மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கறுப்பு பூனையும் கள நிலவரமும் (சிறுகதை)

மொழி ஆயுதன்

Sep 25, 2021

siragu black cat
எஸ் 1 : களநிலவரம் என்ன?

பி 1 : சார். பூனைய ரொம்ப குளோஸா வாச்பண்ணிட்டு இருக்கோம்..

எஸ் 1 : அதோட நிறமென்ன?

பி 1 : சார். கறுப்பு…

எஸ் 1 : நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும். இது மிகவும் பதட்டமானசூழல்.. கவனமாக இருங்கள்!..

பி 1 : சார். பூனை தலையைப் பின்பக்கம் திருப்பி தன்னுடைய தொடைபகுதியில் நக்கிக் கொண்டிருக்கிறது.

எஸ் 1 : கவனமாகப் பாருங்கள்.. வேறு ஏதாவது இருக்கப் போகிறது.

பி 1 : சார். இப்போ பூனையின் ஒரு மயிர் கீழே விழுந்துவிட்டது..

எஸ் 1: பதட்டமான சூழல். அதற்குள் ஏதாவது குறுந்தகவல் இருக்கபோகிறது.. பாருங்கள்..

பி 1 : சார். இப்போ பூனையின் முதுகு உயர்ந்து முடி சிலிர்த்துக்கொண்டிருக்கிறது.

எஸ் 1 : வெறி குட்.. அது பேசுவது உங்களுக்குப் புரிகிறதா.. இல்லை இன்னும் நவீன கருவி ஏதாவது வாங்க வேண்டுமா?

பி 1 : சார்ர்…பூனை ஓடப்பார்க்கிறது..

எஸ் 1 : விட்றாதீங்க..

பி 1 : சார். சுற்றி திரும்பி திரும்பி பார்க்கிறது. எங்கள நோக்கி ஓடிவருவதற்கு முயற்சி செய்கிறது..

எஸ் 1 : நீங்கள் கவனிப்பது அதற்கு தெரியுமா?

பி 1 : சார். அதற்கு வாய்ப்பே இல்லை சார். நாங்க ரொம்ப டெக்னிக்கலா வேலை செய்கிறோம். யாருக்கும் நாங்க இருக்கிற எடம்கூட தெரியாது.

எஸ் 1 : தொழில்நுட்ப கோளாறு ஏதாவது இருந்தா சொல்லுங்க.. வெளிநாடுகள்ல இருந்தே சரி செய்ய சொல்வோம். ஆனால் கவனம் தேவை..

பி 1 : சார். பூனை ஒரு மண்மேட்டைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.

எஸ் 1 : அங்கு வெடிகுண்டு ஏதாவது இருக்கிறதா? நல்லா பாருங்கள்.

பி 1 : சார். பூனை காலால் பறித்துக் கொண்டு இருக்கிறது. புழுதி பறக்கிறது.

எஸ் 1 : நவீன ஆயுதங்கள் ஏதாவது இருக்குமோ? நல்லா பாருங்க..

பி 1 : சார். மீண்டும் திரும்பிப் பார்க்கிறது.

எஸ் 1 : யாராவது வருகிறார்களா? பாருங்கள்..

பி 1 : சார். குழி பறித்த இடத்திற்கு முன்னால் சென்று பின்னங்காலை குழிக்கு முன்னால் வைக்கிறது.. என்னமோ நடக்கப் போகிறது சார்.

எஸ் 1 : நம்ம இத நழுவ விட்டுற கூடாது. எதிர்காலத்துல நம்ம இருக்கணும்னா அத அசையவிடாம பிடித்தாக வேண்டும். ம்ம்ம்.. கவனமாகப் பாருங்கள்..

பி 1 : சார். பூனை மலங்கழிக்குது.

எஸ் 1 : உண்மைதான.. அது என்ன நிறம்?

பி 1 : சார். கறுப்பு கலர். சின்ன அணுகுண்டு மாதிரி உருண்டை வடிவில் 10 செ.மீட்டருக்கு 3 செ.மீ அளவில் உள்ளது.

எஸ் 1 : விட்றாதீங்க.. அதுமட்டும்தானா?

பி 1 : சார். அதோடு மூத்திரமும் போகுது சார்..

எஸ் 1 : அப்படியா அது என்ன கலர்?

பி 1 : சார். அதுவும் கொஞ்சம்…அதுவும் கறுப்புதான் சார்..

எஸ் 1 : சரியில்லையே.. அதில் ஏதாவது விசத்தன்மை இருக்கப் பேகிறது..சரியா பாருங்கள்.

பி 1 : சார். மலம், ஜலம் கழித்த இடத்தில் இப்போ மண்ணை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.. மூடிவிட்டது சார்..

எஸ் 1 : எதுக்கும் நான்கு பேரை அனுப்பி அந்தக் குழியைத் தோண்டி என்ன இருக்கிறது என்று பார்க்கச் சொல்லுங்கள். ம்ம்ம்… சீக்கிரம்…

பி 1 : சார். அங்கிருந்து சற்று தூரம் தள்ளிப்போய்.. இப்போ பின்பக்கம் திரும்பி அதனுடைய ஆசனவாயை நக்குகிறது.

எஸ் 1 : விட்றாதீங்க ஏதாவது மறைத்து வைக்கப்போகிறது.

பி 1 : சார். நன்றாக நக்குகிறது சார்.

எஸ் 1 : யோ.. பைனாக்குலரெல்லாம் இருக்குதில்ல நல்லா பாருய்யா.. இல்ல புது வெர்சன் ஏதாவது வாங்கி தரவா?

பி 1 : சார். இப்போ மூத்திரவாயை நக்குகிறது.

எஸ் 1 : நம்மை ஏமாற்ற பார்க்கிறதென்று நினைக்கிறேன்.

பி 1 : சார். இப்போ அதனுடைய நாக்கை வலது பக்கம் இடது பக்கம் என்று வாயில் மேவையைத் துடைக்கிறது. அங்கிருந்து போகிறது சார்..

எஸ் 1 : அதுக்கு இப்ப பசிக்கும்தானே? பால் இருக்கிறதா?

பி 1 : சார். தட்டில் பால் இருக்கிறது.

எஸ் 1 : பாலோடு சாணிப்பவுடரைக் கலந்துவிட்டால் என்ன?

பி 1 : சார். அதென்ன தவறு செய்தது? அப்புறம் எலியை எப்படி பிடிப்பது?

எஸ் 1 : அதெல்லாம் உனக்கெதுக்கு..

எலி நம்முடைய இனம். நம்முடைய வாகனம். அதற்காகத்தானே எல்லாம் செய்கிறோம்..

பி 1 : ம்ம்ம்.. சரிங்க சார்.

 


மொழி ஆயுதன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கறுப்பு பூனையும் கள நிலவரமும் (சிறுகதை)”

அதிகம் படித்தது