மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவிக்கோ அப்துல் ரகுமான் !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jun 17, 2017

Siragu Kaviko

கவிக்கோ அப்துல் ரகுமானைப் பற்றி கண்ணதாசன் இப்படிச் சொன்னார்: “நான் கலீல் ஜிப்ரானைப் படிக்கும்போதெல்லாம் தமிழில் இப்படி எழுத யாருமில்லையே என்று ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ அப்துல் ரகுமான் வந்துவிட்டார்!’’

அந்த தமிழின் கலீல் ஜிப்ரானை இயற்கை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டது.

அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். மிகச் சிறந்த தமிழ் ஆளுமை, மரபுக் கவிதைகளை மிகுந்த நெறியோடு எழுதக் கூடியவர். தமிழ்க் கவிதைகளில் ஹைக்கூ, கசல், கவ்வாலி போன்ற வடிவங்களை சிறப்பாக கையாண்டவர்.

மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறி பின்னர் அக்கல்லூரியிலேயே தமிழில் இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார். அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார்.

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகச் சிலகாலம் பணியாற்றினார். பின் வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் வாய்ப்புக் கிடைத்தது. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், எனப் படிப்படியாக உயர்ந்து 1991ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் முதல் கவிதை தொகுப்பு ‘பால்வீதி’ 1974ஆம் ஆண்டு வெளிவந்தது. 1999ஆம் ஆண்டு எழுதிய ’ஆலாபனை’ கவிதைத் தொகுப்பு சாகித்ய அகாடமி விருது வென்றது குறிப்பிடத்தக்கது. பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

அவரின் “பாருக்குள்ளே நல்ல நாடு” எனும் கவிதை சிறைக்கைதிகளில் பெரும்பாலானோர் பொய் வழக்கிலும், பசிக்கு திருடியவர்களாக இருப்பார்கள், உண்மையில் பெரிய திருடன் , பயங்கரவாதி, வெளியில் விடுதலையோடு நடமாடிக் கொண்டிருப்பான் என்பதை வெகு நேர்த்தியாய் எழுதியிருப்பார்.

Siragu Kaviko2

அவர்களைச் சிறையில்
சந்தித்தேன்.

“என்ன குற்றம் செய்தீர்கள்”
என்று கேட்டேன்.

ஒவ்வொருவராகச்
சொன்னார்கள்..

எங்கள் வீட்டில்
திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான்.
“திருடன் திருடன்” என்று கத்தினேன்.
அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக்
கைது செய்து விட்டார்கள்.

“என் வருமானத்தைக் கேட்டார்கள்”
‘நான் வேலையில்லாப் பட்டாதாரி’ என்றேன்
வருமானத்தை மறைத்ததாக வழக்குப்
போட்டு விட்டார்கள்.

“நான் கரி மூட்டை தூக்கும் கூலி”
கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில்
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது.
கறுப்பு பணம் வைத்திருந்ததாகக்
கைது செய்து விட்டார்கள்.

“என் வயலுக்கு வரப்பு எடுத்துக் கொண்டிருந்தேன் பிரிவினைவாதி என்று
பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்”

“அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன்.
அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச்
செய்ய விடாமல் தடுத்ததாகத்
தண்டித்து விட்டார்கள்.”

“அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படச்
சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.
சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு செய்ததாக அழைத்துக் கொண்டு
வந்து விட்டார்கள்”

“வறுமைக் கோட்டை அழிப்போம்” என்று பேசினேன். அரசாங்க சொத்தை அழிக்கத் தூண்டியதாக அடைத்துப்போட்டுவிட்டார்கள்”

“ஊழல் பேர்வழிகளை நாடு கடத்த வேண்டும்”
என்று எழுதினேன்,“கடத்தல்காரன்” என்று
கைது செய்து விட்டார்கள்.

“நான் பத்திரிக்கை ஆசிரியன். தலையங்கத்தில்
உண்மையை எழுதினேன். நாட்டின்
ஸ்திரத் தன்மையைக் குலைத்ததாகக் கொண்டு
வந்து விட்டார்கள்”

“சுதந்திர தின விழாவில்
‘ஜன கண மன’ பாடிக் கொண்டிருந்தார்கள்.
நான் பசியால் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தேன்.
எழுந்து நிற்க முடியவில்லை.
தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச் சிறையில் அடைத்து விட்டார்கள்”

“அக்கிரமத்தை எதிர்த்து
ஆயுதம் ஏந்தச் சொன்னான் கண்ணன்”
என்று யாரோ கதாகாலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்
என்பெயர் கண்ணன்.
“பயங்கரவாதி” என்று என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.

நான் வெளியே வந்தேன்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை
எதுவும் இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது.

“தொலைந்து போனவர்கள்” எனும் கவிதையில் மனிதனுக்கு தேடல் இருக்க வேண்டும், எதைப் பற்றியும் முற்றிலும் கற்றுணர்ந்து விட்டோம் என எண்ணுதல் கூடாது என்பதை,

விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை
மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.
கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல
உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்
ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்
‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு ?

தெருவிளக்கைப் பற்றிய அப்துல் ரகுமானின் கவிதை ஒன்று:

‘மறந்தது

திடீரென்று

ஞாபகம் வந்ததுபோல்

சட்டென்று எரிந்தது

தெருவிளக்கு’

Siragu Kaviko3

அப்துல் ரகுமானின் இந்த வரியை வியந்து ‘புதுமைப்பித்தனைப் புரட்டிவிட்டுப் போவதைப் போன்ற ஒரு அசுர வரி’ என்று பாராட்டியிருப்பார், வலம்புரிஜான் அவர்கள் இதை நான் புதுமைப்பித்தனைப் புரட்டிப் போடுகிற வரியாகப் பார்க்கவில்லை. புதுமைப்பித்தன்கள் விளைவதற்குத் தமிழின் நிலத்தைப் புரட்டிப்போடும் வரியாகத்தான் உணர்கிறேன் என்றார்.

அவருடைய ‘பித்தன்’ தொகுப்பு தமிழில் அரிதானது. வாழ்க்கையை உதறி மடித்த கவிதைகள் அவை.

புத்தகங்களே…

சமர்த்தாயிருங்கள்

குழந்தைகளைக்

கிழித்துவிடாதீர்கள்

என்கிறார் அப்துல் ரகுமான், எவ்வளவு பொருள் பொதிந்த வரி? அதே போல், “வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்று சுருக்கெனக் கேட்டவர்.

இசையை பற்றி கூறும் போது,

வார்த்தை ஆடை அணியும்போது

அதற்குக் கவிதை என்று பெயர்

அது ஆடை களைந்து

நிர்வாணம் ஆகும்போது

அதற்கு இசை என்று பெயர்.

என்கிறார் அப்துல் ரகுமான்.

இலக்கியத்தைப் போலவே இசையிலும் அவருக்கு ஓர் ஈடுபாடு உண்டு என இக் கவிதை காட்டுகின்றது.

சிலப்பதிகாரக் கதையை இரு வரிகளில் எழுதும் கவிக்கோ, இப்படி சொல்கிறார்:

“பால் நகையாள்; வெண்முத்துப் பல் நகையாள்; கண்ணகியாள்; கால் நகையால்;
வாய் நகைபோய்; கழுத்து நகை இழந்த கதை”

கவிக்கோ அவர்களை திரைப்படப் பாடல் எழுத வைக்கப் பலரும் முயன்றனர். ஆனால், இவர் நழுவிக்கொண்டே வந்தார். காரணம், அங்குச் சுதந்திரமாக எழுத முடியாதென்பதுதான்

ஹோமரின் ‘இலியத்’,
தாந்தேவின் ‘டிவைன் காமெடி’,
கதேவின் ‘ஃபாஸ்ட்’,
ஷேக்ஸ்பியர் எழுதிய பல நல்ல நாடகங்கள் போன்று உலகளவில் பேசும் விதமாகத் தமிழில் எந்தப் படைப்பும் இல்லையே என்ற வருத்தம் இவருக்குண்டு.

‘தமிழ்ப்படைப்புகளை உலகம் போற்றும்படிச் செய்ய வேண்டும். அந்த வகையில், பெருங்காப்பியம் ஒன்றைப் படைக்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான தகவல்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். உலகம் வியக்கும் உலகளாவிய ஒரு மனித நேயப் படைப்பாக அது இருக்கும். அதற்கான நேரத்தைத்தான் என்னால் ஒதுக்கிக்கொள்ள முடியவில்லை’ என்பார் அப்துல் ரகுமான்.

‘ஒருவர் மொழியை

ஒருவர் அறியாமல்

இரவும் நானும்

மொழிபெயர்ப்பாளனாய்

அமைதி’

அப்துல் ரகுமான் எழுதிய வரிகள், இன்று மரணம் எனும் அமைதியில் தான் நம் கவிக்கோ கலந்து விட்டார் எனினும் அவர் தமிழுக்கும், கவிதை உலகிற்கும் செய்திட்ட பணி என்றென்றும் தமிழ் இலக்கிய வானில் நிலைபெற்றிருக்கும்.

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிக்கோ அப்துல் ரகுமான் !!”

அதிகம் படித்தது