மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சதக இலக்கியங்கள்

தேமொழி

May 28, 2022

siragu sathagam
தமிழில் ‘சிற்றிலக்கியங்கள்’ எனக் குறிப்பிடப்படும் இலக்கியங்கள் அதன் பெயர் சுட்டுவது போலவே அளவில் சிறிய இலக்கிய வகைகள்.அகவல், அந்தாதி, உலா, கலம்பகம், குறவஞ்சி, கோவை, சதகம், தூது, பரணி, பள்ளு, பிள்ளைத் தமிழ் போன்று வழக்கில் இருக்கும் பலவகை சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை தொண்ணூற்றாறு என மரபாகக் கூறப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய ‘பிரபந்த மரபியல்’ என்ற பாட்டியல் நூல்

   பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத்

   தொண்ணூற் றாறுஎன்னும் தொகையதுஆம்

என்று குறிப்பிடுவதன் மூலம் சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்று கூறும் முறை இருந்திருக்கிறது என அறியலாம். அவ்வாறே, சிவந்தெழுந்த பல்லவன் உலா என்ற நூலும், வீரமா முனிவர் இயற்றிய சதுரகராதியும் 96 சிற்றிலக்கிய வகைகள் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் வெண்பாப் பாட்டியல் (54 என்றும்), சிதம்பரப் பாட்டியல் (63 என்றும்), பன்னிரு பாட்டியல் (65 என்றும்), இலக்கண விளக்கம் (77 என்றும்), பிரபந்த தீபிகை (80 என்றும்), தொன்னூல் விளக்கம் (89 என்றும்) போன்ற நூல்கள் சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கையாக பல்வேறு எண்களைக் குறிப்பிட்டுள்ளதையும் காண முடிகிறது.

பிற்காலத்தில் மேலும் பல சிற்றிலக்கிய வகைகள் உருவாகி 400க்கும் மேற்பட்ட வகைகள் இன்று அறிஞர்களால் சிற்றிலக்கிய வரிசையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தற்காலத்துக் கணக்கின்படி சிற்றிலக்கிய வகை 417 என்று என உறுதி செய்யப் பட்டுள்ளதாக சிலம்பு நா. செல்வராசுவின் இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள் கூறுகிறது. சங்க இலக்கிய தொகை நூல்கள் காலம் முதலே சிற்றிலக்கிய வரையறையுடன் இலக்கியங்கள் பல அமைந்திருப்பினும், ஆக்கத்தில் சிற்றிலக்கியம் மேலோங்கிய காலம் 15-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை என்பதால் இக்காலக் கட்டமே ‘சிற்றிலக்கியக் காலம்’ என குறிப்பிடப்படுகிறது. சென்ற நூற்றாண்டுவரை சிற்றிலக்கிய வகைகள் ஏதோ ஒரு வகையில் தமிழிலக்கியங்களில் இடம் பிடித்தே வந்துள்ளன.

சிற்றிலக்கியங்கள் வடமொழியில் பிரபந்தங்கள் எனக் குறிப்பிடுகின்றன. வடமொழிச் சொல்லான ‘பிரபந்தம்’ என்பது இலக்கிய வகைகள் பலவற்றைக் குறிக்கும் ஒரு பொதுப்பெயர். வடமொழியில் பிரபந்தம் என்னும் சொல் “கட்டப்பட்டது” அல்லது “நன்கு வடிவமைக்கப்பட்டது” எனப் பொருள் தரும். இந்த இலக்கணம் அனைத்து இலக்கியங்களுக்குமே பொது என்பதால், காலப்போக்கில் சிற்றிலக்கியம் என்ற சொல்லே தமிழில் நிலைத்துவிட்டது. சிற்றிலக்கியத்தின் கூறுகள் என அடையாளம் காணப்படுபவை:

1. பாடல் எண்ணிக்கை / அடி எண்ணிக்கை குறைவாக இருத்தல்,

2. அகப்பொருளிலோ புறப்பொருளிலோ ஏதேனும் ஒரு துறையை மட்டும் கூறுதல்,

3. பாட்டுடைத் தலைவனின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டுமே கூறுதல்,

4. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கில் ஏதேனும் ஒன்றை மட்டும் கூறுதல் ஆகும்.

இவ்வாறான பல்வேறு சிற்றிலக்கிய வகைகளில் சதகம் என்ற சிற்றிலக்கிய வகையும் ஒரு சிறப்பான இடம்பிடித்த சிற்றிலக்கிய வகையாக அமைகிறது.

சதகம்:

‘சதகம்’ என்றால், ”நூறு கொண்டது” அதாவது நூறு பாடல்களால் ஆன இலக்கியம் என்று பொருள். ‘சதம்’ என்ற சொல்லின் பொருள் ‘நூறு’ என்ற எண்ணைக் குறிக்கும். எனவே, நூறு பாடல்களின் தொகுப்பாக அமையும் சிற்றிலக்கியம் ‘சதகம்’ என்று அறியப்படும். சதக நூல்களில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை சரியாக 100 என்ற எண்ணிக்கையில் இருக்கும் என்றுசொல்வதற்கில்லை, 101, 102, 108, 109 வரை பாடல்கள் கொண்ட சதக நூல்களும் உள்ளன. இவை நூலிற்கான சதகப் பாடல்கள் நூறுடன், மேலதிகமாக சிறப்புப் பாயிரம், காப்பு, அவையடக்கம், வாழ்த்து போன்ற சில பாடல்களை இணைத்துக் கொள்வதால், சதக நூலுக்கு நூல் பாடல்களின் எண்ணிக்கை மாறுபடுகிறது.

கம்பரின் மகன் அம்பிகாபதி மூன்றாம் குலோத்துங்க சோழ அரசரின் மகள் இளவரசி அமராவதி மீது காதல் கொள்ள, இருவரையும் மணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றால் இளம் புலவன் அம்பிகாபதி 100 இறைவணக்கப் பாடல்கள் இயற்றவேண்டும் என்று கூறப்பட்டதும் 100 பாடல்களுடன் தொடர்பு கொண்ட கதையாக யாவரும் அறிந்ததே. பாடத் தொடங்கிய அம்பிகாபதியின் முதல் பாடலான கடவுள் வாழ்த்து காப்புச் செய்யுளையும் அமரவாதி தவறாக எண்ணிக்கையில் சேர்த்துவிடுகிறாள். எனவே, 99ஆம் பாடல் முடிந்தவுடன் அம்பிகாபதியின் முன் அவள் வந்துவிட, அவளைக் கண்ட அவன் மதிமயங்கி அவளது அழகைப் புகழ்ந்து பாட, போட்டியின் விதியை மீறியதால் அவர்கள் காதல் தோல்வியுற்ற கதை கூறுவதும் இது போன்ற ஓர் எண்ணிக்கைச் சிக்கலே. மற்றும் சில நூல்களில் இடைச்செருகலாகவும் கூட சில செருகு கவிகள் பிற்காலத்தில் நுழைக்கப்பட்டிருக்கலாம், எண்ணிக்கை தெரியாத குற்றம் என்று சொல்வது போல நூறு என்று தலைப்பிட்டுக் கொண்டு ஏதோ ஒரு வகையில் சில சதகங்கள் 100 பாடல்களுக்கு மேல் கொண்டுள்ளன என்பது மட்டும் உண்மை.

எண்ணிக்கை அடிப்படையில் முன்னர் எழுதப்பட்ட பாடல்களை நூலாகத் தொகுக்கும் முறையும், புதியதாக பாடல்களை அமைக்கும் முறையும் தமிழிலும் வடமொழியிலும் தொன்று தொட்டு தொடர்ந்து வழக்கத்திலிருந்து வந்திருக்கிறது. நான்கு, ஐந்து, பத்து, நாற்பது, ஐம்பது, எழுபது, நூறு, ஆயிரம் என்ற பெயர்களில் பல இலக்கியங்களை மேற்கோளாகக் காட்ட முடியும். திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் எழுதப்பட்ட சங்கம் மருவிய காலத்து ஐங்குறுநூறு, நூறு நூறு பாடல்களாக எழுதுவதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமையும். பின்னர் வடமொழியின் தாக்கத்தில் இந்த நூறு பாடல்கள் முறை சதகம் என்று அழைக்கப் படலாயின.

முதன் முதலில் 9 ஆம் மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் திருச்சதகம் என்னும் பகுதியில் சதகம் என்ற சொல் எடுத்தாளப்படுகிறது. அதற்கு முன்னர் தமிழிலக்கியத்தில் சதகம் பற்றிய குறிப்பு காணப்பெறவில்லை. தமிழின் சதக இலக்கியங்களுக்கு நூறு பாடல்கள் என்ற எண்ணிக்கை ஒற்றுமையும், சதகம் என்ற பெயர் ஒற்றுமையும் தவிர்த்து வடமொழி சதக நூல்களின் பிறகூறுகளுடன் ஒற்றுமை இல்லை என்று ‘தமிழில் சதக இலக்கியங்கள்’ நூலில் ப. பழனியம்மாள் கூறுகிறார். தமிழின் முதல் சதக இலக்கியமாக கார்மண்டலச் சதகம் அறியப்படுகிறது. கார்மண்டலத்தில் (கருநாடகம் எனவும் பிற்காலத்தில் அழைக்கப்படுவது) வாழ்ந்த வேளாளர் பெருமை, ஆட்சி செய்த அரசர்கள் பெருமையை விரித்துரைப்பதாக அமைந்திருக்கும் கார்மண்டலச் சதகம் நூலானது, நூலைப் பதிப்பித்தவர் கொடுக்கும் காலக் குறிப்பின் அடிப்படையில் அவிநாசி ஆறைக்கிழாரால் 1025 -1070 காலகட்டத்தில் எழுதப்பட்டது என்ற குறிப்பை ந.வீ. செயராமன் எழுதிய ‘சதக இலக்கியங்கள்’ நூல் குறிப்பிடுகிறது. முதலில் சதக இலக்கியங்களின் பாடுபொருள் மண்டல வரலாறு கூறுவதாக அங்கு வாழும் வேளாளர், சான்றோர் பெருமையை எடுத்துரைக்க எழுதப்பட்டவை. பின்னர் 17-ஆம் நூற்றாண்டில், அறக்கருத்துகளை பொருண்மையாகக் கொண்டு எழுதப்பட்ட படிக்காசுப் புலவரின் ‘தண்டலையார் சதகம்’ ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து அறக்கருத்துகளை முன்வைத்த நீதிச் சதகங்கள் எழுதப்பெறலாயின. பிறகு பாட்டுடைத்தலைவன், இறைவன், அடியார் போற்றுதல் என்ற வகையில் மாற்றம் பெற்று துதிச் சதகங்கள் என்ற போற்றிப் பாடல்கள் முறை பாடு பொருளானது. நல்ல பல உவமைகளோடு உணர்த்தப்பட்ட சதக நீதி இலக்கியங்கள் அக்கால திண்ணைப் பள்ளிக் கூட பாடத்திட்டத்தில் இடம் பெற்றன. எதுகை, மோனைகள் கொண்ட வகையில் மனனம் செய்து கற்பதற்கு உரிய வகையில் சதக இலக்கியப் பாடல்களின் நடை அமைப்பு எளிமையாக அமைந்த விதம் கற்பதற்கு உதவியாக அமைந்தது.

முதன் முதலாகச் சதகத்தின் இலக்கணத்தை 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைத்தியநாத தேசிகரே தமது இலக்கண விளக்கப் பாட்டியலில் கூறியுள்ளார்.

   விழையும் ஒருபொருள் மேலொரு நூறு

   தழைய உரைத்தல் சதகம் என்ப   (இலக்.வி. 847)

அகப்பொருள் பற்றியோ அல்லது புறப்பொருள் பற்றியோ நூறு செய்யுள்களில் உரைப்பது சதகம் ஆகும் என்று இந்நூற்பா சதக இலக்கணத்தைக் கூறுகிறது. இதையே “பயிலும் ஓர் பாட்டாய் நூறு உரைப்பதுதான் சதகம்” (சுவாமிநாதம். 168) என்று சுவாமிநாதம் எனும் பாட்டியல் நூற்பாவும் கூறுகிறது.

நாட்டுப் பெருமை பேசல், சமயம் பரப்புதல், சமுதாய நீதி, சமூகச் சீர்திருத்தம், வாழ்வியல் நடைமுறை போன்ற பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுச் சதகம், நீதிச் சதகம், போற்றிச் சதகம் (துதி பாடுதல்) போன்ற 3 பிரிவுகளில் சதகப் பாடல்கள் அமையும்.

தண்டலையார் சதகம், அறப்பளீசுர சதகம், குமரேச சதகம், கொங்குமண்டலச்சதகம், பாண்டிமண்டலச் சதகம், தொண்டைமண்டலச்சதகம், சோழமண்டலச்சதகம், கோவிந்த சதகம், சயங்கொண்டார் சதகம், மணவாள நாராயண சதகம் ஆகியன பலரால் குறிப்பிடப்படும் நிலையில் உள்ளன. மா. லெமூரியா எழுதிய ‘மீனாட்சியம்மை சதகம்’ (2010) நூலின் பிற்சேர்க்கை (பக்கம் 71-76) பகுதி 125 சதக நூல்களை அவை எழுதப்பட்ட காலத்துடன் பட்டியலிடுகிறது. அத்தரவுகளின் மூலம் சதக நூல்களில் பெரும்பான்மை 17, 18, 19 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவையாக இருப்பதைக் காண முடிகிறது. சதக இலக்கிய வகை பிற்காலம் என்பதால் மண்டல வரலாறு கூறுவதாக பல சதக நூல்கள் எழுதப்பட்டிருந்தாலும் சேரமண்டல (சேர நாடு அல்லது கேரள அல்லது மலையாள) வரலாறு பேசும் சதக நூல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஈழம், கதிர்காமம் இவை குறித்த சதக நூல்கள் இருக்கும் பொழுது, சேரத்து பாடல்கள் இல்லாமைக்கு கேரளம் மொழியால் பிரிந்துவிட்ட நிலையே காரணமாக அமைகிறது எனக் கருத வேண்டி இருக்கிறது. சதக வகை சிற்றிலக்கியங்கள் 1650களில் தொடங்கி 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் நல்ல வளர்ச்சியுறத் தொடங்கியிருக்கின்றன. சென்ற நூற்றாண்டிலும் சதக இலக்கியங்கள் இயற்றப்பட்டன என்பதற்கு மகாத்மா காந்தி சதகம் (1922), சதுர்லிங்க தசகோத்திர சதகம் (1958) போன்ற சதகம் நூல்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றன. இதுகாறும் சற்றொப்ப 200 சதக இலக்கியங்கள் தமிழில் இயற்றப் பட்டிருக்கக் கூடும் என்று கணிக்கலாம், கிடைத்தனவற்றில் சுமார் 170 சதக இலக்கியங்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது (https://www.chennailibrary.com/sadhagam/sadhagam.html). ஆனால் 1950க்குப் பிறகு சதக வகை நூல் எழுதுவதில் ஆர்வம் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

இணையத்தில் கிடைக்கும் சதக நூல்கள் சில .. .. ..

‘தமிழ் இணையக் கல்விக்கழகம்’ நூலகத்தில் (https://www.tamildigitallibrary.in/tva-search?tag=சதகம்) -100க்கும் மேற்பட்ட சதக நூல்கள் உள்ளன.

நூல்களை வெள்ளுரை வடிவில் வழங்கும் ‘மதுரை தமிழிலக்கியத் திட்டம்’ தொகுப்பில் (https://www.projectmadurai.org/pmworks.html) 25 சதக இலக்கியங்கள் ஒருங்குறி எழுத்துரு பதிவுகளாக வெள்ளுரை வடிவில் (textified) சேமிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு சதக இலக்கியங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் கிடைக்கின்றன. கீழுள்ளவை மதுரை தமிழிலக்கியத் திட்டம் தளத்தில் கிடைக்கும் சதகம் வகை சிற்றிலக்கிய நூல்கள் நூலாசிரியர் பெயருடன் கொடுக்கப்பட்டுள்ளது.

1. தண்டலையார் சதகம்-பழமொழி விளக்கம் — படிக்காசுப் புலவர்

2. சதுரகிரி அறப்பளீசுர சதகம் ** — அம்பலவாணக் கவிராயர்

3. குமரேச சதகம் ** — குருபாத தாசர்

4. மநுநீதி சதகம் — இராசப்ப உபாத்தியாயர்

5. நன்மதி வெண்பா: சுமதி சதகம் மொழிபெயர்ப்பு — எம்.ஆர். ஸ்ரீநிவாசய்யங்கார்

6. ஜெயங்கொண்டார் சதகம் — முத்தப்பச் செட்டியார்

7. நடராச சதகம் — ஸ்ரீமத் சிதம்பரநாத முனிவர்

8. கஞ்சகிரி சித்தேசர் சதகம் — சேலம் அநந்த நாராயண சர்மா

9. கயிலாசநாதர் சதகம் — சிதம்பரம் பிள்ளை

10. அண்ணாமலைச் சதகம் — திருச்சிற்றம்பல நாவலர்

11. அவையாம்பிகை சதகம் — மாயூரம் – நல்லதுக்குடி கிருஷ்ணையர்

12. திருவேங்கட சதகம் — வெண்மணி நாராயண பாரதியார்

13. அருணாசல சதகம் — காஞ்சிபுரம் சபாபதி முதலியார்

14. எம்பிரான் சதகம் — கோபாலகிருஷ்ணதாசர்

15. கோவிந்த சதகம் — நாராயணபாரதியார்

16. வடவேங்கட நாராயண சதகம் —               திவ்யகவி நாராயணதாசரவர்கள்

17. திருத்தொண்டர் சதகம் — மலைக்கொழுந்து நாவலர்

18. சிவசங்கர சதகம் — எழுமூர் வீராசாமி உபாத்தியாயர்

19. குருநாத சதகம் — கருணையா நந்தசுவாமிகள்

20. பாண்டிமண்டல சதகம் — மதுரை ஐயம்பெருமாள்

21. சோழ மண்டல சதகம் — வேளூர் ஆத்ம நாத தேசிகர்

22. தொண்டைமண்டல சதகம் — படிக்காசுப்புலவர்

23. கொங்கு மண்டல சதகம் — கார்மேகக் கவிஞர்

24. வைராக்கிய சதகம் (உரையுடன்) — சாந்தலிங்க சுவாமிகள்

25. நந்தமண்டல சதகம் (உரையுடன்) — காஞ்சிபுரம் மாத்ரு பூதையரவர்கள்

[ ** சதுரகிரி அறப்பளீசுர சதகம், குமரேச சதகம் ஆகியவற்றின் கௌசல்யா ஹார்ட் மொழி பெயர்த்த ஆங்கில மொழிபெயர்ப்புகளும் உண்டு].

கட்டுரைக்கு உதவிய தளங்கள்:

சிற்றிலக்கியம்

https://www.tamilvu.org/courses/degree/p103/p1033/html/p103311.htm

சதக இலக்கியம்

https://www.tamilvu.org/ta/courses-degree-c012-c0124-html-c01245l1-15383

https://www.tamilvu.org/ta/courses-degree-p103-p1034-html-p1034441-26220

மதுரை தமிழிலக்கியத் திட்டம்

https://www.projectmadurai.org/pmworks.html

மீனாட்சியம்மை சதகம்

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010971_மீனாட்சியம்மை_சதகம்.pdf

 


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சதக இலக்கியங்கள்”

அதிகம் படித்தது