மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சங்க பெண்பாற் புலவர்கள் சித்தரிக்கும் பெண்ணின் இருப்பு

முனைவர் பூ.மு.அன்புசிவா

Jan 2, 2016

sanga penpaar pulavargal5ஒரு நாட்டின் மாண்பையும், பண்பாட்டு வாழ்வையும் மகளிரின் திறத்தாலே அறியலாம். அவ்வடிப்படையில் வாழ்க்கை நெறி, மக்கள் பாகுபாடு, உணவு, உடை, தெய்வ நம்பிக்கை, நிமித்தங்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள், போர்க்கருவிகள், அறநிலை, வீரர் மரபு, அரசர்கள், புலவர்கள், மரம் செடி கொடிகள், பூக்கள், விலங்கினங்கள், பறவைகள், பழமொழிகள், உவமைகள் போன்ற இன்ன பிற செய்திகளை இவ்வியல் ஆராய்கிறது. சங்க இலக்கியம் அகம், புறம் என்னும் நெறியில் அமைந்து மக்கள் வாழ்வினைப் பதிவு செய்துள்ளது. “புலமை வல்ல மகளிராக நாம் தெளிந்தோரின் பாடல்கள் சங்கத்து நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களுள் மட்டுமே காணப்படுகின்றன. சங்க வரலாறும், போர் வரலாறும், சமுதாய மரபும், கலையியலும், உறிவியலும் பின்னிப் பொலியும் பதிவிலக்கியமாகவே சங்கப்பாடல்கள் திகழ்கின்றன” என்று டாக்டர் வ.சுப. மாணிக்கம் விளக்குகிறார். வாழ்க்கை நெறி வாழ்வில் ஆர்வத்தையும் ஆற்றலையும் மக்களுக்குப் புலவர்களே வளர்த்தனர், “தனிமரம் தோப்பாகாது” என்பது போல தனிமை வாழ்வு சிறந்த வாழ்வாகாது. சேர்ந்து வாழும் வாழ்வே சிறந்தது என்பதை,

“வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்”
எனப் புறநானூறு பறைசாற்றுகிறது.

திருமணம்:

sanga penpaar pulavargal1இல்லறத்தின் நுழைவாயிலான திருமணம் என்பது சமுதாயத்தில் இன்றியமையாத இடத்தைப்பெறுகின்றது. ‘திருமணம்’ என்பது தற்போது சமுதாயத்தின் ஒரு தகுதியாகக் கருதப்படும் தேவை எனப்படுகிறது. ‘திருமணம்’ என்ற சொல் ‘திரு’ மணம் எனப் பிரிக்கப்படுகிறது. மணம் என்பதே தமிழரின் பழைய மரபு “ஒரு கன்னிப் பெண்ணின் கூந்தலிலே மலர் சூட்டி அவளை ஊரும் உறவும் அறியத் தன் மனத்திற்கு இனியவளாக வாழ்க்கைத் துணைவியாக ஒருவன் ஏற்றுக்கொள்வதனாலேதான் மணம், திருமணம் என்னும் பெயர்கள் அச்சடங்கிற்கு ஏற்பட்டன” என்கிறார் சசிவில்லி.

“ஒரு பாதியாகிய பெண்ணும்,மற்றொரு பாதியாகிய ஆணும் ஒன்று சேர்வதையே திருமணம் என்பர்” என ந. சுப்புரெட்டியார் கூறுகிறார்.

“மணம் என்பது மணமக்களின் மனமொத்தது. வாழ்வு முழுவதும் மணம் பெற்றுத் திகழ்வதற்கு ஏதுவான நிகழ்ச்சியை மணம் என்று பெயரிட்டமை ஏற்புடைத்ததாகிறது” என்கிறார் சரவண ஆறுமுக முதலியார்.

“மணம் என்பது மனிதனின் பாலியல் விருப்பங்களை நிறைவு செய்யும் பொருட்டு ஏற்படுத்திக்கொள்வது” என்று உலகச் சமுதாய அறிவியல் கூறுகிறது.

“திருமணம் என்பது ஓர் ஆடவனும் ஒரு பெண்ணும் வாழ்வதற்காகச் சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட வினை முறையாகிறது”என்கிறார் ந.காந்தி.

“மணம் மனிதனின் உயிரியல் பால் உணர்வை நிறைவு செய்வதற்கு மட்டும் அமையாமல் சமுதாயத்தில் ஒருவனைப்பண்பாட்டு உறுப்பினராக ஏற்றுக்கொள்ளவும் வகைசெய்கிறது” என வாழ்வியல் களஞ்சியம் கூறுகிறது.

sanga penpaar pulavargal2தாய், தந்தை, மனைவி, மக்களுடன் இணைந்து வாழும்போது தான் மனித வாழ்வு குடும்ப வாழ்வாக மலரவும், சமுதாய வாழ்வாக விரிவடையவும் நேர்கிறது. சமுதாய வாழ்வின் அடிப்படையாகத் திகழ்வது திருமணம். அதனைக் குறமகள் தொடங்கிக் கோமகள் ஈறான பெண்பாற் புலவர்கள் தங்கள் பாடல்களில் உரைத்தனர். அக்குறிப்புகளால் ஒருவனும் ஒருத்தியும் ஒத்த மனதோடு தம்முள் விரும்பிக் கூடும் வாழ்வே திருமணம் எனப்பட்டது. அஞ்சியார் பாடலில் தலைவன் தலைவியின் பின் இரந்து நிற்கிறான். தலைவன், வரைவு நீட்டித்தமையால் அயலவர் மணம் பேச வந்ததை வெள்ளி வீதியார் குறிப்பிடுகிறார். அதற்குத் தம்மனம் ஒவ்வாமையைத் தோழி வழியாகத் தாயிடம் மறுத்துரைக்கச் சொல்லுகிறாள். இவற்றைக் கொண்டு ஆராய்ந்தால் பெண்பாற் புலவர் குறிக்கும் மணம் களவு மணமும், அதன்வழி வந்த கற்பு மணமுமே எனலாம். இக்களவுக் காதலை அகநானூறு,

“பன்மாண் நுண்ணிதின் காமம்”
என எடுத்துரைக்கிறது. பெண்பாற் புலவர்களின் வாய்ச்சொற்களாகப் பலதார மணமும், நேர்மையற்ற பரத்தமையும் சமுதாயத்தில் இருந்தது என்பதை அறிகிறோம். தாய்மைப் பகுதி பெரிதும் போற்றப்பட்டது. இம்மையிற் புகழும் மறுமையில் பேரின்பமும் தகுதி பயப்பது மக்கட் பேறாதலின், இளமையும் துணையாகும் தன்மையுடைய மக்களாகிய நல்ல செல்வத்தைப் பெற்றளித்த வளமை பொருந்திய சிறப்பையும், அடக்கத்தால் உயர்ந்த ஒழுக்கத்தையும் நிறைந்த அறிவையும், குணச் செயல்களால் கெடாத புகழையும் உடைய ஒண்ணுதல் மகளிர் என்று மக்கட் பேற்றால் அவரை நச்செள்ளையார் சிறப்பித்துள்ளார். “ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே” என்றார்.

“கருவளர் காலத்தைப் பன்னிரண்டு மாதமாகக் கணக்கிடுவதையும், கருவுற்ற மகளிர் பசும் புளியை விரும்பிச் சுவைப்பர்” பிறந்த குழந்தையின் மழலை இனிமையைக் கேட்டுத் தந்தை மகிழ்ந்ததையும்,
“யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருளறி வாரா ஆயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை” எனக் காட்டியுள்ளார்.

பாலை வள்ளத்திற்கொண்டு மகனுக்கு அன்போடு தாய் ஊட்டினாள். அவனோ விளையாட்டு விருப்பத்தால் பசி தெரியாமல் மறுத்தோடுகிறான். அவனுக்குப் பசி இருப்பதைத் தாயே அறிவாள். அவன் உண்ண வேண்டும் என்ற ஆர்வத்தால் சிறுகோல் கொண்டு அச்சுறுத்தி ஊட்டும் தாய்மைப் பண்பை,

“பால்கொண்டு மடுப்பவும் உண்ணான்
ஆகலின் செறாது ஓச்சிய சிறுகோல்”

என்ற பாடலில் புலப்படுத்தியுள்ளார் பொன்முடியார். தெருவில் சிறு தேருருட்டும் தேமொழிப் புதல்வன் செவ்வாய் சிதைந்த சாந்தம் என்று குழந்தையின் மேனியழகும், மொழியின் சுவையும் தெரியக் காட்டியதோடு, தந்தை அவனைத் தன் சாந்தணிந்த மார்பில் தழுவிக் கொண்டதால், மார்பின் சந்தனப் பூச்சுச் சிதைந்ததாம். அச்சிதைவினையும் செவ்வாய் சிதைந்த சாந்தம் என்று நல்வெள்ளையார் அழகுபடக் குறித்தார்.

உடன் போக்கு மணம்

காதலர்கள் திருமணத்திற்குத் தடை ஏற்பட்டால் வேறு இடத்திற்கு ஓடிச்சென்று மணம் செய்து கொள்வர். இதனை ‘உடன்போக்கு மணம்’ என்று அழைப்பர். தொல்காப்பியர் களவு மணம் புரிந்த தலைவன், தலைவியும் உடன்போக்குச்சென்று மணம் புரிந்ததைக் காட்டுகிறார்.

“ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப்
பிhதல் அச்சம் உண்மை யானும்
அம்பலும் அலரும் களவு வெளிப் படுக்குமென்று
அஞ்சவந்த ஆங்கிரு வகையினும்
நோக்கொடு வந்த இடையூறு பொருளினும்
போக்கும் வரையும் மனைவிகட்டோன்றும்” என்கிறார் தொல்காப்பியர்.

sanga penpaar pulavargal3“காதலன் காதலி உறவுநிலை ஊராருக்கும், பெற்றோர்க்கும் தெரிந்து விட்ட நிலையில் ஊரலர், வெறியாட்டு நொதுமலர் வரைவு, இற்செறிப்பு போன்றவற்றிலிருந்து விடுபட இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நிகழ்ந்தால் மற்றொன்று நிகழாது. இரண்டில் ஒன்றே களவு நாடகத்தின் இறுதிக்காட்சி என்பர்” என்கிறார் வ.சுப.மாணிக்கம். இதில் உடன்போய்த் திருமணம் புரிந்துகொள்வதை நாட்டுப்புற மக்கள் ‘ஓடிப்போதல்’ என்று குறிப்பிடுவர். ஊருக்கும் உறவினர்க்கும் தெரியாமல் மணம் செய்து கொள்ள ஓடிப்போகும் காதலன்,காதலியிடம் சந்தைக்குச் சென்று சட்டிபானை வாங்குவதாகப் பாவனைகாட்டிவிட்டு ஊரைவிட்டு ஓடிவிடலாம் என்கின்றான்.

“சந்தைக்கு போவமடி
சட்டி பானை வாங்குவோமடி
சந்தை கலையுமுன்னே
தப்பிடுவோம் ரெண்டு பேரும்”என்று நாட்டுப்புறப்பாடல் கூறுகிறது.

‘ஓடிப்போனவள் திரும்பிய போது’ என்ற கதையில் உடன்போக்கு மணத்தைப் பிரபஞ்சன் எடுத்துக் காட்டுகிறார். இன்பமான இல்லற வாழ்வில் தலைவி தலைவனைப் பிரியாமல் மகிழ்ந்து வாழ்கிறாள். விடியற் காலையில் தனக்குப் பூப்புத் தோன்றியதால், விலக்கம் பெறும் அம்மூன்று நாள்களும் எப்படிப் கழியப் போகின்றனவோ என்று பிரிவுக்குத் தலைவி பெரிதும் வருந்துகிறாள். இந்நுண்ணிய பொருட் குறிப்பை நுழைபுலமுடையாரே உணரும் வகையில் அள்ளுர் நன்முல்லையார் தம் பாடலில்,

“குக்கூ என்றது கோழி; அதன்எதிர் துட்கென்றது
என்தூஉ நெஞ்சம் தோள்தோய் காதலர்ப்
பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே”( குறுந்: பா.157.)

எனக் குறித்துள்ளார். கோழி கூவியதன் காரணமாக காதலரைப் பிரிக்கும் கூர்வாள் போல வைகறை வந்தது என எண்ணி மனம் அஞ்சியதைக் குறிப்பிட்டுள்ளார். என்னுடைய காதலர், தாமே தேடிய பொருளைக் கொண்டு அறம் செய்ய வேண்டுமென்ற ஆசையால், பொருள் தேடப் பிரிந்திருக்கிறார். அவர் சென்ற வழியோ மிகக் கொடியது. உலர்ந்த மரங்களை உடையது. அங்கே உலவும் யானைகள் உலர்ந்த மரத்தையும் ஒடிக்க முடியாமல் ஓய்ந்து போனவை. அத்தகைய பாலைவனம் அவர் சென்ற வழி அவரோடும் நானும் சென்றிருந்தால், அந்தக் காடு அவருக்கு இனிமையாக இருந்திருக்குமே, தண்ணீர் கட்டிய பாத்தியில் தழைக்கின்ற குவளை மலர் போல, எம் இருவர் வாழ்க்கையும் வாடாமல் வளருமே என்று வருந்திப் பேசுகிறாள். நானும் உடன் சென்றிருந்தால், கானகத்தோடும் காட்டாற்றின் மணல் பரப்பிலே “மெய்புகுவன்ன கைகவர் முயக்கத்தை” அவர் பெற்றிருப்பார். அழுதழுது பழி தேடிக்கொள்கிற கண்களுக்கு உறக்கத்தையும் யான் பெற்றிருப்பேன் என்று தலைவி கூறுவதாக ஒளவையார் பாடல் அமைந்துள்ளதை,

“நீர்வார் நிகர்மலர் கடுப்ப, ஓமறந்து
அறுகுளம் நிறைக்குந் போல,
அல்கலும் அழுதல் மேவல ஆகி,
பழிதீர் கண்ணும் பருகுவ மன்னே!”( அகம்: பா.11.)
என்னும் வரிகளில் காணலாம்.

sanga penpaar pulavargal4தலைவன் பிரிந்த காலத்தில் பிரிவால் துன்பம் ஆற்றாமல் ஒருத்தி அழுது கொண்டேயிருக்க, தோழி அழாதே இதோ வந்து விடுவார், என்று கூறவும் மாலைக் காலம் வர, அவர் வராமையால் எண்ணை தடவாமலும் சரி செய்யாமலும் இருக்கின்ற கூந்தலை வறிதே தடவுகிறாள். கணவனில்லாத காலத்துக் கற்புடைய மகளிர் தம்மை ஒப்பனை செய்து கொள்ளாத இவ்வுயர்ந்த் பண்பை,

“கேட்டிசின் வாழி தோழி! அல்கல்
பொய்வ லாளன் மெய்உற மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட,
ஏற்று எழுந்து அமளிதை வந்தனனே;
குவளை வண்டு படு மலரின் சாஅய்த்
தமியென்; மன்ற அளியென் யானே” (குறுந்: பா.30.)
என்று கச்சிப்பேட்டு நன்னாகையார் குறிப்பிடுகிறார்.
“நம் மனத்தன்ன மென்மையின்மையின்
நம்முடை உலகம் உள்ளார் கொல்லோ
என்னொடு பொருங்கொல் இவ்வுலகம்,
உலகமொடு பொருங்கொல்,
என் அவலம் உறுநெஞ்சே” (குறுந்: பா.348)

எனத் தம் பிரிவாற்றாது, ஆடவர் மனமும் பெண்டிர் மனமும் இயல்பால் பேறுபட்டிருத்தலை எண்ணி இரங்கினர். செல்வார் அல்லர் என்று தலைவியும், ஒல்வாள் அல்லள் என்று தலைவனும் பிரிவஞ்சி வாழ்ந்தனர் என்பதையும், மகளிர் அன்பு வாழ்க்கையில் திளைத்தையும் பண்பு நிறைந்த இல்லறக் காட்சிகளைப் பெண்பாற் புலவர்கள் காட்டிச் செல்கின்றனர்.

கணவன் இறந்தான், இணைபிரியாத இன்ப வாழ்வு துன்ப வாழ்வாக மாறுகிறது என்பதை,
“மருந்து பிறிது இன்மையின், இருந்துவினை இலனே”( அகம்: பா.147.)

என்னும் இவ்வரிகளில் காணலாம். பூதப்பாண்டியன் தேவியார் கூறும் புறப்பாட்டு நெஞ்சை உருக்கும் தன்மை கொண்டது. அரசன் இறந்த பின்னர் கொளுத்தும் எரியும் குளிர் மலர்க்கலயமும் எனக்கு ஒன்று தானே என்கிறார். உலக நிலையாமை உணர்ந்து இருவகைப் பற்றும் நீங்கப் பெற்றுச் சிறந்தது பயிற்றும் செந்தண்மை உடையவராகவும் சிலர் திகழ்ந்தனர்.

முன்பெல்லாம் ஓவியம் போன்ற அழகிய மாளிகையில் வடிவழகு வாய்ந்த மகளிருடன் வாழ்ந்து இன்ப நுகர்ச்சியில் ஒரு மகன் திளைத்திருந்தான். அவன் பின்னர் எல்லாப் பற்றும் துறந்து மலையருவிகளில் குளிர நீராடி. தீ வேட்டுத் தன் முதுகின் மேல் புரளும் சடையப் புலர்த்திக் கொண்டும், தவச் சிறப்புடன் ஞான வீறுடையனாய்த் திகழ்வது கண்டு மாரிப்பித்தியார் வியந்து பாராட்டுகிறார். காதல் வாழ்வில் மகிழ்ந்தது போலவே நாட்டு வாழ்விலும் நாட்டம் கொண்டனர். தாம் வாழும் ஊர்ப் பெயரையும், தம் நாட்டின் அரசன் பெயரையும் மறவாது போற்றியதை,

“காய்சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்”( அகம்: பா.246.)

என்ற வரிகளில் அறியலாம். சிறந்த வேந்தனால் நாடு சீர்ப்படும் என்று கருதினர். அவ்வேந்தன் நயனில்லா மக்களைத் துணைக்கொண்டால் பயனின்றி ஒழிவான் என்பதை,

“நயன் இல் மாக்களொடு கெழீஇ,
பயன் இன்று அம்ம இவ்வேந்துடை அவையே!( நற்: பா.90.)
என அஞ்சில் அஞ்சியார் தெரியப்படுத்துகிறார். வேந்தனால் நன்மை விழையும் என்பதை,
“நன்டை நல்குதல் வேந்தர்க்குக் கடனே” (புறம்: பா.312.)
என்ற வரிகளில் பொன்முடியார் கூறியுள்ளதைக் காணலாம்.

வேந்தன் நலனில்லா மக்களைத் துணைக்கொண்டால் பயனின்றி இழிவான். வேந்தளுக்கு வெற்றியுட் புகழும் விளைவதாகுக என்றும், அவ்வேந்தர்க்குரிய அருந்தொழிலை மக்கள் ஆர்வத்தோடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினர் மக்களின் நன்மை, தீமைகளைப் பொறுத்தே அவர் வாழும் நாடுகள் மதிக்கப் பெற்றன.

“எவ்வழி ஆடவர் நல்லவர் அவ்வழி
நல்லை வாழிய நிலனே”(புறம், பா.187.)

என்று ஒளவையார் உரைப்பதையும் காணலாம். தாம் ஈட்டும் செல்வத்தால் தாம் மகிழ்வதோடு, பிறரை மகிழ்விப்பதையும் கடனெனக் கருதினர். பிரிந்தவரை ஒன்று படுத்துவது சான்றோர் செயலாகும். நாட்டுயர்வுக்காகத் தாம் பெற்ற மக்கள் செருக்களம் செல்வதை மாண்பு என மதித்தும் வாழ்ந்தனர். இனிக்கப் பேசிய நண்பர்களைக் காட்டிலும் இடித்துப் பேசிய மகளிர் நன்மை செய்பவராயினர். வீடு தலைவனால் விளங்கவும், நாடு வேந்தனால் சிறக்கவும் வீட்டுணர்வும் நாட்டுணர்வும் நிறைந்தவர்களாக விளங்கியதையும் வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றி உயர்ந்தோராக வாழ்ந்தனர்.

தொகுப்புரை

 மனித வாழ்வு குடும்ப வாழ்வாக மலர, சமுதாய வாழ்வாக விரிவடைய அடிப்படையாகத் திகழ்வது திருமணம் என்பதை பெண்பாற்புலவர்கள் உரைத்துள்ளவற்றை விளக்கப்பட்டுள்ளன.
 தாயானவள் சிறுவனுக்கு பாலை வள்ளத்தில் ஊற்றும் போது, விளையாட்டு விருப்பத்தால் மறுத்தோடுவதைக் கண்டித்து கோலால் அடிக்கும் தாய்மைப் பண்பினை எடுத்தியம்பப்பட்டுள்ளது.
 தலைவனுடைய வெற்றி தோல்விகளில் தலைவிக்கும் பங்குண்டு என்பதை வீர வழிபாடு செய்து நடுகல் பரவியதை பெண்பாற்புலவர்களிகன் பாடல் வழி நிறுவுகின்றன.
 போர்க்களத்தில் வீரனின் புறமுதுகிடாநிலையும், அவனுடைய தாய் வீரனின் வீரமரணம் அடைந்த நிலைகண்டு மிகவும் மகிழ்வடைந்ததையும் அவளின் வற்றிய முலைகள் பாலூறிச் சுரந்தன என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
 மரம், செடிகொடிகள், பூக்கள், பறவைகள், விலங்கினங்கள் போன்றவற்றை தங்களின் பாடல்களில் இடம் பெறச் செய்ததன் மூலம் உயிர்களை எல்லாம் உறவாகக் கொண்டு தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
 ஒளவையார் பாடல்களில் அகப்பாடல்களின் சிறப்புகள், நல்லியில்புகள், நற்பண்புகள் மற்றும் அறிவுரைகள் பற்றிய செய்திகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


முனைவர் பூ.மு.அன்புசிவா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்க பெண்பாற் புலவர்கள் சித்தரிக்கும் பெண்ணின் இருப்பு”

அதிகம் படித்தது