மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கற்கும்பொழுது மூளை அதிகம் சிந்திக்குமானால் கற்பது தாமதமாகும்

தேமொழி

Apr 18, 2015

karkum pozhudhu2எதனையும் கற்பதற்கு முதலில் ஒருவருக்குத் தேவையானது ஆர்வம். சிலவேளைகளில் தேவையின் கட்டாயத்தாலும் நாம் கற்கிறோம். கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களைத் தடுக்க இயலாது, அவர்கள் ஏகலைவன் வில்வித்தையைக் கற்றது போல தடைகளை மீறி முயன்று தானே வழி தேடி கற்றுக் கொள்வார்கள். விருப்பமில்லாது இருப்பவர்களை எவ்வளவுதான் கட்டாயப்படுத்தினாலும் கற்க மாட்டார்கள். இதனால் ஆர்வம் என்பது கற்றலுக்கு அடிப்படை என்பதை நாம் அறிவோம். சிலநேரங்களில் வாழ்வில் ஏற்படும் தேவைகளினால், வாழ்வாதாரம் பாதிக்கப்படுமானால், அல்லது உயிர் வாழ இன்றியமையாத் தேவை என்றால், நெருக்கடி நிலையின் காரணமாக, வேண்டா வெறுப்பாக கொஞ்சமும் ஆர்வமின்றி நாம் கற்றுக் கொள்வோம்.

ஒருசிலர் கற்கத் தொடங்கினால் எந்த வித்தையையும் விரைவில் கற்றுக் கொண்டுவிடுவார்கள். மற்றும் சிலருக்கோ அதையே அறிந்து கொள்ள அதிக நாட்கள் தேவைப்படும். போகிற போக்கில் கற்றுக் கொண்டார்கள் என்று நாம் விளையாட்டாகக் குறிப்பிடுவதை ஒத்தார்போல ஒரே நாளில் மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொள்பவர் ஒரு சிலரும் உண்டு. அவரைப்போலவே மிதி வண்டி ஓட்டும் திறமையை அடைய மற்றவருக்கு ஒரு வாரமும் தேவைப்படலாம். இது போன்ற கற்கும் திறமையை இசைக்கருவியைக் கற்பதிலும், ஒரு புதிய மொழியில் தேர்ச்சி பெறுவதிலும் நாம் பார்ப்பதுண்டு. கற்கும் வேகத்தை வைத்து ஒருவரை கற்பூர புத்திகொண்டவர், கரி புத்திகொண்டவர், வாழைமட்டை புத்திகொண்டவர் என்றெல்லாம் பிரித்துச் சொல்வதும் உண்டு. கற்பூரத்தின் அருகே நெருப்பைக் கொண்டு போனால் உடனே நெருப்பு பிடித்துக்கொள்வதைப் போல சிலர் சட்டென்று உடனே கற்றுக் கொள்வர், சிலருக்கு கரித்துண்டை ஊதி ஊதி எரியவைப்பது போல பலமுறை சொல்ல வேண்டியிருக்கும், மற்றும் சிலருக்கோ எத்தனை முறை சொன்னாலும் வாழைமட்டை எரியாதது போல கற்பிப்பது பலனளிப்பதில்லை.

இது போன்ற விரைவாகக் கற்பவர் எப்படி விரைவில் கற்றுக்கொள்கிறார் என்பதை ஒரு அறிவியல் ஆராய்ச்சி விளக்குகிறது. கற்கும் பொழுது அதை எப்படிக் கற்கிறோம், சரியாகச் செய்கிறோமா, வேறுமுறையில் செய்யலாமா என்பது போன்ற பலவகை சிந்தனைகள் தோன்றிய வண்ணம் இருக்கும் ஒருவர் கற்பதற்கு அதிக காலம் பிடிக்கிறது. இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் கற்பதில் மட்டுமே கருத்தாக மனதை ஒருங்கிணைத்து, சிந்தனைகளைக் கட்டுப்படுத்தி கற்பவர் வெகு விரைவில் கற்றுக் கொண்டுவிடுகிறார் என்பது அந்த ஆய்வின் முடிவு.

karkum pozhudhu4மூளையின் முன்மூளைப்பகுதியானது ஆங்கிலத்தில் “ப்ரீஃப்ராண்ட்டல் கார்ட்டெக்ஸ்” அல்லது”ஃப்ராண்ட்டல் லோப்” (prefrontal cortex/the frontal lobe) பகுதி என்று குறிப்பிடப்படுகிறது. திட்டமிடல், ஒழுங்கு படுத்துதல், குறைகளைக் கண்டறிந்து தீர்த்தல், ஆராய்தல், தேவையானவற்றில் கவனம் செலுத்துதல், கற்றறிதல் போன்ற செயல்களுக்குக் காரணமானது இந்த முன்மூளைப்பகுதி. இப்பகுதி மிக மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தால் கற்பதற்கு இடையூறு செய்கிறது என்பதை ஒரு புதிய ஆய்வறிக்கை சொல்கிறது. சிறுவயதில் கற்பவர்கள் மிக விரைவில் கற்பார்கள். நாம் “இளமையில் கல்” என்ற மூதுரையையும் அறிவோம். அதற்குக் காரணம் அந்த வயதில் முன்மூளைப்பகுதி அந்த அளவு வளர்ந்து முதிர்ச்சி அடைந்திருப்பதில்லை, அதனால் சிறுவர்களுக்கு அதிகம் கவனத்தைத் திசைதிருப்பும் எண்ணங்கள் தோன்றாமல் கற்றலில் கவனம் செலுத்த முடிகிறது, விரைவாகவும் கற்றுக்கொள்ள முடிகிறது.

ஒரு புதிய செயலை நாம் கற்கத் துவங்கும் பொழுது மூளையின் மொத்தப்பகுதியும் அதில் ஈடுபட்டு அதை எப்படிக் கற்பது என்பதில் மூளையின் அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைப்பதில் ஈடுபடுகிறது. செய்யும் செயல் பழக்கமானவுடன் மூளையின் கொடுக்கப்பட்ட செயலுக்குத் தேவையான பகுதி மட்டுமே அதில் கவனத்தைச் செலுத்துகிறது. இதனை நாம் வண்டி ஓட்டும் பொழுதும் கவனித்திருக்கலாம். புதிதாக வண்டி ஓட்டத் துவங்கும் பொழுதோ அல்லது ஒரு புதிய சாலையில் பயணிக்கும் பொழுதோ நமது கவனம் அதிகரிக்கும். ஆனால் தினம் தினம் வழக்கமாகச் சென்று வரும் நன்கு பழகிப் போன ஒரு சாலையில் நாம் வண்டி ஓட்டும்பொழுது நாம் எப்படி, என்ன செய்கிறோம் என்பதையே சிந்திக்காத அளவிற்கு, ஒரு அனிச்சை செயல் போலவே பழகிய தடத்தில் பயணிப்போம். இது போன்ற நிலையை விரைவில் அடைந்துவிடுவதில்தான் பலர் வேறுபடுவதுண்டு.

karkum pozhudhu1ஒரு புதிய செயலைக் கற்கும் பொழுது மூளையின் நடவடிக்கை என்ன என்பதை ஆராய விரும்பிய ஆய்வாளர்கள், இசைப்பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்களை “செயல்நிலை காந்த அதிர்வு அலைப்படக் கருவி”யுடன் (fMRI / functional magnetic resonance imaging instrument) ஒன்றுடன் இணைத்து அவர்களது மூளையின் அனைத்துப் பகுதியும் ஒட்டுமொத்தமாக எப்படி கற்றலில் ஈடுபடுகிறது எனக் கவனித்தார்கள். இவ்வாறு தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு மாணவர்கள் கவனிக்கப்பட்டு வந்தார்கள். முன்னர் செய்த ஆய்வுகளில் இருந்து இந்த முறை வேறுபட்டிருக்கக் காரணம், இதுவரை இந்த ஆய்வுகள் ஒரு சில மணி நேரங்களுக்கோ, அல்லது அதிகம் சென்றால் ஒரு சில நாட்களுக்கோ மட்டும்தான் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆறு வாரங்கள் தொடர் கவனிப்பு என்ற இந்த நீண்ட ஆய்வுகால முறை முந்தைய ஆய்வுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. அத்துடன், இந்த ஆய்வில் மூளையின் குறிப்பிட்ட ஒரு சிலபகுதிகளின் நடவடிக்கையை மட்டும் ஆராயாமல் மூளையின் மொத்த நடவடிக்கைகளையும் ஒருங்கே ஆராய்ந்ததும் இந்த ஆய்வின் சிறப்புத் தன்மையாகும்.

இந்த ஆய்வின் மூலம் பெற்ற தரவுகள் கற்பவர்களில் இரு வகையினர் இருப்பதைக் காட்டியது. விரைவில் கற்பவர்களின் (fastest learners) மொத்தமூளையும் செயலில் ஈடுபடுவதை நிறுத்திக் குறிப்பிட்ட செயலில் மட்டும் கவனத்தை, சிந்தனையை ஒருங்கிணைப்பது தெரிந்தது. கற்பதற்கு அதிகநேரம் எடுத்துக் கொள்பவரின் (slowest learners) மூளை அவ்வாறு செய்யாமல் மூளையின் பகுதிகள் அனைத்தும் கற்றல் குறித்த பலவித செயல்களில்/எண்ணங்களில் ஈடுபடுவதை இயல்பாகக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இந்தப் போக்கை விரைவில் கட்டுப்படுத்துபவர்களால் விரைவில் கற்கவும் முடிகிறது. எனவே ஒரு செயலை எப்படிச் செய்கிறோம், எப்படிச் செய்யலாம் என்பது போன்ற எண்ணங்களைக் கைவிட்டு செய்யும் முறையில் மட்டும் கவனம் செலுத்துவது கற்பதை விரைவில் கற்க உதவும் என்பதே இந்த புதிய ஆய்வு கூறும் தகவல்.

மேலும் அறிந்து கொள்ள:

Learning-induced autonomy of sensorimotor systems, Danielle S Bassett,         Muzhi Yang,            Nicholas F Wymbs & Scott T Grafton, 06 April 2015, The Journal Nature Neuroscience, Nature Neuroscience (2015)

http://www.nature.com/neuro/journal/vaop/ncurrent/full/nn.3993.html

New Study Shows How Thinking Less Can Enable Faster Learning

David DiSalvo, 4/13/2015, Forbes

http://www.forbes.com/sites/daviddisalvo/2015/04/13/new-study-shows-how-thinking-less-can-enable-faster-learning/

DNews: Do We Need to Think Less to Learn More, APR 14, 2015

http://news.discovery.com/human/videos/do-we-need-to-think-less-to-learn-more-video-150414.htm


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கற்கும்பொழுது மூளை அதிகம் சிந்திக்குமானால் கற்பது தாமதமாகும்”

அதிகம் படித்தது