மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கலிபோர்னியா பாடத்திட்டத்தில் இந்தியாவின் வரலாற்றை அழிக்கும் முயற்சியா?

தேமொழி

Jun 11, 2016

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் மற்ற மாநிலங்களைவிடப் பல வகைகளில் வேறுபட்டது. குறிப்பாக, அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் பல்லின பின்புலத்தைச் சார்ந்தவர்களாக இருக்கும் நிலை மாநிலத்தின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து, கல்வி, பொருளாதாரம் எனப் பலவற்றையும் நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இம்மாநிலம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின் தாக்கம், இம்மாநிலத்தின் எல்லையையும் தாண்டி அமெரிக்க அளவிலும் பாதிப்புகள், மாற்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவதும் வழக்கம்.

கலிபோர்னியா எந்த அளவு பிற அமெரிக்க மாநிலங்களில் இருந்து வேறுபட்டுள்ளது என்பதைச் சுருக்கமாக விளக்குவதென்றால், அமெரிக்கர் என்றால் பொதுவாக உலக மக்கள் தங்கள் மனதில் உருவகப்படுத்தும் ஐரோப்பாவில் இருந்து குடியேறிய வெள்ளையின மூதாதையர் ஒருவரின்  வழித்தோன்றல், கிறித்துவ மதத்தைச் சார்ந்த, ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் என்ற ஒரு பொதுவான எண்ணத்தை முறியடிக்கும் வகையில் கலிபோர்னியா மாநிலம் வெகு வேகமாக மாறிவருகிறது. சமீபத்திய மக்கட்தொகைப் புள்ளிவிவரத்தின்படி வெகுவிரைவில் கலிபோர்னியாவில் வாழ்பவர்களில் இனி மூவரில்  ஒருவர் மட்டுமே உலகமக்களின் கணிப்பில் வாழும் அமெரிக்கராக இருக்கப்போகிறார் என்னும் அளவிற்குச் சிறுபான்மையினர் நிலைக்கு வெள்ளையின மக்கள்  தள்ளப்படுகிறார்கள்.

இது பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் எதிரொலிக்கிறது. தற்பொழுது பள்ளிகளில் பயிலும் 6.2 மில்லியன் மாணவர்களில் பெரும்பான்மையினர், பொதுவாக வழக்கத்தில் அமெரிக்காவின் சிறுபான்மையினர் என்று குறிப்பிடப்படுபவர்களே. அமெரிக்காவில் வாழும்  2.5 மில்லியன் இந்துக்களில் சரிபாதியினர், அதாவது சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள் கலிபோர்னியாவில் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியிலும், சிலிக்கான் பள்ளத்தாக்குள்ள சான்பிரான்சிஸ்கோ பகுதியின் தொழில்நுட்பத்துறைப் பணிகளில் ஈடுபட்டிருப்போரும் ஆவார்கள். மாநில அரசின் கல்வித்துறையின் புள்ளிவிவரப்படி (California State Board of Education; http://www.cde.ca.gov/ds/sd/cb/ceffingertipfacts.asp), கலிபோர்னியா பள்ளி மாணவர்களில் 53% இலத்தீனோ (ஸ்பானிஷ் மொழி பேசும் மெக்சிகோ நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தோர்) இன மக்கள், 25% வெள்ளையினத்தவர், 12% ஆசியா மக்கள், 6% கறுப்பின மக்கள், இவர்களைத் தவிர்த்த சிறுபான்மையினர் சிலர் தங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட இனம் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள்.

கலிபோர்னியாவில் வசிப்பவர்களில் ஆசியாவில் இருந்து குடியேறியவர்களின் தலைமுறையினர், அதிலும் தெற்காசியப் பகுதியில் இருந்து குடியேறியோர் வெகு வேகமாக எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனர். இதனால்,  பல பின்னணி உள்ள அமெரிக்கர்களைப் பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ளும் வகையில்,  சமூகவியல் மற்றும் உலக வரலாற்றுப் பாடங்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் முறை மாநிலக் கல்வித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பல்லின மக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், பல்கலைக்கழகக் கல்வி வல்லுநர்களின் ஆலோசனையின் அடிப்படையிலும், பரிந்துரைகள் பெறப்பட்டு, அவை ஒரு குழுவினரின் கலந்தாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு பாடத்திட்டங்கள் சீரமைக்கப்படும் முறை கலிபோர்னியா மாநில அரசின் பள்ளி பாடத்திட்டக் குழுவினரால் (Instructional Quality Commission of California’s Department of Education) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக கலிபோர்னியாவின் கல்வித்திட்டத்தில் கொண்டுவரப்படும் எந்த ஒரு மாற்றமும் அமெரிக்காவின் பிற மாநிலங்களின் கல்வித் திட்டங்களிலும் பின்பற்றப்படும். கலிபோர்னியாவின் மக்கட்தொகையின் தாக்கம் மற்ற மாநிலங்களின் பாடநூல் விற்பனையை நிர்ணயிக்கும் வகையில் அமைந்திருப்பதுதான் இதற்குக் காரணம். பாடநூல் பதிப்பகத்தார் கலிபோர்னியா பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டப் பாடநூல்களை  பிற மாநில பள்ளிகளுக்கும் விற்கும் வாய்ப்புகள் அதிகம்.

சென்ற ஆண்டின் இறுதியில் துவங்கி, இந்த ஆண்டும் தொடர்ந்து நடைபெற்ற கல்விச்சீரமைப்பு கலந்தாய்வு நிகழ்விலும் பல இனத்தைச் சார்ந்தவரும் தங்கள் பரிந்துரைகளை வழங்கினர். ஆனால், மிகப் பெரிய அளவில் நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் நிலையில் அமைந்தது இந்தியர்கள் இந்தியாவைப் பற்றி புகுத்த நினைத்த வரலாற்று மாற்றங்கள்தான். இந்த வரலாறு பற்றிய விவாதங்களின் அடிப்படை… அமெரிக்கப் பள்ளிகளில் இந்தியாவைப் பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் பள்ளிப் பாடங்களின் வழியே மாணவர்களுக்கு எவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்கள்?  அமெரிக்காவில் வளரும் தெற்காசிய (இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், ஸ்ரீலங்கா போன்ற இந்தியத் துணைக்கண்டத்தின் நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பங்களின்) மாணவர்கள் தங்கள் மூதாதையர்கள் பற்றியும், அவர்கள் கலாச்சாரம் பற்றியும் சமூகவியல் நோக்கில் எந்த வகையில் கற்பிக்கப்படுகிறார்கள்? என்பதைப் பற்றி சுற்றிச் சுழன்றது.

இந்தியப்பகுதியைப் பற்றிய கல்வித்துறைகளின் வல்லுநர்களான  பெரும்பான்மையான பல்கலைக்கழகப் பேராசிரியர்களும்; இந்தியாவைத் தவிர்த்த பிற தெற்காசியப்பகுதி நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், அதாவது, இக்கால இந்தியாவின் அரசியல் எல்லைக்குள் பிறக்காதவராக, தங்கள் வேர்கள் இந்தியாவில் இல்லை என்னும் கருத்து கொண்ட பிரிவினரும்; வரலாறு உண்மையை சரியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும்; இந்தியத் துணைக்கண்டத்தை பாடங்களில் “தெற்காசியா” என்று குறிப்பதே சரியான முறை என்று பரிந்துரைத்திருந்தனர்.

“இந்தியா” என்பதையே பண்டையக் காலம் முதல் இந்தியாவைப் பற்றி உலகத்தினர் அறிந்திருந்த முறை. கொலம்பஸ் இந்தியாவிற்கு வழி கண்டுபிடிக்கத்தான் கிளம்பினார். அமெரிக்கப் பழங்குடியினரை இந்தியர் எனத் தவறாகக் கருதியே அவர்களை இந்தியர் எனக் குறிப்பிட்டார். இங்கிலாந்தினர், போர்த்துக்கீசியர், பிரஞ்சுக்காரர், மற்றும் டச்சுக்காரர் ஆகியோர் கிழக்கிந்திய நிறுவனம் போன்ற பெயர்களில்தான் இந்தியாவுடன் வர்த்தகத்தைத் துவக்கினார்கள். இந்தியாவின் தெற்கு எல்லை இந்தியப் பெருங்கடல் என்றுதான் குறிப்பிடப்படுகிறது. இவையனைத்தும் தெற்காசியா என்ற அடிப்படையில் அமையவில்லை. இந்தியா என்பதை நீக்கி தெற்காசியா எனக் குறிப்பிடுவது இந்தியர்களின் அடையாளத்தை அழிக்கும் செயல் என்று மாற்றுக் கருத்துகள் கொண்ட வலதுசாரிகள் பரிந்துரைத்தனர்.

சீனாவை கிழக்காசியா என மாற்றி அழைக்காத பொழுது, இந்தியாவை தெற்காசியா என்பது சரியல்ல என்று கருத்துகள் அவர்களால் முன் வைக்கப்பட்டன. வலதுசாரிகள், #DontEraseIndia! என்ற ஹேஷ்டேக் குறிப்புடன் சமூக வலைத்தளங்களிலும் ஆதரவு திரட்டினர். ஐரோப்பிய நாடுகள் என்றால் அந்தக் கண்டத்தில் இருக்கும் நாடுகள் யாவும் எனப் புரிந்து கொள்ள இயலும் போது, வரலாற்றில் இந்தியா என்றால் அது தெற்காசியப் பகுதி நாடுகளைக் குறிக்கும் என்று எவராலும் புரிந்து கொள்ள இயலும் என்றும் இவர்களால்   மாற்றுக் கோணம் கொடுக்கப்பட்டது. இவர்கள் கருத்து இக்கால தெற்காசியப் பகுதியை சரிவரக் குறிப்பதற்கு உதவவில்லை என்று கருதியவர்களும் கூட, இந்தக் கருத்து ஒருவகையில் ஒப்புக்கொள்ளக்கூடியதே என்று நினைத்தனர்.  உண்மையில், வலதுசாரிகளின் கோரிக்கைகள் சரியே என்று எண்ணும் அளவிற்குத்தான் மேம்போக்காக நிகழ்வைக் கவனிப்பவர்கள் புரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. அந்த வகையில் #DontEraseIndia! என்ற கோரிக்கை திசைதிருப்பும் முறையில் அமைந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தக் கோரிக்கை, இந்திய இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் அமெரிக்க இந்திய வலதுசாரி அமைப்பினர் முன்வைத்த 30 மாற்றங்களின் உண்மையான நோக்கத்தை மறைக்கும் விதத்தில் அமைந்திருந்தது.

எவ்வாறு வலதுசாரிகள் இந்தியா என்றால் அது இந்துக்களின் நாடு மட்டுமே என்று கருதுகிறார்களோ, மதச்சார்பற்ற இந்தியாவை இந்துஸ்தானம் என்று கருதுகிறார்களோ, இஸ்லாமியரை வெறுக்கும் அடிப்படை மனநிலை அவர்களால் வெளிப்படுத்தப்படுகிறதோ, இந்தியாவின் பல்லின மக்களும், மாறுபட்ட பின்னணி கொண்ட சிறுபான்மையினரும் இந்தியர்களே என்று ஏற்றுக் கொள்ள விரும்பாமல் உள்ளார்களோ, எவ்வாறு இந்துமதத்தின் சாதி, வர்ணாசிரமப் பிரிவுகள் நல்ல நோக்கத்தில் உருவானது என்ற நம்பிக்கையில் செயல்படுகிறார்களோ அவையாவும் அமெரிக்காவில் வசிக்கும் இந்து  வலதுசாரிகளின் பரிந்துரைகளிலும் பிரதிபலித்தது. அமெரிக்கர்களின் பார்வையில் உண்மையான இந்துமத வரலாறு, சமூகவியல் மறைக்கப்பட்டு, குறைகள் பூசி மெழுகப்பட்டு இந்து மதம் பற்றிய ஒரு உயர்ந்த எண்ணம் உருவாக்கும் வகையில் கருத்துக்கள் இவர்களால் கொடுக்கப்பட்டன.

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், அவர்கள் விரும்பும் பொழுது ஒருங்கிணைந்த பண்டைய இந்தியா என்ற கோரிக்கையை வைப்பதும், தங்கள் நோக்கத்திற்கு எதிராகப் பாதகமாக அமையக்கூடிய வகையில் பழமையில் ஊறிப்போனக் கருத்துக்களை எதிர்கொள்ளும் பொழுது இவையிவை தற்கால இந்தியாவின் கருத்தாக்கங்கள், இவை இந்தியாவின் தொன்மை நிறைந்த உண்மை வரலாற்றைக் காட்டவில்லை என்பது போன்ற மறுப்புக்களை முன்வைக்கும் வகையிலும் வலதுசாரிகளின் பரிந்துரைகள் அமைந்திருந்தன.

வரலாறு என்பது நடந்ததை நடந்தபடியே அறிந்து கொள்வதா? அல்லது தங்களை மற்றவர் பார்வையில் உயர்ந்தவராகத் தோற்றம் அளிக்கும் வகையில் குறைகளைப் பூசி மெழுகி, தங்கள் கலாச்சாரத்தை உருவகப்படுத்துவதா? இரண்டாவது கோணமே சரி என்ற எண்ணத்தில் செயல்பட்டனர் வலதுசாரி இந்துக்கள்.

இந்துமதத்தினர் என்றால் அகிம்சை வழியைக் கடைப்பிடிப்போர், தாவர உணவு உட்கொள்வோர், பக்தி, யோகா, அன்பு, கருணை ஆகியவற்றைப் பின்பற்றுவோர் என்ற கோணத்தில் மட்டுமே இந்துமதத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இவர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  இந்துமதத்தின் மற்றொரு கோணமான வர்ணாசிரம தர்மம் என்ற நிலை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததால், பிறப்பின் அடிப்படையில் மக்களிடையே  உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டு இன்றுவரை நிகழும் சாதிக் கொலைகள், ஒடுக்கப்பட்ட  பிரிவினர் மீது நடந்துவரும் அடக்குமுறைகள், இந்தியாவில் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், காலம் காலமாக சமத்துவமற்ற நிலைமையில் கல்வி, செல்வம் ஆகியன மறுக்கப்பட்டு  ஆணாதிக்கத்தினால் அடிப்படை உரிமையின்றி  வாழ்ந்த பெண்களின் நிலை என்ற இந்திய சமூகநிலையின் மற்றொரு கோணமான அடக்குமுறைக்  கலாச்சாரங்களை வலதுசாரிகள் எதிர் கொள்ள விரும்பவில்லை. அவை பாடத்திட்டத்தில் இடம் பெற்று அமெரிக்க மாணவர்கள் அறிந்து கொள்வதையும் அவர்கள் விரும்பவுமில்லை. அத்துடன், இவர்கள் சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley civilization) என்பதையும் “சரஸ்வதி-சிந்து நாகரிகம்” (Sarasvati-Sindhu civilization) குறிப்பிட  வேண்டும்  என்றக் கருத்தையும் பரிந்துரைத்தனர்.

சாதிகள் பற்றியும், ஆணாதிக்க விளைவுகளின் நிகழ்வுகளையும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று இவர்கள் வைக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக அவர்கள் அளிக்கும் விளக்கம்; இதனைத் தெரிந்து கொள்வதால் பள்ளியில் பயிலும் இந்திய வழித்தோன்றல்களான மாணவர்கள் பிற மாணவர்களால் கேலி செய்யப்படுகிறார்கள், கேவலமாகப் பார்க்கப்படுகிறார்கள், அவமானப் படுத்தப் படுகிறார்கள். அத்துடன் இந்துமதம் என்பது சாதி, தீண்டாமை ஆகியப்பகுதியை மட்டும் கொண்டதல்ல என்பதாகும்.

ஏன் இந்து மதத்தில் மட்டும்தான் இது போன்ற வர்க்கப் பிரிவுகள், அதன் காரணமாகத் தோன்றிய அடக்குமுறைகள், ஆணாதிக்கம் ஆகியவை இருந்தனவா? பிற மதங்களில்  இவை இருந்ததில்லையா? எதற்காக இந்து மதத்தின் இந்த ஒரு  கோணத்தைப் பெரிதுபடுத்தி  இதுதான் இந்துமதம் என்பது போன்றக் கருத்தை  பாடமாக வைக்க வேண்டும்?  என்பது  போன்றக் கேள்விகளை அடுக்கி, முடிவாக நடுநிலைப்பள்ளி அளவில் (6-7 ஆம்) வகுப்புப் பாடங்களுக்கு இது போன்ற தகவல்கள் பொருத்தமுமல்ல, அவசியமும் கிடையாது  என்றக்   கருத்தையும்  தெரிவித்தார்கள்.

குறிப்பாக அவர்கள் வர்ணாசிரம தர்மத்தை அறிமுகப்படுத்த விரும்புவது, இந்துமதத்தின் அடிப்படையில் இருந்த இது போன்ற பிரிவுகள் சமூகத்தினர் அவரவர் கடமையைச் செய்ய வழிகாட்டுவதன் மூலம் சீரான ஒரு வாழ்வியலுக்கு அடிப்படையாக அமைந்தது என்பதாகும். அத்துடன் சாதிப்பிரிவினை, அதன் விளைவான உயர்வு தாழ்வு கருத்தியல்கள் இந்தியாவின் இந்து மதத்தினரால் மட்டும் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்தியப்பகுதியில் வாழும் அனைத்து மதத்தினரிடமும் இந்தப் பழக்கம் நடைமுறையில் உள்ளது. ‘தலித்’ என்ற சொல் தற்காலத்தில் புழக்கத்திற்கு வந்தது. அது தொன்மையான இந்துமதத்தின் சாரம் அல்ல.  அது பற்றிய குறிப்பு பாடப்புத்தகங்களில் இடம் பெறுவது வரலாற்று நோக்கில் பிழையானது என்பதும் இவர்களது கருத்து.

இதில் வேடிக்கை என்னவென்றால் வலதுசாரிகள் மிகத்தீவிரமாக இந்துமதத்தின் சாதிப்பிரச்சனையை பாடத்திட்டத்தில்  இடம்பெறக்கூடாது என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்த அதே வேளையில், உலகின் மறுபக்கத்தில், இந்தியமண்ணில் சாதிப்பிரிவினைக் கொடுமைகள் தொடர்ந்து  அரங்கேறிய வண்ணம் இருந்தது. இந்தியாவில் தலித் பிரிவு மாணவரான ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட மாணவர் ரோஹித் வெமுலா தனது வருங்காலக் கனவுகள் கருகியதால், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடிவிட்டு  தற்கொலை செய்து கொண்டார். கலப்பு மணம் செய்து கொண்ட உடுமலை கௌசல்யாவின் கணவர் சங்கர் பட்டப்பகலில் நடுத்தெருவில் படுகொலை செய்யப்பட்டார். தற்கொலை, கொலைக்குப் பலியான இருவாலிபர்களும் உயிரிழந்த காரணம் அவர்கள் தலித் சமூகத்தில் பிறந்ததால் என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மையாக இருக்கும் பொழுது, அமெரிக்காவில் இந்தியாவைப் பற்றி அறிமுகப்படுத்தும் பாடத்தில் இந்துமதத்தினரால் கடைப்பிடிக்கப்படும்  சாதிப்பிரிவுகள், தலித் வகுப்பினரிடம் நடத்தப்படும் அடக்குமுறைகள் யாவையும் நீக்கும்படி வலதுசாரிகள் கலிபோர்னியாவின் கல்வித் திட்டத்திற்கான கலந்தாய்வில் பரிந்துரைத்துக் கொண்டிருந்தனர்.

இந்தியாவில் வலதுசாரி இந்துத்துவா காவியினர் இந்திய வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் குஜராத், கர்நாடகா மாநிலப் பாடநூல்களில் குளறுபடி செய்து வருவதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிலும் அதனை நடைமுறைப்படுத்த விரும்பிய நிலைதான் இது. இதையொட்டி  அமெரிக்க இந்தியர்கள் இருபிரிவினராகப் பிரிந்து விவாதங்கள் தொடர்ந்தன.   வலதுசாரி இந்துத்துவா ஆதரவு பிரிவினர்களைக் கொண்ட குழுவினர்  (Hindu American Foundation – HAF;   Hindu Education Foundation – HEF;  Uberoi Foundation – UF; and the Dharma Civilization Foundation – DCF) செல்வாக்குள்ள பிரிவினர். இவர்கள் இந்தியாவின் வரலாற்றைப் பற்றிய மாயையை முன் வைக்க முயன்றனர். இவர்கள் இந்திய  இத்துந்துவாவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்.

இந்தப் பழமைவாதிகளின் வாதங்களில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்ட விரும்பியவர்கள் மதச்சார்பற்றவர்கள், வரலாற்று ஆர்வலர்கள், பல்கலைக்கழக  ஆய்வாளர்கள் எனப் பலவகை பின்னணிகளைக் கொண்டவர்கள். இவர்களில் பல்வேறு 24 இந்தியப் பிரிவினர் (The South Asian Histories for All Coalition  – SAHFA; http://www.southasianhistoriesforall.org/)  ஒருங்கிணைந்தனர். இவர்கள் இந்துத்துவா ஆதரவு பிரிவினர்கள் அடிப்படையில் ‘சாதி’ என்ற கருத்தாக்கத்தை இந்திய  வரலாற்றில் இருந்து மறைக்க முயல்வதைச் சுட்டிக்காட்டவும் விவாதம் சூடு பிடித்தது. இந்தியா பற்றிய இந்த விவாதம் அமெரிக்கர்கள் பலரின் கவனத்தையும் கவர்ந்தது.

இந்துத்துவா ஆதரவு பிரிவினர் மிகத் தீவிரமாக போராட்டத்தைச் சமூக வலைத்தளம் மூலம் பரப்புவது; இந்துமதத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை பாடத்தில் வைத்தால் பிறமாணவர்கள் அக்கருத்துக்களைப் பொதுமைப்படுத்தி எங்களை அவமானப்படுத்தினால் நாங்கள் பாதிக்கப்படுவோம் என்று பள்ளிமாணவர்களை அழைத்துப்  புலம்ப வைப்பது என்ற முறைகளைக் கையாண்டதுடன், பாடதிட்டக்குழுவினரை அவமதிக்கும் வகையிலும் தங்கள் வாதங்களை வைத்தனர். இதனை பாடத்திட்டக்  குழுவின் உறுப்பினர் ஒருவரும் சுட்டிக் காட்டியுள்ளார்.

வலதுசாரி இந்துத்துவா ஆதரவு பிரிவினர்கள் ‘தலித்’ என்ற கருத்துக்கு ஆதரவு தருபவர்களை, இந்துமதத்தின் வகுப்பு வாத நம்பிக்கையால் தலித்துகள் மீது நிகழும் ஒடுக்குமுறையைப் பற்றிக் குறிப்பிடுபவர்களை இந்துமதத்தை அழிக்க நினைக்கும் வேற்றுமதத்தினர் என்றோ, அல்லது கிறித்துவ மத போதகர்கள் என்றோ, அல்லது அவர்கள்  கிறித்துவ  மதத்தின் கைக்கூலிகள் என்றோ, அல்லது இனவாதம் பேசுபவர்கள் என்றோ, இந்துக்களை வெறுக்கும் மனப்பான்மை கொண்டவர் என்றோ விதம் விதமாக தங்கள் மனம் போனபடி குறிப்பிட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை வாசிக்கவும் தயங்கவில்லை.

இரு பிரிவுகளின் வாதங்களையும் கருத்தூன்றிக் கவனித்த கலிபோர்னியாவின் பாடத்திட்டக் குழுவினர், வரலாற்றைப் பற்றிப் பலரும் பற்பலக் கோணங்களை முன் வைக்கலாம், ஆனால் பாடத்திட்டத்தின் நோக்கம் மாணவர்களுக்கு உண்மையான வரலாற்றை அறியத் தருவது  மட்டுமே என்று தங்கள் நிலையை வலியுறுத்தினர். முடிவாக, தெற்காசியா என்று குறிப்பதைக் கைவிட்டு ‘இந்தியா’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டனர்.  மேலும், சாதி உயர்வு தாழ்வினால் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளின் தோற்றம் இந்துமதத்தில் வேரூன்றிய ஒரு  கருத்தாக்கம் என்பதால் ‘தலித்’ என்ற சொல், இந்தியாவில் நிலவும் சாதிப் பிரிவினைகள், இந்துமதத்தின் வர்க்கப் பிரிவுகளைப் பற்றிய செய்திகள், அதனால் இந்தியச் சமூகம் எதிர்கொண்ட விளைவுகள் போன்ற வரலாற்றுச் செய்திகள் பாடத்தில் இருந்து  நீக்கப்பட மாட்டாது என்றும் தங்கள் தீர்ப்பை, மே 19, 2016 அன்று முடிவாக வெளியிட்டனர்.

அடுத்தக் கல்வியாண்டில், வரும் செப்டெம்பரில் பள்ளிகள் துவங்கும் பொழுது, கலிபோர்னியப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் இந்திய வரலாறு மற்றும் சமூகவியல் பாடங்களின் நூல்கள் கலிபோர்னியக் கல்வித் திட்டத்தின் இந்த முடிவின் அடிப்படையிலேயே வெளியிடப்படும். சாதி பற்றிய குறிப்புக்களை மறைக்கப்பட வேண்டும் என முயன்ற இந்துத்துவா அமைப்பினரின் கோரிக்கைகள் இதனால் படுதோல்வியடைந்தது என்பது  குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியக் மாநிலக் கல்வித்திட்டத்தில் இந்தியாவைப் பற்றிய கருத்துக்களில் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தோர் மாற்றம் வேண்டுவது இது முதல்முறையும் அல்ல.  பத்தாண்டுகளுக்கு முன்னரே (2006 இல்) பாடநூல்களில்  இந்தியக் கலாச்சாரம் பற்றிக் கற்பிக்கும் பாடத்தில் இந்துமதக் கலாச்சாரத்தை மட்டுமே பெரும்பான்மையாகக் குறிப்பிடவேண்டும் என்றும், இந்தியாவைப் பற்றி அறிமுகப்படுத்தும் பொழுது இந்து மதத்திற்கு முதன்மை நிலை கொடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன, அத்துடன் அவை பாடத்திட்டக் குழுவால் புறக்கணிக்கப்பட்டு, அக்கோரிக்கைகள் நிறைவேறாமலும் போயுள்ளன. மேலும், இம்முறையோடு இந்தப் பிரச்சினை முடியப்போவதும் கிடையாது.

ஒவ்வொரு ஆறாண்டுகளுக்கும் கலிபோர்னியக் மாநில அரசின் கல்வித்துறை பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் பொழுதும் மீண்டும் புலம் பெயர்ந்த இந்தியர்கள், அவர்களில் வலதுசாரிகள் உட்பட தாங்கள் விரும்பும் மாற்றங்களை இந்தியக்  கலாச்சாரப் பாடங்களில் பரிந்துரைக்க  முயல்வர். அமெரிக்க இந்துத்துவா குழுவினர் தாங்கள் விரும்பிய மாற்றங்களை டெக்சாஸ் மாநிலம், ஃபுளோரிடா மற்றும் விர்ஜீனியா மாநிலங்களிலும் ஏற்கனவே நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளனர். அதைப்பற்றியத் தகவல் அவர்களது (hafsite.org) தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது (http://www.hafsite.org/sites/default/files/Texas%20Ed%20Infograph.jpg). இருப்பினும், கலிபோர்னியாவில் அவர்களது  முயற்சி (“இம்முறை”) தோல்வி கண்டுள்ளது.

எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக; அமெரிக்காவில் இந்தியாவைப் பற்றிய கல்வியில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழகத்தில் பெரும்பான்மையினர் அறிய வழியில்லாது போனது என்பது வருத்தம் தரும் ஓர் உண்மை. ” * வினவு”,  ” ** விடுதலை” ஆகிய சீர்திருத்த கருத்துக்களுக்காக நடத்தப்பெறும் பத்திரிக்கைகள் தவிர மற்ற  எந்த தமிழ்ப் பத்திரிக்கைகளும் இந்த நிகழ்வைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என்பது இணையத் தேடலின் மூலம் தெரிய வருகிறது.
_________________________________________________
சான்றுகள்:
[1] Erasing Caste: The Battle Over California Textbooks and Caste Apartheid, May 3, 2016, The Huffington Post, http://www.huffingtonpost.com/thenmozhi-soundararajan/erasing-caste-the-battle_b_9817862.html
[2] Debate Erupts in California Over Curriculum on India’s History, May 4, 2016, The New York Times, http://www.nytimes.com/2016/05/06/us/debate-erupts-over-californias-india-history-curriculum.html?
[3] South Asian Community Debates ‘South Asia,’ ‘India’ Ahead of Textbook Updates, May 16, 2016, NBC News, http://www.nbcnews.com/news/asian-america/south-asian-community-debates-south-asia-india-ahead-textbook-updates-n570671

[4] California Curriculum Body Acknowledges Reality of Caste System; Hindu American Foundation concedes on word “Dalit”, May 19, 2016, South Asian Histories For All, http://www.southasianhistoriesforall.org/
[5] Caste Won’t Be Erased from California Textbooks, Says Committee, May 21, 2016, The Wire, http://thewire.in/2016/05/21/caste-wont-be-erased-from-california-textbooks-says-committee-37669/
[6] Viewpoint: Why Hindu groups are against California textbook change, May 27, 2016, BBC News, http://www.bbc.com/news/world-asia-india-36376110
* கலிபோர்னியா பள்ளிகளில் நுழைகிறது பார்ப்பனிய வரலாறு

http://www.vinavu.com/2016/05/26/rss-deny-caste-discrimination-california-textbooks/

** அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 6, 7ஆம் வகுப்புப் பாடத் திட்டத்தில் இந்தியாவில் நிலவும் ஜாதி பாகுபாடு பகுதி நீக்கிட முயன்ற இந்துத்துவா சக்திகளுக்குப் படுதோல்வி!

http://viduthalai.in/headline/122778–6-7-.html


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கலிபோர்னியா பாடத்திட்டத்தில் இந்தியாவின் வரலாற்றை அழிக்கும் முயற்சியா?”

அதிகம் படித்தது