மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவிஞர்தாம் சமுதாயச் சிற்பி (கவிதை)

பாவலர் கருமலைத்தமிழாழன்

Dec 2, 2017

siragu bharathidasan1

 

 

பொன்னாகச்   செங்கோலின்  ஆட்சி  நாட்டில்

பொலியாமல்   கடுங்கோலில்   கனலும்  போது

மன்னர்க்கே   அறிவுரைகள்   எடுத்து  ரைத்து

மண்ணாளும்   வழிமுறைகள்   எடுத்துக்  காட்டித்

தன்னலமே   இல்லாமல்   மக்க  ளெல்லாம்

தமராக   வாழ்வதற்குப்   பாக்கள்  யாத்து

நன்கீந்த   சங்கத்துப்   புலவ  ரெல்லாம்

நலம்காத்த   சமுதாயச்  சிற்பி   யாவார் !

 

அடிமையராய்   வாழ்ந்திருந்த   மக்கள்   நெஞ்சில்

ஆழமாக   விடுதலையின்   வேட்கை   நாட்டிப்

படிப்படியாய்த்   தன்மான   உயர்வை  யூட்டிப்

பாக்களாலே   அந்நியரை   விரட்டு  தற்கே

அடித்தளத்தை   இட்டதாலே  காற்றைப்   போல

ஆங்கிலேய   எதிர்ப்பெங்கும்   பரவி  ஓட்ட

விடியலினைச்   சமுதாயம்   பெறுவ  தற்கு

வித்திட்ட   பாரதிநல்   சிற்பி   யாவார் !

 

பெண்கள்தாம்   கல்விதனைக்   கற்ப   தற்கும்

பெருமையுடன்   சமுத்துவமாய்    வாழ்வ   தற்கும்

மண்மீதில்   இருந்தமூடப்   பழக்க   மெல்லாம்

மறைந்தெங்கும்   பகுத்தறிவு   ஒளிர்வ   தற்கும்

எண்ணத்தில்   தமிழுணர்வு    ஏற்றிப்   பாட்டால்

எழுச்சிமிகு    குமுகத்தைப்   படைத்த   தாலே

விண்கதிராய்ப்   பாவேந்தர்   பாரதி   தாசன்

விளங்குகின்ற   சமுதாயச்   சிற்பி   யாவார் !

 

நல்லதொரு   சமுதாயம்   உருவா   தற்கு

நற்கல்வி   பயிற்றுவிக்கும்   ஆசா   னோடு

நல்லாட்சி   தருகின்ற   அரசிய   லாளர்

நற்கருத்தைப்   புகல்கின்ற   தத்துவ  மேதை

பல்லறிஞர்   எனநின்று   செதுக்கி   னாலும்

பக்குவத்தைச்   சொல்வதெல்லாம்   கவிஞன்  பாட்டே !

வெல்கின்ற   கவிதைகளே   சமுதா   யத்தின்

வேரென்ப   தாலவரே   சிற்பி   யாவார் !

 


பாவலர் கருமலைத்தமிழாழன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிஞர்தாம் சமுதாயச் சிற்பி (கவிதை)”

அதிகம் படித்தது