து மதுரையை மீட்கிறது. அதேபோல், மணிமேகலையில் ஆபுத்திரன் மூலம், தெய்வம் (சிந்தாதேவி) மனிதனின் தேவையை நிறைவுசெய்கிறது. இன்னும், பல இடங்களில் தெய்வங்கள் படைப்பியக்கங்களில் மனிதனோடும், அவன் தேவையோடும் ஒத்துப் போகக்கூடியவைகளாக இருக்கின்றன. இது ஒருவித படைப்பாக்க கற்பனை.
உலகில் வருமை தீரவேண்டும், நீதி நிலைநிறுத்தப் படவேண்டும், வாழ்வியலுக்கான முக்கியத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும், என்ற தனிமனித ஆசைகள் ஏற்றுக்கொள்ளப்பட, எழுந்த கற்பனைக் கதாப்பாத்திரங்களே புராணங்களில் இடம்பெரும் கடவுளர்கள். ஏனெனில்,
இஃது மனிதர்களின் உலகம், இதில் தெய்வங்களையும் மனிதர்கள் தான் உருவாக்கியிருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக, கோவை ஞானி குறிப்பிடும் இன்னொன்றையும் சொல்லுவது இங்கு பொருத்தமாக இருக்கும்.
இளங்கோ அடிகள் சமணர், சாத்தனார் பவுத்தர். இவர்கள் தெய்வங்களிடம் மனிதனை ஒடுக்க மாட்டார்கள். இவர்களைப் போல திருவள்ளுவரும் தொல்காப்பியரும் கூட கருபொருள்களில் ஒன்றாகத்தான் தெய்வத்தை வைத்தனர். நிலத்தையும் பொழுதையும் தெய்வம் படைக்கவில்லை. மனிதனோடு உறவுடைய கருபொருள்கள் நிலத்தோடும் பொழுதோடும் தொடர்பு கொண்டு உருவானவை. இவர்கள் பார்வையில் தெய்வமும் ஒரு கருபொருள். தமிழ் இலக்கியத்தின் முதற்காலத்தில் இலக்கியத்தின் முதன்மை பொருளாக இருந்தவன் மனிதன். இவனுடைய காதலையும், வீரத்தையும் தான் முற்கால இலக்கியங்கள் போற்றுகின்றன. பாடுகின்றன. மனிதனிலிருந்து தான் தெய்வம் தோன்றியது என்ற கருத்தை இந்த இலக்கியங்கள் கொண்டுள்ளன.
ஆக, நாம் கடவுளையும் சமயத்தையும் சரியாகப் புரிந்து கொள்வதர்கான தேவை அதிகரிக்கிறது. கடவுள் என்ற பொது சிந்தனைதான் அடிப்படையில் இயற்கையை, உலகை, அதிலிருந்து நம்மை, நமக்கு முன் உதாரணங்களான உறவுமுறைகளை, அறிவியலை, கலையைப் படைதத்து என்றால், நாம் வாழும் வாழ்க்கைக்குள் எழும் பல்வேறு விதமான கேள்விகளுக்கு, பதிலாகவும் கடவுளே முன்நிற்க வேண்டும். தற்போது இயற்கை நம்மை ஏமாற்றுகிறது, நம்பிக்கை இழக்கச் செய்கிறது, எது எப்படியும் சரியாக நடப்பதாக இல்லை, வறுமை இருக்கிறது, பசி பஞ்சம் தலைத்தூக்கி இருக்கிறது, சமத்துவமில்லாத சமய நெறி இங்கு பரவியிருக்கிறது, சரியான தாய் தந்தை இல்லாத மகனும் மகளும், சரியான தலைவரில்லாத தொண்டனும், சரியான அரசியலமைப்பில்லாத மக்கள் ஆளுகையும் உருவாகியிருக்கின்றன. முற்றிலும் பொதுமையற்ற தன்னலம் தலையெடுத்துள்ளது. இதற்கெல்லாம் கடவுள் பொறுப்பானவர் தானே? இந்தமாதிரியான அநீதிகளும் கடவுளால்தானே நடந்திருக்கிறது? இதற்கான பதிலாக மட்டும் நம் மனம் கடவுளை ஒப்புக்கோற மறுக்குமானால், கடவுள் மறுப்பு சிந்தனையும் இயல்பாக மேலெழத்தான் செய்யும்.
ஏனெனில், இன்றைய நவீன சிந்தனைக்குள் நின்று பார்க்கும்போது, இறைநம்பிக்கை கரைந்து போகிறது. மாறாக, பிரபஞ்சம் நமக்காக இயங்கவில்லை, எல்லா இயற்கை உருவாக்கங்களும் தற்செயலானதே என்ற எண்ணம் தோன்றுகிறது. அப்பொழுது கடவுள் என்னும் தொன்மம் வெற்று கற்பனையாக மிஞ்சுகிறது. நமக்கான இயலாமைகளை கடவுளின் உருவாக்கமென்றும், அதற்கு கடவுளே கதி என்றும் நம்மை நாமே நம்பவைத்துக் கொண்டு, நாமே ஏமாறத் தலைபடுகிறோம்.
இப்படியும் கடவுள் நம்முள் வாழ்கிறார். இன்னும், இவர் நம்மை ஏமாற்றி, நம் அறிவைத்தின்று, நமக்கான எல்லாப் பண்புகளையும் அபகரித்து, நமக்கான நன்மைகளுக்கெல்லாம் காரணகர்த்தாவாக, தன்னைத் தானே முன்னிருத்திக்கொண்டு, நம்மை எதற்கும் இலாயக்கற்றவனாக்கி, கடவுள் வாழ்கிறார் அல்லது சிலரால் வாழ்விக்கப்படுகிறார். அவர் புரோகிதரோ; சமய வாதியோ; யாரோ ஒருவர் என்று வைத்துக்கொள்ளலாம். இந்த கடவுளின் வாழ்வென்பது எப்படி நிகழ்கிறது அல்லது நிகழ்ந்தேரியிருக்கிறது? என்றால், நமக்குள்ளான சமரசத்தோடு, நமக்கில்லாத உலகியல் இயக்க அறிவோடு, நமது புலன்களை நம் கட்டுப்பாட்டில் நிறுத்தமுடியாத இயலாமையோடு, நமது பொருளாதார-இன-மத பேதங்களைத் தகர்க்கத் தெரியாத அறியாமையோடு, மேற்கண்ட கடவுள் என்ற உருவாக்கத்தின் கீழ் (மேலாதிக்க உருவாக்கத்தின்) நாம் கட்டுப்பட்டும், உடன்பட்டும் இருக்கிறோம். இக்கட்டுப்பாட்டை தகர்த்தெரியும் நம்பிக்கைக்கூட நமக்கில்லை என்பது தான் உண்மை.
நம்மால் நமக்காக உருவாக்கம் பெற்ற இயற்கையோ, அல்லது இயல்பான இயற்கை செயல்பாடுகளால், தோன்றிய கடவுள் நம்பிக்கையோ, இன்று நமக்கே பெரும் கூட்ட எதிர்ப்பாக, நம்மை அச்சுறுத்தும், சுரண்டும், சூரையாடும் பேரழிவாக நமக்குள் நிற்கக் காண்கிறோம். அப்பொழுதும் அதன் மீதான சமரசத்திலிருந்து நமக்கு மாற்று கருத்து எதுவும் எழவில்லை. கடவுள் என்னும் தொல் பழமையுற்ற கருத்தியலைத் தூக்கியெரிய முடியவில்லை, ஏன்? இந்த கேள்விக்கு பதிலாக ஃபிராய்டு நமக்கு ஓர் உண்மையைத் தெளிவுபடுத்துகிறார். ஒவ்வொருவர் மனத்தின் ஆழத்தில் இருப்பது,இயங்குவது ஒரு உயர்வகையான ஈகோ. (சூப்பர் ஈகோ). அதாவது உயர்வகையான நான் என்பது தான் அந்த பதில். இந்த நான், யார்? சமயத்தின் அடிப்படையான கேள்வியும் இதுவே.
தொடக்கக்காலத்தில் மனிதன் யாருக்கும் அடிமையாக இல்லை. இயற்கையோடு அவன் ஓரளவு இணைந்திருந்தான். வரலாற்றுக் காலத்தில் தான் தனிவுடைமை, அரசதிகாரம், முதலியவைத் தோன்ற, மனிதன் தன்னை இழந்தான். அன்று முதல்தான் அவன் தன்னையும் தன்னடிமை தனத்தையும் புரிந்துகொண்டான். எனவே தான் அவன் இன்று பல்வேறு விதமான, ஆதிக்கத்துக்கெதிராகப், போராடி வருகிறான். இவன் போராடக்கூடியவானக நிறுத்தப்பட்டிருக்கும், இன்றைய சூழலில் நான் என்பது மனிதனைக் குறிக்கிறதா? அல்லது தனது சுயத் தேவைக்காகவோ, தனக்கானதை மீட்டெடுக்கும் போராட்டத்துக்காகவோ போராடக்கூடிய போராளியைக் குறிக்கிறதா? என்பதே நமக்கான கேள்வி. இந்த இரண்டு விதமான கெள்விக்குறிய மனிதர்களையும் படைத்தவன் அல்லது உருவாக்கியவன் இறைவன் தான்? எப்படி இறைவனால், படைக்கப்பட்ட – விரும்பப்பட்ட – பரப்பப்பட்ட மனித(ம்)ன் போராளியாக மாறினான். இயல்பான கடவுள் ஏற்பு, மறுப்பு சிந்தனைகளுக்கு இடையே, தனக்கானதை எட்ட போராடும் போராட்ட சிந்தனை எப்படி விதைக்கப்பட்டது? உண்மையில் சமயத்தையோ – இறைமையையோ முழு அளவில் எவரும் நம்பாதக் காரணத்தினாலே தான், இப்படிப்பட்ட போராட்டச் சிந்தனைக்கான தேவை மேலெழுந்துள்ளது. அஃது தனக்கானதைப் பெறத் தடையாக இருக்கும் சமயத்தின் மீதான போலிகளையும்; மூடநம்பிக்கையின் பேரால் பரப்பப்பட்டிருக்கும் இறைமையையும் ஏற்க மறுக்கிறது. அவற்றைப் புறந்தள்ளி – அழிக்கப் போராடுகிறது.
இத்தகைய சுயதேவைக்கான, போராட்டத்தைத் தான் பெரியாரியமும், கம்யூனிசமும் பேசின. இந்த உலகமும் அதனூடான உற்பத்தியும் நம் அனைவருக்கும் பொதுவானவை. உழைத்து உற்பத்தி செய்து நாம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதுதான் கம்யூனிசச் சிந்தனை. கிட்டத்தட்ட மதத்தின் நோக்கமும் இச்சிந்தனையைச் சார்ந்ததே. ஆனால் அதனுள்ளார்ந்த புரோகிதம் நம் எதிர்ப்புக்குறியது. இஃதே இன்று எல்லோருக்கும் பொதுவாக இருந்த ஆதிசமூகத்தை அழித்து – மறைத்து தனிவுடைமை, அரசாதிக்கம், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கிய வர்க்க சமூகத்தை தோற்றுவித்துள்ளது. இந்த வர்க்க சமூகத்தின் மீதானதாகத்தான் இன்றைய மனிதனின் போராட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே தான், இவன் பிராமணியத்தையும், அஃது உருவாகிய வழிபாட்டு சடங்குகளையும், சாத்திரங்களையும் எதிர்கிறான். இவைகளின் கூட்டுச் சொத்தாக்கமாக இருக்கும் கோயிலைப் புறக்கணிக்கிறான். மாறாக, ஏற்றத்தாழ்வு, தனிவுடைமை, அரசதிகாரம் போன்ற – எல்லாவற்றையும் தகர்த்து, ஒரு பொதுமை, சமதர்ம நெறிக்குட்பட்ட சமூகத்தைக் கொண்டுவர முயல்கிறான், போராடுகிறான். சமதர்மம் என்னும் பேருணர்வு, கடவுள் என்னும் தொல்மரபு உருவாக்கித் தந்திருக்கின்ற ஆதிமனிதனின் உள்ளுணர்வு. இந்த பேருணர்வை தனிமனிதன் புரிந்துகொள்ள, ஒவ்வொரு தனிமனிதச் சிந்தனையினூடாக எழும் பகுத்தறிவு அவசியம்.
நம்மில்லான நான்’னை நாமே தீர்மானிக்கும் அறிவும், திறனும் அங்குதான் நமக்கு கிடைக்கும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கடவுள் : இருப்பும் தற்காலமும் (பாகம் – 2)”