மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காவிரிப்படுகையின் மொழி

இல. பிரகாசம்

Mar 30, 2019

Siragu tanjaore1

தஞ்சை என்றாலே எப்போதும் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது. அதற்குக் காரணங்களும்ஏராளம் இருக்கின்றன. சிலர் நினைப்பது போல் இராஜராஜ சோழன், அவருடைய மகன் இராஜேந்திரசோழன், சுங்கம் தவிர்த்த சோழனான குலோத்துங்க சோழன் முதல் பல சோழர்கள் பல்லாண்டுகளாகதங்களது ஆட்சியை நடத்தினார்கள். தமிழர்களின் சிறந்த கட்டடக் கலையான பெரிய கோபுரம் கொண்டபிரகதீஸ்வரர் கோயிலும், புகழ்பெற்று விளங்கி வருகிற அரண்மனையும் அதனுள் மராட்டிய மன்னர் இராஜாசரபோஜியின் காலத்தில் அமைக்கப்பட்ட நூலகமும் ஓவியங்களும் கலைச் சிற்பங்களும், சிவகங்கைப் பூங்காவும் அதனுள் இருக்கும் அகழியும் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அவர்களைக்கண்டு புன்னகை செய்யும் மக்களும் அவர்களின் சிரிப்பும் தன்பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பதாலும் அத்தகைய புத்துணர்ச்சி வரவே செய்கிறது.

நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக்கவிதையில் தடம்பதித்த ந.பி, கு.பரா-வின் தஞ்சையும், தமிழ் நாவல் வரலாற்றில் தனக்கென தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்ட தி.ஜானகிராமனின் “மோகமுள்” நாவலில் சித்திர எழுத்துக்களால் வரைந்த தஞ்சையும் காவிரியும் அக்கதையில் வரும் பாபுவும் அவனுடைய யமுணாவின் மீதான காதலும் இசையும் தம்புராவும், பாபுவின் மீது காதல் கொள்ளும் தங்கத்தின் அன்பும் ஒருசேர இழைந்து கொண்டே இருக்கிறதோ என்ற பிம்பம். “மீனின் சிறகுகள்”, “கரமுண்டார் வீடு” போன்ற நூல்களையும் எழுதி வாழ்ந்த தஞ்சை பிரகாஷின் இயல்பான தஞ்சை. இவையெல்லாம் இலக்கியத்தில் ஒன்று

சேர்ந்து கொண்டதாலும் அத்தகைய புத்துணர்ச்சி தொற்றிக் கொள்ளாமல் இருக்குமா?                ஆனால், புத்துணர்ச்சிக்கு இவைகள் மட்டும் தான் காரணமா என்று கேட்டால் நிச்சயம் இல்லைஎன்றுதான் பதில் சொல்லத் தோன்றும். நமக்கு எப்போதும் புத்துணர்ச்சி அளிக்க வேண்டுமெனில் நமது சிறிய வயது விளையாட்டுக்களையும் அதில் நாம் போட்ட சண்டைகளையும் நினைத்தாலே புத்துணர்ச்சி புயல் காற்றைப்போல மனசுக்குள் புகுந்து கொண்டுவிடுகிறது. சிறுவயதில் பலமுறை தஞ்சையின் வீதிகளில் சுற்றித்

திரிந்திருக்கிறேன். அது எனக்கு கோடைக் காலத்திலோ அல்லது உறவினர் வீட்டு நிகழ்விலோ கிடைத்துவிடும். அதற்கென்றே பள்ளியில் விடுமுறை எடுத்துக் கொண்டு தஞ்சைக்கு சென்று நிகழ்வுகளில் கலந்து கொள்வதை எங்கள் வீட்டில் வழக்கமுறையாக கடைபிடித்து வந்தோம்.

தஞ்சையில் வீடுகளை ஒட்டி வற்றாது நீரோடும் அகழி. எப்போதும் தங்கநிறம் ஜொலித்துத் துள்ளும்மீன்கள் நிறைந்து காணப்படும் அகழி. அதில் இறங்கி துண்டுகளை விரித்து மீன்களைப் பிடிப்பதும், அவற்றை குழம்பாக்கி ருசித்துத் தின்பதும், அகழியில் ஓயாது நீந்தி விளையாடுவதும் என்ற காட்சிகள் பசுமையாகஇருந்து கொண்டிருப்பதால் ஊற்றுத் தண்ணீர் போல புத்துணர்ச்சி குறையாது சுரந்து கொண்டேதான் இருக்கிறது.சிறுவயதில் விளையாட்டுக்களைத் தவிற வேறென்ன நினைப்பு இருக்க முடியும்?

அவள் பெயர் காவேரி:

Siragu kaveri1

இந்தாண்டு தஞ்சையில் நடைபெற்ற நவீன நாடகவிழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தேன்.நாடகவிழாவில் இரண்டாம் நாளில் சென்னை கூத்துப்பட்டறை-யினர் “அவள் பெயர் காவேரி” என்ற நாடகத்தைஅரங்கேற்றினர். அதில் நாடகத்தின் கருப்பொருள் தற்கால தஞ்சை மக்கள் எதிர்கொள்கிற காவிரி சார்ந்த அரசியலை தமிழரசு, காவேரி என்ற இரண்டு கதாபாத்திரம் வழியே கட்டமைத்திருந்தனர்.

நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும் தமிழக, கர்நாடக அரசுகளின் காவிரி வழக்கின் நீதி சார்ந்த பிரச்சனைகள் பற்றிப் பேசியது. காவிரி என்ற பெண் தமிழரசு என்ற கணவனின் வீட்டிற்கு வருவாளா? அதற்கு ராமையாயும் தமிழரசும் கூட்டிய பஞ்சாயத்துத் தீர்ப்பைப் பற்றியும் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்து அமர்ந்திருந்தனர். தமிழரின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சனை என்பதால் உணர்ச்சிப் பூர்வமாகவே காட்சிகள் பார்ப்பவரை காவிரி மீதான ஏக்கத்தை வெளிப்படுத்தியது.

காவிரி தமிழகத்தில் நுழைந்து வளம்கொழிக்க வைப்பதால் ஒவ்வொரு தமிழரும் தங்கள் வீட்டிற்குவந்த லட்சுமியைப் போல எண்ணி மேட்டூரில் அணை திறக்கப்பட்ட பின் பதினெட்டாம் பெருக்கு நாளில் பூ, பழம்,தேங்காய் போன்றவற்றை காவிரிக் கரையில் வைத்து வழிபட்டு வருவதையும், காவிரியின் கீழத் தஞ்சை மக்களின் மொழியோடு எவ்வாறெல்லாம் புழங்கி வருகிறது என்பதை தனது அறுபது ஆண்டுகால தஞ்சை வாழ்வை “காவிரிக்கரையில் அப்போது” என்னும் கட்டுரை நூலில் தங்க.ஜெயராமன் சுவையோடும் ஏக்கத்தோடும் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறார்.

காவிரிப்படுகையின் தஞ்சை:

Siragu tanjaore2

தஞ்சையும் அதன் சுற்று வட்டாரங்களில் மலைகளைக் காணமுடியாது. வயலும் வயலும் சார்ந்த நிலபரப்பும் மட்டுமே அங்கு காணமுடியும். பசேலென பூத்துக் கிடக்கும் நிலம்போல ஆடியில் விதைக்கத் தொடங்கி தையில் அறுவடை செய்கிற காலங்கள் அம்மக்களின் மனத்திலும் முகத்திலும் மகிழ்ச்சியை காணமுடியும். பின் கோடைக் காலம் தொடங்கிவிட்டால் நிலங்களில் பயிர்களை அவ்வளவாக அப்போது காணமுடியாது. நிலம் வெடிப்பு வெடிப்பாய் கண்களில் படும். அப்போது வயற்நண்டுகள் கிடைக்காது. அதன் ருசியும் கிடைக்காது. வயல்வரப்புகளில் சிலர் வயல்எலியை பிடிக்கும் தொழிலை செய்வதை காணலாம். இவைகளுக்குக் காரணங்களாக தற்போது பெரும் பிரச்சனையாக பேசப்பட்டு வருகிற ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம், பாசன நீர் மேலாண்மை போன்றவைகள் இருக்கின்றன. தற்போது தஞ்சை விவசாயிகளின் வாழ்வாதாரபோராட்டங்களை நடத்தும் களமாக மாறிவிட்டிருக்கிறது. தஞ்சையின் வயல் வரப்புகள் தங்களை எல்லோரும் “நெற்களஞ்சியம்” என்று அழைத்தார்கள் என்று எப்போதாவது எலிகளோடு ஆதங்கத்தோடு பேசிக் கொண்டிருக்குமா?விவசாயிகளின் குரல்வளை நசுக்கப்பட்ட பின் அவைகள் அதுபற்றி எண்ணுமா என்றுதான் தோன்றுகிறது.

நெல்லைப் போற்றிய காலம்:

தஞ்சையின் வெண்ணாற்றுங் கரையில் பிறந்தவர் தங்க.ஜெயராமன். தான் பிறந்தது வளர்ந்தது முதல் கண்டு வளர்ந்த, பேசிய கீழத் தஞ்சையின் மொழியில் அறுபது ஆண்டின் சுவடுகளை எழுத்தால் ஆவணப்படுத்த வேண்டியதேவை இருப்பதாக உணர்ந்து எழுதியுள்ளார் என்றே தோன்றுகிறது. நூலின் பெரும்பகுதி வெண்ணாற்றங் கரை,நாகப்பட்டின ஊர்கள், சிதம்பரத்தின் சில பகுதிகள் என்று காவிரி பாய்ந்தோடும் நிலப்பரப்புகள் என்னென்ன மாற்றங்களை சந்தித்திருக்கிறது. எவற்றையெல்லாம் காலத்தின் போக்கில் இழந்துவிட்டிருக்கிறது. என்பதையும் தனது மொழிநடையாலே விளக்கிக் கொண்டு செல்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை பெரும்விழாவாக அப்பகுதி மக்கள் கொண்டாடினார்கள். நெல்மணிகள்தங்க நிறத்தில் மினுங்குவதை “பொன்னேர்” என்று சொல்லால் கூறும் மக்களின் பேச்சு வழக்கில் இருந்த சொற்களைமொழியை ஆவணமாக்கிக் கொண்டே செல்கிறார். நெல்லையும் அதன் உபரியாகக் கிடைக்கும் நெற்போர், உமி,தாள்கள் ஆகியவற்றையும், ஞாயிற்றுக் கிழமையில் தான் நெல் பிறந்தது என்று நம்புவதையும் அதனால் நெல்லைஞாயிற்றுக் கிழமைகளில் விற்பதில்லை என்பதையும் எழுத்தால் பதிவு செய்கிறார்.

“அறுவடையான கையோடு நெல்லை விற்றுவிடுவது வழக்கமில்லை. தொழிலாளியானாலும் ஆறு, ஏழு மூட்டை நெல்லை இருப்புக் கட்டினால் தான் அவருக்கு நிம்மதி. பண்ணைகளில் கண்டுமுதலான நெல்லைக் கணக்குத் தலைப்பில் வரவு வைப்பது போல் நான்காகப் பங்கீடு செய்வார்கள். ஒரு பத்தாயத்தில் சாப்பாட்டு நெல், ஒரு பத்தாயத்தில்அடுத்த ஆண்டுக்கான தரிசுக் கூலி நெல், பிறகு விதைக் கோட்டை கட்டுவதற்கு கடைசியில் ரொக்க செலவுக்காக விற்பதற்கு. தரிசுக் கூலி என்பது அடுத்த ஆண்டுக்கான சாகுபடிச் செலவு. வயலில் ஆட்டுக் கிடை, மாட்டுக் கிடை கட்டும் செலவுக்குப் போரடி நெல்லைத் தனியாக வைத்துக் கொள்வார்கள். கருக்காயை மறுபடி தூற்றி அதிலிருந்துஅரிசிக் கருக்காய் சேர்த்துக் கொள்வார்கள். கருக்காய் கால், அரை அன்னம் பிடித்திருந்தால் அது அரிசிக்காய்.இப்படி முழு நெல்லை, அரை நெல்லை, கால் நெல்லை அது எங்கே ஒளிந்திருந்தாலும் துரத்திப் பிடிப்பது போல் சலித்துப் பொறுக்கி சேர்த்துக் கொள்வார்கள்.”

“விற்பதற்கான நெல் அதிகம் இருந்தால் அதைச் சேர்கட்டி வைத்து ஆடி மாதம்தான் விற்பார்கள். அது நெல்லைப் போற்றிய காலம்.” என்று நெல்லை எந்த நாட்களில் விற்கக் கூடாது என்று தொடங்கி, அதனை விற்கவேண்டிய தேவையைப் பொறுத்து எந்த மாதத்தில் விற்பார்கள் என்று தொடர்ந்து ஆவணமாக கட்டுரைகளில்பதிவு செய்துகொண்டே போகிறார்.

நெல்வளமும் சொல்வளமும்:

காவிரிப்படுகையில் தஞ்சையின் மொழியை தனியொரு அடையாளமாகக் கொண்டு இன்றைய காலபுதுக்கவிஞர்கள், நாவலாசிரிகள் தங்களின் மொழியை இசைக்கச் செய்கின்றனர். தங்களின் வீட்டில் நடைபெறுகிற திருமணம் முதற் கொண்டு எல்லா நிகழ்வுகளிலும் பயண்படுத்தப்படுகிற சொல்லை நூலின் எல்லாக் கட்டுரைகளில் விரவச்செய்திருக்கிறார்.

உழவுக்குத் துணைசெய்கின்ற மாடுகள். அவைகள் வண்டியில் கட்டுவதற்கு முன்னால் செய்யப்படும்  அவற்றின் இழுதிறனை வெளிப்படுத்தும் பற்கள் ஆய்வு. அவைகளை வண்டிக்கு பழக்கப்படுத்தும் முறை. வண்டியில்மாடுகளை கட்டும் முறை, மாடுகளின் கொம்புகளை சீவிவிடும் ஆட்கள், மாடுபிடி விழாகள் என்றெல்லாம் தன்னுடைய ஓவியம் போன்ற சித்திர எழுத்துக்களால் தொடர்ந்து வரைந்து கொண்டே காட்சிப்படுத்திக் காட்டுகிறார்.

குதிர், பத்தாயம், சோடுபிடி, தலை கூட்டு, தவிட்டுக் கூண்டு, அரவை, நாற்றங்கால், நிறைநாழி,  நீராணிக்கம், பூரங்கழி, பூரணி மாடு, பஞ்சை போன்ற சொற்களை தஞ்சை மக்களின் அன்றாட எளிய வாழ்க்கையில் எவ்வாறு புழக்கத்தில் இருந்தன. தற்போது அவற்றில் மறைந்து கொண்டிருக்கும் சொற்கள் ஆகியவற்றை தொகுத்து அவற்றுக்கு உரிய விளக்கப் பொருள்களையும் பின்னால் அளித்திருக்கிறார். அப்பட்டியல் முழுமையான தஞ்சையின்  வாழ்வியலை அறிந்து கொள்ள விரும்பும் ஒருவருக்கு சான்று கையேடாக விளங்குகிறது.

நிலவுடமைச் சமுதாயத்தின் தொன்மம்:

தஞ்சையும் அதன் சுற்று வட்டாரங்களும் நிலவுடமைச் சமுதாயங்களாகவே திகழந்த பகுதி. பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் ஜமீன்தார்கள், மிராசுதார்கள், குறுநில பண்ணையார்களும் அதிகம் இருந்தனர். அங்கே பண்ணைக் கூலிக்காக ஒப்பந்தங்கள் ஏதும் இன்றி வழிவழியாக இருந்த குடும்பங்களும் அதிகமாகவே இருந்தனர்.

அக்குடும்பத்தில் “அரையாள்”என்று பண்ணையத்திற்கு சிறிய வயது பிள்ளைகளையும் அவர்களுக்கு சோறு வஞ்சனைகாட்டாது போடுவார்கள் என்று நம்புவதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

இராண்டாம் உலகப் போருக்குப் பிறகு பொதுவுடமைக் கொள்கை தஞ்சையில் தோன்றியதும். அதன் காரணமாக முதலாளித்துவத்துக்கு எதிராக எழுந்த வர்க்க பேராட்டங்களும், அதனால் அப்பாவி கூலித்தொழிலாளிகள் மாண்டுபோவதும் தொடர் நிகழ்வுகளாக இருந்து வந்தன. அப்போது நடந்த சாதிய முரண்பாடுகளையும்  சுட்டிக் காட்டுகிறார். பின்னர் அங்கு நிலவிய விவசாய போராட்டங்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்களைப் பற்றியும் ஆவணமாக்குகிறார்.

“அப்போதெல்லாம் ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டால் கீழத் தஞ்சையில் அறிவது இரண்டே சாதிகள்தான். சடங்காகக் காலையில் குளிக்கும் ஆண்டைகள். சேற்றிலிருந்து கரையேறி உடம்பில் படிந்திருக்கும் சேடையைக் கழுவிக் கொள்ள அந்தியில் குளிக்கும் பண்ணையாட்கள்” என்று தான் கண்ட பண்ணை முறையையும் அதனுடைய தாக்கம் அப்பகுதி மக்களிடையே வாழ்வியல் சு10ழலில் பொருளாதார ஏற்றத் தாழ்வில் எவ்வளவு பெரிய முரண்களைக் கொண்டிருந்தாக இருந்தன என்று ஆவணமாக்குவதில் கவனத்தைச் செலுத்த தவறவில்லை.

பண்பாட்டை அறிந்து கொள்ளுதலும் ஆவணமாக்குதலும்:

தங்க. ஜெயராமன் காவிரிக்கரையைப் பற்றி எழுதத் தோன்றிய போதே தஞ்சையின் பண்பாட்டை ஆவணப்படுத்த வேண்டிய கட்டுரையாகத்தான் எழுத வேண்டும் என்று முடிவு செய்து கொண்டதால் வெண்ணாற்றங்கரை, அதனுடைய சுற்றுப்புற மக்களின் காவிரியோடு கொண்டிருந்த உறவு, அவர்களின் வாழ்க்கை முறையை தன்னுடைய அறுபது ஆண்டுகால அனுபவத்திலும், மனப்பதிவுகளிலும் இருந்தே மீட்டுக் கொண்டு காவிரியை காட்சிப்படுத்திப் பார்த்திருக்கிறார்.

‘எழுத்துருவே பெறாவிட்டாலும் அனுபவத்தின் மெய்மையாக இருக்கும் கீழத் தஞ்சையின் பாமரச் சொற்களுக்கும்கவர்ச்சி உண்டு” என்ற அழகு உணர்ச்சியோடு எழுத்துகளை சொற்களால் கட்டமைத்துள்ளார். நூலின் முதல் கட்டுரையில் இருந்து இறுதிக் கட்டுரைகள் வரை காவிரியும், அதன் கரையும் மாட்டுவண்டியும், நடமாடும் மக்களும், அவர்களின் வழக்குச் சொற்களும் பொய்யாத காவிரி போல நிறைந்து காணப்படுகிறது. அப்போது காவிரியின் மீதான ஏக்கமும், கரிசனமும் கூடுகிறது.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காவிரிப்படுகையின் மொழி”

அதிகம் படித்தது