மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கழுமரமும் சிலுவை மரமும் (பகுதி – 25)

முனைவர். ந. அரவிந்த்

Sep 25, 2021

கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாக செதுக்கபட்ட மரம் ஒன்றினில் குற்றாவளியின் ஆசனவாயை சொருகி விடுவார்கள். மரம், ஆசனவாய் வழியாக உடலிற்கு உள்ளாக ஏறி, அவன் சில நிமிடங்களில் இறந்து போவான். அந்த சமயத்தில் கழுமரத்தில் ஏற்றப்பட்டவன் வலி தாங்காமல் கத்துவான் மற்றும் அவன் இறந்த பின்னர் செத்த உடலை பறவைகள் கிழித்து உண்ணும் என்று நிறைய புராண கதைகள் கூறுகின்றன. இது போன்ற தண்டனைமுறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக அதாவது கி.மு வில் இருந்திருக்கிறது.

siragu kazhumaram1கழுமரத்தில் ஏற்றப்பட்டவனை காட்டும் படம்

திருடர்கள் பிடிபட்டால் அவர்களை கழுவில் ஏற்றும் வழக்கமும் முற்காலத்தில் இருந்துள்ளது. இவ்வாறு கழுமரத்தில் இறந்தவர்களின் உடலை யாரும் எடுக்கவே முடியாது என்ற கிராமிய கதைகள் சொல்கின்றன. கழுகுமலை கோவிலில் சேவலை கழுவில் ஏற்றுவதை சடங்காக செய்வதை கண்டிருப்பதாக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் எட்டாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றி கொல்லப்பட்டார்கள் என்று சரித்திர குறிப்புகள் கூறுகின்றன. ஆவுடையார் கோவில் ஒவியம் ஒன்றில் கழுவேற்றம் சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது. கழுமரத்தைப் பற்றி எழுத்தாளர் கி. ராஜநாராயணன் தனது கதையில் மிக விரிவாக எழுதியிருக்கிறார்.

siragu kazhumaram2ஈரோடு அய்யனாரப்பன் கோவிலில் உள்ள கழுமரம்

தமிழ்நாட்டில், தற்போது ஈரோட்டில் காளியங்கராயன் கால்வாயின் அருகில் வளையல்கார தெருவில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் ஒரே ஒரு கழுமரம் உள்ளது. தான் நேரில் கண்ட இந்த கழுமரத்தைப்பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் விவரித்துள்ளதை காண்போம். ஒரு பீடத்தின்மேல் இருக்கும் அந்த கழுமரத்தை கைகளால் தொட்டு பார்த்தால் அம்மரமானது பனைமரத்தில் செதுக்கப்பட்டதைக் கண்டறியலாம். அம்மரத்தின் பனஞ்செதில்கள் தேய்ந்து போயிருக்கின்றன. ஆறடிக்கும் குறைவான உயரம் கொண்டது அந்த கழுமரம். சிலுவை போன்ற வடிவில் குறுக்கு சட்டம் போடப்பட்ட அந்த கழுமரத்தில் இரண்டு இரும்பு சங்கிலிகள் இணைக்கபட்டிருந்தன. கழுமரத்தை மக்கள் இப்போது ‘காத்தவராயன்’ என்று வணங்குகிறார்கள். இன்று அந்த கழுமரத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து மக்கள் வழிபட்டாலும் அந்த கழுமரத்தில் படிந்த கண்ணுக்குத் தெரியாத குருதிக்கறை இருப்பதை உணர முடிந்ததென எழுத்தாளர் கூறியுள்ளார். குற்றங்களுக்கு உடலை வதைப்பதுதான் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது என்பது இதன்மூலம் தெரிகிறது. கொலைக்கருவிகளை மனிதர்கள் வணங்குவது உலகெங்கும் நடைபெற்று வரும் தொடர் நிகழ்வு. கழுமரமும் அப்படித்தான் மக்கள் வணங்கும் ஒரு பொருளாக இன்று இருக்கிறது.

களவு செய்பவர்களையும் போலித் துறவிகளையும் கழுவேற்றுவதை ‘கத்தித் திரிவர் கழுவடி நாய்போல் கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்’ என்று திருமூலர் திருமந்திரம் பாடல் 1655ல் கூறியுள்ளார். தமிழகத்தில் மட்டுமின்றி, கிரேக்க, ரோமானிய நாகரீகங்களிலும் கழுவேற்றும் வழக்கம் இருந்துள்ளது.

சமண சமயம் விரிவுபடுத்தப்பட்ட காலம், சைவ சமயத்தவர்களுடன் பகை ஏற்பட நேரிட்டது அப்பொழுது, ‘நின்றசீர் நெடுமாறன்’என்னும் பாண்டிய மன்னன் 8000சமணர்களை கழுவேற்றியதாக பெரியபுராணம் கூறுகிறது.

தமிழகத்திலுள்ள பல கோயில்களில் கழுவேற்றம் குறித்தான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. கழுவேற்றம் அரசை எதிப்பவர்களுக்கும், திருடர்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாக இருந்து வந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே உள்ள கிராமக் கோயிலில் உள்ள ஐந்து கழுமரங்களில் கழுவேற்றிக் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவாக இன்றும் வழிபாடு செய்யப்படுகிறது. சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்ற பலரும் கழுவேற்றப்பட்டார்கள் என்று பெரியபுராணம் நூலில் குறிப்புகள் உள்ளன.

திருவிவிலியத்தின்படி, எஸ்தர் என்ற பெண் கி.மு. 493முதல் சுமார் கி.மு. 475வரை வாழ்ந்தார். இறை நூல்களில் உள்ள நூல்களில் இரண்டே இரண்டு நூல்கள் தான் பெண்களின் பெயர்களைத் தலைப்பாகக் கொண்டிருக்கின்றன. ஒன்று ரூத், இன்னொன்று எஸ்தர். ஒரு பரபரப்பான நாவலுக்குரிய அத்தனை அம்சங்களும் இந்த எஸ்தர் புத்தகத்தில் உண்டு.

எஸ்தர் தன் இன மக்களை எப்படி எதிரியான ஆமானிடம் இருந்து காப்பாற்றினார் என்று இந்நூல் கூறுகிறது. அரச வாயிலில் நிற்கும் பணியாளர் மொர்தக்காயின் வளர்ப்பு மகள்தான் எஸ்தர் ராணி. அப்போது வருகிறான் வில்லன், ஆமான். அரசனின் உயரதிகாரி. எல்லோரும் அவனுக்கு தலைகுனிந்து வணக்கம் செலுத்துகின்றனர். இறைவனை மட்டுமே வணங்குவேன் என மொர்த்தக்காய் வணங்காமல் நிற்கிறார். ஆமானுக்கு சினம் தலைக்கேறுகிறது. மொர்த்தக்காயை மட்டுமல்ல, அவன் சார்ந்த இனத்தையே ஒட்டு மொத்தமாய் அழிக்க வேண்டும் என திட்டமிடுகிறான். அரசனின் அனுமதியும் பெற்று விடுகிறான். மொர்த்தக்காயைக் கொல்ல மிகப்பெரிய கழுமரத்தையும் உண்டாக்குகிறான்.

அரசி எஸ்தர் இந்த நிலையை மாற்ற முயல்கிறார். எஸ்தர் இன மக்கள் அனைவரும் இறைவனை நோக்கி மன்றாடுகின்றனர். அந்த சூழலில், மொர்த்தக்காய் ஒரு முறை மன்னனை ஆபத்திலிருந்து காப்பாற்றிய நிகழ்வு தெரிய வருகிறது. ஆமானைக் கொண்டே மொர்த்தக்காயை மரியாதை செலுத்த வைக்கிறார் மன்னன். எஸ்தர் அரசி திட்டமிட்டு விருந்தொன்றை உருவாக்கி மன்னனையும், ஆமானையும் அழைக்கிறாள். அந்த விருந்தில் ஆமானின் மீது மன்னனுக்கு கோபம் உருவாகும் சூழலை ஏற்படுத்துகிறாள். ஆமான், மொர்த்தக்காய்க்காக தான் உருவாக்கிய கழுமரத்தில் உயிர் விடுகிறான். இக்கதையின் மூலம், கழுமரம் ஈசன் பூமியில் அவதரிப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்க மற்றும் பெர்சிய நாடுகளில் இருந்ததை அறிகிறோம்.

முற்காலத்தில், கழுமரத்தில் இறந்தவர்கள் உடலை கழுமரத்தைவிட்டு எடுக்கும் வழக்கம் இருந்ததில்லை. இறந்த மனிதனின் உடல் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவானது. பிற்காலத்தில், பல காரணங்களுக்காக சில நடைமுறைகள் மாற்றப்பட்டிருக்கலாம். கழுமரத்தில் ஒருவனை ஏற்றினால் அது அவன் வயிற்றையோ அல்லது நெஞ்சையோ சில நிமிடங்களில் கிழித்துக்கொண்டு கூர்மையான பாகம் வெளிவரும். பல நூற்றாண்டுகள் சென்ற பின்னர், கூர்மையான பாகம் கொண்ட கழுமரத்திற்கு பதிலாக, இரு மரக்கட்டைகளை குறுக்கும் நெடுக்குமாக இணைத்து, அதில் துளைகள் போட்டு, மனிதனின் கைகள் மற்றும் கால்களோடு இணைத்து ஆணியால் அடிக்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்திருக்க வாய்ப்புள்ளது..

இந்த முறையில் உடலில் உள்ள இரத்தமானது உடனே வெளியேறாது; சிறிது சிறிதாக வெளியேறும். எனவே, உயிர் பிரிய பல மணி நேரமாகும். இக்காரணத்தினால், இது ‘சித்ரவதையுள்ள கழுமரம்’ அல்லது ‘வாதனையுள்ள கழுமரம்’ என்று அழைக்கப்படுகிறது. வாதனை கழுமரத்தில் ஆணி அடிக்கப்பட்ட மனிதனின் உயிர் பிரிந்த பின்னர், அவனுடைய உடலை எடுத்து மற்றவர்களைப்போல் அடக்கம் செய்யும் முறை வந்திருக்கலாம்.

குற்றத்தை இழைத்தவர் என்ற சந்தேகத்தின் பெயரிலோ அல்லது குற்றத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதற்காகவோ, ‘எவரொருவரும் சித்தரவதைக்கோ அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமாக சிறுமைபடுத்தக்கூடிய நடவடிக்கைகளுக்கோ அல்லது தண்டனைகளுக்கோ உட்படுத்தப்படக் கூடாது’ என்று மனித உரிமைகளைக் காக்க உலக நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ள உலக மனித உரிமைப் பிரகடனம் (1948) 5ம் விதி கூறுகிறது.

எனவே, இன்றைய காலகட்டத்தில் கழுவேற்றம் மற்றும் சிலுவையில் அறைதல் போன்ற கொடூரமான தண்டனைகள் மனிதர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்த சட்டம் நடைமுறையில் இருந்தாலும், ஒவ்வொரு நாடும் தங்களின்  வழமைப்படி தனித்தனியான சட்டங்கள் வைத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தண்டனை முறைகளை இன்றைக்கும் அச்சுப் பிசகாமல் அப்படியே நடைமுறைப்படுத்தி வருகின்றன.

மனிதர்களின் பாவங்கள், சாபங்கள், தரித்திரங்கள், பழிகள், நோய்கள் போன்றவற்றை போக்குவதற்காக ஆதி காலம் முதல் சங்க காலம் வரை மக்கள் மிருகங்களையும் பறவைகளையும் பலியிடும் பழக்கம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்துள்ளது. ஆனால், இரத்த பலியை மாற்றுவதற்காக இறைவன் ஈசனாக கன்னியின் வயிற்றில் பிறந்து வாதனையுள்ள கழுமரத்தில் இரத்தம் சிந்தி இறந்தார். அவர் உயிர் பிரிய ஆறு மணி நேரம் ஆனது, அதனால்தான், இன்று கோயில்களில் பலிபீடங்கள் உள்ளன. ஆனால், பலிகள் இல்லை. இந்த சம்பவத்திற்கு பின்னர், பெரிய கோயில்களில் பலியிடும் பழக்கம் உலகம் முழுவதும் நின்று விட்டது. குல தெய்வங்களுக்கு பலியிடும் பழக்கம் மட்டுமே கிராமங்களில் தொடர்கிறது. இந்த வாதனையுள்ள கழுமரமானது, சிலுவை மரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிலுவை என்ற இந்த வார்த்தை லத்தீன் சொல் க்ரக்ஸ் (crux)என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. இதே வார்த்தை, கிரேக்கில் ஸ்டவ்ரஸ் (stavros) என்று அழைக்கப்பட்டது. இந்த கிரேக்க வார்த்தைக்கு ‘செங்குத்தான கம்பம்’ என்று அர்த்தம்.

நன்றி: கழுமரம் வரலாறு – எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

தொடரும்


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கழுமரமும் சிலுவை மரமும் (பகுதி – 25)”

அதிகம் படித்தது