மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ. இளங்கோ அவர்களின் நேர்காணல்

சிறகு நிருபர்

Mar 7, 2015

DSC00953கேள்வி: தங்களைப் பற்றிக் கூறுங்கள்?

பதில்: என் பெயர் சிவ.இளங்கோ, எனது பூர்வீகம் திருவாரூர் மாவட்டம், பொய்கை நல்லூர் கிராமம். எனது பெற்றோர்கள் கிராமத்தில் இருக்கிறார்கள், நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் முதுகலை (இதழியல்)முடித்துவிட்டு திருவாரூரில் தினமணி பத்திரிகையில் இருந்தேன். அதன் பிறகு பத்திரிகையில் அனைத்து விசயங்களையும் எழுதவே முடியுமே தவிர சில விசயங்களை தீர்ப்பதற்கு ஒரு இயக்கமாகத்தான் வேலை செய்ய வேண்டும் என்று அறிந்தேன். அப்பொழுதுதான் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தியினுடைய நிறைய புத்தகங்கள் படித்தேன். படிக்கும் பொழுது அந்தப் புத்தகத்தின் கடைசியில் பார்த்தீர்கள் என்றால் மக்கள் சக்தி இயக்கத்தில் சேர்ந்து செயல்படலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதில் நம்மால் முடியும் என்ற மாத இதழ் வெளிவந்துகொண்டிருந்தது, அந்த இதழை வாங்க ஆரம்பித்தோம். அதன்பிறகு மக்கள் சக்தி இயக்கத்தோடு நாம் சேர்ந்து செயல்படலாம் என்று 2007ல் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களை சந்தித்தோம். அங்கு இரண்டு செயல்பாடுகளும் நடக்கிறது. பத்திரிகை மூலமாக நாம் நினைத்ததை எழுதவும் முடிகிறது, இயக்கமாக இருந்து செயல்படுத்தவும் முடிந்தது எனும்பொழுது மிகப் பெரிய வாய்ப்பாக இருந்தது. டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி நம்மால் முடியும் என்ற இதழை நடத்தியவரை அது ஒரு booklet மாதிரி பண்ணியிருந்தார்கள். அது 12 பக்கங்கள் அடங்கிய வண்ணத்திரை (color wrapper)இல்லாமல் பண்ணியிருந்தார்கள். நாங்கள் அதாவது நான், செந்தில் ஆறுமுகம், நந்தகுமார், சிவசங்கர், மோகன், பிரபாகரன் என்று ஒரு குழு வந்திருந்தோம்.

நான் தினமணியிலிருந்து வேலையை விட்டு முழுநேரமாக இங்கு வந்தேன், அதேபோல் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை செய்த செந்தில் ஆறுமுகம் மற்றும் பலர் பணியை விட்டு முழுநேரமாக உள்ளே வந்தார்கள். இப்பொழுது புதிய தலைமுறைமாதிரி இருக்கிற இதழை 2007ல் இருந்து நடத்துகிறோம். மக்கள் சக்தி இயக்க உறுப்பினர்களுக்கு booklet அனுப்பியிருந்தார்கள், நாங்கள் கடைகளில் விற்பனைக்குக் கொண்டுவந்தோம். அவர்கள் பண்ணும் பொழுது 16 பக்கம் இருந்தது, நாங்கள் பண்ணியது 32 பக்கங்கள். அதில் வண்ண அட்டைகள் போன்ற விசயங்களைக் கொண்டு வந்தோம். மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. அதில் கடைசி 4 பக்கங்களில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்றால் என்ன, பயன்படுத்துவது எப்படி, அதற்கான விண்ணப்பங்கள் எப்படி, தகவல் பெறும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி சாதித்தவர்கள் பற்றிய விவரங்கள் தொடர்ச்சியாக போகும் பொழுதுதான், வாசகர்கள் இதனை நல்லவிசயமாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள், ஏன் எழுதியவற்றை அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தமாக வெளியிடக்கூடாது என்று கேட்டிருந்தார்கள். அதில் வந்ததுதான் தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்னும் புத்தகம்.

கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பிரதிகள் மக்களை சென்றடைந்திருக்கிறது. அதேபோல் பதிவுத்துறை சம்மந்தமாக ஒரு புத்தகம் எழுதியிருந்தேன். அதாவது பதிவுத்துறை சம்மந்தமான விசயங்களை நம்மால் முடியும் இதழில் தொடர்ச்சியாக எழுதியிருந்தேன். நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விசயத்தைப் பற்றி தொடராக எழுதியிருந்தோம். நந்தகுமார் பஞ்சாயத்தைப் பற்றி தொடராக எழுதியிருந்தார், செந்தில் ஆறுமுகம் கல்வி துறை சம்பந்தமாக தொடராக எழுதியிருந்தார், நான் அரசுத் துறை நிர்வாகம் என்று ஒவ்வொரு துறையாக எடுத்துக்கொண்டு செய்துகொண்டிருந்தோம். மருத்துவத்துறையில் என்னென்ன விசயங்களை செய்யலாம், வருவாய்துறை, பதிவுத்துறை, காவல் துறை இந்த மாதிரி எழுதி வரும் பொழுது, பதிவுத்துறையில் என்னென்ன சீர்திருத்தங்கள் செய்யலாம், என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்று எழுதும் பொழுது வாசகர்கள் கேட்கிறார்கள் இதையே தொகுத்து ஒரு புத்தகமாகப் போடுங்கள் என்றனர்.

என்னுடைய முதல் புத்தகம் பதிவுத்துறை நிர்வாக சீர்திருத்தம் என்ற புத்தகம். அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களிடம் இருந்த பொழுது நிறைய அனுபவங்கள் உண்டு. மக்கள் சக்தி இயக்கம் 1988ல் ஆரம்பிக்கப்பட்டது. அதில் அவர் மக்களிடம் என்னென்ன பணிகள் செய்தார் என்ற அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்தது. அதனடிப்படையில் நிறைய கிராமங்களுக்குச் சென்று வேலை செய்வது, கல்விக்காக வேலை செய்வது, மதுவிலக்குக்காக வேலை செய்வது, நதிகள் இணைப்புக்காக வேலை செய்த அனுபவம் இவையெல்லாம் எங்களுக்குக் கிடைத்தது. டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இறந்துவிட்டார்.

ஒவ்வொருவருக்கும் இயற்கையிலேயே ஒரு ஆர்வம் இருக்கும் இல்லையா? அதில், எனக்கு லஞ்சம் ஊழல் ஒழிப்பில் இயற்கையிலேயே ஆர்வம். செந்தில் ஆறுமுகத்திற்கு மது ஒழிப்பில் இயற்கையிலேயே ஆர்வம். அங்கிருக்கும் பொழுதே அந்தத் துறையை எடுத்து வேலை செய்து கொண்டிருந்தோம். அந்த வகையில் மக்கள் சக்தி இயக்கத்திற்குப் பிறகு விட்ட பணிகளை சட்டப்பஞ்சாயத்து இயக்கம் மூலமாக அந்த விசயங்களை நாங்கள் தொடர்ந்து செய்துகொண்டிருந்தோம்.

கேள்வி: சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தேவை ஏன் ஏற்பட்டது? தொடங்கியதன் காரணம் என்ன?

பதில்: மக்கள் சக்தி இயக்கத்தில் 2007லிருந்து 2010 வரை இருந்து பணி செய்து வருகிறோம். ஒட்டுமொத்தமாக நாட்டில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றால் அரசியல் மாற்றம் மூலமாகத்தான் ஏற்படுத்த முடியும் என்றுதான் மக்கள் சக்தி கட்சி என்று துவங்கினோம். நிறைய விசயங்கள் பள்ளிகள், கல்லூரிகளில் கட்சிகள் என்றால் விழிப்புணர்வுக்காகப் போகும் பொழுதே நிறைய தடைகள் இருந்தது. இந்த விசயங்களைக் கொண்டு சேர்க்க முடியவில்லை எனும் பொழுதுதான் திரும்ப அதே மக்கள் சக்தி இயக்கத்தில் விட்ட பணிகளை செய்யவேண்டும், இப்பொழுது லஞ்ச ஊழல் எவ்வளவு பெருகியிருக்கிறது என்று உங்களுக்கே தெரியும், மதுவால் எவ்வளவு சமூகம் சீரழிந்துகொண்டிருக்கிறது என்று தெரியும் இதை மாற்றக்கூடிய ஒரு சூழல் இன்றைக்கு இருந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஒரு வலுவான ஒரு இயக்கம் தேவை. நீங்கள் கேட்கலாம் நிறைய இயக்கங்கள் இல்லையா என்று, ஒரு இயக்கமோ இரண்டு இயக்கமோ ஆரம்பித்து செய்திட முடியாது, இது சமூகத்தில் லஞ்ச ஊழல் என்பது புரையோடிப் போயிருக்கிற விசயம். சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் சொல்லுவார், இம்மாதிரி இயக்கங்கள் நிறைய வரவேண்டும் என்று.

siva ilango5சட்டப்பஞ்சாயத்து இயக்கம் 2013 டிசம்பர் 14ந்தேதி துவங்கப்பட்டது. அதை சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள்தான் துவங்கிவைத்தார். அதில் அவர் ஒரு மணிநேரம் பேசினார், அவருடைய பேச்சு அருமையாக இருந்தது, அதில் சகாயம் இந்த மாதிரி இயக்கங்கள் நாட்டிற்கு நிறைய தேவை என்று சொல்லியிருக்கிறார். மதுவிலக்குக்காகவும், லஞ்சஊழல் ஒழிப்பிற்காகவும் ஒரு இருபது இயக்கங்கள், ஐம்பது இயக்கங்கள் என்று நிறைய இயக்கங்களுடைய தேவை இருக்கிறது. எனவே இதற்கு சட்டவிழிப்புணர்வு செய்யவேண்டும் என்றார். சட்டப் பஞ்சாயத்து இயக்கம் என்பது அனைவருக்கும் வளர்ச்சி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்கிறோம் இல்லையா அதே மாதிரி அனைவருக்கும் ஒரு வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் வளர்ச்சி எப்படி கிடைக்கும் என்றால் நல்ல அரசு நிர்வாகம் இருக்க வேண்டும், மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால்தான் நல்ல நிர்வாகத்தைத் தேர்ந்தெடுக்க முடியும்.

அந்த வகையில்தான் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மதுவிலக்குக்கான விசயங்களை ஒருங்கிணைக்க செந்தில் ஆறுமுகமும், நான் லஞ்சஊழல் ஒழிப்புக்காகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எந்த விசயங்களை எடுக்கிறோமோ அதற்கு ஆரம்பகட்டத்தில் நிறைய ஆட்கள் கிடையாது, குறைவான ஆட்கள் இருப்பதால் முழுநேரம் வரக்கூடிய ஆட்கள் இருந்தால் அந்தந்த பிரிவை எடுத்து வேலை செய்யலாம் எனும் பொழுது இப்பொழுது நாங்கள் இரண்டு பேரும் முழுநேரமாக இருக்கிறோம். இன்னும் நான்கைந்து நபர்கள் இருக்கிறார்கள் இருந்தாலும் ஜெய்கணேஷ் மாநில செயலாளர் அவரும் முழுநேரமாக இருக்கிறார். இவருக்கு லஞ்சஊழல் ஒழிப்பில் ஆர்வம். அதனால் நாங்கள் இரண்டுபேரும் முழுநேரமும் இந்த விசயத்தில் ஈடுபட்டிருக்கிறோம். முதற்கட்டமாக சட்டபஞ்சாயத்து இயக்கம் லஞ்சஊழல் ஒழிப்பு, மதுஒழிப்பை எடுத்து செய்துகொண்டிருக்கிறோம். நாட்டில் இந்த இரண்டும் முக்கியமான பிரச்சனையாக இருக்கிறதால் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சேவை தேவை என்று எண்ணி இதைத் தொடங்கவேண்டும் என்று தோன்றியது.

ஒரு சிறிய உதாரணம் என்னவென்றால் ஒரு இடைத்தேர்தலில் மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டுதான் ஓட்டுப்போடுவது என்ற சூழலை மாற்றியிருக்கிறார்கள் இல்லையா. இப்பொழுது அவர்கள் ஓட்டை விற்கும் பொழுது மக்கள் பிரதிநிதி அவர்களுக்குண்டான வேலையை செய்யவில்லை என்றால் இவர்களுக்குக் கேள்வி கேட்கக்கூடிய உரிமை இவர்களுக்குப் போய்விடுகிறது. இவையெல்லாம் மாற்றவேண்டும், சமூகத்தில் மாற்றவேண்டும் என்பதுதான் நோக்கம். ஆரம்பகட்டத்தில் இரண்டு விசயங்களை எடுத்தாலும் அடுத்தது கல்வி, சுகாதாரம், மருத்துவம், விவசாயம் இந்த விசயங்கள் எல்லாம் அடுத்தகட்டமாக சட்டபஞ்சாயத்து இயக்கம் இந்த விசயங்களை எடுத்துக்கொண்டு செல்லும் என்ற நோக்கத்தில்தான் இது தொடங்கப்பட்டது.

கேள்வி: சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் விரிவான பணிகள்?

siva ilango 2பதில்: தற்பொழுது இரண்டு விசயங்களை எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதில் லஞ்சஊழல் ஒழிப்புப் பணிகளைப் பார்த்தீர்கள் என்றால் ஒரு சேவை மையம் ஒன்றை துவங்கியிருக்கிறோம். சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களால் துவங்கிய இம்மையம் 7667100100 என்ற எண்ணில் திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரையிலும் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் அழைத்தால் அரசு அலுவலகம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதாவது பட்டா, நியாய விலைக்கடை கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் இந்த மாதிரியான அரசு சான்றுகள் பெறவும் சேவைகளைப் பெறவும் மக்களிடம் இன்றைக்கு விழிப்புணர்வே இல்லை. இடைத்தரகர்களிடம் பணத்தைக் கொடுத்து, கையூட்டு கொடுத்து இந்த மாதிரியாக செய்யக்கூடிய மனப்பக்குவம் தான் இருக்கிறது. இன்று எல்லோரிடமும் குடும்ப அட்டை இருக்கும், அந்த குடும்ப அட்டைக்கு அரசாங்கம் நிர்ணயித்த தொகை எவ்வளவு என்றால் பெரும்பான்மையான மக்களுக்குத் தெரிவதில்லை. உதாரணமாக பள்ளி கல்லூரிகளில் தகவல் பெறும் உரிமைச்சட்டப் பயிற்சி கொடுப்பதற்காகச் செல்வோம், பொது இடங்களுக்கு செல்வோம், அப்பொழுது நான் கேட்பேன் இதில் எத்தனை பேருக்கு குடும்ப அட்டை இல்லை என்று கையைத்தூக்குங்கள் என்பேன்.

100 பேர் உட்கார்ந்திருந்த இடத்தில் 3பேர் 5 பேர் கை தூக்குவார்கள். மீதி 95 பேரிடம் குடும்ப அட்டை இருக்கும். அவர்களிடம் குடும்ப அட்டைக்கு அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டணம் எவ்வளவு என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகையை சொல்வார்கள். 50 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டணத்தைக் கூறுவார்கள். அதெல்லாம் என்னவென்றால் அது இடைத்தரகரிடம் கொடுத்த பணம். உண்மையிலேயே அரசாங்கம் நிர்ணயித்தத் தொகை 5 ரூபாய், அந்த விசயங்கள் தெரிவில்லை. இன்று தேவையில்லாத விசயங்கள் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாரகள். அதாவது ரஜினி திரைப்படம் என்ன வெளிவந்திருக்கிறது, கமலின் திரைப்படம் என்ன வெளிவந்திருக்கிறது என்றால் உடனே சொல்கிறார்கள் மக்கள். இன்றைக்கு பாலின் விலை என்ன என்று கேட்டால் தயங்குவார்கள். சிலர் 40 என்பார்கள், சிலர் 35 என்பார்கள், மக்கள் தேவையான விசயங்களை தெரிந்துகொள்வதில்லை.அந்த விசயத்தை உதவி மையம் மூலமாக சொல்கிறோம். ஒரு இடத்தில் லஞ்சம் கேட்கிறார்கள் என்றால் லஞ்சம் கொடுக்காமல் எப்படி இருப்பது?,அதற்காக தகவல் உரிமை சட்டத்தை எப்படி பயன்படுத்துவது அந்த மாதிரியான வழிகாட்டிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் இது ஒன்று.

அடுத்தது நாங்கள் தொலைபேசி வழியாக நிறைய விசயங்களை சொல்கிறோம், அதிலும் சிலருக்கு ஆவணங்களைப் பார்த்துதான் பதில் சொல்வதுமாதிரி இருக்கும். சில நிலப்பிரச்சனைகளைப் பார்த்தீர்கள் என்றால் அவர்களுடைய ஆவணங்களைப் பார்த்துதான் பதில் சொல்வது மாதிரி இருக்கும் அவர்களை நேரில் சந்திக்க ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணியிலிருந்து மதியம் 1 மணி வரையிலும் முகாம் நடத்துகிறோம். இயக்கத்திற்கும் சரி, தமிழக மக்களுக்கும் சரி கிடைத்த ஒரு வரப்பிரசாதம். இந்த உதவி மையத்தை நடத்துவது சீனிவாசன் என்ற துணை ஆட்சியராக இருந்து ஓய்வுபெற்றவர். அவர் வருவாய் துறையில் 30 வருடங்களாகப் பணி செய்தவர். வருவாய்துறையில் ஆய்வாளரிலிருந்து துணை வட்டாட்சியர், கோட்டாட்சியர் இந்த மாதிரி பல பணிகளில் வேலை செய்து அவர் நிறைய நிலப்பிரச்சனைகளை சரியாக துல்லியமாக சொல்லிவிடுவார். நீங்கள் உச்சநீதி மன்றம் போனாலும் கூட உங்களுடைய வழக்கு உங்கள் பக்கம் வெற்றி பெறாது, உச்சநீதிமன்றம் வரை போய்கூட வெற்றிபெற வைத்துவிடலாம் அதனால் இந்த வழக்கிற்காக வழக்கறிஞரை சந்தித்து வீணடிக்காதீர்கள் உங்களது பணத்தையும் நேரத்தையும் என்று சொல்வார்.

siva ilango 1ஒரு அறை எடுத்து ஆலோசனை கொடுத்தால் மாதம் 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். அந்த அளவிற்கு அவருக்கு திறமை இருக்கிறது. துறைசார்ந்த அறிவு நிறைய இருக்கிறது, இருந்தாலும் இயக்கத்திற்காக மக்களுக்காக செய்கிறார். தினமும் காலை 10.30 மணிக்கு வருவார், மாலை 5 மணிக்கு செல்வார். போக்குவரத்து செலவுகூட அவரது செலவுதான். தன்னார்வளராக வந்து அவரது திருப்திக்காகப் பணி ஓய்வு பெற்றாலும் இதை செய்துகொண்டிருக்கிறார். மக்களுக்கு கட்டணமில்லாமல் உண்மையாக நிறைய வழக்கறிஞர்கள் பணத்தை வாங்குவதற்காக நான் உயர்நீதிமன்றத்தில் வெற்றிபெற்று உங்களுக்கு சாதகமாகக் கொடுக்கிறேன் என்றெல்லாம் சொல்வார்கள். இப்படி சொல்லும்பொழுது சீனிவாசன் அவர்கள் உங்களது நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கப்போகிறீர்கள், போகாதீர்கள் இந்த ஆவணப்படி சரியில்லை என்று சொல்கிறார், கண்டிப்பாக வெற்றிபெறலாம் என்பார். இது லஞ்சஊழல் ஒழிப்புக்கான வேலைகளில் ஒன்று.

ஒன்று சேவை மையம், இரண்டாவது முகாம், மூன்றாவது பயிற்சிகள் கொடுக்கிறோம். பள்ளி கல்லூரிகள் பொதுநல அமைப்புகள் அதாவது லைன்ஸ் க்ளப், ரோட்டரி க்ளப், பொது இடங்களில் எல்லாம் வைத்து தகவல் உரிமைச் சட்டம், அடிப்படைச் சட்டங்கள் அதாவது நீங்கள் ஒரு அரசு அலுவலத்திற்கு சென்றால் உங்களுடைய உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? நீங்கள் எப்படி பேசவேண்டும் அதற்கான பயிற்சிகள் எல்லாம் நாங்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அடுத்ததாக ஒரு இடத்தில் லஞ்சம் கேட்கிறார்கள் என்றால் நீங்கள் லஞ்சஊழல் ஒழிப்புத்துறைக்கு எப்படி புகார் செய்வது, அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக நாம் என்ன நடவடிக்கை எடுப்பது இந்த மாதிரியான விசயங்களை நாங்கள் செய்கிறோம். அடுத்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாவது மேல்முறையீடு செய்வது தகவல்பெறும் உரிமைச்சட்டத்தில் விண்ணப்பித்து 30 நாட்களில் தகவல் தரவேண்டும், வட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அதற்கு பொது தகவலர் துணை வட்டாட்சியர் அவர் 30 நாட்களில் கொடுக்கவில்லை என்றால் முதல் மேல்முறையீடு அந்த அலுவலகத்திலேயே வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். வட்டாட்சியரும் கொடுக்க வில்லை என்றால் இரண்டாவது மேல்முறையீடு மாநில தகவல் ஆணையம் தேனாம்பேட்டையில் இருக்கிறது அங்கு செய்யவேண்டும். ஆனால் தேனாம்பேட்டையில் உள்ள ஆணையம் சரியாக செயல்படவில்லை. 2005ல் இந்த சட்டம் வந்தது, 2008 வரைக்கும் ஓரளவிற்கு செயல்பட்டுக்கொண்டிருந்தது. அதன் பிறகு சரியாக செயல்படவில்லை.

ஏனென்றால் இங்கு இரண்டாவது மேல்முறையீடு வந்தால் அதை விசாரித்து தகவல் உண்மையிலேயே கொடுக்கவில்லை என்றால் அதைக் கொடுக்காத அரசு அலுவலருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் வீதம் அதிகபட்சமாக 25000 ரூபாய் அபராதம் விதிக்கக் கூடிய சட்டம்தான் தகவல்பெறும் உரிமைச்சட்டம். ஆனால் இங்கு வந்துமே 2வருடம் 3 வருடம் விசாரிக்கவே இல்லை. அப்புறம் எப்படி பயப்படுவார்கள் அரசு அலுவலர்கள் எல்லாம். இதே பக்கத்து மாநிலமான கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் எல்லாம் மிக சிறப்பாக நடக்கிறது. தகவலே கொடுக்கவில்லையா ஆணையத்திற்கு வருகிறதா உடனே விசாரித்து கண்டிப்பாக 25000 ரூபாய் அபராதம் போடுங்கள் என்று போட்டுவிடுகிறார்கள். அவர்களுடைய இணையதளத்தில் போட்டுவிடுகிறார்கள். இவர் இந்தத் துறை இந்தப் பதவி அவருக்கு இவ்வளவு அபராதம் இவ்வளவு செலுத்தியிருக்கிறார் என்று வெளிப்படையாகப் போட்டிருக்கிறார்கள்.

நம் இணையதளத்தில் பார்த்தீர்கள் என்றால் எதுவுமே போடமாட்டார்கள். இது தொடர்பாக பல போராட்டங்கள் ஏப்ரல் மாதத்தில் ஆணையம் தூங்கிக்கொண்டிருக்கிறது அதனால் பாய் விரித்து தூங்கும் போராட்டம் ஏற்பாடு பண்ணியிருந்தோம். உடனே நண்பர்கள் எல்லாரும் சொன்னார்கள் நீங்கள் தூங்கினீர்கள் என்றால் அவர்களும் பக்கத்தில் பாயில் வந்து தூங்கிவிடுவார்கள், சங்கு ஊதி எழுப்புங்கள் என்றார்கள். அடுத்து மே மாதம் சங்கு ஊதி எழுப்பினோம் சங்கூதும் போராட்டம்என்று. சூன் மாதம் சரியாக செயல்படாத தகவல் ஆணையத்தை நீக்கக்கூடிய அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்றால் மாநில ஆளுனருக்குத்தான் இருக்கிறது. அவர்தான் நியமிக்கிறார். அவரிடம் இந்த செத்துக்கொண்டிருக்கும் ஆணையத்தை காப்பாற்ற கவர்னருக்கு கருணை மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினோம். சூலையில் உண்ணாவிரதம் வள்ளுவர் கோட்டத்தில் இருந்தோம். அந்த உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு கிட்டத்தட்ட மாதத்திற்கு பலகோடி செலவாகிறது, ஒரு ஆணையருக்கே ஒன்றரை லட்சம் ரூபாய் ஊதியம் மற்ற படிகள் எல்லாம் சேர்த்து கோடிக்கணக்கில் செலவாகிறது. அப்பொழுது மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்படுகிறது. அதனால் அந்த ஆணையத்தை பூட்டு போடுவோம் என்று பூட்டு போடும் பொழுது கைது செய்தார்கள் அதன் பிறகு விட்டார்கள்.

இறுதியாக 2013 பிப்ரவரி மாதம் தமிழக அரசு பத்திரிகைகளில் விளம்பரம் செய்த தொகை எவ்வளவு? எந்தெந்த பத்திரிகைக்கு எவ்வளவு விளம்பரம் கொடுத்திருக்கிறது என்று விவரம் கேட்டிருந்தோம். 1991லிருந்து 2014 பிப்ரவரி வரையிலும். இதில் என்னவென்றால் தி.மு.க அரசு வந்தால் தி.மு.க சார்ந்த பத்தரிகையில் மட்டும் விளம்பரம் கொடுக்கிறார்கள்அ.தி.மு.க வந்தால் அ.தி.மு.க சார்ந்த பத்திரிகையில் மட்டும் விளம்பரம் கொடுக்கிறார்கள். பத்திரிகையில் விளம்பரம் கொடுப்பதற்கு என்னென்ன விதிமுறைகள் வகுத்திருக்கிறீர்கள் அந்த விதிமுறையின் நகல் வேண்டும், அதன்படிதான் நீங்கள் கொடுத்திருக்கிறீர்களா. ஜெயலலிதா பிரதமராக போவதற்கான கனவில் இருக்கும் பொழுது அவர்களுடைய முகங்களை எல்லா மாநில மக்களும் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு நாளைக்கு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் எல்லா பத்திரிகையிலும் கொடுக்கும் பொழுது மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இதற்கு 2000 கோடி ரூபாய் செலவாயிருக்கிறது. இதில் எவ்வளவோ திட்டங்கள் பண்ணியிருந்திருக்கலாம்.

எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள் என்று கேட்டோம் கொடுக்கவில்லை. 300 நாட்களாகியும் கொடுக்கவில்லை என்று ஆணையத்திற்கு மேல்முறையீடு பண்ணும் பொழுதுதான் சனவரி 7ந்தேதி எங்களுக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்று விசாரிக்கும் பொழுதுதான் இதுவரையிலும் 8 ஆண்டுகளாக உட்கார்ந்து கொண்டுதான் அந்த விசாரணையில் கலந்துகொண்டேன். இப்பொழுது புதிதாக வந்திருக்கிற தலைமை தகவல் ஆணையர் முன்னாள் தலைமைச் செயலாளருமான ஸ்ரீபதியிடம் விதிமுறை இருக்கிறதா என்று கேட்டு அந்த விதிமுறையை காட்டுங்கள் என்று கேட்டால் அதெல்லாம் காட்ட முடியாது என்றார். காட்டமுடியாது என்றால் எழுந்திருக்க முடியாது என்றதும், எழுந்திக்கமுடியாவிட்டால் விசாரிக்கமுடியாது என்றார். விசாரிக்கமுடியாது என்றால் நான் இங்கேயே இருந்து உள்ளிருப்புப் போராட்டம் செய்கிறேன் என்றேன். என்னுடைய விசாரணை இருக்கையில் இன்னொரு ஆணையர் அக்பர் அவரும் ஓய்வு பெற்ற நீதிபதி இவர்கள் இரண்டு பேரும் இருக்கும் பொழுது நீங்கள் காவல்துறையில் புகார் செய்யுங்கள் என்றேன்.

சொல்லும் பொழுது அவர்கள் இறுதி உத்தரவு உங்களது வழக்கு முடிந்தது கிளம்புங்கள் என்றனர். அந்த உத்தரவை மதிக்கவில்லைநீங்கள் என்ன சட்டரீதியாக எடுக்கமுடியுமோ எடுங்கள் என்று சொல்லும்பொழுதுதான் அவர்கள் காவல்துறையில் வந்து நான் அவர்களை மிரட்டினேன், பணி செய்யவிடாமல் தடுத்தேன், தகாத வார்த்தைகளால் பேசினேன் என்று 3 பிரிவில் வழக்கு கொடுத்தார்கள். அதன்பிறகு கைது செய்து சிறையில் ஒரு நான்கு நாட்கள் இருந்து பிணையில் வெளியே வந்து இன்றைக்கு  அழைப்பாணை வந்திருக்கிறது. குற்றப்பத்திரிகை 13ந்தேதி தாக்கல் செய்திருக்கிறார்கள் 5ந்தேதி விசாரணை என்று இப்பொழுதுதான் கொடுத்துவிட்டு செல்கிறார் காவல்துறையிலிருந்து. இந்த மாதிரியான லஞ்சஊழலுக்கான விசயங்கள் தொடர்ச்சியாக ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது.

மதுஒழிப்பில் பார்த்தீர்கள் என்றால் தொடர்ச்சியாக பத்து கடைகள் மூடியிருக்கிறோம். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகள் சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தளங்கள், கல்விநிலையங்களிலிருந்து 50 மீட்டருக்குள் இருந்தால் வைக்கக்கூடாது. அதே போல் மற்ற பகுதிகளில் 100 மீட்டர் தொலைவு. அது ஒன்று இரண்டாவது பொதுமக்களுக்கு இடையூராக உள்ள மதுக்கடைகள் பற்றி புகார் வந்தது என்றால் சேவைமையத்தில் ஒன்று அரசுதுறை சம்மந்தமான விசயங்களுக்கும் இரண்டு மதுஒழிப்பு சம்மந்தமான விசயங்களுக்கும் மூன்று உறுப்பினராக சேருவது இயக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நாங்கள் கொடுத்திருப்போம்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுரை பக்கம் அரவங்குடி என்ற கிராமத்திலிருந்து தற்காலிகமாக பக்கத்து ஊரிலிருந்து கொண்டுவந்து வைத்த அந்த டாஸ்மாக் கடையை 10 வருடமாகியும் எடுக்கவே இல்லை. அதனால் அந்த கிராமத்தில் நிறைய சிரமங்கள் அந்த கிராமத்தில். அதனால் புகார் கொடுப்பதற்காக நகலகம் கடைக்கு அவர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் நீங்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்றால் எந்த பலனும் இல்லைசட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் எண்ணை அழையுங்கள் என்றார். எங்களுக்கு அழைப்பு வந்தது நாங்கள் நேரில் சென்றோம். அங்கு 300 பெண்களை அங்கே திரட்டினோம்சட்டப்படி மதுக்கடைகளை மூடுவது என்று சந்துரு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்த வெளியீட்டை சட்ட பஞ்சாயத்து இயக்கம் தான் பண்ணினோம். அந்தப் புத்தகத்தில் முதலில் யாரிடம் புகார் செய்வது,அதற்கடுத்து யாரிடம் பண்ணுவது எல்லா விசயங்களையும் சட்டப்படி செய்துவிட்டு அடுத்து மக்களைத் திரட்டி போராடினோம்.

நிறைய காவல் துறைகள் வந்தார்கள், டாஸ்மாக்கின் மேலாளர் வந்தார்.அடுத்தது வட்டாட்சியர் வந்தார். அவர்கள் 2 மாதம் தவணை கேட்டார்கள் அதற்கு நாங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் மே மாதத்தில் முடிகிறது. சூன், சூலையில் தவணை கேட்டார்கள் சூலை 30ந்தேதி சரியாகவில்லை என்றால் ஆகஸ்ட் 1ந்தேதி மதுக்கடை திறந்திருந்தது என்றால் அனைத்து மது பாட்டிலையும் உடைத்து ஆற்றில் சாராயப் பொங்கல் வைப்போம். நீங்கள் பூட்டிவிட்டீர்கள் என்றால் ஆற்றங்கரையில் எல்லாரும் சேர்ந்து சக்கரைப் பொங்கல் வைப்போம். சக்கரைப் பொங்கலா அல்லது சாராயப்பொங்கலா நீங்களே முடிவுசெய்யுங்கள் என்று கூட்டங்களில் பேசினோம். அந்தக் கூட்டத்தில் 300 அல்லது 400 நபர்கள் இருந்தார்கள்காவல் அதிகாரிகள் 50 நபர்கள் இருந்தார்கள்டாஸ்மாக் மேலாளர், வட்டாட்சியர் அனைவரும் இருந்தார்கள். அந்தக் கடை இருந்ததே அரசு புறம்போக்கு நிலத்தில் இருக்கிறதுஅரசு இடத்திலேயே கட்டிடம் கட்டிக்கொண்டு அரசாங்கத்திடமே வாடகை வாங்கியிருந்து கொண்டிருக்கிறார் அந்த உரிமையாளர். அதன் பிறகு இந்த கேள்வி எல்லாம் கேட்டபிறகு இதென்ன வம்பாகிவிடும் என்று நாங்கள் சொன்னதற்கு 10 நாட்களுக்கு முன்பே தகவல் சொன்னார்கள். அங்கு இஸ்லாமியர்கள் இந்துக்கள் இருந்தார்கள் அனைவரும் சேர்ந்து சமத்துவப் பொங்கல் வைத்தோம்.

அதேமாதிரி தண்டையார்பேட்டை, மயிலாப்பூர், ஊரப்பாக்கம் போன்ற அநேக இடங்களில் வீடு பக்கத்தில் சுவர் இருக்கிறது இல்லையா அந்த சுவரின் ஒரு பகுதிதான் டாஸ்மாக் கடையை வைத்துவிட்டார்கள். அவருக்கு பிரச்சனையாகி அவருடைய மனைவி இந்த மாதிரி பக்கத்தில் மதுக்கடை இருந்தால் என்னால் வாழ முடியாது என்று விட்டு சென்றுவிட்டார்கள். பிறகு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து அடிப்படை உரிமை அங்கே இருக்கக்கூடாது என்று சொல்லி அதை அந்த இடத்திலிருந்து காலி செய்தது. அதே மாதிரி மதுவிலக்கு சம்மந்தமாக தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கிறோம். அந்த வகையில்தான் நாங்கள் ஒரு அறிவிப்பு கொடுத்திருந்தோம் 2016 மதுவிலக்கு ஆண்டு என்று சொல்லி வரக்கூடிய தேர்தலில் 234 தொகுதியிலும் நாங்கள் ஒரு குழு அமைத்து வரக்கூடிய வேட்பாளர்களைக் கேளுங்கள் மதுக்கடையை மூடுவாயா என்று கேளுங்கள், மூடும் கட்சிக்கே எங்களது ஓட்டு அதாவது மதுவிலக்கை அறிவக்காத கட்சியை தேர்தலில் தோற்கடிப்போம் பூட்டுபோடும் கட்சிக்கே ஓட்டு போடுவோம் என்ற பட்சத்தில் நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கிறோம்.

நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள் நான்கு வாரத்தில் ஜூனியர் விகடனிலும், நக்கீரன் வாரப் பத்திரிகையிலும் முழுபக்க அறிவிப்பு கொடுத்திருந்தோம். கிட்டத்தட்ட  ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாடு முழுவதிலிருந்தும் அழைப்பு அழைத்து நாங்களும்  இந்த விழிப்புணர்வில் கலந்துகொள்கிறோம் என்று சொல்லிவிட்டு அவர்களும் வந்திருக்கிறார்கள். மார்ச் 15ல் மதுரையில் முதற்கட்டமாக மண்டல கூட்டம் நடக்கிறது. 16 வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் எப்படியெல்லாம் நாங்கள் செய்யப்போகிறோம் என்றால் தெருமுனைக்கூட்டம், நோட்டீஸ், ஸ்டிக்கர், ஆட்டோ பிரச்சாரம், ஊர்வலம், வீடு வீடாகச் சென்று பிரச்சாரம், பேருந்து நிலைய பிரச்சாரம், அரங்கக்கூட்டம், மதுக்கடை முற்றுகைப் போராட்டம், போஸ்ட் கார்டு போராட்டம், டாஸ்மாக் நுழைவு போராட்டம், கிராமசங்கம் மூலம் தீர்மானம் நிறைவேற்றுவது, பாடல்கள்- நாடகங்கள் மூலமாக கொண்டு செல்வது, வல்லுநர்களை வைத்து ஒரு கூட்டம், மனித சங்கிலி போராட்டம் ஆகியவற்றில் ஒன்றிணைவோம்.

அந்த வகையில் இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால் திருவாரூரில் திருத்துரைப்பூண்டி அருகில் கள்ளச்சாராய பாக்கெட் பாண்டி ஐஸ் என்கிற பெயரில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. 30 ரூபாய். இதன் விலை. புகார் கொடுத்துமே நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் கொடுத்து மூன்றாவது நாள் விற்பனை நடந்துகொண்டிருக்கிறதுபோய் வாங்கிட்டு வருகிறேன். காவல்துறையினர் இருக்கிறார்கள்,அரசு அலுவலர்கள் இருக்கிறார்கள், அரசியல் வாதிகள் முக்கியமாக இருக்கிறார்கள் அந்த மாவட்டத்தினுடைய அமைச்சர், மாவட்ட செயலாளர் மற்றும் அந்த துறை சார்ந்த அமைச்சர் அனைவருக்கும் இதில் பங்கு சென்றுகொண்டிருக்கிறது. அப்படி பார்க்கும் பொழுது எவ்வளவு சர்வ சாதாரணமாக நடந்கொண்டிருக்கிறது. அரசாங்கம் என்ன சொல்கிறார்கள் என்றால் நாங்கள் மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்கிறார்கள். மதுக்கடைகள் இருக்கும் பொழுதே கள்ளச்சாராயம் வந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 2012- 2013லிருந்து 2013-2014 லிருந்து ஒவ்வொரு ஆண்டும் கடந்த பத்தாண்டுகளில் பார்த்தீர்கள் என்றால் டாஸ்மாக்கின் விற்பனை 20 சதவிகிதம் கூடிக்கொண்டே வருகிறது. சென்ற ஆண்டு மட்டும் பார்த்தீர்கள் என்றால் 6 கோடி ரூபாய் குறைகிறது அந்த 20 சதவிகிதம் என்பது 4335 கோடி ரூபாய்.  நாங்கள் விழிப்புணர்வு செய்து குறைந்ததோ அல்லது மக்கள் வந்து குடிப்பதை நிறுத்திவிட இல்லை அரசியல் வர்க்கம் உயர் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் போலி மதுபான ஆலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் மூலமாக விற்பனைக்கு வருகிறது அரசாங்கத்திற்கு 1000 கோடிரூபாய் அந்த வகையில் இழப்பு ஆகியிருக்கிறது. போலி மதுபான ஆலை எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் அடுத்தகட்டமாக அதற்கான பத்திரிகையாளரை சந்திக்கப்போகிறோம். இந்த வகையில்தான் போராட்டங்கள் மதுவிலக்கிற்கும் லஞ்ச ஊழல் ஒழிப்பிற்கும் செய்துகொண்டிருக்கிறோம். 2014ல் லஞ்சஊழல் ஒழிப்புக்கு அதை செய்தோம். 2015க்கு என்ன பண்ணியிருக்கிறோம் என்றால் தகவல் ஆணையத்திற்கு எப்படி 2014 ஐ எடுத்தோமோ 2015க்கு லஞ்சஊழல் ஒழிப்பை சுத்தம் செய்வது அங்கே புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை போஸ்ட்மேன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்ற மாதம் 5ந்தேதி நேரிலே சென்று டி.எஸ்.பி-யை நீங்கள் என்ன போஸ்ட்மேன் வேலையா பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் நாங்கள் கொடுத்ததை அந்த துறைக்கே அனுப்பிவிட்டீர்கள் என்றால் நீங்கள் எதற்கு என்று பேசிவிட்டு வந்திருக்கிறோம். அந்தத் துறையை களை எடுக்கிற வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அடுத்தது நேற்று முன்தினம் கிராமப்புரட்சி என்ற திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். ஒவ்வொரு வி.ஏ.ஓ வும் அந்தந்த கிராமங்களில்தான் தங்கி பணி செய்யவேண்டும்  என்று சொல்லி சட்டம் இருக்கிறது உயர்நீதிமன்ற ஆணையம் இருக்கிறது. அவர்கள் வேலைக்கு செல்லும் பொழுதே கையெழுத்து போட்டுத்தான் வருகிறார்கள். யாருமே இருப்பது கிடையாது சொந்த கிராமம் 50 கிலோ மீட்டர் 100 கிலோ மீட்டரில் இருக்கும் அப்படி இல்லையென்றால் அருகில் உள்ள வசதியான நகரத்தில் போய் இருந்துகொண்டு அங்கிருந்து வருவார்கள். ஒரு சான்று வாங்குவதற்கு நீங்கள் சென்றால் வி.ஏ.ஓ வரவில்லை அவர் அங்கு சென்றிருக்கிறார் இங்கு சென்றிருக்கிறார் என்று சொல்வார்கள். அதை கண்டித்து சென்ற டிசம்பர் மாதம் 20ந்தேதி இங்கு தலைமைச் செயலகத்திலிருந்து வருவாய் துறை செயலாளருக்கு  ஒரு கடிதம் எழுதினோம்.

இந்த மாதிரி விதிமுறைகள் இருக்கிறது. இந்த விதிமுறைகளை வைத்து நாமக்கல்லை சேர்ந்த விவேகானந்தர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து 2011ல் நடைமுறைப்படுத்தவேண்டு என்று சொல்லி அவர்கள் உத்தரவு போட்டிருக்கிறார்கள். அந்த உத்தரவுப்படி இவர்கள் சகாயம் நாமக்கலில் ஆட்சியராக இருக்கும் பொழுது அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லும் பொழுது அவருக்கு எதிராக அனைத்து வி.ஏ.ஓ வும் சேர்ந்து போராட்டம் பண்ணியதால் போராட்டம் நடத்தினவர்களை தண்டிக்காமல் இவர் பரிசீலனையில் இருப்பவரை இடம் மாற்றம் செய்துவிட்டார்கள். அந்த அளவிற்கு அந்த வி.ஏ.ஓ சங்கம் வலுவாக இருந்தது. அதனால் நாங்கள் எவ்வளவு வலுவாக நீங்கள் இருக்கிறீர்கள் முறைப்படி வருவாய்துறை செயலாளருக்குக் கொடுத்தாயிற்று அதன்படி சனவரி 19ந்தேதி 32 மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இந்த சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கடிதம் கொடுத்தோம். கடிதம் கொடுத்தும் நடவடிக்கை பெரிதாக ஒன்றும் இல்லை. அதனால் முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு செங்கல்பட்டில் நேற்றுமுன்தினம் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். கிராம நிர்வாக அலுவலர்கள் பணி செய்யும் இடத்திலேயே தங்கவேண்டும் என்ற விதிமுறையை கடைபிடித்து அந்த இடத்திலேயே வசிக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் பணிகளை செய்யமுடியும் அவர்களுக்குண்டான வேலைகளை சரிவர செய்யமுடியும் என்று ஒரு ஆர்ப்பாட்டம் செய்து முடித்திருக்கிறோம் இது லஞ்சஊழல் ஒழிப்பு விசயங்கள். மதுவிலக்கு 2016 மதுவிலக்கு ஆண்டு என்று அதற்கான திட்டங்கள் போய்க்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு விசயங்களை செய்துகொண்டிருக்கிறோம்.

 

siva ilango5

கேள்வி: சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பணிகளால் சமூகத்தில் ஏற்பட்ட நல் விளைவுகள் என்ன?

பதில்: தகவல் ஆணையத்தில் மூன்றாவதாக, நான்காவதாக சொல்லியிருந்த போராட்டங்களான பறை தூக்கும் போராட்டம், சங்கு ஊதும் போராட்டம், கருணை மனு தரும் போராட்டம், கூட்டுக் குடும்ப போராட்டம் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களைப் செய்து நாம் கோரிக்கைகளாக வைத்தது, குறைந்தபட்ச கோரிக்கைகள்தான். அந்த தகவல் ஆணையம் செயல்படுவதற்கு என்னவென்றால் நீங்கள் இரண்டாவதாக மேல்முறையீடு செய்தால் உடனடியாக ஒரு ஒப்புதல் சீட்டு கொடுங்கள், வழக்கு எண் கொடுங்கள், வரிசை எண் அளியுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

உதாரணமாக கர்நாடக அரசு எடுத்துக்கொண்டால் இரண்டாவது முறையாக மேல்முறையீட்டு ஆணையத்திற்கு வந்தால் உங்களுடைய மனு இந்தத்தேதியில் எடுக்கப்பட்டது. உங்களுடைய வழக்கு எண் இது என்பர். உங்களுடைய வழக்கு இந்தத் தேதியில் விசாரணைக்கு வருகிறது என்பர். அப்படிச் சொல்லும்போது நமக்கு ஒரு தெளிவு வருகிறது. ஆனால் இங்கு நாம் ஒரு மனு அளித்தால் இரண்டு வருடங்களானாலும் ‘கிணற்றில் போட்ட கல்’ என்பார்களே அது மாதிரி இருக்கும். எப்போது வரும் என்று தெரியாது. திடீரென்று ஒரு நாள் வரும். வராமலும் போகலாம். ஆனால் நாம்என்ன கேட்கிறோம் என்றால் வரிசை எண் கொடுங்கள்,மனு ஏற்புச் சான்றிதழ் உடனே அனுப்புங்கள் என்று கேட்டிருந்தோம்.

காலியாக உள்ள ஆணையர் பதவியிடங்களை நிரப்புங்கள் என்று கேட்டிருந்தோம். அதில் உள்ள சமூக ஆர்வலர்களில் ஒருவரைடெல்லி ஆணையத்தில் நியமித்தது போல இங்கேயும் நியமிக்கவேண்டும் என்றோம். சட்டமே சொல்லியதுபோல ஒவ்வோர் ஆண்டும் ஆண்டு அறிக்கையை சட்டசபையில் சமர்ப்பிக்க வேண்டும். இப்போது கர்நாடக அரசு ஒவ்வோர் ஆண்டும் ஆண்டு அறிக்கையில் எத்தனை வழக்குகள் வந்தன, எத்தனை வழக்குகள் பைசல் செய்யப்பட்டன, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதை சட்டசபையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளது.

ஆனால் அதுமாதிரி இங்கு செய்வதில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போது இரண்டு வருடங்களாக சமர்ப்பிக்கிறார்கள் சட்டசபையில். மனு சேர்ந்தவுடன் மனு ஏற்புஎண், வழக்கு இது என்பதை இப்போது நமது மாநிலத்திலும் தெரிவிக்கிறார்கள். தற்போது 3 மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் அழைத்து வழக்கு விசாரணை செய்கிறார்கள். தீர்ப்பும் வழங்குகிறார்கள். ஆனால் இன்னும் கூடுதலாக எதிர்பார்க்கிறோம். பரவாயில்லை 15 கோரிக்கைகளை வைத்ததில் 5அல்லது 6 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு சொல்கிறார்கள். ஆனால் ஊடகங்களும் சரி, சமூக ஆர்வலர்களும் சரி சமூகமே கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளது.

siva ilango5

சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தில் எளிமையான கோரிக்கைகள்தான் கேட்போம். புதியதாக கேட்கவில்லை. மற்ற மாநிலங்களில் என்ன உள்ளதோ அதைத்தான் கேட்கிறார்கள். ஒரு இணையதளம் என்று எடுத்துக்கொண்டால் தமிழில் வேண்டும் என்று கேட்கிறோம். உதாரணமாக ஆந்திர மாநிலம் என்று எடுத்துக் கொண்டால் தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் இணையதளம் உள்ளது. கர்நாடகா என்று எடுத்துக்கொண்டால் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் இணையதளம் உள்ளது. அதேபோல் கேரளா என்று எடுத்துக்கொண்டால் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் இணையதளம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே இணையதளம் உள்ளது. தமிழில் இல்லை. எத்தனை மக்களால் ஆங்கிலத்தை படித்து சட்டத்தை புரிந்துகொள்ள முடியும்? அதைத்தான் நாம் கேட்டோம்.

அடுத்தது இங்கு உள்ள கோரிக்கைகள் என்னவென்றால் இங்கு எத்தனை பேர் அபராதம் கட்டியிருக்கிறார்கள் எத்தனை ரூபாய் வசூல் செய்திருக்கிறீர்கள் என்ற தகவலே இல்லை. இந்த கோரிக்கையையும் வைத்தோம். ஆனால் கேரளா போன்ற மாநிலங்களில் தெளிவாக வைத்திருக்கிறார்கள். இங்கு இதுவரை அப்படி கொடுக்கவில்லை. இது மாதிரி நிறைய கோரிக்கைகள் உள்ளது. இருந்தாலும் இந்த போராட்டங்கள் தகவல் ஆணையத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு லஞ்ச ஊழல் தொடர்பான விஷயங்கள் இதில் நிறைய பத்திரிகையாளர்களின் சந்திப்பு உள்ளது உதாரணமாக கல்வித்துறையில் நடந்த ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததுதொடர்ச்சியாக இந்த மாதிரியான விஷயங்களை, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நமது தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் மூலமாக நாம் பயிற்சிகள் தரும்போது அதில் நிறைய பேர் அவரவரது கிராமங்களில் பஞ்சாயத்து ஊராட்சியில் நடந்த ஊழல்களை வெளியில் கொண்டு வந்து உள்ளனர்.

நாம் அளிக்கும் பயிற்சிகளை வைத்து அதே மாதிரி விண்ணப்பித்து அந்த ஊழல்களை வெளியில் கொண்டு வந்து அதை நாம் எழுதுவோம். உதாரணமாக சாராயக் கடை. அங்கு அந்த ஊழல்களை தனி நபராக வெளியிட்டால் பாதுகாப்பு இல்லை என்று கருதி நம் இயக்கத்துக்கு வந்தனர். நாம் அதை வெளிப்படுத்தினோம். அது மாதிரி ஆவடி நகராட்சியில் 40 லட்ச ரூபாய் ரோடு போடாமலே ரோடு போட்டதாக எடுத்திருக்கிறார்கள். 3 மாதத்திற்கு முன்பு நமது இயக்க உறுப்பினர் வந்து நமது இந்த பயிற்சிகளையெல்லாம் பார்த்து நம்மிடம் கேட்டுக்கொண்டு ஊடகங்களில் வெளியிட்ட பிறகு வேறு வழியில்லாமல் அவர்கள் இல்லையில்லை அந்த நிதியை நாங்கள் வேறு திட்டத்திற்கு மாற்றியுள்ளோம் என்றனர். ஆனால் அதுமாதிரி மாற்றுவதற்கு சட்டத்தில் இடமே இல்லை. ஒரு ஒப்பந்தம் போட்டு ஒரு நிதியை ஒதுக்கினால் அந்த ஒப்பந்த நிதி அந்த வங்கிக் கணக்கில் வந்த பிறகுதான் திட்டங்களை போடவேண்டும். இல்லையென்றால் மன்றத்தில் அனுமதி பெற வேண்டும். எதுவுமே இல்லாமல் இந்த நிதியை மாற்றிவிட்டோம் என்று ஒரே வரியில் தவறான தகவல் அளித்துள்ளனர்.

அதன்பின் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு அந்த நிதிக்கான வேலைகள் எங்கு நடந்துள்ளது என்று சொல்லியிருந்தனர். அதுமாதிரி நிறைய மாற்றங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். சின்ன சின்ன விஷயங்கள், உதாரணமாக ஓர் அரசு அலுவலகத்திற்குச் சென்றால் அரசாணை 114 உள்ளது. அந்த அரசாணைப்படி நீங்கள் புகார் தந்தால் எந்த அரசு அலுவலகத்திலும் மனு ஏற்புச் சான்றிதழ்க்கான ஒப்புதல் சீட்டு தரவேண்டும். நாங்கள் எங்கள் உறுப்பினர்களுக்கு சொல்லுவது என்னவென்றால்ஒரு அரசு அலுவலகத்திற்குச் சென்று புகார் தந்தால் ஒப்புதல்சீட்டு பெறவேண்டும். அப்படி தர மறுத்தால் அந்த அலுவலகத்தில் இருந்தே தொலைபேசியில் எங்கள் சேவை மையத்துடன் தொடர்புகொள்ளுங்கள்.

நாங்கள் அந்த அதிகாரிகளுடன் பேசினதும் உடனே அவர்கள் தந்துவிடுவார்கள். அதுமாதிரி கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி என்ற தாலுகாவில் 100 குடும்ப அட்டைகள் மனுதாரர்களுக்கு தயார் நிலையில் உள்ளது. பயன்தாரர்கள் வந்தால் ஒரு குடும்ப அட்டைக்கு ரூபாய் 400 லஞ்சம் கேட்டனர். நமது உறுப்பினர் ஒருவர் ஒரு கார்டுக்கு 400 ரூபாயா? என்று கேட்டதும் அந்த அலுவலர்கள் பணத்தை தந்துவிட்டு அட்டையை வாங்கிக்கொள், இல்லையென்றால் எங்கு வேண்டுமென்றாலும் புகார் செய்துகொள் என்றார்கள். அங்கிருந்து கொண்டே நமது உறுப்பினர் நமது சேவை மையத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார். தொலைபேசியில் பேசுவதை அந்த அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் மேலே சென்று வட்ட வழங்கல் அலுவலரிடம் சொல்லஅந்த அலுவலர்கள் உடனே நமது உறுப்பினரை அழைத்து இந்தா உன்னுடைய குடும்ப அட்டையை வாங்கிக்கொண்டு செல் என்றனர்.

நமது உறுப்பினர் தொடர்புகொண்டது சட்டப் பஞ்சாயத்து இயக்கம் என்று அவர்களுக்குத் தெரியாது. ஏற்கனவே கூறியபடி ஒரு குடும்ப அட்டைக்கு 5 ரூபாய்தான். அதைத்தான் நாங்கள் அவரிடம் பேசினோம். ஐயா, 100 அட்டைகள் தயாராக உள்ளது. நீங்கள் ஒரு அட்டைக்கு ரூபாய் 400 லஞ்சம் கேட்கிறீர்கள் எங்களுக்கு புகார் வந்துள்ளது. ஒன்றுமில்லை நாங்கள் உங்களுக்கு 3 நாள் கால அவகாசம் தருகிறோம். இந்த மூன்று நாளைக்குள் அந்த அட்டைகளை உரியவர்களுக்கு தரவேண்டும்.

அப்படி தரவில்லைஎன்றால் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் 3 கேள்விகளைக் கேட்போம். முதலில் குடும்ப அட்டைகள் தயார் செய்யப்பட்டவுடன் எத்தனை நாட்களுக்குள் மனுதாரர்களுக்கு கொடுக்க வேண்டும். அவ்வாறு உரிய காலத்திற்குள் தரவில்லையென்றால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியாக என்ன ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். யாரிடம் நாங்கள் புகார் தருவது? என்று கேட்போம். நேரில் வந்து ஆய்வு செய்வோம் என்று சொன்னதும் 3 நாட்களில் அந்த 100 குடும்ப அட்டைகளை அட்டைதாரர்களுக்கு தந்துவிட்டு எங்களுக்கு தகவல் சொல்கிறார்கள் ஐயா நாங்கள் குடும்ப அட்டைகளை தந்துவிட்டோம் என்று. அதே மாதிரி தருமபுரி மாவட்டத்திலும் நடந்தது.

தென்கனிக்கோட்டை என்ற தாலுக்காவிலும் இது மாதிரி நடந்தது. நம்ம சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மூலமாக நடந்து மாற்றங்கள் இவை. நிறைய ஊடகங்களில் சென்று பேசுகிறோம். தனியார் தொலைக்காட்சிகளில் விவாதங்களுக்கு அழைக்கிறார்கள். லஞ்ச ஒழிப்பு, மது விலக்கு சம்மந்தமாக பேச எங்களை அழைப்பார்கள். நம்முடைய போராட்டங்களை பத்திரிகைகளில் பார்க்கிறார்கள். இந்த இயக்கம் இதற்காக செயல்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிகிறது. நாம் லஞ்சம் கேட்டு; அவர்கள் புகார் செய்தால் நமக்குத்தான் பிரச்சினை என்பதையறிந்து உடனே தந்துவிடுகிறார்கள். அப்படி முடியவில்லை என்றால் நாம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேல்வி கேட்கிறோம். சின்ன சின்ன விஷயங்கள். உதாரணமாக ரேஷன் கடையில் ஒரு பிரச்சினை என்றால் விண்ணப்பத்தை தந்துவிட்டு எங்களிடம் விண்ணப்ப தேதி, ஒப்புகை எண்ணை கூறினால் உடனே தொலைபேசியில் பேசி தீர்த்து வைப்போம். அவர்களும் ஐயா வாங்க உடனே தந்து விடுகிறோம் என்பார்கள். எந்ததெந்தத் துறைகளில் பிரச்சினை என்றாலும் அந்தந்த துறை அலுவலர்களிடம் பேசி தீர்த்து வைக்கிறோம்.

அதே போல் நிலங்களுக்கு பட்டா வாங்கும் பிரச்சினை. லஞ்சம் கேட்பார்கள். அவர்களுக்கு லஞ்சம் தராமலே நமது தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் மூலமாக பட்டா வாங்கி தந்திருக்கிறோம். நீங்கள் ஒரு இடம் வாங்குகிறீர்கள் என்றால் பதிவுத்துறையிலேயே நாம் பட்டா மாற்றுவதற்கும் பணம் கட்டி விடுகிறோம். ஆனால் பட்டாவுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும்தனியாக பணம் கட்டவேண்டும் என்று சொல்வார்கள். 1 கோடி ரூபாய் சொத்து என்றால் 50000 முதல் 100000 ரூபாய் வரை லஞ்சம் கேட்பார்கள்.

நாம் நான்கு கேள்விகள் கேட்கிறோம். நிலம் எந்த தேதியில் வாங்கி பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பதிவு உங்களுக்கு எந்த தேதியில் வந்துள்ளது. அந்தப் பதிவு வந்த தபால் பதிவேட்டின் நகல்அதனடிப்படையில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். எங்கு எப்போது பட்டா மாற்றம் செய்யப்படும் என்ற நான்கு கேள்விகள்தான். இதைக் கேட்டதும்தான் உடனே பட்டா மாற்றம் செய்யப்பட்டு (லஞ்சம் இல்லாமல்) உரியவர்களுக்கு கிடைத்துவிடும். எங்கோ கடைக்கோடியில் வாழக்கூடிய மக்கள் நமது இந்த செயலை பாராட்டி பரவாயில்லை, ரூபாய் 5000, 10000 கேட்டார்கள். ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் நாங்கள் பட்டா வாங்கிவிட்டோம் என்பர்.

வெறும் பத்து ரூபாய் கோர்ட் பீஸ் கட்டி பட்டா வாங்கிவிட்டேன் என்பார்கள். அதே போல் நமது முகாம்களில் நேரடியாக வந்து ரேஷன்கார்டு, பட்டாகுடிநீர் போன்றவைகளை ஒரு பைசா செலவில்லாமல் வாங்கிவிட்டோம் என்பர். நீங்கள் எங்களுடைய ஃபேஸ் புக்கை பார்த்தால் நாம் சாதித்த விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். மது ஒழிப்பு மூலமாக நாங்கள் நிறைய மதுக்கடைகளை மூட வழி செய்துள்ளோம். விழிப்புணர்வுகள் மூலமாக குடியால் பாதிக்கப்பட்டவர்களை மறுவாழ்வு மையங்களில் சேர்ப்பது போன்ற செயல்களை செய்து வருகிறோம். சிலர் கேட்பார்கள்எனது கணவர் நிறைய குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்த மாதிரியான உதவியை செய்வது என்பர். நாம் இதற்கு அடையாறில் டிடிகே என்று சொல்வார்கள், அவர்களிடம் தொடர்புபடுத்தி இவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வோம். இந்த இயக்கம் ஆரம்பித்து ஒன்றரை வருடங்களில் எங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்துவருகிறோம்.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ. இளங்கோ அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது