மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கடை அரிசியும் கடைசித் தலைமுறை விவசாயிகளும்..

மகேந்திரன் பெரியசாமி

Aug 19, 2017

Siragu kadai arisi1

“கடை அரிசி வாங்கி சாப்பிடுறவன்லாம் பேச வந்துட்டான்” என்னும் சொலவடை எங்கள் ஊரில் வழங்கப்பட்டு வந்த மிகப்பெரிய அவமான சுட்டு வாக்கியம்..

தன் உழைப்பில் ஈட்டாமல், அந்த உழைப்பில் விளைவித்ததோ அல்லது வேலைசெய்து நெல் கூலி வாங்கியோ உழைக்காமல் சமைத்து உண்ணும் சோறு என்பது மிகப்பெரிய அவமானமாக வாக்கியமாக எடுத்தாளப்பட்டது, நான் சிறுவனாக இருந்த அந்தக்காலத்தில்..

இப்போது, நாங்கள் அரிசியை கடையில் மட்டுமே வாங்கி உணவை உண்ணும் ஒவ்வொரு வேளையின் போதும் உணர்கிறேன்.. நாமே விளைவித்த ஒரு தக்காளியாவது அந்த உணவில் சேர்த்து அந்த அவமானத்தை ஈடுகட்டவேண்டும் என்று.. நமக்காக காய்கறிகளையாவது நாமே உற்பத்தி செய்ய வேண்டும்..

என் அப்பா, நான் பெங்களூரில் வசித்தபோதும்கூட “நீயும் கடை அரிசி சாப்பிடுபவந்தானா” என்று கிண்டல் பேசுவது உண்டு:) மூட்டை முடிச்சுகளுடன் எங்கள் வயலில் விளைந்த அரிசியை, காய்கறிகளை, கீரைக்கட்டுகளை பெங்களூருக்கு அம்மாவும் அப்பாவும் ஊரிலிருந்து வரும்போதெல்லாம் சுமந்து கொண்டு வருவார்கள். அவர்கள் சுமந்து வரும்போது வருத்தமாக இருந்தாலும் உண்ணும்போது அத்தனை திருப்தியாக, ருசியாக இருக்கும்! ஊருக்குச் சென்று அமெரிக்காவுக்குத் திரும்பும் ஒவ்வொருமுறையும் வயலில் விளைந்த அரிசியை எடுத்துவர அனுமதி இல்லையென்று அம்மாவிடம் வருத்தமாக, ஏக்கமாகச் சொன்னாலும்கூட அரைக்காப்படி அளவாவது அம்மா அன்புடன் என் பெட்டியில் திணித்து அனுப்பிய வயலில் விளைந்த நெல் அரிசி என் பெட்டியில் இருக்கும்!.

Siragu kadai arisi3

நாம் ஒவ்வொருவருமே, இந்த அல்லது கடந்த தலைமுறையில் இல்லாவிட்டாலும், சில தலைமுறைகளுக்கு முன்பாகவாவது, விவசாயத் தலைமுறையாகத்தான் இருந்திருப்போம். விவசாயம் வெறும் வணிக நோக்கோடும், நுகர்வு நோக்கோடும் மட்டும் பார்க்கவேண்டிய ஒரு தொழில்முறை அல்ல. மனித இனம் மட்டுமின்றி, இயற்கை வளத்தையும் காக்கும் தன்மைகொண்ட பல பரிமாணங்களில் நோக்க வேண்டிய இயற்கை சார்ந்த வாழ்வியல் முறை. தலைமுறை தலைமுறையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அப்படித்தான் விவசாய வாழ்வியல் இருந்து வருகிறது. செழித்துக் கொழித்து விளைந்து வந்த வயல் நிலங்களின் நிலை இன்று பரிதாப நிலையில் இருப்பது வேதனையான ஒரு சூழல். நமது அனுபவத்தில் நேரடியாக நாம் பார்த்தவாறு, பத்தடி ஆழத்தில் கூடச் சுரந்து வந்த நிலத்தடி நீர், இப்போது ஆயிரம் அடிகள் துளைத்தும் கிடைக்காத அவல நிலையைப் பார்க்கும் நிலை வந்திருக்கிறது. வயலுக்கு நீர் இல்லை என்பதையும் தாண்டி, குடிக்கக் கூட நீர் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலையையும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் அனுபவித்து வருகிறது. இயற்கை வளங்களைச் சூறாடி, வளர்ச்சி என்ற பெயரில் நீர்வளங்களை அழித்து மரங்களற்ற, மழைகளற்ற வரட்டு நிலங்களாக, வறண்ட நிலங்களாகத்தான் அடுத்த தலைமுறைகளுக்கு விட்டுச் செல்கிறோம்..

வலைத்தமிழ் வானொலியில், ‘விவசாயம் பேசுவோம்’ என்னும் வாராந்திர வானொலித் தொடர் நிகழ்ச்சியில் (hosted by ValaiTamil Radio & AIMS India Foundation), மரபு விவசாயத்தில் சிறப்பான மாற்றங்களை உருவாக்கி வரும் பல்வேறு விவசாய வல்லுனர்களை நேர்முகம் செய்து நான் வலியுறுத்தியது போல, நம் வீட்டு முற்றத்தில், வீட்டின் பின்புறத்தில் நட்டு நாம் ஒருசில காய்கறிச் செடிகளை விளைவித்தால் கூட நாமும் விவசாயிதான். விவசாயத்தின் எச்சமாக, நாம் இருக்கும் இடத்திலேயே, குறைந்தது காய்கறிகளையாவது நட்டு வளர்த்து நமது சுயசார்புத் தன்மையுடன், ஆரோக்கியமான உணவு உண்ணும் அடுத்த தலைமுறைகளை உருவாக்குவோம். இப்போது நமக்குக் கடைகளில் அதிகம் கிடைப்பதெல்லாம் ‘உணவு போல்’ தோற்றமளிக்கும் உணவுப்பொருட்கள் தான். கொடை உணர்வோடு உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அல்ல. ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமெனில் ‘These days we do not get food products in the shops.. but ‘food-like’ products

Siragu kadai arisi6

தன்வீட்டுத் தோட்டத்தில் 40+ வகைக் தாவரங்களை (காய்கறிகள் கீரைகள் உட்பட) வளர்த்துவரும் / வளர்க்க மற்றவர்களையும் தூண்டி தங்கள் வீட்டுப் பின்புறத்தையே காய்கறித் தோட்டமாக்கி மற்றவர்களுக்கும் பயிற்சி கொடுத்துவரும் ஹியூஸ்டன் தோழி மைதிலி தியாகு, நியூஜெர்ஸி தோழி கவிதா, வர்ஜீனியா தோழர் அன்புமணி, சிகாகோ தோழர் சவடா போன்றவர்களையும் இந்த நேரத்தில் அன்புகூர்ந்து, பிரமிப்புடன் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். வீட்டில் தோட்டமிடும் தோழர்கள் & தோழிகள், உங்கள் பெயர்களை/படங்களை சிறகு இதழுக்கு அனுப்புங்கள்.. பார்ப்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும்..

இப்போதும் கடை அரிசி பற்றிய சொலவடை ஊரில் இருக்கிறதா என்று தெரியவில்லை. இருக்காது என்றே நினைக்கிறேன். விவசாயம் நொடித்துப் போயிருக்கும் இந்த சூழ்நிலையிலும் அரசாங்கமே தானமாக (அல்லது தந்திரமாக!) குடும்ப அட்டை மூலம் வழங்கும் இலவச அரிசியும் கொடுத்துவரும் சூழலிலும் இப்போது அந்த குடும்ப அட்டையும் பரிபோகும் நிலையையும் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்த நிலையில், ‘கடை அரிசியே கதி’யென்று ஊர்சனமும், ஊரைத் துறந்து விவசாயம் துறந்து, பல்வேறு நகரங்களுக்கும் நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த விவசாயத் தலைமுறைகளும் உலகமெங்கும் இருக்கக்கூடும்..

*இப்புவியில் பிறந்ததற்காய்
நற்செயல்கள் விட்டுப் போ!
இல்லையேல் நல்விதைகள்
சிலவேனும் நட்டுப்போ* என்று எப்போதோ நான் எழுதிய கவிதை வரிகளையும் இந்தச் சூழலில் நினைவுகூர்கிறேன்..

இதுபோலவே அன்பகலாத ஆற்று நீருக்கு நன்றி கூறும் ஆடிப்பெருக்கு நினைவுகளையும் நினைத்துப்பார்க்கிறோம். எழுச்சிமிகு எங்கள் திருச்சியில் கரைகள் மிரளத் திரண்டு வரும் காவிரிக் கரைகளில் திரளும் கூட்டம் கூட்டமாகத் திரளும் மக்கள் வெள்ளத்துடன் வெல்லம், அரிசி, எள் என்று படைத்துத் தின்று இன்புற்று எங்கள் மருத நிலப் பூமியில் ஆடிப்பெருக்கு அன்றும் தீபாவளி பொங்கல் பண்டிகைக்கு நிகராக அவ்வளவு பூரிப்புடன் காவிரி ஆற்று நீரை வணங்கிப் புத்தாடைகளுடன் புத்துணர்வுடன் ஆயிரக்கணக்கில் கூடிக் கொண்டாடினோம்.

ஆடி சீர் என்றே எங்கள் வீட்டு சகோதரிகளின் வீடுகளுக்கு பசு, ஆடு உட்பட சீர்வகைகளை வண்டிமாடுகள் கட்டிப் பங்காளி உறவினர்களுடன் சென்று விருந்து வைத்துக் கொண்டாடினோம்..

அந்த அற்புத நாட்கள் எல்லாம் எங்கே? ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பதெல்லாம் ஆடி அயர்ந்து அடிபட்டு விதையற்ற கனிகளையும் ‘உணவுபோல் காட்சியளித்து’ நம்மையே கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் ரசாயனக் கலவைகளை உண்டு வாழும் நுகர்வுக்கலாச்சார அடிமை இனங்களாக ஆகிவிட்டோமோ?

ஆற்று நீரே அற்றுப் போகுமோ.. நாம் கண்ட ஆற்று நீர்த் திரள் காட்சிகளை நமது அடுத்தத் தலைமுறைகள் காணாமல் விவசாயக் குடும்பங்களில் இருந்து வெளிவந்த ‘முதல் தலைமுறை’ என்று பெருமை பொங்கச் சொல்லிக் கொண்டிருக்கும் பெரும்பாலான நாம், ‘விவசாயத்தின் கடைசித் தலைமுறைகளாக ஆகிவிட்டோமோ என்ற அச்சத்துடன் நமது கண்களில் தான் நீர்.. ஆறுகளாக..

Siragu kadai arisi2

விவசாயம் காப்போம்.. நீர்நிலைகளை, சுயசார்பு வாழ்வியலை மீட்டெடுப்போம். அடுத்த தலைமுறைகளுக்கும் விவசாயத்தின் மேன்மையைப் புரியவைப்போம். தன்வீட்டுத் தோட்டத்தில் குறைந்தது காய்கறிகள் கீரைகளேனும் வளர்க்க நாமே முன்னுதாரணங்களாகி, நமது தலைமுறையினரையும் நமது அடுத்தடுத்தத் தலைமுறையினரையும் தொடர்ந்து ஊக்கப்படுத்துவோம்..


மகேந்திரன் பெரியசாமி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கடை அரிசியும் கடைசித் தலைமுறை விவசாயிகளும்..”

அதிகம் படித்தது