மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குடிநோயாளிகளின் பெருக்கத்தையாவது கட்டுப்படுத்துவோம்

அன்புசெல்வம்

Jun 13, 2015

kudiyaali1இந்திய அரசியலில் சில மணித்துளிகளாவது சர்வாதிகாரியாகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் எவ்வித இழப்புகளும் இல்லாமல் நாட்டிலுள்ள எல்லா மதுக்கடைகளையும் இழுத்து மூடுவேன் என முழங்கி, அதற்கான இயக்கமும் கண்டவர் காந்தி. ஒருவரை அடிமையாக்கும் போதை பொருட்களில் மிகவும் கொடூரமானதும், மோசமானதும் மது தான். மதுவினால் தினமும் செத்துக் கொண்டிருப்பது அன்றாடம் உழைக்கும் பாமர மக்கள் என்பதால் அப்படியொரு முடிவுக்கு வந்தார். அவர் மட்டுமல்ல அம்பேத்கர் போன்ற பல தலைவர்களும் அதனை தங்கள் செயல்பாட்டில் உறுதியாகக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று வரையிலும் மதுவின் பொருட்டு ஏற்படும் விபத்துக்களும், உயிர், உடமை இழப்புகளும், மது ஒழிப்புப் போராட்டங்களும் ஓய்ந்தபாடில்லை. இதன் விளைவு ஒரு நாட்டின் பெரும்பகுதி மக்கள் தொகையின் வாழ்வியல் நிதானத்தை செயலிழக்கச் செய்யும் குடிநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருவது ஒரு சமூகத்தின் சனநாயகத்துக்கு முற்றிலும் ஆபத்தானது. நாட்டின் எல்லா வளர்ச்சித் திட்டங்களையும் சிதைக்கக் கூடியது. எனவே லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் உழைப்புச் சுரண்டலுக்காவது  இவர்களை குடிநோயிலிருந்து காப்பற்ற வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றனர்.

கடவுள் நம்பிக்கைகளைக் கொண்டும், அறிவியல் ஆராய்ச்சிகளைக் கொண்டும், பகுத்தறிவுக் கொள்கைகளைக் கொண்டும் மதுவை தீர்க்கமாக ஒழிப்பதில் இங்கே ஒரு வித அரசியல் ஆற்றல் தன்னெழுச்சி பெற முடியாமல் தவித்தாலும், அதனைக் கண்டு மனம் உடையாமல் தினம் தினம் மதுவைக் குடித்து உடலாலும், மனத்தாலும் அவதிப்படும் குடிநோயாளிகளின் பெருக்கத்தையாவது கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அடுத்த தலைமுறையினரின் ஆரோக்கியத்தை வளர்த்தெடுக்கும் நம்பிக்கையாகும்.

Photo: © Europen Parliament/P.Naj-Olearipietro.naj-oleari@europarl.europa.euமக்கள் சமூகத்தில் ஒருவரை குடிநோயாளி எனத் தீர்க்கமாக வரையறைப்பதில் பல முரண்பாடுகள் உள்ளன. குடிநோயாளி என ஒருவர் இருக்கிறாரா என ஆச்சரியமாகக் கேட்போரும் உண்டு. தன்னைச் சுற்றி நிகழும் எந்த ஒன்றிற்கும், எவ்வித முடிவும் எடுக்க முடியாமல், யாரையும் நம்ப முடியாமல், தான் பொறுப்பேற்றுக் கொண்ட பணியை செய்ய முடியாமல், தான் குடிக்கின்ற மதுவின் அளவை கட்டுப்படுத்த முடியாமல், தன்னால் யாருக்கெல்லாம் பிரச்சனை என்பதை உணர முடியாமல், சதா மதுவைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு, அதனை எப்படியெல்லாம் பெற முடியுமோ அந்தந்த வழிகளைக் கண்டறிந்து, தன் சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி, குற்ற உணர்வுடனும், பய உணர்வுடனும், சமூக நன்மதிப்புகளை இழந்து, உடனே சாக முடியாமல், வாழ்ந்து செத்துக் கொண்டிருப்பவர் தான் குடிநோயாளி. பொதுவாக இவர் முன்னெடுக்கின்ற எல்லாமே ஒன்று தோல்வியில் முடியும் அல்லது மரணத்தில் முடியும் என்கிற கருத்து மேலோங்கி இருக்கின்றது.

மது குடிப்பவரின் கணையம், நுரையீரல், சிறுநீரகம், நரம்பு மண்டலம் என உடலின் பாகங்களை மட்டுமல்லாமல் மூளையையும் பாதித்து, போதையில் ஆழ்த்தி, பல்வேறு பிரச்சனைகளால் வீரியமாகத் தாக்கும் தன்மையுடைய முதன்மையான நோய் குடிநோய். எச். ஐ. வி. எபோலா போன்ற வைரஸ் உலக நோய்களில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நோயாகவும் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதனை குணப்படுத்த முடியாது ஆனால் கட்டுப்படுத்தி, சிகிச்சையளிக்க முடியும் என “ஆல்கஹாலிக் அனானிமஸ்” என்கிற போதை மறுவாழ்வு அமைப்புகள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் தமிழகத்தில் பெருகிவரும் குடிநோயாளிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது இதனை கட்டுப்படுத்த முடியும் என்கிற தன்னம்பிக்கை மக்களிடம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது..

kudiyaali22000 -ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி குடிக்கத் தொடங்குபவர்களின் சராசரி வயது 17ஆக இருந்தது. ஆனால் இன்று அது வெகு விரைவாகக் குறைந்து 13 ஆகிவிட்டது. சராசரியாக 13 வயதில் இளைஞர்கள் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் உள்ள குடி நோயாளிகள் குறி்த்து  நடத்திய கணக்கெடுப்பில் கடந்த 10 ஆண்டுகளில்  மட்டும் ஆண்களின் எண்ணிக்கை 32 சதவீதமாகவும். பெண்களின் எண்ணிக்கை 10.6 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு குடி நோயாளி குறைந்தது 20 -லிருந்து 25 சார்பு நோயாளிகளை உருவாக்குகிறார்.  மதுவுக்கு அடிமையானவர் மட்டும் தான் குடி நோயாளியா என்றால் இல்லை. அவரோடு அன்றாடம் போராடி, அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மனைவி, குழந்தைகள், பெற்றோர், உறவினர், நண்பர், மருத்துவர், மது விற்பனையாளர் என நீளும்பட்டியலில் உள்ள அனைவருமே குடிநோயின் சார்பு நோயாளிகள். அப்படியானால் குடிநோயாளிகளால் பாதிக்கப்படாத மக்களே இந்தியாவில் இல்லை என்பதை இந்த கணக்கெடுப்பு உறுதிப்படுத்துகிறது.

ஒரு குடிநோயாளிக் கணவரால் 95% பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதாக நிம்ஹன்ஸ் எனும் தேசிய மன நலம் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனம் கூறுகிறது. இதனால் 40% சாலை விபத்துக்கள், 35% தற்கொலைகள், 80% பாலியல் வன்புணர்ச்சிகள் அதிகரித்துள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவிக்கிறது. இது தவிர கொலை, கொள்ளை, திருட்டு, சாதிய வன்கொடுமை, சமூகப் பெருங்குற்றங்கள் போன்ற அனைத்துக்கும் குடிநோயாளிகளும் அவர்கள் குடிக்கும் மதுவும் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இவை இரண்டில் யாரை தண்டிப்பது? குற்றம் இழைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு குடி நோயாளியைத் தண்டிக்கும் கொடூரமான அநீதி வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் சமூக யதார்த்தத்தில் அது தான் நடக்கிறது. அல்லது அவரைச் சார்ந்த சகநோயாளிகள் அந்த தண்டனையைப் பெற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

இந்த நிலை ஓரளவாவது ஒழிய வேண்டுமெனில் ஒரு குடிநோயாளி மதுவைச் சார்ந்து வாழ்வதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட வேண்டும் என்பது தான் இப்போதைய உடனடித் தேவை. நான் குடிப்பதில்லை மது வாடையே எனக்கு ஆகாது என்று யாராவது ஒருவர் அறம் சார்ந்த கண்ணோட்டத்தில் தன்னை உயர்வாகவும், குடிநோயாளியை ஏளனமாகவும் மதிப்பீடு செய்வாரானால் அதற்கு இனிமேல் இச்சமூகத்தில் இடம் இல்லை. மது குடிக்காவிட்டாலும் ஒரு குடிநோயாளியின் உருவாக்கத்துக்கு ஏதோ ஒரு வகையில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஒவ்வொருவரும் காரணமாகிறோம். இந்த குற்ற உணர்விலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் ஒவ்வொரு தனி நபரும் இரண்டு குடிநோயாளியைக் கண்டறிந்து வாழ்நாள் முழுவதும் அவருடன் பயணம் செய்து, அவரை படிப்படியாக குடிமயக்கத்திலிருந்து மீளச்செய்ய உறுதி  ஏற்போமானால் குடிநோயாளிகளின் பெருக்கத்தை வெகு விரைவில் கட்டுப்படுத்த முடியும்.

முதலாவது குடிநோய்க்கு ஆளானவர்களை இழிவாகக், குறைத்து மதிப்பிடும் பொது மனநிலையிலிருந்து ஒரு சமூகம் விடுபட வேண்டும். அதன் தொடக்கமாக மதுவைக் குடிக்கும் அளவைக் குறைப்பதிலிருந்து இது தொடங்க வேண்டும். குறிப்பாகக் குடும்பத்தினருக்கும், சகநோயாளிகளுக்கும் இதில் கூடுதல் பொறுப்பு உண்டு. குடிநோய்க்கு ஆளானவர் தன்னால் குடியை விட முடியவில்லையே என்கிற ஏக்கத்தை தீர்த்து, நம்பிக்கையூட்டும் விதத்தில் இது தொடங்கப்பட வேண்டும். மது மற்றும் போதைப்பொருள் தரும் தற்காலிக சுகத்திலிருந்து வெளியேறுவதற்கான மனநிலை, வாழ்க்கைச் சூழல், பழக்க வழக்கங்கள் என அனைத்திலும் இந்த மாற்றம் தொடர வேண்டும்.

kudiyaali4யாருடைய மரபணுக்கள் குடிநோய்க்குச் சாதகமாக இருக்கின்றனவோ அவர்கள் குடிநோயாளிகளாக மாறுவார்கள். குடிநோய் சிகிச்சை ஆய்வுகளின்படி கடைசிக் குடியிலிருந்து முதல் 72 மணிநேரம் ‘வடிநேரத்து அறிகுறிகள்’மிகக் கொடூரமாக இருக்கும். கை கால் நடுக்கம், அதிகப்படியான வியர்வை, மனக்குழப்பம், மாயக் கற்பனைகள், மனச்சிதைவு, கோபம், தூக்கமின்மை, பசியின்மை போன்ற ஒட்டுமொத்தப் பிரச்சினைகள் வருகின்ற நேரம் இது. அடுத்த ஏழு நாட்கள் அவர்களது மனக்குழப்பங்கள், கனவுகள், கற்பனைகள், கோபம், உணர்ச்சிகளின் ஊசலாட்டம் ஓங்கி நிற்கும். அடுத்த 14 நாட்கள் உடல் பாதிப்புகள் வெளித்தெரிய ஆரம்பிக்கும். குடியால் பாதிக்கப்பட்ட கல்லீரல், கணையம் செயல்படவும் சுரப்பதற்கும் நாளாகும். இந்தக் காலகட்டத்தில்தான் உடல் பயிற்சி, மனத்தைச் சாந்தப்படுத்தும் பயிற்சிகள், குழுவில் கலந்து பேசுவது இந்தப் பாதிப்புகளைச் சமாளிக்க உதவும். குடிநோய்ச் சிகிச்சையில் ஒருவர் ஓராண்டிற்குப் பிறகுதான் உறுதியான தெளிந்த நிலைக்கு வருவார் எனக் கூறலாம்.

பொதுவாக ஆல்கஹாலிக் அனானிமஸ் -ஐ ஒரு ஆன்மிக வழி என்று கூட சொல்லலாம். ஏனென்றால் தன்னைவிட வலிமை பொருந்திய ஒரு சக்திதான் தன்னைக் குணப்படுத்த முடியும் என்பது இதனுடைய அடித்தளம். இதுதான் தொடக்கப்புள்ளியும்கூட என்கிறார் இயேசு சபை போதை நோய்ப் பணிக்குழுவின் தலைவர் அருட்தந்தை பிரான்சிஸ் ஜெயபதி. தமிழகத்தில் கிட்டத்தட்ட 40 -க்கும் மேற்பட்ட குடிநோய் சிகிச்சைக்கான இலவச முகாம்களை நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநோயாளிகளை குடிநோயிலிருந்து விடுபட முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். இவரின் பயிற்சி முறைகள் பரவலாக தமிழகத்தில் அறிமுகமானவை.

ஆல்கஹாலிக் அனானிமஸ் போன்ற போதை மறுவாழ்வு தன்னார்வ அமைப்புகளும், சில குடிநோயாளி சிகிச்சை மய்யங்களும், சில மத நிறுவனங்களும், சுய உதவிக்குழுக்களும், மருத்துவ ஆராய்ச்சிக் குழுக்களும் குறிப்பிட்ட நாள்களைக் கொண்ட பயிற்சி முகாம்களை குடிநோயாளியின் மனநிலைகளுக்கு ஏற்றார்போல சிகிச்சைகள் அளித்து நடத்தி வருகின்றன. இந்த பயிற்சிச் சிகிச்சையில் குடிநோயாளிக்கு மட்டுமல்லாமல் சகநோயாளிக்கும் ஆற்றுப்படுத்துகிற பணியைச் செய்கின்றன. குடிப்பழக்கத்திற்கு ஆளானவருக்கு ஆரம்பக்கட்டத்திலேயே இந்த பயிற்சியை  வழங்கினால் குடியிலிருந்து முற்றிலும் விடுபட வாய்ப்புகள் அதிகம் உண்டு. இந்த பயிற்சி முகாம்கள் எங்கெங்கு நடக்கின்றன என்பதைக் கண்டறிந்து குடிநோயாளிகளிடம் மென்மையாகப் பேசி அவரை சிகிச்சைக்கு இணங்கச் செய்தாலே போதுமானது. இந்தப் பயிற்சி முகாம்களை சிறு சிறு குழுக்களாக இணைந்து நடத்தலாம்.

kudiyaali3சமூக ஒழுக்கமும், அறிவு முதிர்ச்சியும் சமூக அறிவியல் கல்விக்கான வளர்த்தெடுப்பு எனில் மதுவின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வையும், மது குடிப்பதினால் வரும் விளைவுகளையும் குடும்பத்தின் குழந்தை முதற்கொண்டு பயிற்றுவிக்க வேண்டும். சகநோயாளிகளுக்கும், குடிநோயாளிக்கும் கூட எடுத்துரைக்க வேண்டும். பள்ளிகளின் பாடப்புத்தகங்களில் இது பற்றிய பாடத்திட்டம் விளக்கமாக இடம் பெற வேண்டும். குடும்ப மற்றும் சமூக கொண்டாட்டங்களில் குடிகலாச்சாரத்தை ஊக்குவிக்கும் உறவுக்கு தடை ஏற்படுத்த வேண்டும். காரணம் புதிதாக அதில் பங்கேற்பவர் ஒரு முறை மதுவை குடிக்கும்போது ஏற்படும் ஈர்ப்புக்கு தொடர்ந்து ஆளாக்கப்படுகிறார். இன்றைக்கு சாலையோரங்களில் போக்குவரத்துக் காவலர்கள் வாகன ஓட்டுநர்களை குடித்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிய வாயை ஊதச்சொல்லும் சுவாசக்காற்று சோதனை முறையை அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தலாம். ஒரு சில சமய ஆன்மீக தரிசனங்களில் குறிப்பிட்ட சில நாள்கள் விரதம் இருக்கும்போது மது அருந்தாமல் இருக்கும் விரத முறையை அதிக நாள்கள் நீட்டிப்பு செய்யலாம். மது எப்படி உடல் நலத்தை பாதிக்கிறது? அதிகம் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள், குடியை நிறுத்தும்போது ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்கள் குறித்த குறும்படங்களை எடுத்து ஒவ்வொரு கிராமங்களிலும் திரையிடலாம்.

குடிநோய்க்கு முழுமையான சிகிச்சைமுறையை அரசு இன்னும் தீவிரப்படுத்த மாவட்டத்தின் அனைத்து சுகாதார மையங்களிலும் குடிநோயாளி சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட வேண்டும். மது விற்பனையில் நிகர லாபம் சம்பாதிக்க நினைக்கும் அரசின் கவனம் இதில் குறைவாக இருந்தாலும் மருத்துவம் மற்றும் சுகாதாரம் தொடர்பான மானியக் கோரிக்கையில் குடிநோய் சிகிச்சைக்கு கூடுதலான நிதி வழங்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.

kudiyaali6மது அடிமைத்தனத்தை எதிர்த்து இந்த சமூகம் பல தலைவர்களின், சமய ஆன்மீகவாதிகளின், சித்தர்களின் நல்லொழுக்க நெறிகளால் வளர்த்தெடுக்கப்பட்டது.  ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு வட்டார மக்களின் சமூக மாற்றத்திற்கும், அரசியல் பொருளாதார முன்னேற்றத்திற்கும், முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட பண்பாட்டிற்கும் நல்வழிகாட்டிய தலைவர்களையும் அதன் இயக்கங்களையும், ஆன்மீகச் சிந்தனைகளையும் நன்றியுடன் நினைவு கூறுகின்ற செயல் என்னவாக இருக்கும் என்றால் அந்த தலைவர்களின் வாழ்வியல் அனுபவங்களையும், அந்த இயக்கங்களின் கொள்கைகளையும் முழுமையாக உள்வாங்கி, முடிந்தவரை தங்களின் வாழ்க்கை நடைமுறையில் கடைப்பிடிப்பதே அவற்றுக்குச் செய்யும் கைமாறாகும்.

இந்த அரசால் மதுவைக் கூட  ஒழிக்க முடியவில்லை என ஒவ்வொரு கட்சிகளும் இன்னொரு ஆளும் கட்சியை குற்றம் சொல்லும் விவாத மனநிலையிலிருந்து விடுபட்டு ஆக்கப்பூர்வமான சில முன் யோசனைகளை கட்சி வேறுபாடில்லாமல் ஒருமித்த கருத்தில் செயல்பட வேண்டியுள்ளது. சமூக மாற்றம் அல்லது சமூக சீர்திருத்தம் என்பது வெறும் பொருளாதார நாகரிக நலன்களை மட்டுமே முன்னிறுத்தியதல்ல. அதே சமயம் இந்த மாற்றத்தை அரசின் சட்டங்களாலும், விதிமுறைகளாலும் மட்டுமே மாற்றிவிட முடியாது. அடிப்படையில் அது மக்களின் அடிமனதில் எழவேண்டிய மனமாற்றம். அவர்களால் அன்றாடம் பின்பற்றப்படும் பண்பாட்டுக் கூறுகள், நெறிமுறைகள், பழக்கவழக்கங்கள், மத நம்பிக்கைகள் இவைகளில் ஏற்பட வேண்டிய மாற்றம். அதற்கு பொது சிவில் சமுகத்தின் பங்களிப்பும் ஒரு காரணம். அந்த சிவில் சமூகம் இன்றைய தமிழகச் சூழலில் எந்த அளவுக்கு பின் தங்கியிருக்கிறது என்பதையும் கடந்து அது எவ்வாறு மதுபோதை அடிமைகளிலிருந்தும் விடுபட்டு, அரசின் சட்ட நடைமுறைகளுக்கும், சமூக ஒழுக்கங்களுக்கும் ஒத்துழைப்பு நல்குவதாகவும் இருக்க வேண்டும் என்பதை உரசிப்பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


அன்புசெல்வம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குடிநோயாளிகளின் பெருக்கத்தையாவது கட்டுப்படுத்துவோம்”

அதிகம் படித்தது