மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குறிஞ்சிப்பாட்டில் பெண்ணின் ஆளுமைத்திறன்

பேரா. ருக்மணி

Nov 18, 2017

Siragu-kurunjippattu2

ஆளுமைத்திறன் என்பது தான் சொல்ல வந்த செய்தியை உறுதியுடன் கூறுதல், நமக்கு என்ன தேவை என்பதை தயக்கமின்றி கூறுதல், தன் கோரிக்கை மறுக்கப்பட்டால் அதற்குரிய மாற்று முயற்சியைத் திட்டமிட்டு வைத்திருத்தல், மறுக்கப்படுகின்றபோது நிதானத்துடன் சமரசத்திற்கு தயாராதல். இவற்றைச் சரியாகக் கையாளுவதே ஆளுமைத்திறன் எனலாம். இங்கே கூறப்பட்ட இயல்புகளில் எதிலும் குறையாமல் செயல்பட்டவர்கள் குறிஞ்சிப்பாட்டுப் பெண்கள். குறிப்பாகத் தோழி. விளையாட்டுப் பெண்ணாக இருந்தாலும் பண்பாட்டுத் தளத்தின் ஆணிவேரை நன்கு அறிந்தவர்கள் தமிழ்ப் பெண்கள் என்று அறுதியிட்டுக் கூறும் கபிலரின் குரல்தான் தோழியின் வாயிலாக வெளிப்படுகிறது. பேசும் திறன், தான் சொல்ல வருகின்ற கருத்திற்குத் தக சூழல்களை உளப்படுத்தல், எதிர் நின்று கேட்பவர்களின் ஐயத்தை உணர்ந்து கொண்டு அதற்குரிய காரண காரியங்களை நிரல்பட மொழிதல், எதிர் உணர்வு அரும்பாமல் இதமாக எடுத்துரைத்தல் என்று எல்லா வகையிலும் தோழி பேசுகிறாள் என்றால் தோழியின் பேச்சு மட்டுமல்ல; ஒட்டு மொத்த தமிழ்ப் பெண்களின் அறிவார்ந்த பேச்சாற்றலை அறிந்த கபிலர், பெண்மையின் பேச்சாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் அற்புதப் படைப்பே குறிஞ்சிப்பாட்டுத் தோழி.

குறிஞ்சிப்பாட்டிலே நடக்கின்ற அத்துணைச் சொல் நாடகமும் தோழியின் சொல்லாற்றலே. பாட்டின் தொடக்கத்திலேயே, தான் சொல்லப் போகும் செய்தி தாய்க்குக் கோபத்தை உண்டுபண்ணக் கூடியது என்பதை அறிந்திருந்தும், கோபத்திற்கு ஆளாவோம் என்பது தெரிந்திருந்தும் அவள் கோபத்தினால் வரும் எதிர்வினையைத் தவிர்க்க, சிக்கலான செய்தியாக இருந்தும்கூட அதனை அவள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மேலாண்மைத் திறத்துடன் மொழிகின்றாள் தோழி.

மகளின் உடல் மெலிவிற்குக் காரணம் தெரியாமல் தெய்வங்களுக்குப் பூசை போடுவது, குறி கேட்பது என்று தாய் செய்கின்ற எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றாள் தோழி. ஆனால் இதெல்லாம் நடக்கின்றபோது வாய் திறக்கவில்லை; தாயின் செயலைத் தடுக்கவுமில்லை தடுப்பதிலும் பயனில்லை என்பது அறிவார்ந்த தோழிக்குத் தெரியாதா என்ன? தாயின் போக்கிலேயே விடுகின்றாள். தான் செய்யும் முயற்சிகள் அத்துணையும் எந்த பயனையும் தரவில்லையே என்று தாய் வருந்துகின்ற போது, வாய் திறக்கிறாள் தோழி. எங்கே தன் பேச்சுக்கு மரியாதை கிடைக்குமோ, அந்த இடத்திலே பேசுவதுதான் அறிவார்ந்த செயல். தாய் செய்கின்ற செயலெல்லாம் வீண் என்று நன்றாக அறிந்திருந்தும் வாய் திறக்காது மௌனியாக இருந்து பார்த்துக் கொண்டிருந்தவள், சமயம் பார்த்து எந்த உணர்ச்சி மேலீடும் இல்லாமல் நிதானமாகப் பேசுகின்றாள்; தாயிடம் மெல்லச் சொல்லுகின்றாள்.

“நான் சொல்லுவதைக் கேட்டால் உனக்குக் கோபம் வரும் என்றாலும் பொறுமையாகக் கேள் அம்மா“என்கிறாள். நடந்தது அத்தனையும் தோழிக்குத் தெரியாதா என்ன? நடந்த காதல் நாடகத்தில் தலைவியோடு முழுக்க முழுக்க கூட இருந்தவள் இவள்தான்.ஆனாலும் சொல்லத் துடித்த என்னைச் சொல்லாமல் துண்டித்தது தலைவியும் நீயும் என்று சொல்லாமல் சொல்கின்றாள்;இப்போதும் நான் உன்னிடம் சொல்வது என் கடமை என்பதால்தான். ‘செறித்து யாம் கடவலின்’ என்கிறாள். “அவளுக்கு நடந்த இத்துணைக்கும் நீதான் உடந்தையா“என்று தாய் கேட்காமல் இருக்க, இந்தச் சொல் நாடகம்! இதற்கும் ஒரு படிமேலே போய் தலைவியின் இந்த வருத்தத்திற்கு நீ தான் முதற்காரணம் என்று தாய் மீதே பழியைப் போடுகின்றாள் பாருங்கள்.“நீ தானே எங்களைத் தினைப்புனத்திற்கு அனுப்பினாய், அதனால் விளைந்தது தானே இந்த இடர்” என்பது போல அவளின் பேச்சு அமைகிறது. அதிலே என்ன தெளிவு!

‘துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல்

நல்கோள் சிறுதினை படுபுள் ஓப்பி

எல்பட வருதியர்’ என நீ விடுத்தலின்,

என்று இயல்பாகச் சொல்லுகின்றாள்; இசையுமாறு இயம்புகின்றாள்.

நீ சொன்னபடியே நண்பகல் வரை கிளியோட்டினோம். மலர்களைப் பறித்து மாலை புனைந்து கொண்டிருந்தபோதும் கிளி கடி கருவியால் புள்ளினம் ஓட்டி கருமமே கண்ணாய் இருந்தோம். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. ”நான் சொன்ன வேலையை விட்டுவிட்டு நீங்கள் சுற்றினீர்களா”என்று தாய் கேட்டுவிட்டால்….? கேட்கக் கூடாதபடி தம் செயலுக்கு அரண் அமைக்கின்றாள்.

தம்மை யானை துரத்திய செய்தியை மிகுந்த அச்சவுணர்வோடு விளக்கமாக வர்ணிக்கின்றாள். “தன் மகளின் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்“என்று தலைவன் மேல் தாய்க்கு கோபம் வராதபடி, “தன் மகளின் உயிரைக் காத்தவன்”என்று தலைவன் மேல் நன்றியுணர்வு தோன்றும்படி செய்திகளை நிரல்பட எவ்வித மழுப்பலும், தயக்கமுமின்றி தெளிவான குரலில் தைரியமாக வெளிப்படுத்துகின்றாள். வேட்டையாடி வந்த தலைவன், எம்மைப் பார்க்க வேண்டும் என்று குறிகொண்டு வந்தவன் அல்ல; குறி தப்பி வந்தவன்; தற்செயலாக வந்தவனே தவிர, தவிப்புடன் வரவில்லை; எம்மை முன்பின் அறிந்தவனுமில்லை என்று கூறிவிட்டு மெல்ல அவன் உடல் அழகும் உள்ள வனப்பும் உணர்த்துகின்றாள். தலைவியை மணந்து கொள்ளும் விருப்பமுடையவன் என்பதையும் சொல்லத் தவறவில்லை.

Siragu-kurunjippattu4

ஒன்று விடாமல் எல்லாச் செய்திகளையும் எந்தவித ஒளிவு மறைவுமின்றி கூறிவிட்டு, நீயோ தலைவியின் துயர் கண்டு வருந்துகின்றாய், நானும் அவளின் நிலை கண்டு வருந்துகின்றேன். ஆனால் தலைவியோ இரவில் தலைவன் வரும் பாதையின் இடர் நினைத்து இன்னலுறுகின்றாள். என்ன செய்வது? என்று முடிக்கின்றாள். “நோய்க்குக் காரணம் கூறிவிட்டேன். இனி மருந்தினைக் கொடுப்பது உன் கடமை”என்பதைப் போல!

தவறாக இருந்தாலும், மற்றவர்கள் சினக்கக்கூடிய செயலாக இருந்தாலும் மாற்றாரின் மனக்குறிப்பு அறிந்து எல்லோரையும் நல்லவர்களாக, எல்லோருக்கும் நல்லவளாக இருந்து அறம் புணையாகத் தேற்றும் ஆற்றல் படைத்த பெண்மையின் அருங்குணங்களை – மேலாண்மைப் பண்புகளை ஒருசேரக் காட்டும் நூல் குறிஞ்சிப்பாட்டு எனினும் மிகையோ!

சரி, இத்துணைநேரம் தோழியே பேசினாளே! இதில் தோழியின் உள்ளக் குறிப்பும், உள்ளத்துள் உள்ளதை வார்த்தையில் வடிக்கும் வாய்ப்பேச்சும் மட்டும்தானே நமக்குத் தெரிந்தது. தலைவி? பேசா மடந்தையெனினும் உலகியல் அறிவும், உளத்திண்மையும் வாய்ந்த பெண், தலைவி என்பதையும் கபிலர் கோடிட்டுக் காட்டத் தவறவில்லை.

‘முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை

நேர்வரும் குரைய கலம்கெடின் புணரும்

சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்

மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்

ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை

எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்

மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப

நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி

இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென

நாம் அறிவுறாலில் பழியும் உண்டோ?

ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற

ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு’

என்று பேசுகின்றாள் தலைவி. முத்தினாலும், மணியினாலும் பொன்னினாலும் ஆகிய அணிகலன்கள் அறுந்துவிடின் நேர்படச் செய்துவிடலாம். நற்பண்பும் பெருமையும் ஒழுக்கமும் சிறிது குன்றினும் அதனை மீண்டும் புகழ் நிலையில் நிறுத்தல் இயலுமா?. குற்றமற்ற அறிவினையுடைய பெரியோர்களுக்கும் கூட அது எளிதான காரியமல்லவே என்று உயர்ந்த பண்போடு பேசுகின்றாள். நானோ, பெற்றோரின் அன்பும், என் மடப்பமும் நீங்கிடுமாறு, தந்தையின் காவலைக் கடந்து அவரை விரும்பினேன். அதற்காக இதனை மறைப்பது முறையல்லவே! நாம் இருவரும் ஆராய்ந்து முடிவு செய்த இம்மணத்திற்கு அவர்கள் இசையவில்லை என்றால்… இதில் ஆற்றின் என்றும் கூறும்போது அன்பு கொண்டோரை இணைப்பதுதானே ஆற்றின் நெறி. அது விலக்குவரோ? ஒருவேளை தவிர்த்தால் அடுத்த பிறவியிலாவது ஒன்று சேர்ந்து வாழ மாட்டோமா? என்பதில் தான் எத்தனை உறுதி! அறவுணர்வு! தன் துயரினும் குலப்பெருமை காக்கத் தவிக்கும் சால்பு, முறையாக மணம்புரிய விழையும் விழைவு, கருத்துடன் ஒன்றிய கள்ளமற்ற பேச்சு – இவை பெண்ணின் ஆளுமைத்திறனின் வெளிப்பாடுகள். நமக்கு என்ன தேவை என்பதை அறிந்து உரியவர்களிடம் எவ்வித கெஞ்சலுமின்றி- தயக்கமுமின்றிக் கூறுதல், நம் கோரிக்கை மறுக்கப்படும் என்ற சூழ்நிலை இருக்குமானால் நிதானத்துடன் சமரசத்திற்குத் தயாராதல் மற்றும் மாற்று முயற்சிகளைத் திட்டமிடல், நம் உணர்ச்சிகளை மதிக்கக் கற்றுக் கொள்ளுதல் என்ற ஆளுமைப் பண்புகளில் எந்தப் பண்பிலும் குறைவில்லாமல் தலைவியும் காட்டப்படுகிறாள் கபிலரால்!

தலைவியின் நற்பண்பை செவிலிக்குணர்த்தும் தோழியின் ஆளுமைத்திறனும் ஈண்டு கவனிக்கற்பாலது. “தலைவி பெற்றோரை மீறி எதுவும் செய்துவிட மாட்டாள். நீங்களாகவே மணம் செய்து வைத்துவிடவேண்டியது உங்கள் கடன். அது தான் அறமும் கூட”என்று கதைத் தொடக்கத்திலே தம் கருத்தை ஆணித்தரமாக அறுதியிட்டுக் கூறிவிட்டு அதற்குக் காரணமாக அமைந்த சூழலைச் சுவைபட கூறுகின்றாள். ‘ஏனை உலகத்து இயைவதால் என்ற சொல்லில் தான் எத்துணை அழுத்தம்! சரி தலைவி இப்படியே கன்னிமையை கழித்துவிடுவாள் என்றா தோழி கூறுகிறாள். அதுவல்ல தோழியின் நோக்கம். இப்படியே விட்டால் இன்னும் சிறிது நாளில் தலைவியை நாம் இழக்கவும் நேரிடும் என்பதைச் செவிலியிடம் குறிப்பாக உணர்த்துகின்றாள் தோழி. மகளைப் பிரிய மனம் வருமா தாய்மைக்கு! அது தோழிக்கும் தெரியும். அதனால் தான் தலைவிக்கு நேரும் முடிவைச் சொல்லி முடிவு தேடுகிறாள் தோழி!

‘கொடுப்பின் நன்குடைமையும் குடிநிரல் உடைமையும்

வண்ணமும் துணையும் பொரீஇ என்னாது

எமியேம் துணிந்த ஏமம்சால் அருவினை’

இந்த வரிகளில்தான் எத்துணை அறிவார்ந்த சொல்திறன் தோழிக்கு! முதலில் பெரியவர்கள் மணம் செய்விக்கின்றபோது எல்லாப் பொருத்தமும் பார்த்துச் செய்வார்கள் என்று செவிலியின் மனம் குளிரப் பேசிவிட்டு ‘எமியேம் துணிந்த ஏமம்சால் அருவினை’ என்ற ஒரே வரியில் யாம் துணிந்து எடுத்த முடிவு திண்ணிய முடிவு என்பதையும், இது எமக்கு உயிர்க்குப் பாதுகாவலான நட்பு என்பதையும் அழுத்தம் திருத்தமாக என்று சொல்வார்களே அதைப் போல் எந்த வகையிலும் கேட்பவரின் மனம் காயப்படாமல் திறந்த மனத்தோடு சொல்லுகின்றாள். இது ஆளுமைப் பண்பன்றி வேறென்ன?

குறிஞ்சிப்பாட்டின் தொடக்கம் முதல் முடிவு வரை சொல்லுக்குச் சொல் அமைந்த பொருள் ஆழமும் நுட்பமும் வியந்து வியந்து பார்க்கத் தகுந்தது.

‘என் தோழி மேனி

விறலிழை நெகிழ்த்த வீவரும் கடுநோய்’

என்கின்றாள். தலைவிக்கு வந்திருப்பது தீர்க்க முடியாத கொடுநோய் என்று சொல்லுபவளுக்கு, தீர்க்க முடியாத நோய் அல்ல என்பதும் தெரியும். நீ செய்யும் பூசைகளால் அது தீராது என்பதுதான் அவளின் குறிப்பு. சரி உன் மகளுக்கு வந்திருக்கும் நோய் குறித்து நீ ஏன் மற்றவரை வினவுகின்றாய்? உனக்கே தெரியவில்லை என்றால் வேறு யாருக்குத் தெரியும் (அறியாமையோடு இருக்கின்றாயே) என்று தாயின் அறியாமையைச் சாடும் அறிவுடைச் செல்வியாகவும் தோழி இருக்கின்றாள்.

இப்படி தோழியின் ஒவ்வொரு அசைவும் அறிவார்ந்த பெண்ணின் ஆக்கமுறு செயல்களாக பரிணமித்து பிராகாசிக்கின்றன. தலைவியின் பேச்சு சில வரிகளே எனினும் பெண்ணின் தெளிந்த நல்லறிவினைச் சாற்றும் சிறப்பான வரிகள். இவ்வாறாக பெண் இனத்தின் ஆளுமைத்திறனை குறிஞ்சிப்பாட்டின் வழியாக –அப்பட்டமாக, ஆற்றலோடு வெளிப்படுத்தியிருக்கின்றார் கபிலர்!


பேரா. ருக்மணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குறிஞ்சிப்பாட்டில் பெண்ணின் ஆளுமைத்திறன்”

அதிகம் படித்தது