மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கன்னித்தாய் (சிறுகதை)

முனைவர் ஆ.சந்திரன்

Oct 9, 2021

siragu kanniththaai1
அடையாளம் தெரியாத ஒன்று வந்து கொத்துக்கொத்தாய் மக்களை வாரிச்சென்ற வடுகூட இன்னும் மறையவில்லை. அதற்குள் அந்த ஊரிலிருந்த மக்களின் கண்களைக் குறிவைத்து வேகமாகப் பரவியது அந்நோய். கண்ணைக் குறிவைத்துத் தாக்கியதால் அதற்குக் கண்ணோய் என்ற பெயரே நிலைபெற்று விட்டது. வெயில் வேறு நூறு  டிகிரியைத் தாண்டியே வாரக்கணக்கில் தொடர்ந்தது. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய மக்களில் ஒரு பகுதியினர் புன்னை மரத்தடியே கதியென்று இருந்தனர்.

அப்படிப் புன்னை மரநிழலில் அடைக்கலம் புகுந்தவர்கள் “சும்மா ஏன் இருக்க வேண்டும்” என்று தீவிர ஆலோசனையில் மூழ்கினர்.

விளைவு: ஆளாளுக்குக் கதைசொல்லிகளாக மாறினர்.

இப்படி ஒரு வழியாகக் கதைசொல்லுவது என்ற முடிவிற்கு அந்த ஊர் மக்கள் வந்தாலும் அங்கு மேலும் ஒரு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து. “எல்லோரும் ஒரே நேரத்தில் கதைசொல்ல ஆரம்பித்துவிட்டால் யார்தான் கதை கேட்பது? என்று.

விளைவு: “எல்லோரும் கதைவிடமுடியாது அல்லவா? அதனால் கதை சொல்ல விருப்பம் இருப்பவர்களின் பெயர்களை எழுதிப்போடுவோம். அவற்றில் குழந்தையை விட்டு தெரிவுசெய்து எடுத்து அந்த வரிசைப்படி கதைசொல்ல அனுமதிப்போம்” என முடிவெடுத்தார் அந்த ஊர் நாட்டாண்மை.

அவரது அந்த முடிவு அப்போது எல்லோராலும் ஏற்கப்பட்டாலும் பின்னாளில் “ஏன் அப்படிச் செய்யவேண்டும்? எல்லோரும் ஒரே நேரத்தில் கதை செல்லுவோம். யார் யாருடைய கதை யார் யாருக்குப் பிடிக்கிறதோ அவங்கவங்க அவங்கவங்க கதையைக் கேட்கட்டும்” என்று மெதுவாகச் சொன்னான் ஒரு சிறுவன்.

அவனது வார்த்தைகளுக்கு அப்போது பெரியளவில் மதிப்பில்லாமல் போனது. காரணம் அப்போது அந்த ஊரில் வழக்கமாக நடக்கும் தெருக்கூத்து நடத்துவதற்கான நாள்வேற நெருங்கிக்கொண்டிருந்தது. அதை எப்படி நடத்துவது என்ற ஆலோசனையில் மக்களின் கவனம் இருந்ததால் அச்சிறுவனின் குரல் அவனுடைய காதிற்கே கேட்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

“உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி” என்ற தலைப்புச் செய்தியைத் தாங்கி வந்தன அன்றைய நாளேடுகள். வசதியானவன் ஏழை என்ற பாகுபாடின்றி எல்லோரையும் அந்த அடைமழை பாதிக்கத்தான் செய்தது. ஆனால், “இதைவிடப் பெரிய அளவிலான மழையை எல்லாம் நம்ம ஊர் இதற்கு முன்னர் பல முறை சந்தித்திருக்கிறது. அதனால் இதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை” என்ற ஒரு குரலும் அந்த ஊரில் ஒருபுறம் கேட்கத்தான் செய்தது. ஆனால் அதை யாரும் சட்டைசெய்யவில்லை.

அரபிக்கடலில் இருந்து மெல்ல எழுந்த சூரியனின் கதிர்கள் பிரகாசிக்கத் தொடங்கின.  அதன் வெப்பத்தில் மழையைப் பற்றிய பேச்சை மறந்து மரநிழல் கிடைக்குமா என்று மீண்டும் ஏங்கத் தொடங்கினர்.

வெயிலில் இருந்து தப்பிக்கக் குடையுடன் நடக்கவேண்டிய கட்டாயம் கூட ஏற்பட்டது. சாலையோரங்களில் கறுப்புநிற கண்ணாடிகளின் விற்பனை ஜோராக நடந்து கொண்டிருந்தது. இப்படியே போனால் மக்களின் நிலைமை என்னாவது என்ற முணுமுணுப்பு காற்றில் பரவிக்கொண்டிருந்து. என்னைப் போல் எல்லோரும் கண்ணாடி அணிந்துகொள்ளுங்கள் என்றவனின் பின்னால் அந்த ஊர் மக்கள் செல்ல முடிவெடுத்தார்கள். அப்போது அவர்களுக்கு வேறு வழிதெரியாத காரணத்தால் அந்த முடிவெடுக்க அவர்கள் முன்வந்தார்கள். அவர்களுடைய முடிவினால் கொஞ்ச காலத்தில் அந்த ஊரில் பெரிய மாற்றம் வரப்போவதற்கான அறிகுறிகள் தென்படத்தான் செய்தன.

கிழக்கும் மேற்குமாக இருந்த பிரதான சலைகள் மட்டுமன்றி குருக்கும் நெடுக்குமான சிறிய சிறிய சாலைகளும் சந்திக்கும் நான்கு ரோட்டில் ஒரு வழியாக தன்னுடைய உறவினர் மூலம் வந்து சேர்ந்தாள் லில்லி. ஒல்லியான அவளுடைய தேகத்தைப் பார்த்த அந்த ஊர் மக்கள் மயங்கிப் போனதில் வியப்பதற்கு இல்லை.

மழையின் தாக்கத்தில் சொல்ல  வந்ததைச் சொல்லாமல் உங்களுடன் சேர்ந்து நானும்  மறந்து போய்விட்டேன். மன்னிக்கனும்.

கதைசொல்லுதல் பற்றியல்லவா நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்?.

அப்போது புதுப் புதுக்கதைகளை மக்கள் சொல்ல ஆரம்பித்திருந்தனர். கதைசொல்லும் போது பாட்டும் நடனமும்  இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்ற யோசனையை வெற்றிகரமாக்கினான்  மூக்கன். அதனால் அவன் பின்னால் மக்கள் ஓடத்தொடங்கினர்.

அவன் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது அடிக்கடி கறுப்புக் கண்ணாடியைக் கழட்டிவிட்டு மூக்கைச் சொறிந்துகொள்ளுவான். அப்படி அவன் அடிக்கடி செய்தால் அவனுடைய அம்மா அவனுக்கு ஆசையாக வைத்த பெயர் அவனுக்கே மறந்து போனது. பாவம் மக்கள் எப்படி நினைவில் வைத்திருப்பார்கள்.

ஆனால் அவனுடைய பெயர் மூக்கன் அன்று. மூப்பன் என்பதை மக்கள் தவறாக மூக்கன் என்று என்று உச்சரிப்பதாக இலக்கண ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்த அதிசயமும் ஒரு புறம் நடக்கத்தான் செய்தது.

பட்டனமா பட்டினமா என்ற விவாதம் மக்களிடம் நடந்துகொண்டிருந்த போது லில்லி ஆயிரம் விளக்குகள் வரிசையாக ஓயாமல் ஒளிர்ந்து கொண்டிருந்த பகுதியில் சத்தமின்றி குடிபுகுந்திருந்தாள். வாழைத்தண்டு போன்ற அவளுடைய அழகிய இரண்டு கால்களும் ஆக்டோபஸ்ஸின் கரங்கள் போல் கிளைத்தவை என்பதை இரவின் ஒளியில் கண்டுபிடித்தவன்தான் அங்கு குடியமர்த்தியிருந்தான்.

தனக்கு மட்டும் தெரிந்த இரகசியம் வேறு யாருக்கும் தெரியாது என்றுதான் அவன் நினைத்திருந்தான். இரகசியம் என்று அவன் நினைத்ததை பலர் அந்த ஊரில் தெரிந்து வைத்திருந்தனர் என்பது வேறு செய்தி. அவனது இறப்பிப்பிற்குப் பின்னர்தான் அந்த விசயம் வெளிப்பட ஆரம்பித்தது. அதனால் ஆத்திரமடைந்த லில்லி “இரகசியத்தை அறிந்தவர்கள் ஒன்று கொல்லப்படவேண்டும் அல்லது தன்னுடைய காலடியில் கிடக்கவேண்டும்” என்று விரும்பினாள்.

காலவெள்ளத்தில்….  அவளது விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறுவது போல் அவள் அடிக்கடி கனவு கண்டாள்.

அதை நினைத்துப் பார்த்தாள்.

மகிழ்ந்தாள்.

தான் அவ்வாறு மகிழ்ச்சியடையும் போது முகம் எவ்வாறு இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

விளைவு: அவளது வீட்டில் பெரிய நிலைக் கண்ணாடி ஒன்று புதிதாய் வந்து சேர்ந்தது.

எப்போதெல்லாம் தன்னுடைய மகிழ்ச்சியைப் பார்க்கவேண்டும் என்று அவளுக்குத் தோன்றுகின்றதோ அப்போதெல்லாம் அவள் அதன் முன் போய் நிற்பாள்.

விளைவு: நாள்தோறும் ஓரிரு முறைகளாவது அவ்வாறு நிற்கவேண்டும் என்ற நோய் அவளைப் பிடித்துக்கொண்டது.

இதற்கிடையில் கதைசொல்லுதலில் புதிய பரிணாமங்கள் பல ஏற்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று தான் வாந்தியெடுத்தல்.
அதுதான் அப்பேதைய நியூ டிரண்ட் .

அதை மக்கள் ரசிக்க ஆரம்பித்தனர். “வாந்தியெடுப்பதில் கில்லாடியானவர்கள் இவர்கள்” என்ற பட்டியலில் தன்னுடைய பெயர் எப்போது வரும் என்று பலர் காத்திருந்தனர். ஒருபுறம் தன்னைப் போல் யாராலும் இப்படி வாந்தியெடுக்க முடியாது. நான்தான் வாந்தியெடுப்பதில் கில்லாடி என்ற பெயரைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தான் மூக்கன். அவனை முந்திச்செல்ல பலர் முயன்றாலும் அவனுக்கு நிகர் அவன்தான் என்ற பேச்சுதான் காற்றில் அடர்த்தியாக எங்கும் பரவியது.

“மூக்கனைவிட நான் நன்றாக வாந்தியெடுப்பேன்” என்று மூக்கனுக்குப் போட்டியாக வாந்தியெடுப்பதில் தொடர்ந்து கில்லியாக இருந்த லட்சியபுருடன் லில்லியின் கனவில் கண்டது போல் பாதியில் பரலோகம் போய்விட்டான்.

இனி தனக்கு நிகராக யாராலும் வாந்தியெடுக்க முடியாது” என்று இருமாப்பிலிருந்த மூக்கனின் ஆணவம் லில்லியிடம் மன்னைக் கவ்வியது.
கொஞ்சநாள் வாந்தியெடுத்தவள் அதன் பிறகு புது வகையான கதை சொல்ல ஆரம்பித்தாள். அவள் தொடங்கிய கதை ஒரு தொடர்கதை. அந்த கதைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தன்னுடைய மூலையைப் போட்டுப் பிசைந்துகொண்டிருந்தபோது அவளுக்கு டக்கென்று ஒரு யோசனை முளைத்தது.

நீயா நானா.

இதுதான் தலைப்பு என்று பகிரங்கமாக அறிவித்தாள்.

நான் x நாம் நீ x நீங்கள் என்ற பதங்களின் சாரம் நீயா x நானா என்று சுருக்கம் அடைந்தது.

இது ஒரு புதிய இலக்கண விதி. இப்படியும் சொல்லைப் பயன்படுத்தலாம் என்று நம்முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் என்று அதற்குச் சில மேதாவிகள் விளக்கங்கள் கூட அளித்தார்கள். இனி இதுதான் கடைசி இனிமேல் புதிய கதைகளைக் கேட்கக்கூடாது என்று கடுமையான வேண்டுகோள் மக்களிடம் வைக்கப்பட்டது. அந்தக் கதை தொடர் கதை. அதனால் தானோ என்னவோ அது தொடர்ந்தது.

அந்தக் கதை கூறும் போது தனக்கு ஏற்படும் மகிழ்ச்சி எப்படி இருக்கிறது என்று உடனுக்குடன் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள் கன்னித்தாயாக உருமாறிய லில்லி. அதற்குத் தன்னுடைய அறைக்குச் செல்லவேண்டும். ஒவ்வொரு முறையும் தன்னுடைய மகிழ்ச்சியைப் பார்க்க ஏன் அறைக்குச் செல்லவேண்டும். தன்னுடனே ஒரு கண்ணாடியை ஏன் ஏற்பாடு செய்துகொள்ளக் கூடாது என்று அவளுக்குத் தோன்றியது.

வழக்கம் போல் நிலைக் கண்ணாடிமுன் நின்றிருந்தபோதுதான் அவளுக்கு அந்த யோசனை தோன்றியது.

அப்போது அவளது முகம் மிகவும் பிரகாசமாகத் தோன்றியது. அதற்குக் காரணம் புடவையில் இருந்தாள். கழுத்து நிறைய அணிகலன்கள் வேறு இருந்தன. புடவையின் நிறத்திற்கு ஏற்ப அணிகலன்கள் அணிவிக்க பணிப்பெண் ஒருத்தியும் இருந்தாள்.

அதனால் அவள் ஒரு முடிவெடுத்தாள் இனி எப்போதும் தன்னுடனே ஒரு கண்ணாடியை உடன் வைத்துக்கொள்வதென்று. எப்போதெல்லாம் தன்னுடைய மகிழ்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றதோ அப்போதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் இல்லையா. ஒவ்வொரு முறையும் நிலைக்கண்ணாடி இருக்கும் இடத்திற்குச் செல்லும் வரை தன்னுடைய ஆசையைத் தள்ளிப்போட வேண்டிய தேவை இருக்காது என்ற சுயநலமும் அதில் அடக்கம்.

விளைவு : நடப்பதற்கும் முடியாத அளவிற்குப் பூதாகரமான தோற்றத்திற்கு மாறினாள். புடவைகள் பாரமாயின. அணிகலன்களை வீசியெறியவேண்டிய வந்தது. மருத்துவர் சொல்லிவிட்டார் “நீங்க இனி தினமும் காலை இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிடக் கூடாதென்று”.
படுக்கை அறையிலிருந்த நிலைக்கண்ணாடி நோக்கித் தயங்கியபடி மெல்ல அடிமேல் அடிவைத்து நடந்தாள். கண்ணாடியில் தோன்றிய பூதாகரமான ஓர் உருவம் அவளை மிரட்டியது. அந்த உருவத்திற்குள் லில்லி என்ற பெயருடன் ஒல்லியான அவளுடைய தேகமும் ஒருசேர உருக்குலைந்து போயிருந்தன. அவ்வாறு தெரிவது தன்னுடைய உருவம்தான் என்பதை ஏற்கக் கொஞ்சம் அதிகமான கால அவகாசத்தை  எடுத்துக்கொண்டதாக அவள் உணர ஆரம்பித்தாள். எல்லாம் முடிந்தபிறகு என்ன செய்யமுடியும்.

லில்லி என்ற தன்னுடைய இளைய வயது அடையாளத்தை அறை முழுக்கத்தேடினாள். களைப்புதான் அவளுக்குப் பரிசாக மிஞ்சியது.
அப்படியே படுக்கையில் சரிந்தாள்.

சூரியனைக் கண்டு மலரும் பூ காந்தள் மலரா?  தாமரை மலரா? என்பதுதன் அன்றைய தொலைக்காட்சிகளில் பிரபலமான விவாதப் பொருளாக மாறியிருந்தது. சிலர் “கொண்டையில் தாழம்பூ பாடலில் அந்த பூ இடம்பெறவில்லை” என்றனர். இன்னும் சிலர் “தமிழர் அக இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் கூட அந்த பூ குறிப்பிடப்படவில்லை” என்றனர். இந்த விவாதம் முடிந்த கையோடு விளம்பர இடைவேளைக்குப் பின்னர் நடைபெற்ற தசரதனின் பாசமா? கைகேயியின் வேசமா? என்ற விவாதத்தைக் கேட்டவாறே உறங்கினாள்.

“நாளை மழை பெய்யும்” என்று வானிலை அறிக்கையில் கூறப்பட்டதற்கு ஏற்ப வழக்கமாக அந்த ஊரில் வெயில் அதி தீவிரமாகவே இருந்தது. பொம்மைகளால் கட்டப்பட்ட பெரிய மாளிகையின் முன் போடப்பட்ட பெரிய பந்தலில் பலர் மேடையில் ஆடம்பரமாக அமர்ந்திருந்தனர். அந்த விழாவின் போதுதான் முதன் முதலில் லில்லி தாயானது அறிவிக்கப்பட்டது.

“கன்னித்தாயே! என்று பாரதியின் முறுக்கு மீசையைப் போன்ற தன்னுடைய மீசை மண்ணில் முத்தமிட்டவாறு அந்த அறிவிப்பை முழங்கினான் அரங்கன். அச்செய்தியை அறிவிக்கும்போது அவன் பலமுறை வாந்தியெடுத்தான். வாந்தியெடுத்து வாந்தியெடுத்து கன்னித்தாயின் காலடியில் தொப்பென்று விழுந்தான். ஆனால் அந்த நிகழ்விற்குப் பத்தாண்டுகள் கழித்து அவளுக்கு  அடுத்தடுத்து வரிசையாகக் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தன.

இனி அவளுக்குக் குழந்தை பிறக்கவே பிறக்காது என்ற கிசுகிசு  மறைந்து கன்னியான அவளுக்கு எப்படி குழந்தைகள் பிறக்கின்றன என்ற வதந்தி காற்றில் பரவ ஆரம்பித்தது.

குழந்தைகள் அம்மா! அம்மா! என்று அழைத்தாலும், அவை எல்லாம் தன்னுடைய பிள்ளைகள் அல்லர். தனக்குப்  புத்திர பாக்கியம் இல்லை என்று அவள் தனிமையில் புலம்பிக் கொண்டிருந்தாள். அத்துடன் தனக்குப் புத்திரபாக்கியமே கிடையாது என்று திடமாகவே நம்ப ஆரம்பித்திருந்தாள். தனக்குக் குழந்தை பேறு இல்லாமல் போனதற்குக் கனவு தான் காரணம் என்றும் சில நேரம் நினைத்து வருந்தினாள்.

“குழந்தை இல்லாதவர்களை மலடி என்று சிறப்பித்து அழைப்பது” அந்த ஊரில் உள்ள ஒரு வழக்கம். அதன்படி லில்லி அழைக்கப்படலாம் என்று சந்தேகப்படக்கூடாதென்று நினைத்த அவரது விசுவாசிகள் அவளைத் தாயாக்கினர் என்றும் அந்த ஊரின் ஒதுக்குப் புறங்களில் வாழ்ந்த பழங்குடி மக்களால் பேசப்பட்டன. ஆனால் எது எப்படியோ அவள் தாயானாள்.  அதுவும் கன்னித்தாய்.

கன்னித்தாயின் எதிர்வீட்டில் குடியிருந்த மூக்கனின் மூன்று மனைவிகளும் ஏழுபிள்ளைகளும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். மூக்கனுக்குப் பின் இந்த சண்டை தீவிரம் அடையும் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு இருந்தது. பேசப் புதுக்கதை வேண்டும் அல்லவா? வெறும் வாயை எவ்வளவு நாளுக்குத் தான் மெல்லுவது. ஆனால் அவர்களது எதிர்பார்ப்பு பலிக்குமா அல்லது வேறு புதிய கதைகள் சொல்ல யாராவது வருவார்களா என்று எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை.

தன்னுடைய பூத உடலைச் சுமக்க முடியாமல் கட்டிலின் கால்கள் தள்ளாட்டம் போட்டன. பிரத்தேகமான புதிய கட்டில் பெரிய அளவில் செய்து அதன் மேல் படுக்கவைக்கப்பட்டாள். அவளது காலை இருவர் சமமாகப் பங்குப் போட்டுச் சாப்பிட ஆரம்பித்தனர்.

அவளது கண்கள் அவர்களைப் பார்த்தன. அப்போது அவள் நிலைக்கண்ணாடி முன்நின்றிருந்தாள் பழைய லில்லியாக.

அவளுடைய கன்னித்தாய் பட்டமும் பூதாகாரமான உடலும் ஒரு சேர காணாமல் போயின.  அவள் அதை நம்ப மறுத்தாள். ஏனெனில் அவளது கனவில் அக்காட்சி இல்லை. அவள் அப்படிப்பட்ட ஒரு காட்சியைக் கற்பனையிலும் கூட பார்க்கவும் இல்லை.

இப்போது அந்த ஊரில் புதுக்கதைகள் பல உலா வருகின்றன.

வானமா x பூமியா? மேடா x  பள்ளமா?  வடக்கா x  தெற்கா? லெப்படா  x ரைட்டா …….. இன்னும் …… இப்படி…. எத்தனையோ??….


முனைவர் ஆ.சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கன்னித்தாய் (சிறுகதை)”

அதிகம் படித்தது