மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கபீர்தாசரின் பாடல்கள் வழங்கும் இறைச்சிந்தனைகள் – ஒரு பார்வை: பகுதி-2

தேமொழி

Mar 12, 2016

kabeer dasar fiதுறவறம் தேவையற்றது:

இறைவனை அடையத் துறவறம் மேற்கொள்வதை கபீர்தாசர் ஆதரிக்கவில்லை. இல்வாழ்வில் முறைப்படி வாழ்ந்தே இறைவனை அடையமுடியும் என்பதை அவர் ஆணித்தரமாக நம்பியதும் அவரது பலபாடல்களின் வழி தெரிகிறது.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து. (குறள்: 48)

அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் ஆற்றுப்படுத்தி வாழும் வாழ்வு துறவற நோன்பைவிட மேலானது என்ற குறளின் கொள்கை கபீர்தாசரின் பாடல்களிலும் எதிரொலிக்கக் காணலாம்.

குறிப்பிட்ட நோக்கமின்றி வெளியே அலைந்து திரிபவனை

அவனது இல்லத்திற்குத் திரும்ப அழைப்பவனே

உண்மையில் எனக்குப் பிரியமானவன்.

வீட்டில்தான் அன்பின் சங்கமம்.

வீட்டில்தான் வாழ்வின் நுகர்ச்சி.

உண்மை அவ்வாறிருக்க, நான் ஏன் வீட்டைத் துறந்து காட்டில் அலைய வேண்டும்?

சத்திய தரிசனம் காண பிரம்மம் எனக்கு உதவுமானால்,

நான் வீட்டிலேயே தளையையும் விடுதலையையும் காண்பேன்.   ….. (பாடல் – 40)

உண்மையான ஞானி யார் என்று கொஞ்சம் கடினமாகவே அறிவுறுத்துகிறார் மற்றொரு பாடலில்,

வடிவமற்ற இறைவனின் வடிவத்தை

இந்த ஊனக் கண்களுக்குப் புலப்படச் செய்பவர் யாரோ,

அவரே உண்மையான ஞானி.

அவர் இறைவனை அடையும் எளிய வழியைப் போதிக்கிறார்.

அது சடங்குகளுக்கும் சம்பிரதாயங் களுக்கும் அப்பாற்பட்ட வழி.

‘பொறிபுலன்களாம் கதவுகளை அடைத்து வை;

மூச்சை அடக்கு; உலகத்தைத் துறந்து போ’

என்று அவர் ஒருபோதும் கூறமாட்டார்.

நீ எந்த ஒன்றுள் தோய்ந்திருந்தாலும்,

அந்நிலையிலும் அவர் தெய்வமென்னும்

ஒண்பொருளைக் கண்டறியக் கற்பிக்கிறார்.

உலகின் போகநுகர்ச்சிக்கு இடையேயும்

இறைவனோடு இணைந்து நிற்கும்

பேரின்பத்தைக் கற்றுத் தருகிறார்.   ….. (பாடல் – 56)

ஐம்புலன்களை அடக்கி, மூச்சடக்கி, துறவறம் மேற்கொள்ளாது, உலக வாழ்விலேயே இறைவனை அடைய வழிகாட்டுபவரே உண்மையான ஞானி என்பது கபீர்தாசரின் கருத்து என்பது இதிலிருந்து புலனாகிறது.

நாயக-நாயகி பாவம்:

kabeer dasan1கபீர்தாசர் இறைவனை ஆண்வடிவில் காண்கிறார். இறைவனை அடைய விரும்பும் தன்னை இறைவனின் நாயகியாக உருவகித்துக் கொள்கிறார். இவர் பாடல்கள் பெரும்பாலும் நாயக-நாயகி பாவத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. நாயகனான இறையை அடையவிரும்பும் நாயகியான தன்னை, நாயகனுடன் இணைந்துவிடத் துடிக்கும் காதலியாகவும், மனைவியாகவும் கற்பிதம் செய்து கொள்கிறார். இவர் தனது இறைக்காதலை வெளிப்படுத்தும் பாடல்கள் பலவற்றை, அவற்றின் உட்பொருளை உணராது படித்தால் காதல் பாடல்களாகவே தோற்றம் தருகின்றன.

உன்னை நினைத்தே என் உடம்பும் மனமும் ஏங்குகிறது.

என் ஆருயிர்க் காதலனே! என் இல்லத்திற்கு எழுந்தருள்.

உன்னை மணந்து கொள்ளப் போகிறவள் நான்தான் என்று

மற்றவர்கள் சொல்லும்போது

எனக்கு ஒரே நாணமாக இருக்கிறது.

ஏனெனில் இந்த வினாடி வரை உன் இதயத்தை

என் இதயத்தால் நான் தொட்டதே இல்லை.

அவ்வாறானால், என் காதலுக்கு என்னதான் பொருள்?

பாலும் கசந்தது; என் படுக்கையும் நொந்தது.

வீட்டின் உள்ளே இருந்தாலும் புறத்தே நின்றாலும்

என்மனம் அமைதியின்றி அலைகிறது.

தாகம் தீரத் தண்ணீர் தேவை.

மணப்பெண்ணுக்கு மணாளனே தேவை.

யார் அங்கே?

என் காதலனுக்கு நான் விடுக்கும் மடலைக்

கொண்டு சேர்க்க வல்லார் யார் இருக்கிறார்கள். ….. (பாடல் – 35)

என்ற பாடலில் தன்னைக் காதலியாக எண்ணிக்கொண்டு, காதலனான இறைவனை அடைய விரும்புவதை அவருக்கு மடல் எழுதித் தெரிவிக்கிறார். இதில் எங்குமே இது இறைவனை நோக்கிக் கூறப்பட்ட பாடலாகத் தெரியாமல், ஒரு காதல்வயப்பட்ட காதலி ஒருத்தியின் பாடலாகவே இப்பாடல் அமைந்திருப்பதைக் காணலாம்.

மற்றொரு பாடல், தமிழிலக்கியங்களில் காணப்படும் தலைவிக்குத் தோழி கூறும் அறிவுரைப்பாடல்கள் போல அமைந்துள்ளது.

தோழியே எழு! இன்னுமா உறங்குவாய்? எழு.

இராப்பொழுது வறிதே கழிந்தது;

பகல் நேரத்தையும் நீ பறிகொடுக்கப் போகிறாயா?

விழித்திருந்த எல்லாரும் விலைமதிப்பற்ற அணிகலன்களை

வெகுமதியாகப் பெற்றார்கள்.

பேதைமகளே!

நீ தூங்கியே அனைத்தையும் தொலைத்துவிட்டாய்.

உன் காதலன் புத்திசாலி, நீ முட்டாள் பேதாய்!

நீ உன் கணவனுக்காக மஞ்சத்தை

விரித்து மலர் தூவினாயல்லை.

சிற்றில் இழைத்தும் தெருமணலில் ஆடியும்

உன் பொன்னான நேரத்தைப் போக்கடித்து விட்டாய்.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

நல்லான் தீம்பால் நிலத்தே கவிழ்ந்தாற்போல்

உன் இளமை வீணே கழிந்தது.

நீ உன் தலைவனை அறிந்தாயில்லை.

விழித்தெழுந்து பார். உன் படுக்கை வெற்றிடமாக இருப்பதைப் பார்.

பாதி இரவிலேயே அவர் எழுந்துபோய்விட்டார்.     ….. (பாடல் – 36)

இப்பாடலும் தலைவன் என்பது இறைவன் என்றக் குறிப்பின்றியே, நாயகனை அடைய நாயகிக்குத் தோழி கூறும் அறிவுரைப் பாடலாக அமைந்துள்ளதையும் காணலாம்.

மற்றொருபாடல், தலைவி தோழியிடம் காதல்வயப்பட்ட தனது நிலையைக் கூறுவதாகவும் அமைந்துள்ளது.

என் காதலரிடமிருந்து நான் பிரிந்திருக்கிற போது,

என் நெஞ்சம் கையறு நிலையில் கலங்கி நிற்கிறது.

பகலில் அமைதியில்லை.

இரவில் தூக்கமும் தொலைந்தது.

என் துயரை யாரிடம் எடுத்துரைப்பேன்?

இரவு கருமையை அள்ளிப் பூசிக்கொண்டு நிற்கிறது.

ஒவ்வொரு நாழிகையும் மெல்ல மெல்லக் கழிகிறது.

என் காதலர் என்னோடு இல்லை.

நான் அச்சத்தால் நடுங்கி எழுகிறேன்.       ….. (பாடல் – 52)

வாழ்வியல் அறிவுரைகள்:

கபீர்தாசரின் பாடல்கள் வாழ்வியல் அறிவுரைகள் பலவற்றையும் எளிய வகையில் கூறிச்செல்கின்றன.

‘நான்’ என்னும் அகங்காரமும் ‘எனது’ என்னும்

மமகாரமும் இருக்கும் வரை,

செய்யும் வினைகள் பயனின்றியே ஒழியும்.

செருக்குணர்வும், உடைமைப் பற்றும் மரணிக்கும்

போது செயல் முடிவுக்கு வருகிறது….. (பாடல் – 6)

பார்! வாழ்வையும் மரணத்தையும் பார்!

அவற்றுக்கிடையே பேதமில்லை; பிரிவினை இல்லை.

வலக்கையும் இடக்கையும் ஒன்றுதான். ஒன்றேதான். ….. (பாடல் – 17)

ஞாயிறு கண்விழிக்கும் போது இரவு மறைகிறது.

நேரம் இரவாயின், சூரியன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொள்கிறது.

அறிவுள்ள இடத்தில் அறியாமை ஆட்சி முடியுமா?

அறியாமை நீடிக்கும் இடத்தில் அறிவு மரணிக்கும். ….. (பாடல் – 37)

தவறுகள் கதவை அடைக்கின்றன.

அப்பூட்டினை அன்பெனும் சாவியால் திற. ….. (பாடல் – 38)

மரணமிலாப் பெருவாழ்வு என்னும் ஆழ்கடலில்

அலைந்து திரியும் அந்த இன்பானுபவம்

என் வேண்டுதல்களையெல்லாம் அடியோடு அகற்றிவிட்டது.

எல்லா வகையான பிணிகளும் ஆசையில்தான் அடங்கிக் கிடக்கிறது

விருட்சம் வித்தினுள் அடங்கி யிருப்பது போல். ….. (பாடல் – 60)

காலப்பெட்டகம்:

kabeer dasan2கபீர்தாசர் பாடல்கள் அவர் வாழ்ந்த காலத்தின் கண்ணாடியாகவும் அக்கால சமுதாய நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் பிரதிபலிக்கின்றன. இக்காலத்தில் ஆங்கிலம் கற்பதும் பேசுவதுமே ஒருவரை அறிவாளியாக்கும் என்ற சிந்தை மயங்கிய நிலை, அக்காலத்தில் சமஸ்கிரதம் கற்பதற்கும் காரணமாக அமைந்துள்ளதும் கீழ்காணும் பாடல் மூலம் தெரிகிறது.

எல்லாரும் என்னை அறிவாளியாகக் கருதவேண்டும்

என்பதற்காகச் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டேன்.

என்ன பயன்? தாகத்தால் நாப்புலர வாடி,

ஆசை வெப்பத்தில் தீய்ந்து கருகி,

அலைப்புண்டு மிதக்கும் எனக்கு அதனால் என்ன பயன்?

செருக்கையும் படாடோபத்தையும்

காரணமில்லாமல் தலையில் சுமந்து கொள்வானேன்? ….. (பாடல் – 91)

kabeer dasan3அது போன்றே இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறுதல் என்ற பெண்கொலைகள் அக்காலத்தில் பரவலாக இருந்ததும், அச்செயலின் அவலம் புரியாது அது உயர்வாகக் கருதப்பட்ட சமூகத்தின் மனநிலையும் கபீர்தாசரின் பல பாடல்களில் வெளிப்படுகிறது. அதனைக் குறிக்கும் பாடல்களில் இரண்டு எடுத்துக்காட்டாக இங்கே …

இறந்துவிட்ட கணவனின் உடல் அருகே

கைம்பெண் உட்கார்ந்திருக்கிறாள்

அவள் சிதையைக் கண்டு அஞ்சுவதில்லை

இந்த அற்ப உடம்பைப் பற்றிய எல்லா

அச்சங்களையும் விட்டொழிப்பாயாக…… (பாடல் – 64)

கணவனை இழந்த காரிகையிடம்,

உடன்கட்டை ஏறித் தன்னை எரித்துக்கொள்ளுமாறு

யார் சொல்லிக் கொடுத்தார்கள்?

பற்றற்ற நிலையில் பேரின்பம் காண்

என யாராவது சொல்லித்தர வேண்டுமா என்ன? ….. (பாடல் – 62)

இறைவனை அடையும் பேரின்பப் பேறு அடையும் நிலை, கைம்பெண் கணவனுடன் உடன்கட்டை ஏற்றப்படுவதுடன் ஒப்பிடப்படுவது பெண்கள் எத்தகைய துன்பம் அனுபவித்துள்ளனர் என்பதையும், எந்த அளவு மக்களின் மரத்துப்போன மனம் பெண்களின் உயிர்க்கொலையினை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் ஏற்றுக் கொண்டு வாழ்ந்துள்ளது என்பதையும் இப்பாடல்கள் கண்முன் நிறுத்துகிறது.

நாயக-நாயகி பாவ பாடல்கள் மறைமுகமாகச் சொல்வது… உறவைப் பொறுத்தவரை துணையை அடைய விரும்பி ஏக்கம் கொண்டு திரியும் மனநிலை பெண்ணிற்குரியது மட்டுமே என்ற கருத்து. இதனைச் சென்ற நூற்றாண்டின் திரைப்படங்கள் வரை நாம் காணலாம். கனவுக்காட்சி, காதல் களியாட்டங்கள் திரைப்படங்களில் காட்டப்படும்பொழுது அதில் காதல் கனவு காண்பவர் கதாநாயகியாகவே காட்டப்படுவார். காதல் கனவு காண்பது காதலியின் கடமை மட்டும் போலும்!!! உலகை உய்விக்கக் கனவு காணுவது ஆணின் கடமை என்ற ஆழ்மன பண்பாட்டுச் சிந்தனைகள் வெளிப்படுத்தப்படும் குறுகிய சிந்தனை வட்டத்தில் விழும் சித்தரிப்புகள் அவை.

அதனையும் விட மோசமானது, வாழ்க்கைத் துணை இறந்த பிறகு பெண் வாழவிரும்பமாட்டாள் என்ற சிந்தனை. இவையாவும் ஆண்களின் வாழ்வியல் விருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் ஆண்களின் கோணத்தில் கபீர்தாசரால் பாடப்பட்டுள்ளது. கபீர்தாசர் வாழ்ந்தது பதினைந்தாம் நூற்றாண்டு என்பதை மனதில் கொண்டு பழங்கால பண்பாட்டுக் கூறுகளை இவற்றின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

கபீர்தாசரின் கவிதைகள் இந்தி பக்தி இலக்கியத்தில் தனியிடம் பெற்றுப் போற்றப்படுபவை. சமயசார்பற்ற கொள்கையைக் கொண்ட இந்தியாவிற்கு இன்றும் தேவைப்படுபவை மதநல்லிணக்கத்தை வளர்க்கும் கபீர்தாசரின் கவிதைகள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் யாருக்கும் இருக்க வழியில்லை.

________________________

References:

[1] Wendy Doniger, The Hindus: An Alternative History, Oxford University Press (2010), p. 462

[2] கபீரின் நூறு பாடல்கள், இரவீந்திரநாத் தாகூர் பாடல்களின் மொழிபெயர்ப்பு, எழில்முதல்வன், தமிழ் அலை (2011)

[3] Kabir

https://en.wikipedia.org/wiki/Kabir

https://ta.wikipedia.org/s/n59

[4] Tagore, Rabindranath. Songs of Kabir, Macmillan, New York, 1915.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கபீர்தாசரின் பாடல்கள் வழங்கும் இறைச்சிந்தனைகள் – ஒரு பார்வை: பகுதி-2”

அதிகம் படித்தது