மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவியரசு கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் இறை சிந்தனைகள்

சு. தொண்டியம்மாள்

Mar 14, 2020

siragu kannadasan1

திரையிசைப் பாடல்கள் மக்கள் இலக்கியங்களாகும். எளிய மக்களின் அயர்வைப் போக்கி ஆனந்தம் தரும் இன்பப்பாடல்கள் திரையிசைப் பாடல்கள் ஆகும். தற்காலத்தில், திரையிசைப் பாடல்கள் இல்லாத பொழுதுகள் இல்லை என்ற அளவிற்கு மக்கள் வாழ்வில் தகவல் தொடர்பு சாதனங்களுடன் திரையிசைப் பாடல்கள் கலந்து நிறைந்து நிற்கின்றன. இத்திரையிசைப் பாடல்களில் தனக்கெனத் தனித்த இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன். இவர் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை எழுதியுள்ளார். அவரின் பாடல் திறத்தை “காமம் ஞானம் என்பன அவர் கவிதை நாணயத்தின் இருபக்கங்களாக ஒளிர்ந்தன. அரசயில் அலைகளில் இருந்து மீண்டு அருளியலை நோக்கி நடந்த அவரின் பாடல்களில் ஆன்மிக உணர்வு மிளிர்ந்தது” (சிற்பி, சேதுபதி, தமிழ் இலக்கியவரலாறு, ப.395) என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் ஆன்மிகம், தத்துவம், ஞானம் கலக்காத பகுதிகளே இல்லை என்னும் அளவிற்கு இறைதேடல்கள் இடம்பெற்றுள்ளன. அவரின் திரையிசைப் பாடல்களில் இறை சிந்தனைகள் இடம் பெறும் நிலையை இக்கட்டுரை விவரிக்கின்றது.

இறைவனின் இருப்பிடம்

உழைப்பு இருக்கும் இடம்,  இறைவன் இருக்கும் இடம் என்கிறார் கண்ணதாசன். உழைப்பாளிகளின் உள்ளத்தில் வியர்வையில் இறைவன் நிற்பதாக அவர் உரைக்கிறார். அவ்வாறு உழைப்பவரை அணைப்பவரிடத்திலும் இறைவன் குடி கொண்டுள்ளான் என்பது அவரின் தத்துவம்.

உழைக்கும் கைகள் எங்கே

உண்மை இறைவன் அங்கே

அணைக்கும் கைகள் யாரிடமோ

ஆண்டவள் இருப்பது அவரிடமே

பயிலும் பள்ளி கோயில்

படிக்கும் பாடம் வேதம் (ஆலயம்)

என்ற பாடலில் உழைக்கும் வர்க்கங்களின் கைகளிலும், பிறரை அணைக்கும் கைகளிலும் உண்மையான இறைவன் குடிகொண்டு இருப்பதாக அவரின் திரையிசை இறைவன் இருக்கும் திசையைக் காட்டுகின்றது.

மேலும் கல்வி கண்ணை திறக்கும் பள்ளிகூடங்களை இறைவன் குடி கொண்டிருக்கும் கோயில்களாகக் கண்ணதாசன் காண்கிறார். அங்கு பயிலும் பாடத்தை இறைவனின் வேதமாகவும் கண்ணதாசன் காண்கிறார். எனவே கல்வி, உழைப்பு, அணைப்பு ஆகியவற்றில் இறைவனின் செயல்திறம் விளங்குவதாகக் கண்ணதாசன் கருதுகிறார்.

இக்கருத்தையே இன்னும் சற்று விரித்து, எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவனின் வீடு என்கிறார் பின்வரும் பாடலில்.

பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம்

பொய்யில் வளர்ந்த காடு

எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்

இறைவன் திகழும் வீடு

ஆடை அணிகலன் ஆடம்பரங்கள்

ஆண்டவன் விரும்புவதில்லை

அங்கொரு  கண்ணும் இங்கொரு கண்ணும்

ஆலய வழிபாடில்லை.

இசையில் கலையில் கவியில் மழலை

மொழியில் இறைவன் உண்டு

இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால்

ஏற்கும் உனது தொண்டு

(சரஸ்வதி சபதம்)

மேற்கண்ட பாடல் வழியாகப் பொன்னையும், பொருளையும் சேர்க்கும் எண்ணம் படைத்தவர்களின் உள்ளம்  பொய்கள் நிறைந்த காடாகும். அது இறைவன் தங்குவதற்குத் தகதியற்றது என்று கண்ணதாசன் கருதுகிறார். மாறாக எண்ணையும் எழுத்தையும் கற்றவர்களின் உள்ளத்தை இறைவன் வாழும் வீடாக அவர் காட்டுகிறார். எண், எழுத்து, இவற்றுடன் இசை, கலை, கவி, மழலை மொழி ஆகியவற்றில் இறைவன் இருப்பதாகக் கண்ணதாசன் காட்டுகிறார்.

இப்பாடலில் இறைவனின் இயல்புகளாகவும் அவர் சிலவற்றைக் காட்டுகின்றார். கடவுள் என்றும் ஆடை, அணிகலன், ஆடம்பரங்களை விரும்புவதில்லை. அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் இருப்பவர் வழிபாட்டிற்கு ஆகாதவர்கள் என்பது அவரின் கருத்து. அதாவது இறைசிந்தனையில் ஈடுபட்டவர்களின் மனது ஒரு நிலைப்படவேண்டும். மாறாக அங்கும் இங்கும் அலைதல் கூடாது என்பதையே இப்பாடல் வழி விளக்குகிறார் கண்ணதாசன்.

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பதை உணர்ந்து வழிபடும் பக்தர்களின் உண்மையான தொண்டையே இறைவன் ஏற்பார் என்று தன் பாடல் வரிகளில் அழுத்தமாக அவர். கூறியுள்ளார்.

இறை இயல்பு

ஓம் என்று சொன்னவர்க்கு தாமென்று வருவான்

உருகிக் கிடப்பவர்க்கு கைகளில் தருவான்

கால் தொட்டு நின்றவர்க்கு கைகளில் தருவான்

கணக்கற்ற நன்மைகள் அவர் பக்கம் இடுவான்.

(வருவான் வடிவேலன்)

என்ற திரையிசைப் பாடல் வழி இறைவனின் இயல்பினையும் கவியரசு கண்ணதாசன் காட்டிவிடுகிறார். இறைவன் மந்திரத்தை உச்சரித்ததும் ஓடிவருவது இறைஇயல்பு.  உருகி நிற்பவர்கள் வேண்டியதைக் கைகள் நிறையத் தருவது இறைஇயல்பு, காலில் விழுந்து வணங்கியவர்க்குக் கைகளில் கனமாகத் தருவது இறைஇயல்வு. தன்னை நம்பியர்க்குக் கணக்கற்ற நன்மைகளைத் தருவது இறைவனின் தன்மை என்று குறிக்கிறார் கண்ணதாசன்.

இறை பக்தி அடையாளங்கள்

இறைவனை அடைவதற்குப் பக்தி சிறந்த வழி. அந்த பக்தியில் ஈடுபடுவதற்குச் சில அடையாளங்கள் இன்றியமைதனவாகும். நீரிடுதல், நாமம் செபித்தல், ப10மாலை புனைந்தேத்தல், அடியாருடன் உறைதல் போன்றன இவ்வகையில் கொள்ளத்தக்கன. இதனையும் கண்ணதாசன் குறித்துள்ளார்.

சித்தத்தை நீராட்டும் திருநீறு – ஞானம்

   திலகத்தில் வந்துவிடும் பலவாறு

   சத்திய சைவம் சொன்ன வரலாறு – இதைத்

   தற்குறியும் அறிவான் ஒருவாறு

   நான்கு விரல் மடிய நீறையணித்து – அதன்

   நடுவில் செஞ்சூரியன்  போல் குங்குமமிட்டு

   மேனிமுழுவதிலும் சந்தனமிட்டு அந்த

   மெய்ப்பொருள் கண்டு கொள்வீர் ஐயத்தை விட்டு

என்று திருநீறு அணியும் முறைமையைத் திரையிசைப்பாடலில் தந்துள்ளார் கண்ணதாசன். உடலைத் தூய்மையாக்கும் திருநீறு. அது சைவசமயம் சொன்ன சத்திய வரலாறு. திருநீறு, குங்குமம், சந்தனம் அணிந்த பக்திவழியில் இறைவனை அடையத் தயாராக ஆக்குகிறது இப்பாடல்.

இறை நம்பிக்கை

இறைவன் இருக்கிறான் என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். இறைவன் இல்லை என்பவர்கள் பலவாறு சாதித்தாலும் இறைவன் இருக்கிறான் என்பதை நம்பிடக் கவிஞர் பின்வரும் கவிதையைத் தருகிறார்.

நம்பிக்கை அதுதான் ஒரு பக்தனுக்கு முக்கியமானது

தாயை  நம்புகிறவன் தந்தையை அப்பா என்று அழைக்கலாம்

தெய்வத்தை நம்புகிறவன்தான் துன்பத்தை வெல்லலாம்

மருத்துவர் சோதித்தும் மரணம் வருகிறது ஒருவனுக்கு

மருத்துவரைப் பாரமலே நூறு வயது வாழ்கிறான் ஒருவன்

என்ற பாடலில் இறைநம்பிக்கையின் திறம் எடுத்துரைக்கப்பெறுகிறது. தந்தை இவன் தான் என்று காட்டும் தாயின் வழி தந்தையை நம்புகிறோம். அதுபோல தெய்வத்தைக் காட்டினால் நம்பவேண்டும். அதுவே இறைநம்பிக்கை என்கிறார் கண்ணதாசன். இறை நம்பிக்கை வழியாக மருத்துவரால் கைவிடப்பட்டவர்களும் நோயின்றி பல நாள்கள் வாழ்கிறார்கள். இதுவே இறைநம்பிக்கையின் அளவுகோல்.

எங்கேயும் தெய்வம் உண்டு

எங்கேயும் சக்தி உண்டு

ஏனிந்த நாடகம் மானிடனே

தானென்ற ஆணவம் தாயிடம் செல்லாது

தாங்கிய மகுடங்கள் அவளின்றி நில்லாது

வானமும் பூமியும் சக்தியின் தத்துவம்

(சக்திலீலை)

என்ற பாடலில் இறைவன் எங்கும் இருக்கிறான். சக்தியின் வடிவிலும் அவன் இருக்கிறான். ஆணவமின்றி அவனை நாடினால் அடைய இயலும். வானம் ப10மி எல்லாம் இறைசக்தியின் வடிவம் என்று உரைக்கிறார் கண்ணதாசன்.

முடிவுகள்

இவ்வகையில் உழைப்பவர் செயலில் அணைப்பவர் செயலில் இறைவனைக் காண இயலும் என்றும், இசை, கலை, மழலைச் சொல் ஆகியவற்றில் இறைவன் இருக்கிறான் என்றும் கண்ணதாசன் கருதுகிறார். மேலும் பள்ளி கோவிலாகவும், பாடம் வேதமாகவும் கொள்ளப்படுகின்றது.

இறைவனை அடைய பக்தி சிறந்த வழி. அந்த பக்திக்கு அடையாளங்கள் முக்கியம். திருநீறு அணிதல், சந்தம் அணிதல் போன்ற அடையாளங்களால் மேலும் இறைச்சிந்தனை மேம்படுகிற:து.

இறைவனை நம்பவேண்டும். இறைநம்பிக்கையே பல வாழ்வியல் சிக்கல்களுக்குத் தீர்வாகிறது என்று கண்ணதாசன் தன் கவிதைகள் வழி உரைக்கிறார் கண்ணதாசன்.

மக்களுக்குப் புரியும் திரையிசைப்பாடல்கள் வழி இறைசிந்தனைகளை வளர்ப்பதில் முதலிடம் வகிப்பவர் கவியரசு கண்ணதாசன் என்பதும் இதன்வழி தெரியவருகிறது.


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவியரசு கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் இறை சிந்தனைகள்”

அதிகம் படித்தது