மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைச்சோலை (காதல் கவிக்குயில், புத்தரின் மலர்)

இல. பிரகாசம்

Aug 12, 2017

புத்தரின் மலர்

Siragu puttar

பெருவெள்ள மழைக் காலத்திற்கு பின்
அமைதியின் உருவாய்
ஒரு மெல்லிய பூ மிதந்து வருகிறது!

வெள்ள நதியோட்டத்தில்
மெல்லிய புன்னகை வீசிய மலரொன்று
மறுமலர்ச்சியின் நம்பிக்கை!

நதியின் பயணத்தில்
மெல்லிய இதழ்களை வருடிச் செல்லும்
நீரோட்டங்களை தன் வாழ்வின்
வழிகாட்டியாக கொண்டது!

நதியின் நீண்ட பயணத்தில்
இடையே வெள்ளச் சத்தங்களை ஒலித்தபடி
சுழிகளை உருவாக்கிய நீர்வீழ்ச்சிகள்
மலரின் இதழ்கள்
புத்தரின் புன்னகையாக காட்சியளிக்கின்றன!

காதல் கவிக்குயில்

Siragu kavikkuyil

காதல் கவிக்குயிலே –உந்தன்
காதல் கீதம் இசையாயே?

பூங்கமழுஞ் சோலை எல்லாம் -உன்
பூந்தென்ற லிசைகேட்க மலர்ந்தனவோ?
பாடிவருங் கருவண்டுக ளெல்லாம் -உன்
பாட்டினைக் கேட்கவரு கின்றனவோ?

வெள்ளிச் சிரிப்பினைக் காட்டி –அந்த
வெள்ளிச் சாரல்மழை வீழ்ந்த துவோ?
துள்ளியெழுங் கான மெல்லாம் -அந்த
துள்ளளிசை கேட்டுமயங் காதோ?

செவ்விள மாதுளைச் சுவையிதழும் -உந்தன்
பூபாளம் பாடிப் பாடிக்களிக் காதோ?
பூவையர் கண்களும் கவிசெய –உந்தன்
காதல் பாட்டினை இசையாயோ?

தேமதுர ஓசைக் குயிலே –உன்
தேவராகம் பாடிநீ என்னை மீட்பாயோ?
கூவிளமே கனிமாங் குயிலே –உன்
மனமிரங்கி காதல் தருவாயோ?

 


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைச்சோலை (காதல் கவிக்குயில், புத்தரின் மலர்)”

அதிகம் படித்தது