மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சங்க இலக்கியத்தில் உளவியல்

பேரா ப. மணிமேகலை

Nov 16, 2019

siragu enkunaththaan2
‘வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி’ என்பார் மகாகவிபாரதி. அத்தகைய வளம் நிரம்பியது தமிழ்மொழி. ஆனாலும் உலக அளவில் செவ்வியல் மொழி-அதாவது செம்மொழி என்று தமிழ்மொழி அறிவிக்கப்படவில்லை. கிரேக்கம், இலத்தீனம், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம் ஆகியன செம்மொழிகள் என அறிவிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டன. ‘செம்மொழி’ என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உலக அளவில் 11-தகுதிப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அத்தகைய 11-தகுதிப்பாடுகளும் தமிழ்மொழிக்கு உண்டு.

1.    தொன்மை, 2. தனித்தன்மை, 3. பொதுமைப்பண்பு, 4. நடுநிலைமை, 5. தாய்மைத்தன்மை, 6. பண்பாடுகலை பட்டறிவு இவற்றின் வெளிப்பாடு 7. பிறமொழித் தாக்க மிலாத் தனித்தன்மை 8. இலக்கியவளம் 9. உயர்சிந்தனை 10. கலை, இலக்கியத்தனித்தன்மை வெளிப்பாடு, பங்களிப்பு 11. மொழி, மொழி இயல்கோட்பாடு- என்ற 11 தகுதிப்பாடுகளில் ‘இலக்கியவளம்’ என்னும் கோட்பாடு குறித்தும், அது எவ்வாறு தமிழில் வெகுசிறப்பாக அமைந்துள்ளது என்றும் இச்சிறு கட்டுரையில் காண்போம்.

2.    இலக்கியப் படைப்பு என்பதற்கு ‘உருவம்-உள்ளடக்கம்’ என்ற இரண்டும் வேண்டும். இந்த இரண்டும் சேர்ந்ததுதான் ‘படைப்பு’ ஆகும். இவ்விரண்டனுள் ‘உருவம்’ முக்கியமா? உள்ளடக்கம் முக்கியமா? என்ற ஓர் அபூர்வமான விவாதம் உலக அளவில், பல்வேறு அரங்குகளில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் இலக்கியப் படைப்புக்கு இரண்டுமே முக்கியம் என முடிவு செய்யப்பட்டது. அந்த  உலகளாவிய விவாதத்தில் உருவம் எதுவாக இருந்தாலும் ‘உள்ளடக்கம்’ மிகவும் கூர்மையாக, மிகவும் நளினமாக, மிகவும் இனிமையாகச் சொல்லப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஒரு படைப்பாளி தான் சொல்லவரும் கருத்தை பல்வெறு உத்திகளில்  சொல்ல முனைவார். அத்தகைய உத்திகளால் ஒன்றுதான் ‘உளவியல் உத்தி’ என்பது.

3.    இலக்கியப்படைப்பில் ‘உளவியல் உத்தி’ என்பது பற்றி, தமிழின் முதல் நூலான தொல்காப்பியம் மிக விரிவாகவே பேசுகிறது. தமிழ் ஆராய்ச்சிப் பேரறிஞர்கள் ‘உளவியல்‘ உத்திப்பற்றி மிக விரிவாகவே எடுத்துரை செய்துள்ளனர். ‘தமிழ்க்காதல்’ என்ற தமது ஆய்வு நூலில் பேரறிஞர் வ.சு.மாணிக்கனார், ‘என் ஆராய்ச்சியை ‘உளவியல் ஆய்வாகவே செய்கிறேன்’ என்பார். உளவியல் என்பது என்ன? என்று ஒரு முக்கியமான வினாவை எழுப்பிக்கொண்டு, ‘அது ஒரு தனிமனக்கூறு’ என்பார். இப்படியான ‘தனி மனக்கூறு’தான்  தமிழின் அக இலக்கியங்கள் அனைத்திலும் விரவிக் கிடக்கின்றன. இத்தகைய ‘தனிமனக் கூறு பற்றிப் பிறிதோரிடத்தில் அறிஞர் வ.சுப.மா அவர்கள் ‘நெஞ்சியல்’ என்பார்.

4.    ‘தனிமனக்கூறு’ அதாவது ‘நெஞ்சியல்’ என்பது இலக்கியப்படைப்புக்களில் எவ்வாறு, எந்த உருவில் வெளிப்படும்? என்ற வினா முக்கியமானது. இந்த வினாவுக்குத் தொல்காப்பியம் விடைசொல்கிறது. உருவகமாக, உவமையாக, உள்ளுறையாக, இறைச்சியாக உளவியல் பாங்கு வெளிப்படும் என்பதே தொல்காப்பிய விளக்கம். உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி என்ற பொருள் புலப்பாட்டு வரிசையில் ‘முன்னம்’ என்ற உத்தி மிகுந்த இன்றியமையாமை பெறுகிறது. அதாவது தொல்காப்பியம் குறிப்பிடும் ‘முன்னம்’ என்பது ‘உளவியல்’ பூர்வமான இலக்கிய வெளிப்பாட்டு அம்சம் எனக் கொள்ளலாம்.

5.    ‘இவ்விடத்து, இம்மொழி, இவர் இவர்க்கு உரிய என்று அவ்விடத்து அவரவர்க்கு உரைப்பது முன்னம்’ (தொல். 1443ஆம சூத்திரம்) தொல்காப்பியம் சொல்லும் இந்த நூற்பாவுக்கு அறிஞர் கூறும் பொருள்விளக்கம் முக்கியமானது ஆகும். அறிஞர் தமிழண்ணல் அவர்கள், ‘முன்னம் என்பது பொதுவாகக் ‘குறிப்பு’ என்றும், ஒருவரது ‘உள்ளக்குறிப்பு’ என்றும் பொருள்படும்’ என்பார். ‘முன்னம்’ என்ற கவித்துவ அமைப்பு முறைபற்றிச்சொல்ல வந்த அறிஞர் ச. வே. சுப்பிரமணியன் அவர்களும், ‘இவ்விடத்து இம்மொழியை, இவர்க்குச் சொல்லத் தகும் என்று குறித்து, அவ்விடத்து. அவரவர் தம்மொழியை உரைப்பது முன்னம்‘ என்று உரைக்கக் காணலாம்.

6.    இத்தகைய ‘முன்னம்’ என்ற ‘உளவியல்’ சார்ந்த அழகியல் கவிதைகளுக்குச் சங்கத்தமிழ் அகத்திணைப்பாடல்களே மிக உயரிய சான்றுகளாக விளங்குகின்றன. இந்தச் சிறிய கட்டுரையில் மூன்று சான்றுகளைக் காண்போம். ‘அகவன் மகளே , அகவன் மகளே
மனவுக்கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே , பாடுக பாட்டே!
இன்னும் பாடுக பாட்டே, அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!’
என்ற ஒளவையார் பாட்டு, ‘உளவியல்’ அமைப்புக்கும் அழகுக்கும் புகழ்பெற்ற பாட்டு. தொல்காப்பிய, சங்க இலக்கிய ஆய்வாளர்கள் அனைவரும் சுட்டிக்காட்டும் பாட்டு இந்தப்பாட்டு தோழி பாடுவதாக அமைகிறது.

siragu ilakkiya kaadhal1

‘பாட்டுப்பாடுகிற கட்டுவிச்சியே, நீ மேலும் மேலும்பாடு. தலைவனுடைய குன்றம் பற்றிய பாடலை நீ மறுபடியும் பாடு’ என்று தோழி கேட்கிறாள். ஐந்தே ஐந்து அடிகள் கொண்ட குறுந்தொகைச் சிறிய பாட்டில், தோழி, ‘தலைவனுடைய மலையைப்பற்றி மறுபடியும் பாடு என்று ஏன் கேட்கிறாள்? இந்தக் கவித்துவ அமைப்புதான் ‘முன்னம்’ என்ற அழகமைந்த ‘உளவியல்’ அமைப்பு ஆகும். ‘உளவியல்’ பாங்கும் அழகும் அமைந்த இந்தப்பாட்டுக்கு அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள குறிப்புரைகள் சிந்திக்கத் தக்கவை. ‘தோழி, இடைப்புகுந்து உரைக்கிறாளே, அது ஏன்?
‘தோழி ஏன் அவர் மலையைப்பாடுக என்று கேட்கிறாள்? என்று தாய் சிந்திக்கத் தொடங்கிவிடுவாள்’ -என்று அறிஞர் வ.சுப.மா அவர்கள் குறிப்பு எழுதினார்கள். ‘அவர்’ என்ற சொல்லைக் கேட்டதும் தாய்க்கு ‘ஆராய்ச்சி’ பிறந்துவிட்டது என்று அறிஞர் தமிழண்ணலும் எழுதினார்கள். ஐந்து அடிகள், பத்தொன்பது சீர்கள் கொண்ட இந்தச் சிறிய பாட்டுக்குள் எத்தனை பெரிய உளவியல் நாடகம்!

 ‘முன்னம்’ என்ற அழகியல் பொருந்திய உளவியல் பாட்டுக்கு இன்னொரு சான்றாக மற்றுமொரு பாட்டு, ஐங்குறுநூறு , 203ஆம்பாட்டு, குறிஞ்சி கபிலர் தீட்டிய அழகிய சொல்வோவியம்.
‘அன்னாய் , வாழி, வேண்டு, அன்னை, நம்படப்பைத்
தேன் மயங்கு பாலினும் இனிய –அவர்நாட்டு
உவலைக் கூவற் கீழ்
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே!’

தலைவனோடு தலைவி உடன்போய், அவனை மணம் செய்துகொண்டு, தாய்வீட்டுக்கு வருகிறாள். அவளைப் பார்த்த தோழி, ‘நீ உன் தலைவனோடு போய்விட்டாய், அவனுடைய நாட்டில் கிணற்று நீர் நல்ல நீர் இல்லையாமே, இலைகளும், தலைகளும் விழுந்து அழுகிப்போன தண்ணீர்தான் கிடைக்குமாமே! நமது நாட்டில், தோட்டத்தில், தேனும் பாலும் கலந்தது போன்ற தண்ணீர் குடித்தாய்! அப்படியிருக்க, உன் தலைவனுடைய ஊரின் கிணற்று நீரை எப்படி அருந்தினாய்?’ என்று கேட்டாள் அவளுக்குத் தலைவி சொன்ன மறுமொழிதான் இந்தப்பாட்டு ‘நீ சொல்வதுபோல, அவர் நாட்டில் கிடைக்கும் தண்ணீர் இலை மக்கியதும், விலங்குகள் கலக்கியதுமாக இருக்கலாம். ஆனால் அதுதான், எனக்கு இனிமை தந்த தண்ணீர் ‘ என்று தலைவி சொல்கிறாள். ஐங்குறுநூறு- இந்த நான்கு அடிப்பாட்டுக்கு உரை எழுதிய உரையாசிரிகள், ‘இந்தப்பாட்டு ஓர் அழகிய உளவியல் பாட்டு, இன்ப உணர்வுக்கும், துன்ப உணர்வுக்கும் மனம்தான் காரணம், உளவியல் ரீதியாக தலைவி துன்பச் சூழ்நிலையை இன்பச் சூழ்நிலையாக மாற்றிக்கொள்கிறாள்’ என்று எழுதினார்கள்.

சங்க இலக்கியத்தில் ‘உளவியல் பாங்கு’ அல்லது ‘சிறப்பு’ என்பது கூற்று நிலைபற்றியதும் ஆகும். எல்லாக் கருத்துக்களையும் எல்லாரும் கூறிவிடமுடியாது. நினைத்த கருத்துக்களை நினைத்தவாறும் கூறிவிடமுடியாது. இந்த வரையறை ‘உளவியல்‘ தொடர்பானது. ஒரு சூழ்நிலையில் நற்றாய் பேச முடியாத நிலையில், அவளது நிலைப்பற்றித்தோழி எடுத்து மொழிகிறாள். இவ்வாறு ஒரு பாத்திரத்த்pன் நிலை பற்றி வேறு ஒரு பாத்திரம் பேசுவதைக் ‘கொண்டெடுத்து மொழி’ என்று தொல்காப்பியம் (1447)குறிப்பிடுகிறது. இத்தகைய ‘கொண்டெடுத்து மொழி‘  அமையும் இடம்பற்றி விளக்கும் இடத்தில் டாக்டர் ஆ. அமிர்தகௌரி (சங்க இலக்கியத்தில் உரையாடல்) ‘உரையாடல் பண்பு மிகுதியும் ஒளிர்கிறது‘ என்று எடுத்துக்காட்டுவார் . இத்தகைய  கொண்டெடுத்து மொழி’ அமைந்த உளவியல் ரீதியான அழகிய சான்றுக்கு அகநானூறு ஊட்டியார் பாட்டு (68) அறிஞர்களால் எடுத்துக்காட்டப்படுகிறது. தலைவன் இரவில் தலைவியைச் சந்திக்க வந்து நிற்கிறான். அவனுடைய வரவைத் தலைவிக்கு அறிவிக்க வேண்டும். இந்த நிலையில் அன்னை துயில்கிறாளா, துயிலாதிருக்கின்றாளா என்று அறிந்து கொள்ளவேண்டும். தான், எவ்வாறெல்லாம் உரை செய்து, அன்னை தூங்குகிறாள் என்று ஆராய்ந்தேன் என்று விளக்கி, தோழி உரை செய்வதே இந்தப்பாட்டு. இது தோழி ‘துயில் ஆராய்ந்த முறை’ என்று அறிஞர்கள் எடுத்துக்காட்டுவர். இத்தகைய ‘கொண்டெடுத்து மொழி’ அமையும் இடத்தில் ‘ஒரே களத்தில் இரண்டு காட்சிகள் தோன்றும்‘ என்று டாக்டர் ஆ. அமிர்தகௌரி சுட்டிக்காட்டும் இடம் முக்கியமானது ஆகும்.

இத்தகைய அழகியலும் உளவியலும்தான் தமிழ்ச் சங்க இலக்கியத்தை உலகளாவிய உயரத்தில், உயர்தனிச் செம்மொழிஎன்ற உச்சத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது. உளவியலும் அழகியலுமாய் அமைந்து மிளிர்கின்ற சங்க இலக்கியப் பாடல்களை வாசிக்குபோது பிரெஞ்ச் நாட்டுச் சிந்தனையாளரும், அவர்சொன்ன முத்திரை வாக்கியமும் தான் நினைவுக்கு வருகின்றன. அவர் சொன்னார்,
பிரெஞ்ச் நாட்டுச் சிந்தனையாளர் ‘மலார்மே’ கூறிய இந்த முத்திரை வாக்கியத்தைத் தமிழ்ச் சங்க இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து மேலும் மேலும் ஆராய்வது நமது கடமையாகும்.


பேரா ப. மணிமேகலை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்க இலக்கியத்தில் உளவியல்”

அதிகம் படித்தது