மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கலைஞர் நடத்திய அறப்போர்

தேமொழி

Jun 1, 2019

siragu Karunanidhi_murasoli 1
நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த தட்சிணாமூர்த்தி என்ற கருணாநிதி பிற்காலத்தில் கலைஞர் என்றே அழைக்கப்பட்டார்.சிறுவயதிலேயே அரசியலில் ஈர்க்கப்பட்ட கருணாநிதி பள்ளி நாட்களிலேயே மாணவ பேச்சாளராகவும், ‘தமிழ் மாணவர் மன்றம்’ என்ற ஒரு மன்றத்தையும் துவக்கியவர். ‘முரசொலி’ (1942) என்ற துண்டறிக்கை இதழையும் புனைபெயரில் பள்ளிநாட்களில் நடத்தியவர் கருணாநிதி. பிற்காலத்தில் வார இதழ், தினசரி என்ற பல உருமாற்றங்களையும் எதிர்கொண்ட முரசொலி இதழ்கள், 1962க்குப் பிறகு தடையின்றி வெளிவந்தது.

நம்நாடு என்ற இதழ் திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்த அக்காலத்தில், முரசொலி இதழ்கள் கருணாநிதியின் கருத்துகளைத் தாங்கி வந்தன. அவரது அரசியல், இலக்கிய ஆளுமைக்கு அடையாளம் முரசொலி இதழ் என்றால் மிகையன்று. ஒரு இயக்கத்தின் தலைவரின் குறிக்கோளை, கொள்கையை, தொலைநோக்கை எதிரொலிக்கும் வகையில் தனது எழுத்தை நுட்பமாக இதழ்களில் வெளியிடத் தெரிந்தவர் கருணாநிதி. மக்களை பத்திரிக்கைகளைப் படிக்க வைத்த இயக்கம் திராவிட இயக்கம் என்று கூறப்படும் அளவிற்கு பத்திரிக்கைகளைத் திராவிட இயக்க ஆதரவாளர்கள் துவக்கி வெளியிட்டுக் கொண்டிருந்த காலத்தில் கருணாநிதியும் முரசொலியைத் தனது தனிப்பட்ட பத்திரிக்கையாகத்தான் துவக்கினார். அது அன்று ஒரு கட்சியின் கொள்கை பரப்பும் இதழ் என்ற தகுதியில் துவக்கப்படவில்லை. இன்று 75 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாகக் கடந்துவிட்ட முரசொலி இதழ் கடந்து வந்த பாதையில் பல சுவையான செய்திகள் உள்ளன. அவை தமிழகம் கடந்த அரசியல் மைல் கற்களாகவும் அறியப்பட வேண்டியவை.

அவற்றில் ஒன்று அவரது பிறந்தநாளுடன் தொடர்பு கொண்டது. கருணாநிதி மறைந்த பிறகு அவரது முதல் பிறந்தநாளாக அறியப்படும் இந்த நேரத்தில் அந்த சுவையான நிகழ்வு நினைவுகூரத்தக்கது. கருணாநிதியின் அரசியல் அறிவு நுட்பம், துணிவு ஆகியவையும் அதில் வெளிப்படக் காணலாம். ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில் எழுதினார் கருணாநிதி.  நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பில் நூல்களாகவும் அவை வெளிவந்தன. அவற்றில் நெஞ்சுக்கு நீதி-இரண்டாம் பாகம் நூலில், ’77. அண்ணா சாலையில் ஓர் அறப்போர்’  (பக்கம்- 558) என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில், ஜூன் 1976 ஆண்டு அவரது 52 ஆண்டுகள் நிறைவு பிறந்தநாளையொட்டி எழுதிய கட்டுரையையும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்தவற்றையும் குறிப்பிட்டுள்ளார். அதில் அக்கால தமிழக அரசியல் சூழ்நிலையை இன்றைய கண்ணோட்டத்தில் காணும்பொழுது நம்பமுடியாத ஒரு சூழ்நிலையிலிருந்ததையும் அறிய முடிகிறது.

கருணாநிதி தனது அரசியல் வாழ்வில் 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை. தனது 33 வயதில் முதன் முதலாகச் சட்டமன்ற உறுப்பினராகவும், 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றவர் கருணாநிதி. அண்ணாதுரையின் மறைவிற்குப் பிறகு 1969 முதல் 1971 வரையிலும் தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்தார். தொடர்ந்து வந்த பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று 1971 முதல் 1976 வரை இரண்டாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு வகித்தார். இந்த ஆட்சிக் காலத்தில், கருணாநிதி பல புரட்சிகர திட்டங்களைக் கொண்டு வந்தார். நல்ல பல மக்கள்நலத் திட்டங்களை அவரது பிறந்தநாளன்று அறிவிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், இக்காலம் தமிழக அரசியலில் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் அரசியல் நெருக்கடிகள் நிறைந்த காலத்தை எதிர் கொண்டது. ஆட்சி கலைக்கப்பட்டு ஜனவரி 4, 1971 முதல் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்டது. பத்திரிக்கைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது முரசொலி இதழ் அதனைத் தீவிரமாக எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்தது. தணிக்கையை எதிர்த்து முரசொலி தொடர்ந்த வழக்கும் நீதிமன்றத்தில் தோல்வியைச் சந்தித்தது. ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகத் தணிக்கையை நீக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது. விளைவாக முரசொலி கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த நிலையையும் நையாண்டி செய்வது போல; “வெண்டைக்காய் உடலுக்கு நல்லது” ரஷ்யாவிலிருந்து திரும்பிய ஆதிலட்சுமி ஆராய்ச்சி, “விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்: வைத்தியர் வேதாந்தைய்யா அறிவிப்பு” என்றவற்றை முரசொலியின் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு இது போன்ற செய்திகள்தாம் இனி வெளியிடமுடியும் என்ற நாட்டு நடப்பைக் காட்டியது.

நெருக்கடி நிலை முறை அமலிலிருந்தபோதும் தணிக்கையாளர்களும் தடுக்க முடியாத வகையில் புதுமையான வழிகளில் தொண்டர்களிடம் செய்திகளை முரசொலி இதழ் கொண்டு சென்றது. தேசிய பாதுகாப்புச் சட்டம் மிகவும் கெடுபிடியாக இருந்த 1976 ஆண்டின் துவக்கம் அது. பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தி.மு.கவினர் பலரும் கைது செய்யப்பட்ட நிலையில், யார் யார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்கள் என்பதையும் முரசொலியில் வெளியிடமுடியாது. ஆகவே அண்ணாவின் நினைவு தினத்தன்று வெளியான முரசொலியில் (பிப்ரவரி 3, 1976 ), “அண்ணாவின் நினைவிடத்திற்கு வரமுடியாதவர்களின் பட்டியல்” என கைதானவர்களின் பட்டியல் வெளியானது. அதில் மாவட்டம் வாரியாகக் கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.

வழக்கம் போல தனது ஜூன் மூன்றாம் நாள் பிறந்தநாளையொட்டி, பிறந்தநாள் செய்தியாக ஒரு கட்டுரை எழுதி முரசொலி வெளியீட்டுக்கு அனுப்பினார் கருணாநிதி (நெஞ்சுக்கு நீதி-இரண்டாம் பாகம், பக்கம்: 560-562). ஜூன் முதல்நாள் இரவு அக்கட்டுரை தணிக்கைக் குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அக்கட்டுரையில் கருணாநிதி எழுதியிருந்த “என் அன்னையை விட அதிக அன்பை அண்ணா என் மீது பொழிந்தார்” என்ற வரியை நீக்கவேண்டும் என்று தணிக்கக் குழு அதிகாரி ஆணை பிறப்பித்தார். அது குறித்து தொலைபேசியில் கருணாநிதி அதிகாரியிடம் விளக்கம் கேட்க, கட்டப்பஞ்சாயத்து (கருணாநிதியின் வார்த்தையில் ‘காட்டு தர்பார்’) பாணியில் மறுமொழி கிடைக்கவும் அதனை எதிர்க்க முடிவெடுக்கிறார் கருணாநிதி. அண்ணா என்ற சொல் இருக்கக்கூடாது என்பதுதான் தணிக்கை குழுவின் விருப்பமாக இருக்கிறது.

தான் எழுத்து சுதந்திரம் வேண்டிச் செய்யும் சனநாயகப் போர் இது, ஜூன் இரண்டாம் நாள் காலையில் அண்ணாசாலையிலிருந்து கிளம்பி தணிக்கை அலுவலகம் சென்று அங்கே உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படும் என தனது கைப்பட செய்தி அறிக்கை எழுதுகிறார். முரசொலியில் அச்சிட்டால் தகவல் கசிந்துவிடலாம் எனக் கருதுகிறார். ஆகவே, அச்செய்தி வெளியாகா வண்ணம் ரகசியமாக அதனை அச்சு எடுத்து, இரவோடு இரவாகத் தனது மகன்கள் உதவியுடன் அதை ஒவ்வொரு தாளாக ஒற்றி ஒற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட துண்டறிக்கைகள் தயார் செய்கிறார்.

மறுநாள் ஜூன் 2 (அவர் பிறந்தநாளுக்கு முதல் நாள்) காலை 10 மணியளவில் அவரை தற்செயலாகச் சந்திக்க வந்த இளமுருகு பொற்செல்வி செய்தியறிந்து அவருடன் சேர்ந்து கொள்கிறார். காரில் அண்ணா சாலை நோக்கிச் செல்கிறார்கள். அவரது மகன்கள் குடும்பத்தார் மற்றொரு காரில் பின் தொடர்கிறார்கள். ஆயிரம் விளக்குப் பகுதியைக் கடந்ததும் காரைவிட்டு இறங்கி, தான் அச்சிட்ட அறப்போர் துண்டறிக்கையை விநியோகித்தவாறு நடக்கிறார். சிலகாலம் முன்வரை 7 ஆண்டுகள் முதல்வராக ஆட்சி செய்தவர் தெருவில் துண்டறிக்கை வழங்குவதில் எதிர்பார வியப்பு அடைந்த பொதுமக்களும் ஆதரவாளர்களும் அவரைப் பின்தொடரத் துவங்குகின்றனர். அவர் அண்ணாசிலையின் பீடம் நெருங்குவதற்குள் செய்தி பரவி கூட்டம் சேர்ந்து போக்குவரத்து தடைப்படுகிறது.

கையில் கழகக்கொடி பறக்க அண்ணாசிலை முன் நின்று கருணாநிதி ‘சர்வாதிகாரம்’ என்று முழங்க இளமுருகும் மற்றவர்களும் ‘வீழ்க’ என முழங்குகிறார்கள். தொடர்ந்து ‘ஜனநாயகம்’ ‘வாழ்க’ எனவும் முழக்கங்கள் விண்ணதிர ஒலிக்கிறது. காவல்துறை வந்து களைந்து செல்லுமாறு கூறுகிறார்கள். தான் ஊர்வலமாகத் தணிக்கை அலுவலகம் சென்று உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவிக்கிறார் கருணாநிதி. அவரையும் ஆதரவாளர்களையும் கைது செய்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்கிறார்கள். காவல் நிலையத்தைச் சுற்றி கூட்டம் நிறைகிறது. பெரிய காவல்துறை அதிகாரி கருணாநிதியையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் விடுதலை செய்வதாகக் கூறுகிறார். மற்றவருக்கு விடுதலை கிடையாது என்பதை அறிந்து கருணாநிதி விடுதலையடைய மறுக்கிறார். தங்களை மட்டும் வெளியேற்றினால் மீண்டும் அண்ணாசாலை சென்று போராடுவோம் என அறிவிக்கிறார். பின்னர் ஆளுநரைக் கலந்தாலோசித்த பிறகு அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். இதனால் சிறையில் பிறந்தநாள் கொண்டாடும் வாய்ப்பு கருணாநிதிக்குக் கிடைக்காமல் போகிறது.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கலைஞர் நடத்திய அறப்போர்”

அதிகம் படித்தது