மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குறுந்தொகையில் 40 ஆவது பாடல்

பேரா. ருக்மணி

Oct 25, 2014

kurundhogai1நம் தமிழினத்தின் நாகரிகத்தினைப் படம்பிடித்துக் காட்டும் பாடலிது. இது குறுந்தொகையில் 40 ஆவது பாடல், தலைவனும் தலைவியும் எதிர்பாராமல் சந்திக்கின்றனர்.காதலிக்கின்றனர், அங்கே சாதி, மத வேறுபாடில்லை. ஆனால், தலைவிக்கு தலைவன்மேல் ஒரு சந்தேகம் வருகிறது. இவன் நம்மைப் பிரிந்துவிடுவானோ என்பதுதான் அது!   அவளின் இந்த உள்ளக் குறிப்பைக்கூட, அவள் கூறாமலே உணர்ந்து கொள்கின்றான் தலைவன். அவர்கள் கண்ணெதிரே, மழை நீர் மண்ணோடு கலந்து ஓடுகிறது. தலைவியின் அச்சத்தை, எதைச் சொல்லி, எப்படிச் சொல்லித் தெளிவிப்பது? என்று நினைத்தத் தலைவனுக்குக் கண் முன்னே தோன்றும் நீரும் நிலனுமே கைகொடுக்கிறது. “இந்த நிலத்தோடு பிரிக்க முடியாதவாறு மழைநீர் சேர்ந்துவிட்டதல்லவா? அதைப் போன்றதுதான் நம் அன்பும்” என்கிறான் தலைவன். தலைவனின் அன்பு மொழிக்கு முன் தலைவியின் அச்சம் காணாமல் போவது இயல்பு தானே? இதோ பாடல்….

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

பாடலைப் பாடியவர்- செம்புலப் பெயல்நீரார்

குறிஞ்சித்திணைப் பாடல்

கருத்துரை:

kurundhogai2என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன. (அதனால் நெஞ்சம் ஒன்று கலந்த நம் அன்பும் என்றும் பிரியாது. மண்ணோடு கலந்த நீரை எப்படி பிரிக்கமுடியாதோ, அவ்வாறே நம்மையும் பிரிக்க முடியாது.)

சொல்பொருள் விளக்கம்:

யாயும்-என் தாயும், ஞாயும்- உன் தாயும், யார் ஆகியரோ- யாருக்கு யார் உறவினர், எந்தையும்- என் தந்தையும், நுந்தையும்- உன் தந்தையும்,எம்முறை- எந்த முறையில், கேளீர்- உறவினர்,யானும் நீயும் –நானும்- நீயும் நானும், எவ்வழி- எந்த உறவின் வழியாக, அறிதும்- அறிந்து கொண்டோம்? செம்புலப் பெயல் நீர் போல-செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல, அன்புடை நெஞ்சம்– அன்பான நெஞ்சங்கள், தாம் – தாமாகவே(யாதொரு உறவுமின்றி), கலந்தனவே- கலந்துகொண்டனவே.
எவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அவ்வாறே தலைவனின் அன்பினையும் தலைவி ஏற்றாள். இங்கே நிலம்-தலைவி, நீர்- தலைவன் .

பண்பும் அன்பும் போட்டியிடும் இப்பாடல் என்றும் நம் உள்ளத்திலும் செம்புலப்பெயல் நீராதல் இயல்புதானே?


பேரா. ருக்மணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குறுந்தொகையில் 40 ஆவது பாடல்”

அதிகம் படித்தது