மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குழந்தைகளுக்குத் தேவை ‘தாலாட்டு’. தேவையில்லை ‘தாலேட்டு’ தாய்மார்களே எச்சரிக்கை!

சு.பாரதிதாசன், அருளகம், கோயமுத்தூர்

Oct 3, 2020

siragu diaper2

குறுநடைபோடும் மழலையின் பெற்றோர்களும் குழந்தை வளர்ப்போரும் குழந்தைகள் நலனில் அக்கறை இருப்போரும் அவசியம் இந்தப் பதிவைப் படியுங்கள்.. விழிப்புடன் இருங்கள். உங்களுக்குப் பெரும் கவலையையும், பீதியையும் ஏற்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. இந்தத் தகவல் உங்களுக்குப் பயன்படக்கூடும்.

அன்பு நிறைந்த பெற்றோரே! உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் டயாபர் (அரையாடை) பயன்படுத்துகிறீர்களா! அதில் நச்சுக்கள் நிறைந்த இரசாயனங்கள் உள்ளன என்பதை அறிவீர்களா!. இந்தியச் சந்தைகளில் குழந்தைகளுக்கென விற்கப்படும் அரையாடை துணிகளில் அதிகப்படியான நச்சுத் தன்மை வாய்ந்த ‘தாலேட்டுகள்’ (Phthalate) இருப்பது அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் விளம்பரங்களில் காணும் எந்த ஒரு முன்னணி நிறுவனமும் விதிவிலக்கல்ல. ‘டாக்சிக் லிங்க்’ (TOXIC LINK) என்ற அமைப்பினால் செய்யப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

‘தாலேட்டுகள்’ எனப்படும் வேதிப்பொருளானது நாளமில்லா அமைப்புகளைச் சீர்குலைக்கக்கூடிய ஒரு நச்சு ஆகும். இவ்வகை நச்சு குழந்தைகளுக்குக் கடுமையான உடல்நலக்குறைபாட்டினை ஏற்படுத்தும்.

டைஎதிலெக்சில் மூலக்கூறு கொண்ட தாலோட்டுகள் (diethylhexyl phthalate) (DEHP) உள்ளிட்ட 5 வகைத் தாலேட்டுகளையும் குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய பொருள்களின் தயாரிப்புகளில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியச் சந்தைகளில் கிடைக்கக்கூடிய டயாபர்களைப் பரிசோதனை செய்ததில் DEHP எனக் குறிக்கப்படும் ‘தாலேட்டுகள்’ 2.36 பிபிஎம் முதல் 264.94 பிபிஎம் வரை இருந்துள்ளது கண்டறியப்பட்டதாக ‘டாக்சிக் லிங்க்’ அமைப்பின் ஒருங்கினைப்பாளர் அல்கா துபே (ALKA DUBEY) கூறியுள்ளார்.

டெல்லியிலுள்ள உள்ளூர் சந்தைகள் மற்றும் மருந்துக்கடைகளிலிருந்தும் இ காமர்ஸ் தளங்களிலிருந்தும் அதிகம் புழக்கத்திலுள்ள 20 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் NABL எனப்படும் தேசிய பகுப்பாய்வு ஆய்வு மையத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆய்வகத்தில் (SPECTRO ANALYTICAL LAB LTD, OKHTA, NEW DELHI) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

siragu diaper1பிறந்த குழந்தை முதல் வளரிளம்பருவத்தினர் வரை இத்தகைய டயாபர்களை (அரையாடைகளை)ப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக ‘தாலேட்டுகள்’ பாலிமர் எனப்படும் நெகிழியுடன் இணைக்கப்படாமலேயே குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் அரையாடைகளில் சேர்க்கப்படுகின்றன. இதனால் அந்த நச்சு இரசாயனம் எளிதாக வெளியேறுகிறது. இத்தகைய அரையாடைகள் குழந்தைகளின் உடலோடு ஒட்டிப் பிறப்புறுப்புகளுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதால் இதிலிருந்து வெளியேறும் தாலேட்டுகள் குழந்தைகளின் பிறப்புறுப்பு பகுதிகளில் உள்ள தோல்களால் உறுஞ்சப்பட்டு உடலுள் உட்புகும் ஆபத்தும் இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு மிக மோசமான உடல் தொல்லைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.

மேலும் இத்தகைய ‘தாலேட்டுகள்’ நாளமில்லா அமைப்புகளைப் பாதிப்பதோடல்லாமல் நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் இனப்பெருக்கக் கோளாறுகள் உள்ளிட்டப் பற்பல நோய்கள் வரவும் காரணமாக இருப்பதை அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது என ‘டாக்சிக் லிங்க்’ அமைப்பின் இணை இயக்குனர் சதீஸ் சின்ஹா கூறியுள்ளார். மேலும் இந்த நச்சு இரசாயனங்கள் உள்ளடக்கிய டயாபர்களை குப்பையில் தூக்கி வீசுவதால் நகராட்சிக் கழிவு நீரோட்டத்தில் கலந்து சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகளையும், சவால்களையும் ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் தெரிவிக்கிறார் .

இந்த ஆய்வு இந்தியாவில் முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகளவில் முக்கியமாகக் குழந்தைகளின் தயாரிப்புகளில் ‘தாலேட்டுகளின்’ சேர்மானத்தினைத் தடை செய்யத் தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேளையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவில் 5 வகையான (DEHP, DBP, BBP, DIDP, DNOP& DINP) தாலேட்டுகளைப் பயன்படுத்தத் தரங்களை நிர்ணயத்துள்ளது. இவை குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய பல்வேறுவகையான பொருள்களில் இருந்தாலும் பச்சிளம் குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய டயபரில் தாலேட்டுகள் இருப்பதனையும், இதனைப் பயன்படுத்துவதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்பதனையும் நினைக்கும்போது மிகுந்த வேதனையைத் தருவதாக ‘டாக்சிக் லிங்’ அமைப்பின் மூத்த திட்ட ஒருங்கினைப்பாளர் பியுஸ் மோஹாபத்ரா கூறியுள்ளார்.

சில நாடுகள் குழந்தைகள் பயன்படுத்தும் டயபரில் தாலேட்டுகளைச் சேர்ப்பது மற்றும் பயன்படுத்துவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதனை இந்த ஆய்வு கோடிட்டுக் காட்டுவதோடல்லாமல் இந்தியாவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எந்த முன்னனி நிறுவனமும் டயபர் உற்பத்திக்குத் தேவையான பொருள்களைப் பற்றியோ அல்லது டயபர் உற்பத்திக்குச் சேர்க்கப்படும் இரசாயனங்கள் குறித்த பட்டியலையோ டயபர் பாக்கெட்டுகளின் மேலுறையில் அச்சிடவில்லை என்பதையும் கோடிட்டுக் காட்ட விரும்புகிறது.

டயபர் உற்பத்தியாளர்கள் இது குறித்த பிரச்சனைகளை ஆராய்ந்தும், அவற்றினால் ஏற்படும் உடல் நலபாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் கேடுகளைக் கவனத்தில் கொண்டும் டயாபர்களில் தாலேட்டுகளைச் சேர்ப்பதனைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். மேலும் ‘தாலேட்டுகள்’ குறித்த கடுமையான கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் எனவும் டயபர் தயாரிப்புகளின் பேக்கேஜிங் மற்றும் இரசாயன சேர்மானம் குறித்த பட்டியலின் மீது தீவிர கண்காணிப்பும், சில கடுமையான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறோம்.
வருங்காலத் தலைமுறை வளமுடனும் நலமுடனும் வாழ இது உதவி செய்யும்.
இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டவை

1. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளில் 40% உள்ளூர் சந்தையிலும் 60% மாதிரிகள் நன்கு அறியப்பட்ட முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பிலிருந்தும் பெறப்பட்டவை ஆகும்.

2. இந்த ஆய்வில் இந்தியாவில் தர நிர்நயம் செய்யப்பட்ட Bis(2-ethylexyl) phthalates (DEHP), Di-butyl phthalate (DBP), Benzyl butyl phthalate (BBP), Diisodecyl phthalate (DIDP), Di-n-octyl phthalate (DNOP) & Diisononyl phthalate (DINP) தாலேட்டுகளோடு பிற ‘தாலேட்டுகளும்’ ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

3. சோதனை மேற்கொண்ட அனைத்து மாதிரிகளிலும் DEHP, DBP, BBP ஆகிய தாலேட்டுகள் நீக்கமற இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

4.’தாலேட்டுகள்’ அதிகப்படியாக அதாவது 302.25 பிபிஎம் வரை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

5.சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் அதிக நச்சுத்தன்மையுடைய DEHP தாலேட்டுகள் 2.36 பிபிஎம் முதல் 264.94 பிபிஎம் வரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

6. டயாபர் அரையாடைத் துணிகளில் மொத்த தாலேட்டுகளின் அளவானது 8,2 பிபிஎம் லிருந்து 302.25 பிபிஎம் அளவு இருந்த போது DBP எனப்படும் தாலேட்டுகளின் அளவானது 2.35பிபிஎம் முதல் 37.31 பிபிஎம் வரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

7. BBP இருப்பு பொதுவாக எந்த மாதிரிகளிலும் தென்படவில்லை. ஆயினும் ஒரே ஒரு மாதிரியி்ல் மட்டும் 3.24 பிபிஎம் அளவு இருந்தது.

8. DIBP வகைத் தாலேட்டுகள் மூன்று மாதிரிகளில் 1.92 பிபிஎம் அளவு முதல் 12.36 பிபிஎம் அளவு வரைக் கண்டறியப்பட்டது.

For more information and interviews please contact:

Piyush Mohapatra,
9873453242, piyush@toxicslink.org

Alka Dubey
7678590506, alka@toxicslink.org

Ipsita Baishya 6900925569, ipsita@toxicslink.org


சு.பாரதிதாசன், அருளகம், கோயமுத்தூர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குழந்தைகளுக்குத் தேவை ‘தாலாட்டு’. தேவையில்லை ‘தாலேட்டு’ தாய்மார்களே எச்சரிக்கை!”

அதிகம் படித்தது