மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கண்டிப்பட்டி புனித அந்தோணியார் திருக்கோயிலும், மதநல்லிணக்க மஞ்சுவிரட்டும்

த. மகேந்திரன்

Sep 3, 2022

siragu jallikkattu

தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக ஜல்லிக்கட்டு என்ற மஞ்சுவிரட்டு நடைபெற்றுவருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பல ஊர்களில் சிறப்பான மஞ்சுவிரட்டுகள் நடைபெற்றுவருகின்றன. சிறாவயல் மஞ்சுவிரட்டு தனித்தன்மை வாய்ந்ததாகும். இதுபோன்று சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கண்டிப்பட்டி என்ற ஊரில் நடைபெறும் மஞ்சுவிரட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக உள்ளது. பெரும்பாலும் இந்துக் கோயில்களை முன்வைத்தே மஞ்சுவிரட்டு நடத்தப்படும். ஆனால் மஞ்சுவிரட்டிற்கான தேவாலயமாக கண்டிப்பட்டி புனித அந்தோணியார் ஆயலம் அமைந்துள்ளது. மேலும் மஞ்சுவிரட்டிற்கான மங்கலப் பொருள்கள் அனைத்தும் இத்தேவாலயத்தில் இருந்தே கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில் முக்கியமான மஞ்சுவிரட்டாக இம்மஞ்சுவிரட்டு விளங்குகிறது. இது பற்றிய செய்திகள் இவ்வியலில் தொகுத்துரைக்கப்பெறுகின்றன.

கண்டிப்பட்டி ஊர் அறிமுகம்

சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோயில் வட்டத்தில் வாணியங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட செங்குளிப்பட்டி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது கண்டிப்பட்டி என்ற சிற்றூர் ஆகும். சிவகங்கை மாவட்டம் என்பது சிவகங்கை மற்றும் தேவகோட்டை ஆகிய இரு வருவாய் கோட்டங்களையும், சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூh் மற்றும் சிங்கம்புணரி ஆகிய ஒன்பது வட்டங்களையும், 521 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. இம்மாவட்டம், சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில், தேவகோட்டை, சாக்கோட்டை, கல்லல், எஸ்.புதூர், திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஆகிய பன்னிரண்டு வட்டாரங்களையும், 445 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய மூன்று நகராட்சிகளும், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை, பள்ளத்தூர், கோட்டையூர், கானாடுகாத்தான், கண்டனூர், புதுவயல் மற்றும் நாட்டரசன்கோட்டை ஆகிய பன்னிரண்டு பேரூராட்சிகளையும் உடையதாகும்.

இவற்றுள் ஒன்று காளையார் கோயில் வட்டம். இவ்வட்டத்தில்தான் கண்டிப்பட்டி என்ற கள ஆயவிற்கு உட்படுத்தப்படும் ஊர் அமைந்துள்ளது. காளையார்கோவில் வட்டத்தில் பின்வரும் கிராமங்கள் உள்ளன.

1. மாங்காட்டேந்தல்
2. வாணியங்குடி
3. கௌரிப்பட்டி
4. உசிலனேந்தல் சுந்தனேந்தல்
5. எம்.வேலாங்குளம்
6. பிரண்டைக்குளம்
7. நாட்டரசன் கோட்டை
8. சென்னல்குடி
9. முத்தூர்
10. கொல்லங்குடி
11. விட்டனேரி
12. பருத்திக்கண்மாய்
13. குருந்தனி வாரியேந்தல்
14. புரசடி உடைப்பு
15. காஞ்சிப்பட்டி
16. முடிக்கரை
17. புதுக்கிளுவச்சி
18. பனங்காடி
19. அல்லூர்
20. ஒய்யவந்தான்
21. வெட்டிக்குளம்
22. பூவாளி
23. நாடாமங்கலம்
24. பி உடையாரேந்தல்
25. மல்லல்
26. சோழவந்தான்
27. அதப்படக்கி
28. ஆள்பட்டவிடுதி
29. செம்பனூர்
30. புளியங்குளம்
31. கொந்தகை(பெருங்காரை)
32. கீழப்பிடாவூர்
33. தடியமங்கலம்
34. பெரிய கண்ணனூர்
35. சேம்பார்
36. சிறுகானப்பேரி
37. புலவன் வயல்
38. சிராமம்
39. பால் குளம்
40. சேதாம்பல்
41. கோளந்தி
42. சேத்தூர்
43. மாரந்தை
44. காஞ்சிரம்
45. சாக்கூர்
46. காகுளம்
47. சிறியூர்
48. நல்லேந்தல்
49. எம் வாகைக்குளம்
50. பள்ளி வயல்
51. சோமநாதமங்கலம்
52. சேவாவூரணி
53. மாத்துக்கண்மாய்
54. உசிலங்குளம்
55. கொடிக்காடு கடம்பூரணி
56. நெடுங்குளம்
57. மொங்கன் கண்மாய்
58. மூவர் கண்மாய்
59. மரக்காத்தூர்
60. மாராத்தூர்
61. சிலுக்கப்பட்டி
62. வன்னிக்குடி
63. வலனை

என்ற அளவில் ஊர்கள் அமைந்துள்ளன. இவ்வூர்களில் வாணியக்குடி என்ற ஊரின் உள்பகுதியாக கண்டிப்பட்டி விளங்குகிறது .

கண்டிப்பட்டியின் சிறப்புகள்

கண்டிப்பட்டி என்ற ஊரில் பல சிறப்புகள் உள்ளன. இவ்வூரில் பழமையான அருட்திரு அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் கண்டிப்பட்டி குடியிருப்பு என்ற பகுதியில் அருள்மிகு காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இவ்வாறு கிறித்துவ சமயமும், இந்து சமயமும் கலந்து நிலவினாலும் சமயப் பொறை என்பது இவ்வூரில் நிலைத்து இருந்துவருகிறது.

புனித அந்தோணியார் தேவாலயம்

கண்டிப்பட்டி அல்லது கண்டுப்பட்டி என்றழைக்கப்படும் இவ்வூரில் புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு அந்தோணியாருக்கு வடிவம் உள்ளது.

புனித அந்தோணியார் என்பவரின் இயற்பெயர் பெர்தினாந்து என்பதாகும். இவர் கி.பி. 1195 ஆம் ஆண்டு பிறந்தார். பதுவை நகர அந்தோனியார் (அல்லது) லிஸ்பன் நகர அந்தோனியார் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு. இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் ‘பதுவைப்பதியர்’ என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் ‘பதுவைப் பதியர்’ என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே புனிதர் பட்டம் பெற வைத்தது.இவர் ஜுன் மாதம் 13 ஆம் நாள் 1231 ஆம் ஆண்டு இறப்பினை எய்தினார். இவர் இறந்ததன்பின்பு கி.பி. 1232 ஆம் ஆண்டு இவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பெற்றது.

கோடி அற்புதர் எனக் கொண்டாடப்படுபவர் புனித அந்தோனியார் ஆவார். காணாமல் போன பொருட்களை கண்டடைய, பேய்களை விரட்ட இவரது துணையை நாடுவர். செவ்வாய்க் கிழமை இவருக்கு நவநாள் ஒப்புக்கொடுக்கும் நாள் ஆகும். ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் என ஒன்பது மாதங்களுக்கு நவநாள் (அல்லது) தொடர்ச்சியாக ஒன்பது செவ்வாய் என நவநாள் ஒப்புக்கொடுப்பர். ஜூன் 13 இவரது திருநாள் .13 துரதிர்ஷ்ட எண் என்று சொல்வர், ஆனால் கத்தோலிக்கர்களுக்கு 13 என்பது புனித அந்தோனியாரின் எண் என்பதால் புனிதமாகும்.

உலகெங்கும் திருமறையோரும் ஏனையோரும் பதுவா நகர் அந்தோனியாரை அண்டி அவரிடம் மன்றாடி, அவர் வழியாய் இறைவனிடம் எண்ணிலடங்கா ஆன்ம,

உடல் நலன்களை பெற்று வருகின்றார்கள். புனித அந்தோனியார் போத்துக்கல் நாட்டவர். 1195 ஆம் ஆண்டு ஆகஸ்டுதிங்கள் 15ம் நாள் விஸ்பன் நகரில் பிறந்தார்.

அவரது பெற்றோர்கள் மார்டின், மேரி இவர்களுக்கு மூன்றாவதாகப் பிறந்த குழந்தைக்கு பெர்டினாந்து என்று பெயரிட்டனர்.பெற்றோரைப் போல குழந்தையும் சிறு வயதிலிருந்தே இறைப்பற்றிலே திளைத்து நற்குண சீலராக வளர்ந்து வந்தார். சிறுவன் பெர்டினாந்து ஒருநாள் மேற்றிராசன ஆலயத்தில் உருக்கமாக செபித்துக்கொண்டிருக்கும் போது தீடிரென்று பயங்கர உருவத்தில் அலகை தோன்றியது. சிறுவன் அஞ்சி ஓடவில்லை. மனத்துணிவுடன், தான் முழந்தாளிலிருந்த சலவைக் கல்மேல் திருச்சிலுவை அடையாளத்தை வரைந்தான். பிசாசு வெகுண்டுஓடியது. அந்த கல்லில் பதித்த திருச்சிலுவை அடையாளத்தை இன்னும் காணலாம். கூரிய நுண்ணறிவு படைத்த பெர்டினாந்து திறம்படக் கல்வியில் தேர்வு பெற்றார். ஆன்ம குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்தார். ஊர் உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த பெர்டிணாண்டு தனது விருப்பத்திற்கிணங்க அதிபரின் அனுமதியின்படி கொயிம்ரா என்னும் இடத்திற்குச் சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 1219ம் ஆண்டில் 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார்.

மொராக்கோவில் வேத சாட்சிகளாக மரித்த ஐந்து பிரான்சிஸ்கன் சபையோரின் திருப்பண்டம் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்த பெர்டினாந்து தானும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தனியாதத் தாகம் கொண்டார். எனவே 1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரன்சீஸ்கன் சபையில் சேர்ந்தார். அப்போதுதான் பெர்ணாண்டு என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற புதுப் பெயர் எடுத்துக்கொண்டார். சிறிதுகாலம் ஆப்பிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். மடைதிறந்த வெள்ளம் போல சொற்கள் பொழிந்தன. உள்ளத்தை ஊடுருவும் ஆழ்ந்த கருத்துக்கள்! அன்று முதல் அந்தோனியார் புகழ் பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில் திருமறையாற்றி பேரிடி முழக்கம் செய்தார். அவரின் திருஉரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்துவ கோட்பாடுகளை அந்த நாட்களில் நிலவிய தப்பான கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப்போதித்தார். 1946ஆம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் புனித அந்தோனியாரை திருச்சபையின் மறை வல்லுனர்களில் ஒருவராக அறிவித்தார். தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்தார். இதனால் ‘கோடி அற்புதர் புனித அந்தோனியார்’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார். வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் இவரை நாடி வருவோர் அதிகமாயிற்று. இதனால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டது. இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார்.

ஒருநாள் இவர் அன்றைக்குச் செய்ய கூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்த வேளையில் ‘அந்தோனியாரே என்னை காப்பாற்றும்’ என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்க வைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது புதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாகவும் இறக்கியதாகவும் கூறுவர். ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் புதுமைகள் செய்ததாகவும் வரலாறு உண்டு.

அந்தோனியார் குழந்தை இயேசுவை காட்சியில் கண்டு கையில் ஏந்தியதாகவும் கூறுவர். ஆகவேதான் படங்களில் அவரது கையில் குழந்தை இயேசுவும் மற்றொறு கையில் திருமறை நூலை கையில் வைத்திருப்பதாகவும் படம் பிடித்துக் காட்டப்படுகிறது. காணமல் போன பொருட்களை புனித அந்தோனியாரை நினைத்து மன்றாடினால் கிடைக்கிறது என்ற விசுவாசம் இன்றும் மக்களிடம் காணப்படுகிறது. “கோடி அற்புதர்” “பதுவை பதியர்” “பசாசுகளை நடு நடுங்கச் செய்பவர்” “காணாமல் போனவைகளை கண்டுபிடித்துக் கொடுப்பவர்” போன்ற அடைமொழிகளும் புனித அந்தோனியாருக்கே சொந்தம்.

1231ஆம் ஆண்டு பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும் நோய்வாய் பட்டார். அதே ஆண்டில் ஜுன் மாதம் 13 நாள் இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்றபின் இறைவனில் இளைப்பாறினார். அப்போது அவருக்கு வயது 36. அதன் பின் 336 ஆண்டுகளுக்குப்பின் அவருடைய கல்லரையானது தோண்டப்பட்டு அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிக்கப்பட்டது. அந் நாக்கு இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய அற்புதரான அந்தோணியாருக்கான ஆலயம் கண்டிப்பட்டியில் எழுப்பப்பெற்றுள்ளது.

இத்தேவலாயத்தில் இருந்து கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டுக்கான பொருட்கள் எடுத்து வரப்படுகின்றன. இந்து கோயில்களில் மட்டும் நடைபெறும் மஞ்சுவிரட்டு இங்குக் கிறித்துவ தேவாலயத்தில் நடப்பது என்பது வேறுபட்ட ஒன்று என்றாலும் சமய நல்லிணக்கச் செயல்பாடாகும்.

சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் மஞ்சுவிரட்டு என்பது சிறப்புடன் நடைபெற்றுவருகிறது. அவற்றில் கீழ்க்காண்பவை குறிக்கத்தக்கனவாகும்.

1. கண்டிப்பட்டி
2. சிறாவயல்
3. தேவபட்டு
4. கோட்டூர்
5. செவரக் கோட்டை
6. கல்லல்
7. மரிங்கிப்பட்டி
8. கண்டர மாணிக்கம்
9. குருந்தம்பட்டு
10. வைராபட்டி
11. கீழப்பூங்குடி
12. வேப்பங்குளம்
13. புரண்டி,
14. பாகனேரி
15. ஆலவிலாம் பட்டி
16. செம்பனூர்
17. ஆலங்குடி
18. பொய்யலூர்
19. நெடுமரம்
20. திருப்பத்தூர் புதூர்
21. சிவகங்கை புதூர்
22. மதகுபட்டி
23. மேப்பல்
24. ஓய்யவந்தான்
25. காஞ்சிப்பட்டி
26. வீரமுத்துப்பட்டி
27. முத்தூர்
28. புரசர் அடி உடைப்பு
29. குமாரபட்டி
30. தமராக்கி
31. இருமதி
32. கல்லல்
33. உருவாட்டி
34. மயில்ராயன் கோட்டை நாடு வடவன்பட்டி
35. அரளிப்பாறை
36. கட்டாணிப்பட்டி
37. காடனேரி
38. பொன்குண்டுப்பட்டி
39. கோட்டைப்பட்டி
40. கீழப்பட்டி
41. நடுவிப்பட்டி
42. பட்டமங்கலம்
43. சிறுவயல்
44. புளியங்குடிப்பட்டி
45. சிலந்தங்குடி
46. சிங்கம்புணரி
47. பொன்னமராவதி
48. கல்லங்குடி புதூர்
49. எஸ். ஆர் பட்டணம்
50. கிருபாக்கோட்டை
51. நாச்சாங்குளம்
52. வீரை
53. குருவாடிப்பட்டி
54. வெற்றியூர்
55. இடையமேலூர்
56. நெற்குப்பை
57. பூலாங்குறிச்சி
58. வேந்தன்பட்டி
59. மகிபாலன்பட்டி
60. செவ்வூர்
61. கருங்குளம்
62. கட்டுக்குடிப்பட்டி
63. ஓவழிப்பட்டி
64. நெடுவயல்
65. வார்ப்பட்டி
66. கல்லூர்.
67. பம்பரம்பட்டி
68. கோட்டூர்
69. காலக்கண்மாய்
70. கீழக்கோட்டை
71. காளாப்பூர்
72. நடுவிக்கோட்டை
73. கீழையூர்
74. பனங்குடி
75. சேம்பார்
76. வைரவன்பட்டி
77. மேலப்பூங்குடி
78. சாலூர்
79. அரளிக்கோட்டை
80. சூரக்குடி
81. வேலாயுதப்பட்டணம்
82. வடவன்பட்டி
83. ஒக்கூர் சாலூர்
84. மேலச்சாலூர்
85. கருத்தம்பட்டி
86. கருப்பூர்
87. மருதிப்பட்டி
88. கொரட்டி
89. சொக்கநாதபுரம்
90. சக்குடி
91. ஆவரங்காடு
92. திருக்கோஷ்டியூர்
93. கூத்தக்குடி
94. வாணியம்பட்டி
95. வாணியங்குடி
96. சடையம்பட்டி
97. கள்ளிப்பட்டி
98. அமராவதிப் புதூர்
99. கல்லல் இந்திரா நகர்
100.கல்லூர்
101. கூட்டுறவுப்பட்டி
102 கழனிவாசல்
103. பெரும்பச்சேரி
104. பெரியகோட்டை
105. முத்துப்பட்டி
106. ஆறாவயல்
107. ஜமீன்தார்பட்டி

போன்ற பல சிவகங்கை மாவட்ட ஊர்களில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெற்றுவருகிறது.

இவற்றில் கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டு பழமையும், மதநல்லிணக்கமும் கொண்டதாகும் என்பது சிறப்பாகும். இவ்வொரு ஊரில் மட்டும் தான் இந்து சமயம் அல்லாத நிலையில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நான்காம் நாள் கண்டிப்பட்டியில் அந்தோணியார் கோயில் திடலில் பொங்கல் விழா நடத்தப்படும். அன்று ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தோணியாருக்குப் பொங்கல் பொதுவில் வைத்து வழிபடுவார்கள்.

இதற்கு முன்பு தைமாதம் முதல் நாள் தைப்பொங்கல், அடுத்தநாள் மாட்டுப்பொங்கள், அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் போன்றன மக்களால் கொண்டாடப்படுகின்றன. இவை நிறைந்த பிறகு நான்காம் நாள் அந்தோணியார் பொங்கல் வைக்கப்படுகிறது.

இந்நாளில் புனித அந்தோணியாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. திருப்பலிகள் நடத்தப்படுகின்றன. இதன்பின்பு சப்பரத்தில் அந்தோணியார் பவனி வருவார். மின்னொளி விளக்குகள் அலங்கரிக்க, அந்தோணியார் தேரில் பவனி வரும்போது இசைமுழக்கமும், வானவேடிக்கைகளும் நடத்தப்படும். புனிதப் பாடல்கள் பாடப்படும். மக்கள் மெழுகுவர்த்திகளை வழங்கி அந்தோணியாரை வழிபடுவர்.

மஞ்சுவிரட்டு தொடக்கம்

தைமாதம் நான்காம் நாள் மஞ்சுவிரட்டு நடத்தப்படும். மஞ்சுவிரட்டு தொடங்குவதற்கு முன்பு ஊர்க்காரர்கள் ஒன்று கூடுவர். ஊர் நாட்டார் என்று அழைக்கப்படும் கள்ளர் சமுதாய மக்களில் மூத்தவர் ஒருவர் தலைமைப் பொறுப்பில் இருந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவார். இவருக்குப் பரிவட்டம் கட்டப்படும். மேள தாளம் முழங்க இவர் தலைமையில் ஊரார்கள் புனித அந்தோணியார் ஆலயத்திற்குச் செல்வர். தேவாலயத்தில் இவர்களுக்கு மரியாதை செலுத்தப்படும். இதுவே முதல் நிகழ்வாகும்.

இரு மதத்தாரும் வழிபடல்

கண்டிப்பட்டியில் இரு மதத்தார்கள் ஏறக்குறைய சம அளவில் உள்ளார்கள். இவர்கள் ஒரு தாய் மக்கள் போல சகோரத மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தைமாதம் நான்காம் நாள் நடக்கும் மஞ்சுவிரட்டைச் சிறப்புடன் செய்ய தேவலாயத்தில் வேண்டிக் கொள்வர்.

தேவாலயத்தில் பொதுவில் மஞ்சுவிரட்டிற்கான பரிசு, மற்ற பொருள்கள் வைக்கப்பெற்றிருக்கும். இவற்றைக் காலணிகள் அணியாமல் நாட்டார் பெருமக்கள் அவர்களின் பங்காளிகள் தலையில் தூக்கி வைத்துக்கொள்வர். இதன்பின் கிறித்துவர்கள், இந்துக்கள் அனைவரும் புனித அந்தோணியார் ஆலயத்தை மூன்றுமுறை சுற்றி வருவர். அதிர்வேட்டுகள் முழங்கி இவ்வழிபாடு ஊர் முழுவதும் அறிவிக்கப்படும்.

இதன்பிறகு இந்த ஊர்வலம் கண்டிப்பட்டியில் உள்ள காவல் தெய்வமான அருள்மிகு கருப்பர் கோயிலுக்குச் செல்லும். இப்பவனி கொட்டுகள் முழங்கச் செல்லும். மேள தாளங்கள் முழங்கச் செல்லும். இதனோடு இளைஞர்கள் ஆடிய வண்ணம் செல்வர்.

இப்பவனி கருப்பர் கோவிலுக்குச் சென்று அங்குச் சிறப்பு பூசைகள் நடத்தப்படும். கருப்பருக்குச் சாம்பிராணி, ஊதுவத்தி, தீப ஆராதனை நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொள்வர். கருப்பரை வணங்கிய பின்பு இந்த பவனி மஞ்சுவிரட்டு நடக்கும் தொழுவிற்குச் சென்றடையும்.

தொழுவின் அமைப்பு

கண்டிப்பட்டியில் உள்ள மஞ்சுவிரட்டுக்கான தொழு சிறந்த கட்டமைப்பு உடையது. ஏழு அறைகளாக இது தடுக்கப்பெற்றிருக்கும். இது தமிழகத்தில் உள்ள தொழுக்களில் குறிக்கத்தக்கதும் பெரியதும் ஆகும். இதற்குப் பின்வாசல், முன்வாசல் இரண்டும் உண்டு. இவை இரும்புக் கதவுகளால் மூடப்பட்டிருக்கும். மாடுகளின் பயன்பாட்டின்போது மட்டும் திறக்கப்படும்.

இது சுமார் நாற்பது அடிக்கு, இருபது அடி என்ற அளவில் அமைக்கப்பெற்றுள்ளது. இந்தத் தொழுவின் சுவர்கள் நான்கரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உடையதாகும். மேற்கு முகம் பார்த்த தொழுவாக இது உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் மூன்றாம் நாள் இந்தத் தொழு சுத்தம் செய்யப்பெற்று வெள்ளை அடிக்கப்பெற்று சீர்படுத்தப்படும்.

கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டின் இருவகைகள்

கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டு இருவகைகளில் நடத்தப்படுகிறது. அவை
1. கட்டு மாடு மஞ்சுவிரட்டு
2. தொழு மாடு மஞ்சுவிரட்டு
என்பனவாகும்.

கட்டுமாடு மஞ்சுவிரட்டு

கட்டு மாடு மஞ்சுவிரட்டில் எவ்விதமான பரிசுப்பொருளும், மாடு பிடிப்பவர்களுக்கும், மாடு உரிமையாளர்களுக்கும் வழங்கப்படுவதில்லை. இங்கு வீரம் மட்டுமே முதன்மை பெறுகிறது.
கண்மாய்த்திடல்
தொழுத்திடல்
ஊருக்குப் பின்னால் உள்ள தைல மரத்திடல்
ஆகிய மூன்று இடங்களில் இந்த விளையாட்டு நடத்தப்படுகிறது. வரையறை ஏதும் இன்றி ஆங்காங்கே குவியும் மாடுகள் ஆங்காங்கு அவிழ்க்கப்படும். அவ்வாறு வரும் மாடுகளைத் தனியாகவும் ஒன்று சேர்ந்தும் மாடுபிடி வீரர்கள் பிடிப்பார்கள். இது கட்டுப்பாடு அற்ற மாடுபிடியாகும்.

இவ்வாண்டு காரைக்குடி கில்லரின் காளை சிறப்பாக இங்கு விளையாடியது. இதற்கு முன் ஆண்டுகளில் விளையாடிய
சாத்தரசன்பட்டி அழகுராஜா காளை
மாலைகண்டான் மொட்டைக்காளை
பருத்திக்கண்மாய் கோயில் காளை
போன்றன வயது முதிர்வு காரணமாக இடம் பெறாமல் போனது வருத்தத்திற்குரியது.
சாத்தரசன்பட்டி என்ற ஊரைச்சார்ந்த அழகுராஜா காளை பல களங்கள் கண்டு வெற்றியை மட்டுமே கண்ட காளையாகும்.

வெற்றியூரை அடுத்த மாலைகண்டான் என்ற ஊரைச் சார்ந்த மொட்டைக்காளை எப்போதும் கண்மாய்த்திடலில் கண்டிப்பட்டியில் அவிழ்க்கப்படும். இதனைப் பிடிக்க நினைப்பவர்கள் கண்மாய் திடல் கடந்து, தொழுவத்திடல் கடந்து, தைல மரத்திடலில் நிற்பர். அந்த அளவிற்கு ஆற்றல் வாய்ந்த காளை இது. இதன் வேகம் மூன்றுகிலோ மீட்டர் கடந்தபின்தான் முடியும்.

பருத்திக்கண்மாய் கோயில் காளையும் சீறிப்பாயும் ஆற்றல் மிக்கது. இது ஒரு சில தடவைகளில் பிடிபட்டுள்ளது.
இவை மூன்றும் தற்போது கண்டிப்பட்டிக்கு வராதது சிறப்பு குறைவே ஆகும்.

தொழு மஞ்சுவிரட்டும் வழிபாடும்

நாட்டார்கள் மஞ்சுவிரட்டு பொருள்களை எடுத்துக்கொண்டு தொழு நோக்கி வருவர். அப்போது தொழுவிற்கு வழிபாடு நடத்துவர். எலுமிச்சம்பழம், தேங்காய், பழம் போன்ற வைத்து பூசை செய்வர். தூப தீப ஆராதனை காட்டுவர்.

இந்நேரத்தில் காளைகள் அனைத்தும் தொழுவிற்குள் நுழைவதற்கு ஏற்றவகையில் வரிசைப்படுத்தப்படும். கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டு சற்று பாதுகாப்புத்தன்மை குறைபாடு உடையதாக உள்ளது. எவ்வழியில் மாடுகள் வரும் எப்படிப் போகும் என்பதைக் கணிக்க இயலாத அளவில் காளைகள் செல்லும் நிலை இங்குள்ளது. இதனால் பலர் மரங்களில் ஏறி நின்றுப் பார்க்கும் படியான நிலையும் உள்ளது. தற்போது வாகனங்களை நிறுத்தி அதன்மேல் நின்று, பார்க்கும்படி செய்யப்பட்டுள்ளது.

சிங்கம்புணரி கோயில் காளைக்கு மரியாதை

மஞ்சுவிரட்டு தை மாதம் நான்காம் நாள் என்பது உறுதியான நாள் குறித்தல் ஆகும். இதற்கு முன்னதாக காளைகளுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும் முறைமை உள்ளது. முதன் முதலாகச் சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் ஐயனார் கோயில் காளைக்கு வெற்றிலை பாக்கு வைக்கப்படும். இக்கோயில் காளை சரியான நேரத்திற்கு கண்டிப்பட்டி தொழுவுக்கு வர அதுவே முதல் மாடாக அவிழ்த்து விடப்படும்.

மற்ற காளைகளுக்கும் இதுபோல வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பிதழ் வைக்கப்படும். இதன்வழியாக கண்டிப்பட்டியைச் சுற்றியுள்ள பல காளைகள் இந்த நிகழ்வில் பங்கேற்கும்.

கோயில் காளைகளைப் பெரும்பாலும் யாரும் பிடிப்பதில்லை. சிங்கம்புணரி அருள்மிகு சேவுகப்பெருமாள் மாடு அவிழ்க்கும்போது யாரும் அதனைத் தடுத்து நிறுத்துவதில்லை. இதுபோல் கோயில் காளை என்ற அறிவிப்பு வந்தால் அதனை மாடுபிடி வீரர்கள் பிடிப்பதைத் தவிர்ப்பர்.

வருகை தந்த மாடுகளுக்குக் கண்டிப்பட்டி மக்கள் சார்பாக மாலை, மரியாதை, துண்டு போன்றன தரப்படும். இவ்வாறு காளைகளைக் கண்டிப்பட்டிக்கு வரச்செய்யும் முறைமை இன்றளவும் உள்ளது.

மஞ்சுவிரட்டு தொடக்கம்

கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டானது தைமாதம் நான்காம் நாள் காலையில் பத்து மணி அளவில் தொடங்கும். அப்போது நாட்டார்கள், மற்றும் கிறித்துவர்கள் தொழுவின்மீது ஏறி நிற்பர். கொடி அசைத்து மஞ்சுவிரட்டைத் துவக்கி வைப்பர்.
இதன்பின் ஒவ்வொரு காளையின் பெயர் மற்றும் உரிமையாளரின் பெயர் ஆகியன சுட்டப்பெற்று காளைகள் அவிழ்க்கப்படும். மாடுகள் சீறிப் பாயும். ஆங்காங்கே உள்ள மாடு பிடி வீரர்கள் காளைகளைப் பிடிப்பர்.

மாடுபிடி களமே புழுதிக்களமாக ஆகும். இவ்வாண்டு தைமாதம் நான்காம் நாள் நடைபெற்ற மஞ்சுவிரட்டில்
நடராஜபுரம் கோயில் காளை
சுந்தரனேந்தல் வெள்ளிக்கண்ணு கோயில்காளை
குருவாடிப்பட்டி மறை காளை
ஏரியூர் முனிக்காளை
ஆகியன சிறப்பாக வலிமையுடன் களத்தில் விளையாடின. (ஆய்வாளர் நேரில் கண்ட நிலையில் இது குறிக்கப்படுகிறது) ஏரியூர் முனிக்காளை சிறந்த பிடிபடா மாட்டிற்கான பரிசினைப் பெற்றது.
இதுதவிர்த்து
1. மதகுபட்டி வெள்ளையன் காளை
2. கட்டாணிப்பட்டி சண்டிவீரன் காளை
3. கட்டாணிப்பட்டி வளரிக் காளை
4. சூரகுண்டு செவலைக்காளை
5. இடையமேலூர் ஆதிகாளை
போன்றவற்றின் விளையாட்டுகளும் சிறப்பாக இருந்தன. இவ்வாண்டு அதிக அளவில் காயம் படல் இருந்தது.

மாடுபிடி வீரர்களின் மாடு பிடிக்கும் திறத்திற்கு ஏற்ப பரிசுப்பொருள்கள் அவ்வப்போது வழங்கப்படும். அண்டா, தூக்குவாளி, சைக்கிள், மின்விசிறி போன்ற பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பெற்றன. பிடிபடா மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

பாதுகாப்பு ஏற்பாடு

மஞ்சுவிரட்டு சிறப்பாக நடைபெற பல ஏற்பாடுகள் இவ்வாண்டு ஏற்படுத்தப்பெற்று இருந்தன. அவை பற்றிய விபரங்கள் பின்வருமாறு.
1. தொழுவில் இருந்து இருநூறு மீட்டர் வரை பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பெற்றிருந்தது.
2. கலவரங்கள் ஏதும் நடக்காமல் இருக்க காவல் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பெற்றிருந்தது.
3. தண்ணீர்ப் பந்தல், மோர் பந்தல் போன்றன அமைக்கப் பெற்றிருந்தன.
4. வெளியூர் மாடுகள் வந்த வாகனங்கள் நிறுத்த வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பெற்றிருந்தன.
5. நூற்றியெட்டு மருத்துவ சிகிச்சை வண்டி ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது
6. கால்நடை மருத்துவக் குழு ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது
7. காயம்பட்ட வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க மருத்துவ வாகனம், முகாம் ஆகியன ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தன.
இவ்வேற்பாடுகள் காரணமாக எவ்வித சிக்கல்களும் இல்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தது.

மஞ்சுவிரட்டு நிறைவு

கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டு காலை பத்து மணிக்குத் தொடங்கும். இடைவிடாது மாடுகள் அவிழ்க்கப்படும். மாலை நான்குமணி அளவில் மாடுகள் எல்லாம் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் அதிர்வேட்டு போடப்படும். இதுவே மஞ்சுவிரட்டு இவ்வாண்டு நிறைவு பெறுதவற்கான அதிர்வேட்டு ஆகும். இதன்பின் மாடு விடப்படாது. மாடுபிடி வீரர்களும் களத்தில் இருக்கமாட்டார்கள்.

கண்டுப்பட்டி இருப்புப்பாதையும் இடைஞ்சலும்

கண்டிப்பட்டி அருகில் இருப்புப்பாதை செல்கிறது. இதனில் பல தொடர்வண்டிகள் செல்கின்றன. இவற்றால் மாடுகளுக்கு தீமை ஏற்படுவதுண்டு. இது மிகப்பெரிய அச்சத்தை மாடு வளர்க்கும் மஞ்சுவிரட்டுப் பிரியர்களுக்குத் தந்து கொண்டுள்ளது. கடந்த ஆண்டில (2019); ஏழு மாடுகள் இப்பாதையைக் கடக்கும் நிலையில் உயிரிழந்தன.
குமாரப்பட்டி கோயில் காளை
உடவயல் கருப்பர் கோயில் காளை
விட்டனேரி சந்துரு பாண்டி காளை
போன்ற இவ்வகையில் உயிரிழ்ந்த காளைகள் ஆகும். இவ்வாண்டு இதுபோன்ற இழப்புகள் இல்லை என்பது சற்று ஆறுதலான செய்தியாகும்.

விருந்து உபசரிப்பு

கண்டிப்பட்டி கிராம பொதுமக்கள் மஞ்சுவிரட்டு அன்று தம் ஊருக்கு விருந்தாக வந்தவர்களை உபசரிப்பார்கள். ஆடியில் விதைத்து தைமாத்தில் அறுவடை செய்த புதிய நெல்லை வந்திருக்கிற விருந்தினர்களுக்கு வழங்கும் நடைமுறை காலம் காலமாக கண்டிப்பட்டியில் நடைபெற்றுவருகிறது.

சைவ உணவு விருந்தாக வந்திருக்கிற அனைத்து ஊர்காரர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் வசதிக்கு ஏற்ப விருந்து சமைக்கப்பெற்றிருக்கும்.
• கூட்டு
• பொரியல்
• சாம்பார்
• காரக்குழம்பு
• சூப்பு
• ரசம்
• மோர்
• பாயாசம்
• அப்பளம்
போன்றன கொண்ட விருந்து பெரும்பாலும் பரிமாறப்படுகிறது. விருந்து முடிந்தபின் வெற்றிலை பாக்கு தாம்பூலம் தரப்பெறும். இவ்வூர் மக்கள் மஞ்சுவிரட்டைத் தம் இல்லத்திருவிழாவாகக் கருதுகின்றனர். இவ்விருந்து நடைபெறும் வேளையில் துவங்கும்போது ஓர் அதிர்வேட்டு முழங்கப்படும். அதன்பின் விருந்து முடிந்தபின் ஓர் அதிர்வேட்டு முழங்கப்படும். இவ்வேளையில் மஞ்சுவிரட்டு நிறுத்தப்படும் என்பதற்கு இவையே அறிகுறிகளாகும்.


த. மகேந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கண்டிப்பட்டி புனித அந்தோணியார் திருக்கோயிலும், மதநல்லிணக்க மஞ்சுவிரட்டும்”

அதிகம் படித்தது