மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கூடங்குளம் அணு உலையில் சேகரிக்கப்படும், அணுக்கழிவின் பேராபத்தை உணர்வோம்!

சுசிலா

Jun 22, 2019

siragu koodankulam1

தற்போது, தமிழ்நாட்டு மக்களாகிய நாம் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பல வழிகளிலும் பேராபத்து சூழ்ந்திருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. மீத்தேன், ஹைட்ரோகார்பன், 8 வழி சாலை, நியூட்ரினோ, கெயில் குழாய் பாதிப்பு, புதிய கல்விக் கொள்கை, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, குடிநீர் பிரச்சனை, தகுந்த பாதுகாப்பற்ற நிலையிலுள்ள கூடங்குளம் அணு உலை என ஏராளம் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தற்போது நம் மீது தாக்கப்படும் பேராபத்து என்னவெனில், அணுக்கழிவை கொட்டுவதற்கான மையத்தை கூடங்குளம் அணு மின் நிலையத்திலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று எடுக்கப்பட்டிருக்கும் முடிவு மிகவும் விபரீதமான ஒன்றாக இருக்கிறது. அதற்கு முன்பாக, சற்று சுருக்கமாக கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய தகவல்களைப் பற்றி பார்ப்போம்.

தமிழ் நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளத்தில் இந்திய அணுமின் கழகத்தின் நிர்வாகத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் உருவாகிய ஒரு திட்டத்தின் விளைவு தான் கூடங்குளம் அணு மின் நிலையம். இது 1988-ல், அன்றைய பிரதமர் திரு. ராஜிவ் காந்தியும், அப்போதைய ரஷ்ய நாட்டுப் பிரதமர் மிக்கைல் கார்பசேவ்வும் சேர்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். ஆனால், அதன் பிறகு, ரஷ்யா பல நாடுகளாக பிரிந்த நிலையில், இந்தியா, அணுக்கரு வழங்கும் குழுமத்தின் ஒப்புதல் பெறவில்லை என்ற காரணத்தை கூறி அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. ஆதலால் இத்திட்டம் பத்தாண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. ஒன்றுபட்ட ரஷ்யாவின், உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில் என்ற இடத்தில் நிறுவப்பட்டிருந்த அணுஉலை வெடித்து சிதறி, மிகப் பெரிய பாதிப்புகளை உண்டாக்கி விட்டது. பல லட்சக்கணக்கில் மக்கள் பாதிப்புக்குள்ளாயினர். இன்றளவும் கூட அதன் தாக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. மக்கள் வாழ தகுதியற்ற இடமாக அது ஆகிவிட்டபடியால், மக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாறிவிட்டார்கள் என்ற வரலாறு நம் கண் முன்னே பதிவு செய்திருக்கிறது. ரஷ்யா பல நாடுகளாக பிரிந்ததிற்கும் இந்த அணு உலை வெடிப்பும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. பிறகு, மீண்டும் இதற்கான ஆக்கபூர்வமான ஒப்பந்தம் 2001 ஆம் ஆண்டில் கையெழுத்தானது. மேலும் இந்திய பாதுகாப்பை கருதி, ஒரு கடற்படை தளத்தை நிறுவ வேண்டுமென்று முடிவாகி, 2004-ல் ஒரு சிறிய துறைமுகத்தை அமைத்தார்கள்.

siragu koodankulam2

அணுமின் நிலையத்திற்கான பாகங்கள், இந்த துறைமுகத்தின் வழியாகத்தான் கொண்டுவரப்பட்டன. இதற்கான போக்குவரத்து வசதிகள் குறைவு என்பதால் காலதாமத்துடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடைசியில் 2012 ஜூன் மாதத்தில், பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அப்பகுதி மக்கள், துவக்கத்திலிருந்தே, தங்கள் எதிர்ப்பை பல போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அணு உலை ஆபத்தை அம்மக்கள் நன்கு உணர்ந்திருந்ததால் கடும் எதிர்ப்பை காட்டியே வந்தனர். இருப்பினும், மக்கள் எதிர்ப்பை மீறி, 1000 மெகாவாட் அணுமின் திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட ஆரம்பித்தன. மேலும், தற்போது, அணுக்கரு வழங்கும் குழுமத்தின் ஒப்புதலை இந்தியா பெற்றிருப்பதால், மேலும் 1170 மெகாவாட் அணுமின் திறன்கொண்ட நான்கு உலைகளை நிறுவுவதற்கு, 2008 – ல், மீண்டும் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த அணுமின் நிலையங்களால், அதிகரித்திருக்கும் இந்தியாவின், மின்சார தேவை நிறைவு பெற்றுவிடும் என்றும் சொல்லப்பட்டது. தற்போது இரண்டு அணு மின் உலைகள் செயல்பட்டுவரும் நிலையில், மேலும் இரு உலைகளுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மற்றும் மேலும் இரு உலைகளுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதன்படி, 2013 முதல் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது. முதல் முறையாக, 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின்தொகுப்பில் சேர்க்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு, 2014 ஆம் ஆண்டு, முழு உற்பத்தித்திறனான, 1000 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. மூன்றாம், நான்காம் அணு உலைகள் பணிகள் தொடங்கப்பட்டு, 2024 ஆம் ஆண்டு நினைவடையும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அண்மையில், ஜப்பான் நாட்டின், புகுஷிமா டா இச்சி என்ற அணு ஆலையில் நடந்த விபத்து காரணமாக, ஜெர்மனி போன்ற நாடுகள் அணு உலைகளை மூட முடிவெடுத்திருக்கின்றன. இதனை கண்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மக்கள் தங்கள் எதிர்ப்பை கடுமையாக்கினார். இன்னமும் கூட, தங்கள் வாழ்வின் பாதுகாப்பிற்காக போராடிக் கொண்டுதானிருக்கிறார்கள்.

இது ஒரு புறமிருக்க, இந்நிலையில் தான், அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற கேள்வி கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இந்த கழிவுகளை வேறு இடத்தில், அதாவது அணு உலைக்கு வெளியே வைக்க வேண்டும் என்றும், அதற்கு 5 ஆண்டுகளுக்குள் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் 2012 ஆம் ஆண்டு, பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் தொடுத்த வழக்கிற்கு, உச்சநீதிமன்றம் 2013-ல் தீர்ப்பு வழங்கி, 15 நிபந்தனைகளை விதித்தது. அதில் மிகவும் முக்கியமானது ஐந்து ஆண்டுகால அவகாசம் தான். அது இன்று, 2018 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் கேட்டிருக்கிறது. அணு கழிவுகளை உலைகளிலேயே சேகரித்து வைப்பது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அணுக்கழிவுகளை உலைகளுக்குள்ளேயே சேகரித்து வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்பது அறிவியல் ஆய்வாளர்களின் கருத்து.

அணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் “ஆழ்நிலை கருவூலம்” (Deep Geological Repository) அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்று வரை இந்தியாவிடம் இல்லாத நிலையில் AFR ( Away from Reactor) போன்ற தற்காலிக வசதியை நம்பி தொடர்ந்து கூடங்குளத்தில் கழிவுகளை உற்பத்தி செய்வது மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறி வருகிறது. கூடங்குளம் அணுவுலையில் உள்ள எரிபொருள் கிடங்கு அதன் முழு கொள்ளளவை இன்னும் எட்டவில்லை என்றும் மேலும் 5ஆண்டுகள் கால அவகாசம் வழங்கினால் AFR வசதியைக் கட்டி முடித்துவிடுவோம் என அணு உலை ஒழுங்கு முறை ஆணையம் தந்து அறிக்கையில் கூறியுள்ளது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 2022ற்குள் AFR கட்டி முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். இதன் தொடர்ச்சியாக கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே Away From Reactor வசதியைக் கட்டுவதற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி நெல்லை மாவட்டம் இராதாபுரத்தில் நடைபெறும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இது மிகவும் பேரதிர்ச்சியான விசயம்.

கூடங்குளத்தில் நடக்கும் இந்த விவகாரங்கள் குறித்து மாநில அரசு துளியும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. உலகம் முழுவதும் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைக்க தொழில்நுட்பத்தை எந்த நாடுகளும் கண்டுபிடிக்கமுடியவில்லை, அது பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில் சோதனை எலிகளாக தமிழ் மக்களை மாற்றும் இந்த விபரீதமான விசயத்திற்கு, கூடங்குளத்தில் AFR அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது. நிரந்தர கழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரையில் கூடங்குளத்தில் இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும், மேற்கொண்டு நான்கு உலைகள் கட்டுவதையும் கைவிடவேண்டும் வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணுஉலை விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அதன் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புக்கள்தான் மிக அதிகம் என்றும், மேலும் அணுக்கழிவுகள் அழிவதற்கு 20,000 ஆண்டுகள் ஆகுமென்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.அணுஉலை கழிவுகளை கையாளும் தொழில் நுட்பம் இல்லை என்று கடந்த ஆண்டே வெளிப்படையாக மத்திய அரசு ஒத்துக் கொண்ட நிலையில், மத்திய அரசும் தமிழக அரசும் இனியும் காலம்தாழ்த்தாமல், பாதுகாப்பற்ற, பேராபத்தை விளைவிக்கும் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

நமக்கு, கண் முன்னே ஆதாரமாக இருக்கும் ஒரு செய்தியைப் பார்ப்போம். ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் ஓர் அழகிய மலைகிராமப் பகுதியான ஜாதுகோடாவில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த 35,000-க்கும் மேற்பட்ட மக்கள், விவசாயத்தை முதன்மையாகக் கொண்டு, வாழ்ந்துவந்த நிலையில், 1951 – ம் ஆண்டு, அந்த மக்கள் வாழ்ந்து வந்த மலைப் பகுதிகளில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதன் பிறகு, 1967-ம் ஆண்டு யுரேனிய சுரங்கத்தையும், உற்பத்தித் தொழிற்சாலையையும், இந்தியாவிலேயே முதன்முதலாக, யுரேனியம் கார்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற அரசு நிறுவனம் நிறுவியது.

யுரேனிய சுரங்கம் அமைக்க அப்பகுதி மக்களின் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டன. மேலும், விவசாயம் தவிர வேறெதுவும் தெரியாத அந்த அப்பாவி மக்களை, வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்ற மயக்க சொற்களைக் கூறி, தினக்கூலிகளாக வேலையில் அமர்த்தியது அந்த நிறுவனம். இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாத அந்த மக்களை, யுரேனிய மூலப்பொருளை எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், கையாள பயன்படுத்தினர் என்பது மிகவும் கொடுமையான ஒன்று.

ஒவ்வோர் ஆண்டும் யுரேனியம் ஆலையில் இருந்து வெளியேறும் 3,60,000 டன் யுரேனியம் உற்பத்திக் கழிவுகள், செயற்கையாக அமைக்கப்பட்ட குட்டைகளில், எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் கொட்டப்பட்டன. அந்தக் கழிவுகளில் யுரேனியம் மட்டுமல்ல, தோரியம் 230, ரேடியம் 226, ரேடான் 222 போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய கதிரியக்கத் தனிமங்களும் இருந்தன என்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

அணுக்கழிவுகள் செல்லும் நீர்க் குழாய்களில் ஆங்காங்கு உடைப்பு ஏற்பட்டு, அந்தக் கதிரியக்க சக்தி கொண்ட நீர், சுற்றியுள்ள ஏரி, குளங்களில் கலந்தன. யுரேனிய கழிவுக்குட்டைகள் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தடி நீரையும், அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து நீர் ஆதாரங்களையும் மாசுபடுத்தின.

யுரேனிய அணுக்கழிவு வெளியிடும் காமா கதிர்வீச்சு; மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் கதிரியக்க பாதிப்பு; யுரேனிய ஆலை வெளியேற்றும் கதிர்வீச்சுப் புகை என தொடர்ச்சியாக அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் பயங்கரமான கதிர்வீச்சால் முற்றுகையிடப்பட்டன. கதிர்வீச்சு பாதிப்புகள் குறித்து எந்த ஓர் அடிப்படை அறிவும் இல்லாத அப்பகுதி மக்கள், வழக்கம் போல கதிர்வீச்சு கலந்த அந்த நீர்நிலைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். அதன் விளைவு, அங்கு பிறகும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் புற்று நோய், காசநோய், சுவாச கோளாறு, தோல் சிதைவு, உறுப்பு சிதைவு, முளைவளர்ச்சியின்மை, கருச்சிதைவு என மரணத்தின் வாயிலுக்கு கொண்டு சென்றன. அதன் பிறகு விழிப்புணர்வு காரணமாக, மக்களின் தொடர் போராட்டங்களுக்கு பின்பு, 2014-ல் ஆலைக்கு தடை விதிக்கப்பட்டு, மூடப்பட்டது. ஆனால், அம்மக்களின் தலையில் விழும் பேரிடியாக, 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஆலையை திறக்க அம்மாநில அரசு அனுமதியளித்திருக்கிறது.

siragu koodankulam3

மலைப்பகுதியில் வாழும் குறைந்த மக்கள்தொகை கொண்ட இடமான ஜாதுகோடாவிற்கே இந்த நிலைமை என்றால், தமிழகத்தில் அணுக்கழிவுகளை சேமிக்கும் கிடங்கு அமைத்தால் என்னவாகும் என்று நினைத்துப் பார்க்கவே பேரச்சமாக இருக்கிறது!

இதனை, இப்போது நாம் தடுக்க தவறினால், தென் தமிழகத்தின் கடைக்கோடி பகுதி, மக்கள் வாழ தகுதியற்ற நிலமாக மாறிவிடும் ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். பொது மக்கள், அனைத்துக் கட்சிகள், சுற்றுசூழல் அமைப்புகள், அறிவியல் ஆய்வாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, மத்திய, மாநில அரசுகளுக்கு வலிமையான தொடர் போராட்டங்கள் மூலம், அழுத்தம் கொடுத்து, அணுக்கழிவுகளை அணு உலைகளில் சேமித்துவைக்க முயலும் இந்த கொடுமையான ஏற்பாட்டை தகர்த்தெறிய முற்பட வேண்டும். இல்லையேல், தமிழகம் சுடுகாடாக மாறுவது உறுதி செய்யப்பட்டுவிடும்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கூடங்குளம் அணு உலையில் சேகரிக்கப்படும், அணுக்கழிவின் பேராபத்தை உணர்வோம்!”

அதிகம் படித்தது