மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சங்க காலத் தமிழரின் விளையாட்டுக்கள்

இல. பிரகாசம்

Apr 2, 2016

tamilargalin-vilayaattu9மனித இனத்தில் விளையாட்டும் விளையாட்டுக்கள் எப்பொழுதும் முக்கிய இடங்களை வகித்துவருகின்றன. அவற்றைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் அநேக இடங்களில் பரவியுள்ளன. சங்ககால விளையாட்டுக்கள் வாழ்வில் பெரும்பாலும் விளையாட்டை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல் அவர்களது வீரத்தை பறைசாற்றுபவையாக இருந்துள்ளன. அவைகள் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு இப்பகுதியில் காணலாம். மேலும் பெண்கள் விளையாட்டுக்கள் எப்படிப்பட்டவையாக இருந்துள்ளன என்பதையும் இப்பகுதியில் காணலாம்.

  1. புனலாடுதல்:

பெண்கள் பலர் சூழ்ந்து நிற்க ஆடவர்கள் தங்கள் வீரத்தை காட்டும் விதமாக நீர்த்துறை அருகே தாழ்ந்த கிளைகளையுடைய மருத மரத்தினின்று ஆழமிக்க கிணற்றுக்குள் பாய்ந்து மூழ்கி அக்கிணற்றின் அடியில் இருக்கும் மணலை எடுத்து அங்கு சூழ்ந்திருந்த பெண்களிடம் தம் வீரத்தைக் காட்டும் விதமாக அம்மணலை நுகர்ந்து காட்டியதாக புறநானூறு பாடலின் வாயிலாகவே நமக்கு ஆதாரம் கிடைக்கிறது. அவற்றின் தன்மையைப் பற்றியும் அழகுற விளக்குகிறது.

“இனிநினைந்து இரக்க மாகின்று திணமணல்

செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்

தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து

தழுவுவழித் தழீஇ”

என்பதன் மூலம் பெண்கள் அக்கிணற்றைச் சுற்றி நின்றுகொண்டு ஆடியதையும் விளக்குகிறது. அதே பாடலில் வேறொரு வரிகளில் மேலும்

“உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து

நீர்நணிப் படிகோடு ஏறிச் சீர்மிகக்

கரையவர் மருளத் திரையகம் பிதிர

நெடுநீர்க் குட்டத்துத் துடுமென பாய்ந்து

குளித்துமணற் கொண்ட கல்லா இளமை

அளிதோ தானே” (புறம்- 243)

என்பதன் மூலமும் மிக உயர்ந்து வளர்ந்த மருத மரத்தின் தாழ்ந்து இருக்கின்ற கிளைகளிலிருந்து சீரிப்பாய்ந்து அதனடியில் உள்ள மணலை எடுத்துக் காட்டினர் என்பது விளங்குகிறது. இப்பாடலானது முதிய வயதுடையவர் தம் இளமைக்கால நிகழ்வுகளை மீண்டும் நினைவு கூர்கின்ற விதத்தில் இப்பாடலின் ஆசிரியர் தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

பெரும்பாணாற்றுப்படையிலும் புனலாடுதல் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கிறது.

“வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ

புனல் ஆடு மகளிர் இட்ட பொலங்குழை” ( பெரும்பாணாற்று-311-312)

என்பதன் மூலம் பெண்கள் புனலாடினர் என்று ஆதாரம் நமக்கு கிடைக்கிறது.

ஆடவரும் பெண்டிரும் புனலாடுதல் பற்றிய குறிப்பு எட்டுத்தொகை நூலான ஐங்குறுநூறு நூலிலும் காணக்கிடைக்கிறது. அவை

“சூது ஆர் குறுந்தொடி சூர்அமை நுடக்கத்து

நின் வெங்காதலி தழீஇ பொருநை

ஆடினை என்ப புனலே” (ஐங்குறு-71) என்பதன் அறியலாம்.

  1. வட்டாடல்:

அக்காலத்தில் சிறப்புற்றிருந்த விளையாட்டுகளில் ஒன்று வட்டாடுதல். இவ்வட்டாட்டமானது காய்களை நகர்த்தி விளையாடும் ஆட்டமாகும். வயதானவர்கள் இதனை விளையாடினர் என்பதற்கு சான்றாக புறநானூறு பாடல் ஒன்று குறிப்புதருகிறது.

“கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்

புலிகண் மாறிய பாழ்படு போதியில்

நுரைமூ தாளர் நாயிடக் குழிந்த

வல்லின் நல்லகம்” (புறம்-52)

என்பதன் மூலம் முதியோர்கள் இதனை சூதாட்டம் போல் ஆடியுள்ளனர் “மூதாளர்” என்ற சொற்பதம் குறிக்கிறது. அவர்கள் அவ்விளையாட்டினை ஆடுவதற்கென ஒரு அரங்கம் அமைத்து இருந்தனர் என இப்பாடலில் “நல்லகம்” எனும் சொற் பதத்தின் மூலம் அறிய முடிகிறது.

நற்றினை நூலும் வட்டாடல் பற்றி கூறுகிறது அவை

“பொரியரை வேம்பின் புள்ளி நீழல்

கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக்

கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்

வில்லே ருழவர் வெம்முனைச் சீறூர்” (நற்றினை-3)

வேப்ப மரத்து நிழலில் சிறுவர்கள் நெல்லிக் காய்களைக்கொண்டு வட்டாடியதும் அதற்கென அரங்கு இருந்தது என “கட்டளை அன்ன வட்டரங்கு இழைத்து” எனும் வரிகளின் மூலம் தெளிவானதொருக் குறிப்பு காணக் கிடைக்கிறது.

  1. கழங்காடுதல்:

tamilargalin vilayaattu3சங்க கால மகளிரின் விளையாட்டுக்களில் முக்கியமான விளையாட்டாக பல விளையாட்டுக்கள் இருந்தாலும் புறநானூறு கழங்காடுதல் பற்றி கூறுகின்ற போது அவ்விளையாட்டு அக்கால பருவ மகளிர் மிகவும் விரும்பி விளையாடிய விளையாட்டாக கழங்காடுதல் கருதுவதற்கு சரியான சான்றாக அமைகிறது.

“செறியச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்

பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்” (புறம்-36)

கழங்காடுதல் எனும் விளையாட்டானது மகளிர் திண்ணைகளில் பொன்னாலான கழங்கினை வைத்து ஆடினர் என்பது தெளிவாகிறது.

பெண்களின் எண்ணங்களையும் அவர்களது ஆற்றாமையையும் அவர்களது இளமைக் கால காதல் நினைவுகள் பற்றி கூறுகின்ற அகநானூறும் கழங்காடுதல் பற்றிய செய்திகளைத் தருகிறது.

“இளந்துணை ஆயமோடு கழங்கு உடன் ஆடினும்”(அகம்-17)

“கழங்குஆடு ஆயத்து அன்று நம்அருளிய”(அகம்-66)

இளமையில் பெண்களுடன் சேர்ந்து தான் கழங்கு ஆடியது பற்றி நினைவு கூறும் விதமாக அகம்-66 ல் கொடுக்கப்பட்டுள்ள வரிகள் சான்றாக அமைந்துள்ளது.

பெரும்பாணாற்றுப் படையும் விரிவாக மகளிரின் விளையாட்டாக இக்கழங்காடுதல் பற்றிக் குறிப்பிடுகிறது.

“   —-குறுந்தொடி தத்த பைபய

முத்தவார் மணல் பொற்கழங்கு ஆடும்” (பெரும்-334-335)

இவ்வரிகள் மணலில் பெண்கள் அமர்ந்தபடியும் கழங்கு ஆடியதையும் அவ்விளையாட்டிற்கு பொன்னாலான பொருள் ஒன்றையும் பயன்படுத்தி விளையாடியது நமக்கு இங்குத் தெளிவாகிறது.

  1. ஓரையாடுதல்:

மகளிர் விளையாட்டுக்களில் ஓரையாடுதல் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஓரையாடுதல் விளையாட்டு என்பது கடல் பகுதி மற்றும் ஆற்றங்கரைகளில் விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டிற்க்கு அவர்கள் ஆமை, நண்டு ஆகியவற்றைக் கொண்டு ஆடினர் என்பதும் புறநானூற்றுப் பாடல் மூலத்திலிருந்தே நமக்குக் கிடைக்கிறது.

“ ஓரை ஆயத்து ஒண்தொடி மகளிர்” (புறம்-176) என்ற வரிகள் சான்றாக கிடைக்கின்றன.

சங்க கால நூலான குறுந்தொகையிலும் இதற்கான குறிப்புகள் நமக்கு அதிக அளவில் கிடைக்கின்றன. ஆவை

“         —பாவை

காலை வருந்தும் கையா றோம்பென

ஓரை யாயம் கூறக் கேட்டும்” (குறுந்- 48) என்ற வரிகள் பெண்கள் ஒன்றாக சேர்ந்து இவ்விளையாட்டை ஆடினர் என்றும்

“துறவுக் கடல் பொறாத விரவுமணல் அடைகரை

ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட” (குறுந்-316) இவ்வரிகள் கடல்கரைப் பகுதியில் பெண்கள் கடற்கரையில் காணக்கிடைக்கின்ற நண்டுகளைக் கொண்டு ஆடியதுபற்றி அப்பாடலில் மற்றொரு சொற்பதமான “ஆய்ந்த வலவன் றுன்புறு” என்பதன் மூலம் அறியலாம். இங்கே அலவன்-நண்டு என்பதாகும். மேலும் அதே நூலில் மற்றொரு பாடலில் நண்டு பற்றிய குறிப்பு,

“—நீர்வார் கூந்தல்

ஓரை மகளிர் அஞ்சி யீர்ஞெண்டு

கடலிற் பரிக்கும் துறைவனொ டொருநாள்” (குறுந்-401)(ஞெண்டு-நண்டு)

என்ற வரிகளானது கடலில் குளித்து மகிழ்ந்திருந்த பெண்கள் அக்கடற் கரையில் அலை நுரைகளிலிருந்து வந்து விழும் நண்டுகளைக் கொண்டு ஓரை விளையாட்டு விளையாடியது அறியமுடிகிறது.

நண்டுகளைக் கொண்டு விளையாடியதற்கு சான்றாக பட்டினப் பாலை,

“————————கடலாடியும்

மாசுபோக புனல் படிந்தும்

அலவன் ஆட்டியும்” (பட்டினப் பாலை-99-100)

ஆகிய வரிகள் மூலம் நண்டுகளைக் கொண்டு ஆடியது பற்றிய பதிவுகள் கிடைக்கின்றன. (அலவன்-நண்டு)

  1. பந்தாடுதல்:

tamilargalin vilayaattuபந்தாடுதல் அன்றைய மகளிர் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதனை

“பந்து ஆடு மகளிரின் படர்தரும்

குன்றுகொழு நாடனொடு”(ஐங்குறு-295) மற்றொரு வரியிலும் கிடைப்பதையும் காணலாம். அவை

“பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே”(ஐங்குறு-377) ஆகிய பாடல்களின் மூலம் மகளிர் பந்தாடுதலையும் கழங்காடுதலையும் வழக்கமாக கொண்டிருந்தனர் என்பதனை இவற்றின் வாயிலாக நன்கு புலப்படுகிறது.

  1. வண்டலிலைத்தல்:

வண்டலிலைத்தல் என்பது ஒரு வகை விளையாட்டு. மணலில் உருவங்களைச் செய்து அவற்றிற்கு பூக்களைச் சூட்டி விளையாடுவதாகும்.

“வால் இழை மட மங்கையர்

வரி மணற் புனை பாவைக்குக்

குலவுச் சினைப் பூக் கொய்து”(புறம்-11) மேலும்

“—————திணிமணல்

செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்” (புறம்-243)

ஆகிய வரிகள் மணலில் உருவங்கள் செய்து அவற்றிற்கு பூக்களை சூடியதை அறியலாம்.

அகநானூற்றிலும் அதற்கான பதிவுகள் கிடைக்கிறது. அவை

“கோதை ஆயமொடு குவவு மணல்ஏறி

வீததை கானல் வண்டல் அயர” (அகம்- 180) என்ற வரிகளும் மற்றொரு பாடல் வரியான

“ வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும்” (அகம்-330) ஆகியவற்றிலும் சான்று பகர்கின்றது.

“வண்டற் பாவை வெளவலின்” (ஐங்குறு-124) ஆகிய வரிகள் எட்டுத்தொகை நூலான ஐங்குறுநூறு நூலின் மூலம் அறியலாம்.

tamilargalin vilayaattu1மணலில் பெண்கள் குரவை ஆட்டம் ஆடிய தாகவும் பதிவுகள் கிடைக்கின்றன. அவை

“   —-பொய்யா மகளிர்

குப்பை வெண் மணல் குரவை நிறூஉம்” (ஐங்குறு-181)

குரவை ஆட்டம் என்பது ஏழு அல்லது ஒன்பது மகளிர் கைகோர்த்து விளையாடும் விளையாட்டாகும்.

  1. கிலிகிலியாடல்:

இன்று சிறுவர்கள் சிலுசிலுப்பை என்னும் கருவியைக் கொண்டு ஓசையெழுப்பி விளையாடி மகிழ்தலை நாம் அறிந்திருக்கின்றோம். இவ்விளையாட்டானது இருந்தது என்பதை சிறுபாணாற்றுப்படையின் மூலம் அறியலாம்.

“நோன்பகட் டுமணர் ஒழுகையொடு வந்த

        —————– உமட்டியர் ஈன்ற

கிளர் பூண் புதல்வரோடு கிலிகிலி ஆடும்” (சிறுபாண்-55-61)

இதன் மூலம் உமணர்களின் குழந்தைகள் இந்த கிலிகிலி ஆட்டத்தை ஆடியதை அறியலாம். (உமணர்கள்-உப்புவணிகர்கள் ஆவர்) கொடும் பசியை ஏற்றுக்கொண்டு உப்பு விற்பதற்காக உமணர்கள் தங்களது குழந்தைகளையும் தம்மோடு கூட்டிச் சென்றுள்ளனர் என்பதும் இதன் மூலம் அறியலாம். அப்பொழுது தங்கள் குழந்தைகள் பசியை மறந்தும் இவ்விளையாட்டை ஆடுவதாகக் கூறப்படுவதிலிருந்து வறுமையும் அவர்களை எவ்வாறு வாட்டிற்று என்பதையும் கண்டுகொள்ளலாம்.

  1. முக்காற் சிறுதேர்:

tamilargalin vilayaattu6சிறுவர்கள் மூன்று கால்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சிறுதேரையுருட்டி விளையாடினர்.

“தச்சர் சிறாஅர் நச்சப் புனைந்த

ஊரா நற்றேர் உருட்டிய புதல்வர்” (பெரும்பாணாற்று- 248-49)

“பொற்காற் சிறுவர் புரவியின றுருட்டும்

முக்காற் சிறுதேர்—–“ (பட்டினப்பாலை-24-25)

“கால் வல் தேர்கையின் இயக்கி நடைபயிற்றா”(கலி-81)

மேற்கண்ட வரிகளானது சிறுவர்கள் நடைபயிற்சியை மேற்கொள்வதற்காக அத்தேர் அமைக்கப்பட்டிருந்ததை நாம் அறியலாம். அதாவது நாம் சிறுவதிலிருந்த பொழுது நமக்கு நடை பழக்க ஏதுவாக தச்சனால் செய்யப்பட்ட வண்டியைப் போன்றதாகும் அவற்றிற்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு என சிலர் கூறுகின்றனர்.

“தச்சன் செய்த சிறுமா வையம்

ஊர்ந்தின் புறாஅ ராயினுங் கையின்

ஈர்த்தின் புறூஉ மிளையோர்”(குறுந்-61)

அகியவற்றின் மூலம் சிறுவர்கள் மரத்தால் செய்யப்பட்ட தேரினைக் கொண்டு நடை பயின்றதையும் இங்கே அறியமுடிகிறது.

  1. ஏறுதழுவுதல்:

tamilargalin vilayaattu2ஏறுதழுதவுதல் ஆனது தற்போது நாம் கடைபிடித்து வருகின்ற “ஜல்லிக்கட்டு” விளையாட்டிற்கு முன்வடிவமாகும். ஏறுதழுவுதல் விளையாட்டானது முல்லை நிலத்திற்குரியதாகும். இது சிறப்பான முறையில் நடைபெற்றது என்பதை பல நூல்களின் மூலம் நாம் அறியலாம். ஆவற்றுள் சில கலித்தொகையில்

“சீறு அருமுன் பின்னோன் கணிச்சிபோல் கோடுசீஇ

ஏறுதொழூஉப் புகுத்தனர்” (கலி-101)

“முன்பின் ஏறு பல செய்து” என்ற வரிகள் மூலம் ஏறுதழுவுதல் சிறப்பாக நடந்தது என்பதை தெளிவுற அறியலாம்.

முடிவுரை:

சங்க காலத்தில் மக்கள் தங்களது பொழுதுபோக்கிலும் விளையாட்டுக்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பதற்கு பல சான்றுகள் கூறப்பட்டுள்ளது. மேலும் அவைகளை உறுதிப்படுத்துதற்கு சிலப்பதிகார மணிமேகலை நூல்கள் எழுகின்ற காலத்திற்கு முன்னமே புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, நற்றினை, ஐங்குறுநூறு போன்ற எட்டுத்தொகை நூல்களிலும், புட்டினப்பாலை, பொருணர்ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை போன்ற பத்துப்பாட்டு நூல்களும் தருகின்ற பல்வேறு குறிப்புகள் மூலமும் நாம் அறியலாம்.

சங்ககால மக்கள் தங்களது வாழ்வில் பின்பற்றிய விளையாட்டுக்களான ஆடுபுலி ஆட்டமும்,பந்தாடுதல், ஊசல் போன்ற பல்வேறு விளையாட்டுக்கள் இன்றும் நம்முடைய வாழ்வியலோடு இருந்துவருவதை நாம் நமது சிறுவயது வாழ்க்கையிலும் அவற்றை விளையாடியுள்ளதன் மிகப்பெரிய மிச்சமிருக்கின்ற சுவடுகளாகவே இன்று அவை இருந்து வருகின்றன.

வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் என்னும் தற்போதைய ஜல்லிக்கட்டு விளையாட்டும் இன்றும் நம்முடன் இருந்துவருகிறது நமக்குப் பெருமையே. அத்தகைய விளையாட்டுக்களை பாதுகாப்பது நமது இன்றைய கடமையாகும்

பார்வை நூல்கள்:

  1. புறநானூறு மூலமும் உரையும்- புலியூர்க்கேசிகன்
  2. தமிழர் நாகரீகமும் பண்பாடும்- அ.தட்சிணாமூர்த்தி
  3. தமிழ்மொழி-இலக்கிய வரலாறு- டாக்டர்.மா.இராசமாணிக்கனார்


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்க காலத் தமிழரின் விளையாட்டுக்கள்”

அதிகம் படித்தது