மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குற்றாலத்தில் மூலிகை செடிகளை வளர்த்து பராமரித்து வரும் இத்தாலிய பெண்மணி!

சா.சின்னதுரை

Aug 15, 2015

mooligai thottam fiகளை கட்டும் குற்றாலம் பகுதி, சுற்றுலாப் பயணிகளின் ஆரவாரம், ஆர்ப்பரிக்கும் அருவிகள், மந்திக் கூட்டங்களின் சலசலப்பு, சாரல் மழை.. என பரபரப்பாகக் காணப்பட்ட குற்றாலத்தில், சுகந்த மணம் பரப்பிய ஒரு மூலிகைத் தோட்டத்தில் வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவரைக் கண்டோம். ‘யார் அவர்’ என்ற ஆர்வத்தோடு அருகே சென்றோம். அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேகி. குற்றாலத்தில் மூலிகைத் தோட்டம் அமைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைத் தாவரங்களை வளர்த்து பராமரித்து வருகிறார். அவருடன் ஒரு நேர்க்காணல்:

உங்களைப்பற்றி?

மேகி: இத்தாலி நாட்டிலுள்ள வரிஸி நகரம் தான் எனது சொந்த ஊர். கடந்த 20 ஆண்டுகளாக குற்றாலத்தில் வசித்து வருகிறேன். கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை. இயற்கை தான் என் குடும்பம்; என் உறவு..

மூலிகைத் தோட்டம் ஆர்வம் பற்றி?

mooligai thottam2மேகி: ஏற்கெனவே நான் இத்தாலி, தென் அமெரிக்கா, நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் மூலிகைப் பண்ணை வைத்துள்ளேன். அடிப்படையில் நான் தாவரவியலாளர் என்பதால், குற்றாலத்தில் உள்ள மூலிகை வளங்களும், அதன் பயன்பாடுகளும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நான் இந்தியா வந்த ஆரம்பத்தில், குற்றால மலையில் விளையக்கூடிய மூலிகைச் செடிகளை சேகரித்து, ஒரு மூலிகைத் தோட்டம் அமைக்க விரும்பினேன். அப்படி அமைந்ததுதான் இந்த குற்றால மூலிகைத் தோட்டம்.

குற்றாலம் மூலிகை வளங்களைப் பற்றி?

மேகி: குற்றால மலையில் சுமார் 2,000 க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன. இம்மலையில் இல்லாத மூலிகைகளே இல்லை எனலாம். இங்கு காணப்படும் அனைத்து தாவரமுமே ஏதாவது ஒரு மருத்துவக் குணம் கொண்டதாகத் தான் உள்ளது.

1871-இல் ஆங்கில ஆட்சியாளர்களான கிழக்கிந்திய கம்பெனிக்கார்கள், குற்றால மலையில் ஒரு ஆய்வு நடத்தினர். அதில் குற்றால அருவி நீர், பல்வேறு மூலிகைக் குணங்கள் உடையனவாகவும், பல்வேறு நோய்களுக்கு குணமளிப்பதாகவும் உள்ளது. மழைநீரானது, மூலிகைச் செடிகளைத் தழுவி அருவியில் கலப்பதே அதற்குக் காரணம் என்று ஆய்வில் கூறப்பட்டிருந்தது.

குற்றாலத்தில் நீங்கள் அமைத்துள்ள மூலிகைத் தோட்டம் பற்றி?

mooligai thottam3மேகி: கடந்த 15 ஆண்டுகளாக இந்த மூலிகைத் தோட்டத்தைப் பராமரித்து வருகிறேன். 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இத்தோட்டத்தில், கொழிஞ்சி, ஊமத்தை, கண்டங்கத்தரி, சிற்றகத்தி, முடக்கற்றான், வில்வம், ஆடாதொடை, நொச்சி, நோணி, பிரண்டை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் மற்றும் மரங்கள் தற்போது உள்ளன.

ஆடாதொடா செடி, கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடும். அழுகண்ணி செடியின் இலைகளை, உடலில் வெட்டுக் காயம் ஏற்பட்ட இடத்தில், வைத்து கட்டினால் வெட்டுப்பட்ட இடம் ஒன்று சேர்ந்துவிடும். மணத்தக்காளி கீரையில் உள்ள (Anti Oxident) எனும் வேதிப்பொருள், புற்று நோய் வராமல் தடுக்க உதவும். முடக்கற்றான் இலையை, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்ணின் அடிவயிற்றில் பூசினால் சுகப் பிரசவம் ஏற்படும். வெண்நுணா மரத்தின் பழங்களில், அன்றாடம் நம் உடலுக்கு தேவைப்படும் 150 வகையான உயிர்ச்சத்துக்கள் உள்ளன.

பெரும்பாலான உடல்நலக் கோளாறுகளுக்குத் தீர்வு தரக் கூடிய மூலிகை செடிகள், இப்பண்ணையில், இயற்கை விவசாயம் முறையில், பராமரிக்கப்பட்டு வருகின்றன. கூடவே, 13 மாடுகளையும் வளர்த்து வருகிறேன். மேலும், வாரமொரு முறை இலவச மருத்துவ முகாமும் நடத்தி வருகிறேன்.

இலஞ்சி பாரத் மாண்டிச்சோரி மெட்ரிக் பள்ளி – குற்றாலம் ஐந்தருவி செல்லும் சாலையில் எனது மூலிகைத் தோட்டம் அமைந்துள்ளது. தினமும் 2 மணி நேரம் பார்வையாளர்கள் சுற்றிப்பார்க்க அனுமதி உண்டு. மூலிகைச் செடிகள் தேவைப்படுவோர் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குற்றாலத்தில் மூலிகை செடிகளை வளர்த்து பராமரித்து வரும் இத்தாலிய பெண்மணி!”

அதிகம் படித்தது