மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குறளனும் கூனியும்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

May 25, 2019

siragu ilakkiya kaadhal1

காதல் உலக உயிர்களின் தொடர்ச்சங்கலிக்கு வித்து. காதல் இல்லை எனின் இந்த பூமிப்பந்தின் வாழ்வு என்றோ முடிந்திருக்கும். உலக இலக்கியங்கள் அனைத்தும் காதல் உணர்வினை வெளிப்படுத்தும் பொழுது அழகான பெண் ஒருத்திக்கும் ஆணழகன் ஒருவனுக்குமிடையே உள்ள காதல் அன்பினையே பெரும்பாலும் விவரிக்கும். பெண்ணானவள் நீண்ட கருங்குழலும், கைகளில் வளை அணிந்தும் அன்ன நடை பயின்று வர, ஆணனவன் திரண்ட தோள்களோடு அகன்ற மார்புகளுடன் கையில் வாளேந்தி நிமிர்ந்த நடையுடன் நடந்து வர இருவரின் கண்களும் ஒரு நொடிக் கலப்பால் காதல் கொண்டு மகிழ்ந்தனர் என்று படித்திருப்போம். ஆனால் உருவத்தில் அழகில்லாதோர் காதல் கொள்வது பிழையா? அழகு காண்போரின் உள்ளத்து எண்ணத்தை பொறுத்தே உள்ளது. எந்த உயிருக்கும் காதல் உணர்வு பொதுவானது. கட்டமைக்கப்பட்ட அழகு காதலில் இரண்டாம் பட்சமே என்று கலித்தொகை பாடல் ஒன்று இயம்புகிறது. மருதன் இளநாகனார் மருதக்கலி 94வது பாடலில் அழகான காதல் உணர்வினை குறளனுக்கும் கூனிக்கும் நடுவில் தன் பாடல் வரிகளில் விவரிக்கின்றார். குறளன் இரண்டடி உயரம் கொண்டவன். கூனி வளைந்த முதுகு கொண்டவள். அவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் ஊடல் பின் எவ்வாறு காதலாக மாறுகின்றது என்பதை காண்போம்.

பாடல் :

மருதன் இளநாகனார், குறளனும் கூனியும் சொன்னது

குறளன்:

என் நோற்றனை கொல்லோ?
நீர் உள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்
ஈங்கு உருச் சுருங்கி
இயலுவாய்! நின்னோடு உசாவுவேன், நின்றீத்தை!

பொருள்:

“கரையில் நிற்கின்ற மர நிழல், நீரின் அலையில் வீழ்ந்து நெளிவது போல, தரையை நோக்குகின்ற கூனுடல் கொண்ட பெண்ணே, என்ன நற்செயல்கள் நீ செய்தனையோ? உன்னிடத்தில் என் மனது அலைபாய்கிறது. நான் உன்னிடம் ஒன்று கூற வேண்டும். தட்டாமல் என் சொல் கேட்டு நில்! “என்கிறான்.

கூனி:

அன்னையோ! காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான் 5
ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே! நீ எம்மை
வேண்டுவல் என்று விலக்கினை; நின் போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று?

பொருள்: “ஆண்டலை பறவை ஈன்ற அற்புத குஞ்சு போல் இருக்கின்றது உன் முகம் (ஆண்டாலை என்றால் ஆந்தை) ஒரு பிடி இருக்கும் குறளன் உனக்கு என் போன்ற அழகியிடம் பேச என்ன தகுதி உள்ளது” என சீற்றத்தோடு கேட்கின்றாள்.

குறளன்:

மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி
நெறித்துவிட்டன்ன நிறை ஏரால் என்னைப் 10
பொறுக்கல்லா நோய் செய்தாய்; பொறீஇ நிறுக்கல்லேன்;
நீ நல்கின் உண்டு என் உயிர்.

பொருள்: “கொழு பூட்டிய கலப்பையைப் போல கூன் விழுந்தாலும் உன் அழகு மேல் எழுந்து என்னை மயக்குகின்றது. உன் எண்ணத்தை என்னிடம் கூறிவிடு, இல்லை என்றால் என்னை கொன்று விடு” என்று கூறுகின்றான்.

கூனி:

குறிப்புக் காண் வல்லுப்பலகை எடுத்து நிறுத்தன்ன
கல்லாக் குறள! கடும் பகல் வந்து எம்மை
இல்லத்து வா என மெய் கொளீஇ, எல்லா நின் 15
பெண்டிர் உளர் மன்னோ? கூறு!

பொருள்: “கலப்பையைப் போல் இருக்கின்றேனா? என்னை கேலி செய்கின்றாயா? உன் உருவம் சூதாடும் சதுரங்கப் பலகை நேர் நிறுத்தினால் எவ்வளவு உயரம் இருக்குமோ? அந்த உயரத்தில் இருக்கின்றது. நீ என் அழகு பற்றி உவமை கூறலாமா? ஆண்பிள்ளை நீ ஓர் பெண்ணிடம் காதலை கூறி கூடலுக்கு அழைக்கும் பாங்கு இது தானா?” என்கிறாள்

குறளன்:

நல்லாய் கேள்! உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய
கொக்கு உரித்தன்ன கொடு மடாய் நின்னை யான்
புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும்; புறம் புல்லின்
அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன்; அருளீமோ, 20
பக்கத்துப் புல்லச் சிறிது.

பொருள்: உரித்த கொக்கு போல் உடலழகு கொண்ட பெண்ணே!! உன்னை மார்புறத் தழுவிக் கொள்ள நினைத்தால் உன் கூனல் நெஞ்சில் குத்தும். இச்சையோடு பின் பக்கம் தழுவிக் கொள்ளலாம் என நினைத்தால் உன் முதுகுக் கூனல் கிச்சு கிச்சு எனக்கு மூட்டும், பின் எவ்வாறு தழுவிக்கொள்வது என எண்ணுகின்றபொழுதில், இருவரும் பக்கம் பக்கம் நின்று தழுவிக்கொண்டு இன்பம் காண்போம் என்கிறான்.

கூனி:

போ சீத்தை! மக்கள் முரியே! நீ மாறு இனித், தொக்க
மரக் கோட்டம் சேர்ந்து எழுந்த பூங்கொடி போல,
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர், எம்மைப்
புரப்பேம் என்பாரும் பலரால், பரத்தை என் 25
பக்கத்துப் புல்லீயாய் என்னுமால், தொக்க
உழுந்தினும் துவ்வாக் குறுவட்டா! நின்னின்
இழிந்ததோ கூனின் பிறப்பு?…………………………

பொருள்: அது கேட்டு கூனி கொதித்தெழுந்தாள். “அரை மனிதன் நீ, என்னிடம் எவ்வாறு பேச உனக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? மரத்தினை தழுவி நிற்கும் கொடிப்போல எனைத் தழுவ பல ஆண் மக்கள் யாசித்து நிற்கின்றார்கள். ஆனால் நீ என் உருவத்தை குறை கூறி, எனக்கு துன்பம் அளித்துவிட்டாய்”.

குறளன்:
……………………………………………………….கழிந்து ஆங்கே
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும், உற்றீயாக்
கூனி குழையும் குழைவு காண்! 30

பொருள்: குறளன் தன் நெஞ்சிடம், “பார் அவள் பின் நம் மனது சென்றபோதும் அவள் பாராமுகம் காட்டுகின்றாள். இப்போது பார் கூனியின் மனம் கரையும்”

கூனி:

யாமை எடுத்து நிறுத்தற்றால் தோள் இரண்டும் வீசி,
யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும்
காமர் நடக்கும் நடை காண், கவர் கணைச்
சாமனார் தம் முன் செலவு காண்.

பொருள் : “ஆமை ஒன்று எழுந்து நிற்பது போல் நிற்பவனே, உன்னை வேண்டாம் என்று சொன்னாலும் நீ என்னிடம் வேண்டி நிற்கின்றாய். இதில் காமன் போல நடை வேறா? நல்ல அழகு தான் என்கிறாள்”!

குறளன்:

ஓஒ காண் நம்முள் நகுதல் தொடீஇயர், நம்முள் நாம் 35
உசாவுவம் கோன் அடி தொட்டேன்.

பொருள்: “சரி சரி நமக்குள் எதற்கு சண்டை? இருவரும் கூடி எங்கு அணைத்து இன்பங்கொள்வது என முடிவெடுப்போம்”, என்கிறான்.

கூனி:

ஆங்கு ஆக! சாயல் இன் மார்ப! அடங்கினேன், ஏஎ!
பேயும் பேயும் துள்ளல் உறும் எனக்
கோயில் உள் கண்டார் நகாமை வேண்டுவல்;
தண்டாத் தகடு உருவ வேறு ஆகக் காவின் கீழ்ப் 40
போதர் அகடு ஆரப் புல்லி முயங்குவேம்,
துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை
முகடு காப்பு யாத்து விட்டாங்கு.

பொருள்: “சரி நானும் உன்னை இனி இகழ் மாட்டேன். தேனும் பாலும் போல தழுவிக்கொள்வோம். அரசனது இல்லான அரண்மனை கோயிலுக்குள் சென்று தழுவிக்கொண்டால், நம்மை காண்போர், பேய்கள் இரண்டு கட்டிப் புரள்கிறது என்று பேசுவர், அதனால் அடுத்திருக்கும் சோலைக்குள் சென்று, ஓலை நறுக்கினை எழுதிச் சுருளாக்கி கெட்டியாய் முத்திரை இட்டது போல ஒட்டிக் காதல் கலவி புரிந்திடுவோம் வந்திடுக!” என்கின்றாள்.

பெரும்பாலும் கலித்தொகை பாடல்கள் உரையாடல் வடிவில் தான் இருக்கும்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குறளனும் கூனியும்”

அதிகம் படித்தது