மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கும்பமுனி அல்ல! நாஞ்சில் நாடன்

முனைவர் மு.பழனியப்பன்

Oct 20, 2018

siragu-naanjil naadan1

நாஞ்சில் நாடன் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவரின் சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுதி சாகித்திய அகாதமியின் விருது பெற்றுள்ளது. இவரின் எழுத்துக்களில் தன் அனுபவக்கூறு மிகுந்து காணப்படுகிறது. இவரின் எழுத்துப் பழக்கம், இவரின் நடவடிக்கைகள் ஆகியவை கும்பமுனி என்ற பாத்திரத்தின் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. பல கதைகளில் கும்பமுனி என்ற கதாபாத்திரம் இடம்பெறுகிறது. இப்பாத்திரத்திற்குத் துணைப் பாத்திரமாக கண்ணுப்பிள்ளை என்ற பாத்திரமும் அமைகின்றது.

மனைவியின்றித் தனிக்கட்டையாக வாழ்ந்து வரும் கும்பமுனிக்கு, கண்ணுப்பிள்ளைதான், தேநீர், உணவு போன்றவற்றைத் தயாரித்துத் தரும் பணியாளர் ஆவார். இவர் காலை முதல் இரவு வரை கும்பமுனியுடன் வாழ்ந்துவிட்டுப் பின் தன் இல்லம் திரும்பி, அதன் பிறகு நாளைக் காலை வருவது என்று பணி செய்பவர். இவர் அடிக்கடி ஊர் நடப்புகள் பற்றியும், கும்பமுனியின் நடவடிக்கைகள் பற்றியும் விமர்சனப்படுத்தும் விமர்சனகர்த்தாவாகக் கதைகளில் காட்டப்பெறுகிறார். இவரின் விமர்சனங்களுக்குப் பதில் தருபவராக கும்பமுனி படைக்கப்பெற்றுள்ளார். இவர் இருவரது உரையாடலில் எள்ளலும், நகைச்சுவையும், எரிச்சலும், இயலாமையும் தொனிக்கும்.

நாஞ்சில் நாடன் படைத்துள்ள கும்பமுனி என்ற கதா பாத்திரம் நாஞ்சில் நாட்டு இலக்கியவாதிகள் மூவரின் கலப்பு என்கிறார் ஜெயமோகன். “கும்பமுனி மூன்று மனிதர்களின் கலவை என இப்போது தோன்றுகிறது. நகுலன் முதன்மையாக. கொஞ்சம் கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை. நாஞ்சில் எழுத எழுத கும்பமுனி கவிமணியை நோக்கி நகர்கிறார். கும்பமுனியின் வீடும் சூழலும் கவிமணிக்குரியவை. கவிமணியின் நக்கலும் இடக்கும் ஊரறிந்தவை. கும்பமுனி ஒரு காவியம் எழுதியிருந்தால் ‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ போலவே இருந்திருக்கும். கவிமணியின் பல சொல்லாட்சிகளை கும்பமுனிக்கு அளித்திருக்கிறார் நாஞ்சில். அதோடு அவர்களிருவரையும் தானாக சமைத்துக்கொண்டு உள்ளே வாழும் நாஞ்சில்நாடன்” என்ற ஜெயமோகனின் கருத்து நாஞ்சில் நாடன் கும்பமுனி என்ற பாத்திரத்தை யாரின் சாயலில் அமைத்திருக்க இயலும் என்பதை அறியவைக்கின்றது.

“கும்பமுனி அரசியல், கலை இலக்கியம், உலக நடப்புகள் என எல்லாவற்றையும் அதிரடியாக விமர்சனத்துக்குள்ளாக்குகிறார். அதற்கு எதிர்வினைபோல தன்னை விமர்சிக்கவும் தவசிப்பிள்ளையை தாராளமாக அனுமதிக்கிறார். கும்பமுனியை இயக்கும் “ரிமோட்” நாஞ்சில் நாடனிடம் இருக்கிறது. தன்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கின்றவற்றைக் கூடுவிட்டு கூடுபாய்ந்து கும்பமுனிக்குள் ஏறிநின்று அவர் பேசுகின்றார் என்றே நான் கருதுகிறேன்” என்று கீரனூர் ஜாகீர் ராஜா கருதுகிறார்.

இவ்வாறு கவிமணியின் சாயல் ஓங்கி கும்பமுனி பாத்திரப்படைப்பில் ஒலித்தாலும், இவற்றைத் தாண்டி நாஞ்சில் நாடனின் எழுத்துப் பழக்க வழக்கங்கள் அதில் காட்டப்பெற்றுள்ளன.

“கும்பமுனி சாதாரணமாக எழுந்திருக்க காலை பதினொன்று ஆகும். வறுத்த மோர் மிளகாயைக் கடித்துக் கொண்டு மாந்திய நாடன் சாராய மப்புக்கு, விழித்தவுடன் தவசிப்பிள்ளை நீட்டும் கட்டன் காப்பி தோதாக இருக்கும். தவசிப்பிள்ளை தனது காலாணிப் புற்றுக்காலைத் தாங்கி வைத்து நடந்து தோதுபோல வந்து சேர்வார்” (கதை எழுதுவதன் கதை, சூடிய பூ சூடற்க.ப.37) என்பது கும்பமுனியின் காலைவேளையாகும்.

அவரின் கதை எழுதும் நிலையைப் பின்வரும் பகுதி காட்டுகின்றது. கடேசிக் கதையை எழுதி இருவத்தி மூணு மாசமாச்சு. ஏற்கனவே கிழிச்சு தள்ளுனது போக. இருந்த கதைகளை முழுத் தொகுப்பாக்கியாச்சு. எல்லாம் சேர்த்து எம்பது வந்துது” (மேலது,ப. 39) என்ற பகுதியில் வரும் சிறுகதைத்தொகை நாஞ்சில் நாடன் எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கையாகும்.

கும்பமுனி எழுத முனையும் நிலை பற்றிய விவரிப்பினைப் பின்பகுதி காட்டுகின்றது. சற்று தலையை உதறிவிட்டு, காகிதக் கத்தையை எடுத்து, பக்க எண் போட்டு, தலைப்பு எழுதினார். கொதிக்கக் கொதிக்க தவசிப்பிள்ளை கட்டங்காப்பியைக் கொண்டு நீட்டினார். தலை முண்டில் ஏந்திக் கொண்டு சிறியதோர் உறிஞ்சல் செய்து தவசிப்பிள்ளையை நோக்கிச் சிரித்தார். கும்பமுனி காப்பியை உறிஞம்போது, காற்றுப் பறத்திய கரிகத்தை எடுத்துத் தவசிப்பிள்ளை எழுத்துக் கூட்டிப் படித்தார். தேர்தல் ஆணையத்துக்குக் திறந்த வெளிக் கடிதம் என்று தலைப்பிடப் பட்டிருந்தது.

“என்ன பாட்டா… திறந்த வெளிச் சிறைச்சாலை, திறந்தவெளிப் பல்கலைக்கழகம் கேட்டிருக்கேன்..நம்ம ஊருலே திறந்த வெளிக் கக்கூஸ் உண்டு. இது என்னது திறந்தவெளிக் கடிதம்? திறந்த கடிதம் எண்ணுலா இருக்கணும்?”

“நீ அதை அங்கிண வச்சிக்கிட்டு அந்தால போ என்னா? ஒனக்க சீமைத்தனத்தை எங்கிட்ட காணிக்காத! ஒரு இலக்கியவாதிக்கு புத்தி சொல்ல வரப்பிடாது பார்த்துக்கோ… காம்பற சொர்ணாவிக்கிட்டு நிக்காம போயி அரசி உப்புமா கிண்டு இண்ணைக்கு…” (மேலது.ப. 113) என்பது இருவரிடையே நடக்கும் உரையாடல். இதில் கும்பமுனி விமர்சிக்கப்படுவதையும் அதனைத் தாங்காத கும்பமுனியின் பதில் குரலும் வெளிப்படுகிறது.

தன்னைப் பற்றி விமர்சிக்கும் போக்கில் கும்பமுனி சொல்லும் வார்த்தைகள் பின்வருமாறு. இதனை எழுதுகிற கும்பமுனியாகிய நான் போக்கும் புகலும் அற்றவன், வயோதிகன், நோய்ப்பட்டவன், குடும்பம் குட்டி கிடையாது….. அடித்துப்போட்டாலும் ஆசிட் வீசினாலும் நள்ளிரவில் ஆட்டோ வந்தாலும் ஏனென்று கேட்க நாதி இல்லாதவன். இரண்டு செல்லத் தட்டுகளையே என்னால் தாங்க இயலாது. எனவே எனது முகவரியைத் தாங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளவேண்டும். முக அடையாளம் எனக்கு ஏற்கனவே கிடையாது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனது பரிந்துரைகளில ஏதும் பொருளோ பயனோ இருப்பதாக நீங்கள் கருதினால் சமீபத்தில் காலியாகும் சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றுக்கு என்னை நியமனம் செய்யலாம். நாவலந்தீவின் எந்த மாநிலம் ஆனாலும் போதும். மருத்துவப்படிப்பு, ஐ.ஐ.டி ஐ.ஐ. எம் போல இதிலும் தாங்கள் என கோட்டா இருக்கும் தானே!

அவ்விதம் நியமனம் செய்யும் பட்சத்தில் எனது ஒரே சொந்தமும் பந்தமுமான தவசிப் பிள்ளை கண்ணுப் பிள்ளையை எனது பதவிக்காலம் முடியும் வரை எனது பிரதம உதவியாளராகவும் சமையல்காரராகவும் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். எனது காலத்துக்குப் பிறகு எனது வாரிசாக தவசிப்பிள்ளையைத் தொடர்ந்து சடட மன்ற உறுப்பினராகச் செயல்படவும் அனுமதிக்கக் கோருகிறேன்.” (மேலது 123) என்ற நிலையில் தனக்குப் பின்னான தொடர்ச்சியாக கண்ணுப்பிள்ளை (தவசிப்பிள்ளையைக்) காணுகிறார் கும்பமுனி.

இதுமட்டுமல்லாமல் தன் இலக்கிய வாரிசாகவும், கண்ணுப்பிள்ளையை மற்றொரு கதையில் காட்டுகிறார் கும்பமுனி. கும்பமுனி என்னும் புகழ்பெற்ற நாவலாசிரியரின், எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நாவல் 19,638 பக்கங்கள் வளர்ந்திருக்கலாம் எனத் தமிழ் கூறு நல்லுலகம் யோசிக்க வேண்டியதில்லை. நான்கு ஆண்டுகளாக 68 பக்கங்கள்தான் நாவல் வளர்ந்திருக்கிறது. பிறகெப்படி அத்தனைத் துல்லியமாக 19, 638 பக்கங்கள் என யோசிப்பது நினைவில் தட்டுகிறது. கும்பமுனி தனது எல்லாப் படைப்புகளிலும் கடைசிப் பக்கத்தை முதலிலேயே எழுதிவிடுவார்.

எழுதி முடிக்காமல் இறந்துபோனால் என்ன செய்வது என்ற கவலை உங்களுக்கு ஏற்படுவது நியாயமானதே…. தனக்குப் பின் இந்த நாவலைத் தவசிப்பிள்ளை கண்ணப்பிள்ளை முடித்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கை கும்பமுனிக்கு உண்டு. எழுதி முடிக்காமல் கண்ணுப் பிள்ளையும் மீளாத் துயில் கொண்டால் அது நவீனத் தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகவே அமையும் (சூடிய பூ சூடற்க.ப. 183)” என்ற நிலையில் நாஞ்சில் நாடன் கும்பமுனியின் இலக்கிய வாரிசாக கண்ணுப்பிள்ளையை உறுதி செய்கிறார்.

ஒரு நாள் கும்பமுனியைத் தேடி ஒரு பதிப்பாளர் வருகிறார். அவர் கும்பமுனியிடம் மட்டரகமான புத்தகம் எழுதித்தரச் சொல்லிக் கேட்கிறார். அப்போது கும்பமுனிக்கு அறச்சீற்றம் பொங்குகிறது.

பதிப்பாளர் பையினுள் கைவிட்டு ஒரு கட்டு சூரங்குடி வெற்றிலை, பழுத்த ஐந்து பாக்கு, பத்து நூறு ரூபாய்த் தாட்கள் எல்லாம் முறை முறையே அடுக்கி தாள் பறந்துவிடாமல் மறுகையில் அமிழ்த்திப் பிடித்து நீட்டினார்.

தவசிப் பிள்ளை கை நீட்டி வாங்கினார்.

“சரி.. அடுத்த வாரம் வந்து வாங்கிக்கிடும். தவசிப்பிள்ளை எழுதி குடுத்திடுவாரு”

“பாட்டா” என்றார் தவசிப்பிள்ளை பதைத்து:.

“ஆமாடே! கை நீட்டிப் பணம் வாங்கியாச்சுல்ல? இனி மாட்டம்ணு சொல்ல முடியுமா… பயக்க வாசிச்சுக் கேட்ட அனுபவம் வேற இருக்கு”

“நான் வந்து….| (நாஞ்சில் நாடன், கான்சாகிப். ப. 177) என்ற உரையாடல், மட்ட ரகமான ஒன்றை எழுத மறுக்கும் கும்பமுனியின் அறத்தன்மையையும், அதே நேரத்தல் காசுக்கு அலையும், எழுத்து நேர்மை தெரியாத கண்ணுப்பிள்ளையின் அறியாமைப் போக்கையும் அறிந்து கொள்ளமுடிகின்றது.

மேலும் இந்த உரையாடல் எழுத்து அறத்தை வலியுறுத்துகிறது.

ஏம்.லே. மயிராண்டி. அவம் தாலம் (தட்டு) கேட்டாம்ணு எடுக்க ஓடுனயே! எங்கிட்டே ஒரு வார்த்தை கேட்டையா? தல இருக்கச்சிலே வாலு ஆடப்பிடாது என்னா? வே. பதிப்பாளரே, எனக்கு பொஸ்தகம் என்னமாம் படிச்சிருக்கேரா?

இல்ல பாட்டா! குடுங்க. படிச்சிட்டுத் தாறன்

பின்ன என்ன நினைப்பிலே எங்கிட்ட வந்தேரு

“நாஞ்சில் வெளக்கு ஆசிரியர் பண்டாரம் பிள்ளைதான் சொன்னாரு”

அவுரு ஆரு ஒமக்கு?

எனக்கு அண்ணனுக்கு மகன அவருக்கு மச்சினனுக்கு தம்பில்லா கெட்டி இருக்கான்.

அப்பம் ஒண்ணுக்குள்ளே ஒண்ணுண்ணு சொல்லும். அவன் ஒரு பேஞ்ச கொள்ளி. அவன் சொன்னாம்ணு நீரும் வந்திருக்கேரு! அவன் படிச்சிருப்பானவே எம் பொஸ்தகம்? அவன் அப்பன் பாட்டன் படிச்சா மனசிலாகுமா? எலே, என்னண்ணு நெனச்சு போட்டாயோ? சரஸ்வதிலே இது! சரஸ்வதியாக்கும் கூட இருக்கப்பட்ட:து. கும்பாட்டம் ஆடப்பட்ட குட்டிண்ணு நெனச்சியா? முன்னையும் பின்னையும் குலுக்கிக் குலுக்கி ஆட்டுததுக்கு… (மேலது, ப. 179) என்று அறச் சீற்றத்துடன் பொங்கி எழுகிறார் கும்பமுனி.

இவ்வாறு எழுத்தாளனின் நேர்மை, படைப்பின் அருமை, படைப்பின் சமுதாயத்தன்மை போன்றவற்றை மையப்படுத்தி கும்பமுனிப் பாத்திரம் படைக்கப்பெற்றுள்ளது. இப்பாத்திரத்தின் சாயலில் நாஞ்சில் நாடனின் படைப்பு முயற்சி;கள் படிந்திருக்கின்றன. உருவம், தனிமை, வாழ்க்கை போன்றவற்றில் கவிமணியின் சாயல்கள் படிந்திருக்கின்றன என்பதை உணரமுடிகின்றது. நாஞ்சில் நாடனின் கும்பமுனிப் பாத்திரம் பிற்காலத்தில் வளர்ந்து முழுமை பெற்றிருக்கிறது என்றாலும் இந்தத் தனிமை, படைப்பு முயற்சி போன்ற பண்புகள் அவரின் தொடக்க கால படைப்புகளில் இடம் பெறும் சில பாத்திரங்களிலும் காணத்தக்கவையாக உள்ளன. நாவல்களில் கும்பமுனிப் பாத்திரம் இடம் பெறவில்லை என்றாலும் அந்நாவல்களில் இடம் பெறும் பல பாத்திரங்களில் கும்பமுனிப் பாத்திரத்தின் சாயலும் நாஞ்சில் நாடனின் சாயலும் கலந்து உள்ளன என்பதை அந்நாவல்களைப் படிக்கும்போது உணரமுடிகின்றது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கும்பமுனி அல்ல! நாஞ்சில் நாடன்”

அதிகம் படித்தது