மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கூடு_ சிறுகதை

அருண் காந்தி

Aug 1, 2015

kooduசெல்வரத்தினம் அன்று ரெஸ்டொரண்டுக்கு அவனைக் கூட்டிக்கொண்டுவந்து தன் முன்னால் நிறுத்துவார் என ப்ரீத்தன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பு ஹம்பர்க்-ப்றேமன் ஆட்டோபானில் ஒரு டாங்க் ஸ்டெல்லேயில் எரிபொருள் நிரப்ப காரைத் திருப்பினான் ப்ரீத்தன். பக்கத்தில் இருந்த அவனது உடனுறை தோழி ஹெய்டி, காரை நிறுத்தியதும் டாங்க் ஸ்டெல்லேயை ஒட்டியிருந்த கியோஸ்க்கினுள் பாய்ந்தோடினாள். ஒரு கையில் கோலாவும் மறு கையில் ஒரு பாக்கெட் பால்மாலுடனும் அவசரமாக காருக்குள் ஏறினாள். அப்போது ப்ரீத்தனுக்கு பின்னாலிருந்து அண்ணா! என்றொரு குரல் கேட்டது. அழுக்கேறிய சப்பாத்தும், சரியாக பூட்ட முடியாத மேலங்கியும் வாரப்படாத தலையுமாக கோகுலன் நின்றிந்தான், ‘அண்ணா, தமிழா?’ என்று கேட்டவனின்  ஆம், இல்லை என்று எதுவும் கூறாமல் விருட்டென காரைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான் ப்ரீத்தன். அதன்பிறகு வீட்டை அடையும்வரை தனது முகத்தை அவன் காரின் மையக்கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவேயில்லை. அப்போது அப்படி செய்தாலும் ப்ரீத்தனை அன்று முதல் ஒரு லேசான குற்ற உணர்வு அரித்துக் கொண்டுதானிருந்தது. ஹெய்டி  மட்டும் உடனில்லாதிருந்திருந்தால் கோகுலனிடம் நிதானமாக கதைத்திருக்கலாம் என அடிக்கடி தன்னை நியாயப்படுத்திக் கொண்டான்.

எண்பதுகளில் ஜெர்மனியின் ஹம்பர்க் துறையில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிறிதும் இரக்கமின்றி அதே கதியில் கனடாவுக்கு கப்பலேற்றப்பட்டனர். அவர்களுள் எஞ்சியவர் மூவர் மட்டுமே. செல்வரத்தினம், அவனது நண்பன் அந்தோணி, அந்தோணியின் தங்கை நவமணி. அப்போது நவமணி பதிமூன்று வயது சிறுமி. செல்வரத்தினத்திற்கும் அந்தோணிக்கும் வயது  இருபத்தி மூன்று. அவர்களது படகு ஹம்பர்க்கை அடைந்தபோது செல்வரத்தினமும் நவமணியும் கடுமையானதொரு விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். உயிரைக் காக்க அவசர சிகிச்சை தேவைப்பட வேறு வழியின்றி தரையிறக்கப்பட்டனர்.  பிறகு  ஜெர்மானிய குடிவரவின் கருணையினால் அவர்களது தஞ்ச கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிரந்தரக் குடியுரிமை பெற்றபின் அந்தோணி, செல்வரத்தினத்திற்கும் நவமணிக்கும் திருமணம் செய்து வைத்தான். செல்வரத்தினம்-நவமணி தம்பதியினரின் இரட்டைப் பிள்ளைகளாக ப்ரீத்தனும் ஜனனியும் பிறந்தனர். செல்வரத்தினமும் நவமணியும் அனுமதிக்கப்பட்டிருந்த அதே எப்பெண்டோர்ஃப் மருத்துவமனையில் தான்  பிரீத்தன் இப்போது பயிற்சி மருத்துவராக பணிபுரிகிறான். அதில் அவ்விருவருக்கும் உள்ள பெருமிதம் விவரிக்க முடியாதது.

ப்றேமனில் உள்ள தமிழ்க்கடையொன்றிற்கு சரக்கு எடுக்க செல்லும்போதுதான் அங்கே கோகுலனைச்  சந்தித்தார் செல்வரத்தினம். ப்ரீத்தனின் வயதை ஒத்த அந்த இளைஞனைப் பார்க்கையில் முப்பது வருடங்களுக்கு முன் அவர் ஹம்பர்க் துறையில் வந்திறங்கியது நினைவுக்கு வந்தது. அவனிடம் “இப்போது ஏன் நீ நாட்டை விட்டு வந்தாய்?” என செல்வரத்தினம் கேட்டதற்கு அவன் சொன்ன பதில் அவரை வெகுவாக பாதித்தது. “அண்ணா இப்போது மட்டும் அல்ல,  இனி எப்போதும் சிங்களவன் நம்மை மண்வெட்டி பிடிக்க விட மாட்டான்” என விரக்தியாக கண்களில் நீர் ததும்ப சொன்னான் கோகுலன். ரெஸ்ட்டொரண்டில் வேலைக்கு ஏற்கனவே நல்லதொரு பணியாளை தேடிக்கொண்டிருந்தவர் கோகுலனை கையோடு கூட்டிக்கொண்டு போனார். அவன் வந்தது முதல் தனியாளாக அல்லாடிக் கொண்டிருந்த செல்வரத்தினதிற்கும் நவமணிக்கும் புதுத்தெம்பு வந்தது. பரிமாறுதல் முதல் கழுவிப் பெருக்கி துடைப்பதுவரை  கோகுலன் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தான். நான்கைந்து ஆண்டுகளில் ரெஸ்ட்டொரண்டிலும் செல்வரத்தினம் குடும்பத்திலும் தவிர்க்க முடியாதவனாக மாறியிருந்தான் கோகுலன்.

செல்வரத்தினம் மண்ணை விட்டு உறவுகளை விட்டு அன்று ஒண்டிக்கட்டையாய் வெளியேறியதன் வலியினை குடும்பம் பிள்ளைகள் என்ற இந்த முப்பதாண்டு கால இல்வாழ்க்கையிலும் அதன் பூரிப்பிலும் இப்பொழுதுதான் ஓரளவுக்கு மறந்திருந்தார். அந்தப பூரிப்பிற்கு கோகுலனின் வருகையும் ஒரு காரணம். அவன் வந்து சேர்ந்த நாள்முதல் அவர் மனம் கோணும்படி இதுவரை நடந்து கொண்டதில்லை, ப்ரீத்தனைக் காட்டிலும் அவர் நினைக்கும் பிள்ளையாக அவன் இருந்தான். நவமணியும் கோகுலன் மீது அளவிலா அன்புகொண்டிருந்தாள். போரில் மரணித்த தனது கடைசித் தம்பி இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பான் என செல்வரத்தினத்திடம் அடிக்கடி சொல்வாள். பிரிட்டனுக்கு படிக்கப் போயிருக்கும் ஜனனி திரும்பி வந்ததும் கோகுலனுக்கு மனம் முடித்து வீடும் கடையுமாக அவர்களைத் தங்களுடனேயே வைத்துக்கொள்ளவேண்டும் என்றொரு மனக்கணக்கும் போடிருந்தாள்.

இப்படியிருக்கையில் தான் ப்ரீத்தன் ஒரு நாள் செல்வரத்தினத்திற்கு ஒரு பெரும் அதிர்ச்சியைத் தந்தான். அது ஹெய்டியின்  விருப்பப்படி இன்னும் இரு மாதங்களில் இருவரும் அவுஸ்த்ரேலியாவில் குடியேறப் போவதாக சொன்னான். நவமணி எவ்வளவோ குறுக்கே கிடந்தும் தன்  முடிவில் தீர்க்கமாக இருந்து  ஹெய்டியுடன் அவுஸ்த்ரேலியாவில் குடியேறினான். பிரிட்டனிலிருந்து திரும்பவந்த ஜனனி கோகுலனை மணக்க மறுத்துவிட்டாள். செல்வரத்தினம் நவமணிக்கும் வயதாகிக்கொண்டே போக வேறு வழியின்றி மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

ஆண்டுகள் கடந்தோடின. ப்ரீத்தனும் ஜனனியின் திருமணத்திற்கு வந்ததோடு சரி. அவ்வப்போது  செல்வரத்தினமே ப்ரீத்தனுக்கு அழைப்பு எடுத்தால்தான் உண்டு என்றொரு நிலை ஏற்பட்டிருந்தது. தனிமையும் முதுமையும் செல்வரத்தினம் நவமணி தம்பதிகளை ஆட்கொள்ளத் துவங்கியது. தனது ரெஸ்ட்டோரெண்டை மருமகனிடம் கொடுத்துவிடலாமா என யோசித்தார். அப்படியானால் கோகுலனுக்கு ஒரு நல்ல வாழ்வை அமைத்துக் கொடுக்கவும் வேண்டுமே என குழம்பியிருந்தார். அப்படி யோசித்து கட்டிலில் சாய்ந்திருந்த ஒரு மாலையில்தான் பேரிடியான ஒரு துயரச்செய்தி அவர் காதுகளை எட்டியது. பிரீத்தன் போதைப் பொருட்களை வைத்திருந்த காரணத்தினால் அவுஸ்த்ரேலிய போலிசாரால் கைது செய்யப் பட்டானாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை உறுதி செய்யபடும் என்ற செய்தியைப் பார்த்து துடிதுடித்துப் போனாள் நவமணி. ஈன்றெடுத்த பிள்ளையின் மரண திகதியை அறிந்திடும் நாள் வந்துவிடுமோ என்ற பயத்தில் எந்தவொரு தாயால்தான் நிலைத்திருக்க முடியும். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே ஓரிரவில் பூரண அமைதி கொண்டாள் நவமணி. பின்னாளில் அவள் அப்படி ஒரு நிலையை எய்தியதே நல்லது என என்னும்படியாகத் தான் அமைந்தது ப்ரீத்தனின் முடிவு.

திரண்டு வந்த மேகம் மழை ஏதுமின்றி கலைந்து போனது போல அழகாகக் கூடி வந்த வாழ்வு ஏன் சிதைந்தது என தனக்குள்ளேயே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டார் செல்வரத்தினம். கோகுலனிடம் கடைசியாக தன்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும்படி கோரினார். அவர் முன்னே கண்ணீர் மல்க நின்றிருந்த கோகுலனுக்கு வாழ்வில் தாங்கள் இருவரும் புறப்பட்ட அதே புள்ளியிலேயே மறுபடியும் வந்து நிற்பதாகத் தோன்றியது.


அருண் காந்தி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கூடு_ சிறுகதை”

அதிகம் படித்தது