மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காவேரி மேலாண்மை ஆணையமும், மத்திய அரசின் தாமதமும்.!

சுசிலா

May 19, 2018

 siragu kauvery river2

காவேரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் திருத்தப்பட்ட வரைவுத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு சற்று ஆறுதலை கொடுக்கிறது என கொள்ளலாம். இந்த அடிப்படை காவேரி நதிநீர் பங்கீட்டில், நாம் கடந்துவந்த பாதையை, கடந்தகால செயல்பாடுகளை நினைவுகூர்ந்தோமானால், தமிழக விவசாயிகள், காவேரி நீருக்காக எப்படியெல்லாம் தங்கள் சுயமரியாதையை இழந்து, போராடி வந்திருக்கிறார்கள் என்பதை இந்த நாடு மட்டுமல்ல, உலகமே பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. அவர்களை சந்திக்கக்கூட மனமில்லாமல் இந்நாட்டின் பிரதமர் எந்தளவிற்கு காலத்தை கடத்தி வந்திருக்கிறார் என்பதுவும் நாடறிந்த செய்தி. இப்படி இருக்கையில், கடந்த மூன்று மாதங்களாக காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றிய செய்திகளை நாம் நாள்தோறும் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறோம். தமிழகம், இந்த விடயத்தில், மத்திய அரசால், கடுமையான விரோதப்போக்கை சந்தித்து வந்திருக்கிறது என்பது சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லை. நம் மாநில அதிமுக அரசும், இதில் மேம்போக்காக இருந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதியே, காவிரிநதிநீர் பங்கீடு குறித்து உச்சநீதிமன்றம், தெளிவான தீர்ப்பை வழங்கியது. நாம் கேட்ட நீரின் அளவை விட குறைத்து விட்டது என்பது நம் எல்லோருக்கும் ஏமாற்றம் என்றாலும் கூட, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என்றும், 15 ஆண்டுகளுக்கு, இது குறித்து எவ்வித மேல் முறையீடும் கூடாது என்றும் ஆறு வாரங்கள் அதற்கான காலஅவகாசம் கூட நிர்ணயித்து, தீர்ப்பு வழங்கியது. ஆனால், ஆறு வாரங்கள் கடந்த நிலையில், கடைசி நாளன்று, மத்திய அரசு, ஸ்கீம் என்பதற்கு பொருள் விளங்கவில்லையென்று கூறி மறுபடியும் தங்களுடைய வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்கு நான்கு வார கால அவகாசம் வேண்டுமென்று கூறியது. அதற்கும் உச்சநீதிமன்றம், தாமதத்திற்கான ஒரு கண்டனத்தை மட்டுமே தெரிவித்துவிட்டு, அந்த அவகாசத்தைக் கொடுத்தது. அதன்பிறகும் கூட மத்திய அரசு, தங்கள் அறிக்கையை தயார் செய்யவில்லை. மத்திய அரசைப் பொறுத்தவரை, அதனுடைய நோக்கம், கர்நாடகாவில் தேர்தல் முடியும்வரை, இந்த காவேரி விடயத்தில் எவ்வித முன்னேற்றமும், மாற்றமும் செய்யக் கூடாதென்ற அரசியல் ஆதாயம் தேடுவதாகத்தான் இருந்தது. தமிழகத்தில் விவசாயமே ஒரு கேள்விக்குறியாக இருக்கும்போது, மத்திய மோடி அரசின் நோக்கம் முழுவதும் கர்நாடகத்தேர்தலை ஒட்டியே இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

siragu kauvery river3

நான்கு வாரங்கள் கடந்த நிலையில், மறுபடியும், வரைவுத்திட்ட அறிக்கை தயாராகவில்லை எனவும், மேலும் இருவாரங்கள் கால அவகாசம் வேண்டுமென்றும் உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது. அதற்கும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. மே -8 ந்தேதி வரைவுத்திட்ட அறிக்கையுடன் மத்திய நீர்வள செயலரை நேரில் வருமாறு உத்தரவிட்டது. இருந்தும், கர்நாடக தேர்தல் முடியும்வரை, காத்திருந்து, அதன்பிறகு தான் தங்களுடைய வரைவுத்திட்டத்தை, மத்திய நீர்வளத்துறை செயலர் யூ .பி.சிங் அவர்கள் மூலம் தாக்கல் செய்தது. அதிலும் ஒரு தெளிவில்லாமல், பல குழப்பங்கள் நிறைந்ததாக சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். 14 பக்க அறிக்கையை தாக்கல் செய்வதற்கு 12 வாரங்கள் எடுத்துக்கொண்ட நிலையில், அந்த அறிக்கையும், மூடி சீலிடப்பட்ட ஒரு கவரில் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வளவு மூடுமந்திரமாக தாக்கல் செய்வதற்கான அவசியம் என்ன என்ற கேள்வி எழாமல் இல்லை. இதனை முழுவதும் படித்தபிறகு தான் விளக்கம் கொடுக்க முடியும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

தற்போது, இந்த காவேரி நதிநீர்ப் பங்கீடு குறித்து, முடிவெடுக்கும் அதிகாரம் வாரியம், குழு, ஆணையம் என்ற பெயரிலிருப்பதாக அந்த தாக்கல் கூறுகிறது. இதில், வாரியம் என்றால் மட்டுமே, நீரை ஆராய்ந்து, பங்கீடு செய்வதற்கான அதிகாரம் இருக்கும். குழுவிற்கோ, ஆணையத்திற்கோ அந்த அதிகாரம் கிடையாது. மேலும் மதகுகளை திறக்கும் அதிகாரமும் ஆணையத்திற்குக் கிடையாது என்று, சட்டவல்லுனர்கள், வழக்கறிஞர்கள் கூறி வந்தனர். வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபிறகும் கூட, மத்திய அரசு ஏன், இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்க வேண்டும்.? தமிழகமும், கர்நாடகம் போல இந்தியாவிலிருக்கும் மாநிலம் தானே… அப்படி இருக்கையில், எதற்கு இந்த பாரபட்சம் என்ற எண்ணம் நம் மத்தியில் வந்தது என்னவோ உண்மை .!

மேலும், இந்த வரைவுத்திட்டத்தின்படி, 10 பேர்கள் கொண்ட குழு அமைப்பதாகவும், ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும், அவர் ஐந்து ஆண்டுகாலமோ அல்லது 65 வயது வரையிலோ இந்த பதவியை வகிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர் அனுபவம் கொண்ட பொறியாளராகவோ, அல்லது இந்திய குடிமைப்பணி அதிகாரியாகவோ இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் நீர்வளத்துறை செயலர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மத்திய நீர்வளத்துறையின் மூத்த அதிகாரிகள் இருவர் நிரந்தர உறுப்பினர்களாகவும், விவசாயிகள் நலம் சார்ந்த துறையின் செயலர்கள் இருவர் பகுதிநேர உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்து பார்த்தோமானால், இந்த அமைப்பிற்கான செலவை நான்கு மாநிலங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. கர்நாடகமும், தமிழ்நாடும் சேர்ந்து சமமாக 40%, 40% என, மொத்தம் 80% ம், கேரளம் 15% ம், புதுச்சேரி 5% ம் என செலவை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், ஆனால், இதில் எந்த பங்களிப்பும் அளிக்காத மத்திய அரசு, நிர்வகிக்கப்படும் எனவும் கூறியிருக்கிறது. காவேரி நீரின் பங்கீட்டில், பாதிக்கு மேல் பலனை அனுபவிக்கும் கர்நாடகத்திற்கும், வெறும் 177.25 டிஎம்சி பெறும் தமிழ்நாட்டிற்கும், ஒரே சம அளவு செலவை பகிர்ந்துகொள்ளும் படி இருப்பது என்பது சரியல்ல என்றும் நமக்கு தெரிகிறது. அது மட்டுமல்லாமல், இதில் எந்தவொரு மாநிலமும், ஒத்துவரவில்லையென்றால், மத்திய அரசு அந்த பிரச்சனையை கையாளும் என சொல்கிறது வரைவுத்திட்ட அறிக்கை. ஆனால், இதில் மத்திய அரசு எப்படி முடிவெடுக்கும், எப்படி பாரபட்சமில்லாமல் செயல்படும் என்று அறுதியிட்டு கூறமுடியாது. ஏனென்றால், பெயர் வைப்பதிலேயே, இவ்வளவு குழப்பங்கள் இருக்கின்றன.

siragu kauvery river1

நிறைய சட்டசிக்கல்கள் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. உச்சநீதிமன்றத்தை 15 ஆண்டுகளுக்கு அணுகமுடியாது என்பது சாத்தியமில்லை என்றே தோன்றியது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுகவதற்கு ஒரு அமைப்பு தேவையில்லை என்ற கருத்தும் நிலவியது. தன்னாட்சியுடன் கூடிய முழு அதிகாரமும் உள்ள ஒரு வாரியம் அமைப்பது தான், சரியானதாக இருக்க முடியும். நீரை ஆய்வு செய்து, சரியான அளவிற்கு பங்கீடு செய்துகொடுக்க உரிமையுள்ள, அதிகாரமுள்ள ஒரு வாரியம் மட்டுமே அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து நம்மில் பலரிடம் இருப்பதனால், இந்த வரைவுத்திட்டஅறிக்கை திருத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆணையம் சரியாக இருக்கமுடியாது, வாரியம் மட்டுமே, இதற்கான தீர்வு என சொல்லப்பட்டிருக்கும் வேளையில், விவசாயிகளும், இதே கோரிக்கைகளைத்தான் முன்வைத்து கேட்டுக்கொண்டார்கள்.

இதற்கிடையில், நேற்று (18.5.2018) வந்திருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவுத்திட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறது உச்சநீதிமன்றம். ஆனால், நாம் கோரிய வாரியம் என்ற பெயர் இல்லை, ஆணையம் என்ற பெயரில்தான் உள்ளது. ஆணையமோ, வாரியமோ என்ற பெயரில் முக்கியத்துவம் இல்லையெனவும், முழு அதிகாரமும் எங்கு இருக்கிறதோ, அது தான் தேவை என சொல்லப்பட்டிருக்கிறது. அணைகளில் உள்ள நீரின்அளவு, கண்காணிப்பு மற்றும் பங்கீடு செய்யும் அதிகாரமும், ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்ற செய்தி நமக்கு சற்று நிம்மதியைத் தருகிறது. மேலும், இதில், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு உண்டு என்றும் சொல்லப்படுகிறது.

இருப்பினும், இதனை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு படி செயல்பட வைக்க வேண்டும் என்பதுதான் மிகமுக்கியம். மேலும்,கர்நாடகத்தின் கோரிக்கையான, நீரின் அளவு, பங்கீடு பற்றிய செய்திகள் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பவைகள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன என்பது சற்று ஆறுதலான விடயம். இன்னும் இந்த ஆணையத்தின் செயல்பாடுகள் பற்றிய செய்திகள் முழுவதும் வரைவுத்திட்டத்தின் நகல் கிடைத்தபிறகே அறிய முடியும். மேலும், இந்த ஆணையம் தமிழகம் கேட்டுக்கொண்டபடி, டெல்லியில் தான் அமைக்கப்படவுள்ளது. வரைவுத்திட்டத்தின் படி, செயல்பாடுகள் உடனே செயல்படுத்தவேண்டும் என்றும், பருவமழை வருவதற்கு முன்பே அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீண்டகாலமாக காவேரிக்காக, காக்கவைத்த நம்மை, காலம் தாழ்த்தியாவது இந்தத் தீர்ப்பு வழங்கி இருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஆனால், இது நமக்கு, நம் விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கக் வேண்டும்.

இதிலுள்ள சாதக, பாதகங்கள் இனிமேல் தான் தெரியவரும். மிக முக்கிய விடயம் என்னவென்றால், இனிமேலாவது, மத்திய அரசு, இந்த காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து செயல்படவேண்டுமென்பது தான் நம் அனைவருடைய விருப்பமாக இருக்கிறது என்பதை வலியுறுத்தி கேட்டுக்கொள்வோம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காவேரி மேலாண்மை ஆணையமும், மத்திய அரசின் தாமதமும்.!”

அதிகம் படித்தது