மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குறள் கூறும் பிறன் மனை நோக்காமை (பகுதி- 23)

முனைவர். ந. அரவிந்த்

Sep 11, 2021

வள்ளுவர் பெருமான் 133 அதிகாரங்கள் எழுதியது உலகறிந்த செய்தி. அவைகளை ஆராய்ந்து படித்தால் பல ஆச்சரியமான உண்மைகள் தெரிய வரும். மொத்த அதிகாரங்களில், 132 அதிகாரங்களையும் அவர் சாந்தமாக எழுதியிருப்பது தெள்ளத் தெளிவாக நமக்கு புரியும். ஆனால், ‘பிறனில் விழையாமை’ என்ற அதிகாரத்தில் உள்ள 10 குறள்களையும் நாம் படித்துப் பார்த்தால், அவர் கோபத்துடனும் ஆதங்கத்துடனும் எழுதியுள்ளார் என்பதும் நமக்கு தெரியும்.

siragu valluvar1

இதன் மூலம் நாம் தெரிந்துகொள்வது கி.மு.விலேயே மாற்றான் மனைவியை சிலர் இச்சித்திருக்கின்றனர். இந்த தீய எண்ணத்தையும் செயலையும் வள்ளுவர் பெருமான் கடுமையாக கண்டித்திருக்கிறார் என்று தெரிகிறது.

இந்த பிறனில் விழையாமை அதிகாரத்திற்கு சுருக்க உரை எழுதியுள்ளார் சாமி சிதம்பரனார். அதன்படி, ஒருவன் மனைவியை மற்றொருவன் விரும்புவது சமூகத் துரோகமாகும்; கள்ள நட்புக் கொண்டிருப்பது சமுதாயக் கட்டுப்பாட்டுக்கு உலை வைப்பதாகும். இதனால் ஒரு குடும்பத்துக்கும், மற்றொரு குடும்பத்துக்கும் பகைமை உண்டாகும். இந்தத் தனிப் பகைமை சமுதாயக் கலகமாகவும் மாறிவிடும். ஆகையால்தான் பெண்களுக்குக் கற்பைக் கடமையாக்கியது போல் ஆண் மக்களுக்குப் பிறனில் விழையாமையைக் கடமையாக்கினார் வள்ளுவர் என்பதாகும்..

பிறன்மனை விழையாமை ஆண்களுக்கென உரைக்கப்பட்ட பாடல் தொகுப்பாகும். உடல் சம்பத்தப்பட்ட உறவினை தன் மனைவியிடம் பெறுதல் ஒழுக்கம். பிறன் இல்லத்தாளை விரும்பி அடைதல் மற்றவர் உரிமையில் தலையிடும் அறமற்ற தீயச்செயல். பெண்ணுக்குக் கற்புப் போன்று ஆண்களுக்குப் பிறன்மனை நயவாமை வேண்டும் என்கிறது இவ்வதிகாரம். அடுத்தவனுடைய பொருளான மனைவிமீது ஆசைகொள்வது பேதைமை, தீமை, பழி, பாவம் என்று கண்டிக்கிறது இந்த அதிகாரம்.

இப்போது ஒவ்வொரு குறளும் என்ன கூறுகிறது என்று விரிவாக காண்போம்.

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல் – குறள் எண்: 141

இதன் விளக்கம், ‘பிறனுக்கு உரியவளான ஒருத்தியை விரும்புவது அறியாமையாகும் மற்றும் உலகத்து அறமும் பொருளும் அறிந்தவரிடம் இந்த தீய எண்ணம் இருப்பதில்லை’ என்பதாகும்.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரிற் பேதையார் இல் – குறள் எண்: 142

இந்த குறளின் விளக்கம், ‘அறத்திற்குப் புறம்பாக பலர் வாழ்ந்தாலும், அவர்களில்  பிறன்மனைவியை இச்சித்து, அவன் வீட்டு வாயிலில் நிற்பவன் உலகிலேயே பெரிய முட்டாள்’ என்பதாகும்.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்

தீமை புரிந்தொழுகு வார் – குறள் எண்: 143

இந்த குறளில் வள்ளுவர், ‘சந்தேகப்படாமல் தெளிந்து நம்பியவரின் மனைவிமேல் காமம் கொண்டு வஞ்சனை செய்பவன் செத்தவனுக்கு சமம்’ என்று சபிக்கிறார்.

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல் – குறள் எண்: 144

இந்த குறள், ஒருவன் சமுதாயத்தில் பெரியவனாக மதிக்கப்பட்டாலும் பிறன் மனைவியை இச்சித்து அவன் வீட்டிற்குள் நுழைந்தால் அவனுக்கு சிறுமையே வந்து சேரும் என்று சொல்கிறது.

எளிதென இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி – குறள் எண்: 145

இந்த குறளில், ‘அடுத்தவன் மனைவியை அடைவது எளிதென கருதி பிறன் மனைவியின் பின்னால் செல்கின்றவன், எக்காலத்தும் மறையாமல் நிலைத்து நிற்கும் பழியை அடைவான்’ என்று மீண்டும் சபிக்கிறார்.

பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண் – குறள் எண்: 146

குறள் எண்: 145 -ல் பிறர்மனையாளை சேருபவனுக்கு பழி மட்டுமே சேரும் என்றவர் இந்த குறளில், ‘பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை நாடிச் செல்பவனிடமிருந்து எப்போதும்  நீங்காது தங்கியிருக்கும்’ என கூறியுள்ளார்.

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்

பெண்மை நயவா தவன் – குறள் எண்: 147

இதன் விளக்கம், ‘அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன் பிறனுடைய மனைவியை விரும்பமாட்டான்’ என்பதாகும்.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறன்ஒன்றே ஆன்ற ஒழுக்கு – குறள் எண்: 148

இதற்கு, ‘பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பேராண்மை, சான்றோருக்கு அறம் மட்டுமின்றி நிறைந்த ஒழுக்கமுமாகும்’ என்று அர்த்தம்..

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பில்

பிறற்குரியாள் தோள்தோயா தார் – குறள் எண்: 149

இதன் விளக்கம் யாதெனில், அச்சம் தருகின்ற கடல் சூழ்ந்த இவ்வுலகில், ‘நன்மைக்கு உரியவர் யார்? என்றால், பிறனுடைய மனைவியின் தோளைத் தழுவாதவரே ஆவர் என்பதாகும்.

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று – குறள் எண்: 150

இதற்கு, ‘அறத்தையே கருதாமல் ஒருவன் அறமல்லாதவற்றையே செய்தாலும். பிறனுக்கு உரியவனின் பெண்மையை விரும்பாதிருத்தலே நல்லதாகும்’ என்று அர்த்தம். இதன் விளக்கம், ஒருவன் பொய், திருட்டு, பொறாமை, கோபம் போன்ற அறத்திற்கு புறம்பான பாவங்களை செய்தாலும் பிறனுடைய மனைவியை விரும்பாதிருந்தால் அது அவனுக்கு நல்லதாகும்.

மேற்கூறிய பத்து குறள்களில் இருந்து, ‘பிறனுடைய மனைவியை இச்சித்தல் மாபெரும் பாவம் மற்றும் அதற்கு மன்னிப்பே கிடையாது என்றும் அந்த பாவ பழியானது அவனை தொடர்ந்து பிடிக்கும்’ என்றும் நாம் அறியலாம்.

பிறனுடைய மனைவியை இச்சிப்பவன் உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் அவன் யாராக இருந்தாலும் இறைவனின் தண்டனைக்கு தப்புவதில்லை என்று திருவிவிலியம் கூறுகிறது. உலகிலேயே அறிவுள்ளவன் என்று அறியப்படுகிறவன் தாவீது மன்னனின் மகன் ‘சாலமோன்’. அரேபிய மொழியில் ‘சுலைமான்’ என்று உச்சரிக்கப்படுகிறான். அவன்  பல நீதி மொழிகளை உலகிற்கு தந்துள்ளான். அவைகள் நம்மூர் பழமொழிகளை போன்று ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கியவை. அவைகளில், பிறனுடைய மனைவியை இச்சிப்பவனைப்   பற்றி சாலமோன்.மன்னன் இவ்வாறு கூறியுள்ளான்.

ஒருவன் தன் மடியில் நெருப்பை வைத்திருந்தால், அவனது ஆடை எரிந்துபோகாமலிருக்குமா? ஒருவன் தழல்மீது நடந்து சென்றால், அவன் கால் வெந்துபோகாமலிருக்குமா? அதுபோல், பிறன்மனைவியை அடைய நினைக்கும் ஒழுக்கம் கெட்டவன் செயலும் இத்தகையதே; அவளைத் தொடும் எவனும் தண்டனைக்குத் தப்பமாட்டான். அவன் நன்றாக நொறுக்கப்படுவான், பழிக்கப்படுவான்; அவனது இழிவு ஒருபோதும் மறையாது. ஏனெனில், தன் மனைவி தனக்கே உரியவள் என்னும் உணர்ச்சி ஒரு கணவனிடம் சினவெறியை உண்டாக்கும்; பழி தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் நாளில், அவன் இரக்கம் காட்டமாட்டான்; சரியீடு எதுவும் ஏற்றுக் கொள்ளமாட்டான்; எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அவன் சினம் தணியாது.

இது சம்பந்தமாக திருவிவிலியம் மூன்று கதைகளை மக்களுக்கு கூறியுள்ளது.

முதல் கதை ஆபிரகாமைப் பற்றியது. அவன் வாழ்ந்த தேசத்திலே பஞ்சம் உண்டானதால் எகிப்து தேசத்திற்கு தன் மனைவியோடு சென்றான். அவன் எகிப்துக்கு சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள பெண் என்று அறிவேன். எகிப்தியர் உன்னைக் காணும்போது, நீ என்னுடைய மனைவி என்பதால் என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள். ஆகையால், நான் உயிர் பிழைக்கும்படி நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான். முற்காலத்தில், கணவன் உயிரோடு இருக்கும்போது அவன் மனைவியை மற்றொருவன் திருமணம் செய்தால் அது மிகப்பெரிய பாவம். எனவே, கணவனை கொன்றுபோட்டுவிட்டு அந்த பெண்ணை அபகரிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது என்பது இக்கதையின் மூலம் தெரிகிறது. அவர்கள் எகிப்து தேசம் வந்தபோது, அந்த நாட்டு பிரதிநிதிககள் அந்த அழகு பெண்ணை கண்டு, அவளைப்பற்றி அந்நாட்டு மன்னனாகிய பார்வோனிடம் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த அழகு பெண் பார்வோனுடைய அரன்மனைக்குக் கொண்டுபோகப்பட்டாள். அவளால் ஆபிரகாமிற்கு மன்னனிடத்தில் தயை கிடைத்தது. மன்னன் அவனுக்கு ஆடு, மாடு, கழுதை, ஒட்டகம் மற்றும் வேலைக்காரர்களைக்கொடுத்தான். ஆனால், அவள் ஆபிரகாமுடைய மனைவி என்பதால் இறைவன் பார்வோனையும், அவன் வீட்டாரையும் வேதனையான நோய்களால் வாதித்தார். திடீரென நோய் வந்த காரணத்தை அறிந்த பார்வோன் ஆபிரகாமை அழைத்து, நீ ஏன் இப்படிச் செய்தாய்? இவளை உன் சகோதரி என்று நீ ஏன் பொய் சொன்னாய்? இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் நீங்காத பழி என்மேல் வந்திருக்குமே! என்று சொல்லி; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான். பார்வோன் படையினர் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு பாரவோன் கொடுத்த எல்லாவற்றையும் பிடுங்காமல் அனுப்பிவிட்டார்கள். இக்கதையின் கரு யாதெனில், அடுத்தவன் மனைவி என்று அறியாமல் அவளை மணந்துகொள்ள நினைத்தவனையே இறைவன் மகா வாதையினால் வாதித்தார் என்றால், தெரிந்து பாவம் செய்தவனை சும்மா விடுவாரா?.

அடுத்த கதை ஆபிரகாமுடைய மகன் ஈசாக்கைப் பற்றியது. ஈசாக்கு கேரார் என்ற ஊரிலே அவளுடைய மனைவி ரெபெக்காள் உடன் குடியேறினான். அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். அவனுடைய மனைவி பார்வைக்கு மிகவும் அழகாக இருந்ததனால் அந்த ஊரினர் அவள்நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான். ஒருவேளை அவனுடைய தகப்பனிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடமாக இருக்கலாம். அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்த ராஜா அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே கணவன் மனைவி போல் புனிதமான ஊடல் கொண்டிருக்கிறதைக்  கண்டான். அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து, அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பிறகு ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான். அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? என் மக்களில் யாராவது உன் மனைவியோடே தவறாக நடந்துகொண்டால், அதனால் எங்கள்மேல் பழி வரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான். பின்பு, அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா மக்களும் அறியச் சொன்னான். இக்கதையின் கருவாகிய, ‘அடுத்தவன் மனைவி  என்று அறியாவிட்டாலும், அவளிடம் தவறாக நடந்துகொண்டால், அதனால் பெரும் பழி தங்கள் மேல் வரும்’ என்ற பயம் ஒவ்வொருவரிடமும் அக்காலத்திலேயே இருந்தது ஆச்சரியமானது.

அடுத்து, மன்னன் தாவீதைப் பற்றியதாகும். அவன் மன்னனாக இருந்தபோது அவனுடைய படையில் இருந்த உரியா என்பவனின் மனைவி மீது ஆசைகொண்டான். அவளை தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள வேண்டுமென்று தாவீது ஒரு திட்டம் தீட்டினான். அதன்படி, அண்டை நாட்டுடன் சண்டையிட்டபோது வேண்டுமென்றே உரியாவை, முன்னிறுத்தி மற்ற வீரர்களை பின்வாங்க செய்து அவனை எதிரிகளின் படைகளால் மடிய வைத்தான். இது இறைவனுக்கு அருவருப்பான செயலாகும். இறைவன், தீர்க்கதரிசி சாமுவேல் மூலமாக தாவீது செய்த மாபெரும் தவறை அவனுக்கு உணர்த்தினார். உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பழி என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும் என்று சாமுவேல் தாவீதை சபித்தார். தன் தவறை உணர்ந்த தாவீது இறை சன்னதியில் இறைவனிடம் தன்னை மன்னிக்கும்படி கதறி அழுதான். தாவீது மாற்றான் மனைவியை அபகரித்தது தவிர இறைவன் தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், இறைவன் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.

இருந்தாலும் அவன் செய்த தவறால், இறைவன் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை வியாதியினால் அடித்தார்; அது மட்டுமின்றி, அவனுடைய இரண்டு மகன்களையும் அவர்களின் அகால வயதில் இழந்தான். மாற்றான் மனைவியை இச்சித்து அவளை அடைய விரும்பினால் அவன் யாராக இருந்தாலும் இறைவன் தண்டிக்காமல் விட மாட்டான் என்பது இக்கதையின் மூலம் தெளிவாக தெரிகிறது.

இந்த கட்டுரையை படித்தவுடன், நாம் மாற்றான் மனைவியை மட்டும்தானே இச்சிக்க கூடாது. திருமணம் ஆகாத பெண்ணை இச்சிக்கலாமா? என்ற கேள்வி நம்முள் எழலாம். இன்று திருமணம் ஆகாத பெண் ஒரு தகப்பனுக்கு மகள், அண்ணன் மற்றும் தம்பிகளுக்கு சகோதரி, நாளை மற்றொருவனுக்கு மனைவி. எனவே, இதுவும் தவறுதான். மாற்றான் மனைவியை இச்சித்தல் ‘மாபெரும் பாவம்’ என்றால்  திருமணம் ஆகாத பெண்ணை இச்சித்தல் ‘பெரும் பாவம்’. அவ்வளவுதான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம். பிறனுக்கு உரிய யாதொன்றையும் விரும்பாதிருத்தலே சாலச் சிறந்தது.

இன்றைய காலகட்டத்தில், தொலைக்காட்சியில் வரும் தொடர் நாடகங்கள், வீட்டில் உள்ள அனைவரின் நெஞ்சத்தில் நஞ்சினை விதைக்கிறது என்று பல ஆய்வுகளும், கணக்கெடுப்புகளும் கூறுகின்றன. இதனை தடுக்க, தொடர் நாடகங்களுக்கும் தணிக்கை குழு தேவை. அதற்காக காத்திருக்காமல், தொடர் நாடகங்கள் காண்பதை தவிர்த்தல் நலம்.

தொடரும்


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குறள் கூறும் பிறன் மனை நோக்காமை (பகுதி- 23)”

அதிகம் படித்தது