மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சனநாயகம் தூக்கில்! (கவிதை)

ராஜ் குணநாயகம்

Mar 12, 2016

jananaayagam7

கபட,வேடதாரிகள் அரியணையில்

சட்டமும், அரசியலும் அவர்கள் கையில்!

மக்களும்

தூய அரசியலும்

சனநாயகத்தின் இருவிழிகள்!

தூயஅரசியல்சுதந்திர வெளியில்

தேசத்தின் ஒருமித்த

மக்கள் கூட்டத்தின்

விருப்பும்

கருத்து வெளிப்பாட்டு

சுதந்திரமும் இணைந்து

தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள்

அரசை ஆளும்

நல்லாட்சி

புனிதமான சனநாயகம்!

புனிதமான சனநாயகம்……..

இங்கு

ஒவ்வொரு தனி மனித சுதந்திரங்களும்

உறுதிப்படுத்தப்படும்

மேம்படுத்தப்படும்

போற்றிப்பாதுகாக்கப்படும்-

இனம், மதம், மொழி

பண்பாடு, கலாச்சாரம்

கருத்து வெளிப்பாடு

அரசியல் ஈடுபாடு

என்று தொடங்கி

பிறப்போடு மனிதனோடு

கூடவே பிறந்து

இறப்பு வரை

பிரிக்கவே முடியாத உரிமைகள்

எல்லாம்

சுதந்திரமாய் அனுபவிக்கும் சூழல்!

மனுநீதியும்

தர்மவழி சித்தாந்தங்களும் வழிநடத்தும்!

ஊழல், இலஞ்சம்

சுரண்டல்கள்

பாரபட்சங்கள், பாகுபாடுகள்

என்று நீளும்

தரம்கெட்ட சொற்பிரயோகங்கள் எல்லாம்

அகராதிகளிலிருந்தே அழிக்கப்பட்டிருக்கும்!

அமைதியான தேசத்தில்

முன்னுரிமைப்படுத்தப்பட்ட

மக்களின் உயரிய நலனும்…..

மற்றைய தேசங்களை

வஞ்சனை செய்யாத

சமூக, பொருளாதார அபிவிருத்தியும்…..

நல்லாட்சி எனும் தேரை ஓட்டும்

வெள்ளை வாரணங்கள்!

போலி சனநாயகம்……..

jananaayagam1

கொடுங்கோலர்கள்

குற்றவாளிகள்

கொள்ளையர்கள்

இன, மத வெறியர்கள்

குள்ள நரிகள்

கழுதைகள்

அரிதாய் சில கனவான்கள்

குள்ள நரிகள் கூட்டத்துள்

இடம்மாறி சிக்குண்ட

கவரிமான்கள் போல்………

இவர்களும்

தேசத்து தலைவர்களாம்

சனநாயகவாதிகளாம்……….?

jananaayagam2

கோடிகள் பல

முதலீடு செய்து…….

விழலுகிறைத்த நீர் போல்

ஒருவர் பற்றி ஒருவர்

வீண் கதைகள் பேசும்

அவர்களை அழித்தோம்

இவர்களை அழிப்போம்

இனியும் அழிப்போம்

என்று வீர வசனங்கள் பேசும்

செய்ததுமில்லை

செய்யப்போவதுமில்லை

என்று தெரிந்தும்

சாதனைகள் பல செய்வோம்

என வாக்குறுதிகள் பலஅள்ளி வீசும்

தேர்தல் கால

மாயாஜாலங்கள்!

மக்களின் அரை குறை விருப்போடு

தெரிவாகி

சிறந்த தெரிவுகள்

ஏதும் இல்லாமையால்……….

அன்றே

கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம்

மறந்து

காற்றோடு பறக்கவிட்டு

பதவிக்கும் பட்டத்துக்கும்

அங்கும் இங்கும்

மாறி மாறி பாய்ந்து

மரம் விட்டு மரம் தாவும்

மந்திகள் போல்…….

அலைந்து

கையை பிடித்து

காலில் விழுந்து

பட்டம், பதவிகள்

பெறும் கூட்டம் ஒன்று சேர்ந்து

அரசமைக்கும்………….

இதற்கும்

சனநாயகம் என்று

பெயர் சூட்டி

முரசறையும்

உலகின் எட்டுதிசைக்கும்!

நன்மைகளும் கொண்ட

பூகோளமயமாக்கம்

தீமையாய்…………

jananaayagam3

சனநாயகம் போதிக்கும்

சனநாயக முகமூடி போட்ட

முதலாளித்துவ தேசங்கள்

வேதம் ஓதும் சாத்தான்கள்……..

தம்

சர்வதேச சந்தை நலன் சார்ந்து

சர்வாதிகார ஆட்சி

என்று ஒரு முறையும்

சனநாயகம்

என்று மற்றொருமுறையும்

வாழ்த்தும்

நா பிரளும்!

பொருளாதார வளங்கள் சுரண்டும்

ஒட்டுண்ணிகள்!

ஒட்டுண்ணிகள்

ஒட்டியிருக்கும் மரம்

இருப்பதிலும்

இறப்பதிலும்

அக்கறைகொள்வதில்லை!

தேசத்துள்

பிரிவினை இல்லை

பேதம் இல்லை

எல்லோரும்

ஓரினம், ஓர் மதம் என்பர்………….

மதம் ஒன்றுக்கு ஒரு நீதி

மற்ற மதங்களுக்கெல்லாம் அநீதி!

இன அழிவில் சிறு இனம்

இன அழிப்பில் பேரினம்!

பயங்கரவாதம்

பயங்கரவாதம் என ஓலமிட்டு

படுபாதகங்கள் புரியும் பாவிகள்!

தேசத்தின் ஒரு குடி

இராணுவத்தின் திறந்த வெளி சிறையில்

மற்றைய குடிகள்

jananaayagam4

ஊழல், மோசடிகரர்களின் மாய வலையில்!

சொந்த தேசத்து

சிறு இனத்தாரை

அடக்கி ஒடுக்கி

கொடூரங்கள் பலபுரியும்…………

மக்களை கூறு போட்டு

கொன்று புசிக்கத்துடிக்கும்

அரக்கர் குலத்தோர்!

ஒப்பந்தங்கள் செய்வதும்- பின்னே

கிழித்துபோடுவதும்

எழுதபடாத சட்டங்கள்!

விசாரணை குழுக்கள் அமைப்பதுவும்- பின்னே

கிடப்பில் போடுவதுவும், கலைப்பதுவும்

தினசரி செய்திகள்!

பணம் பலதும் செய்யும்

எதுவும் செய்யும்…….

மௌனம்- பேச முடியாமை

பணம் இல்லாதவனின்

ஒரே ஆயுதம்!

தர்மம்

அதர்மத்தின் அடிமை!

நியாயம்

அநியாயத்தின் சேவகன்!

நீதி

அநீதியின் சிறையில்!

வாய்மை

பொய்மையின் காலடியில் குற்றுயிராய்!

புத்தரின் போதனைகள்

அகிம்சைக்கு சோதனைகள்!

மீண்டும் மீண்டும்

சிலுவையில் அறையப்படும்

கிறித்துக்கள் !

சீனத்து பேரறிஞன் சொன்னான்

அரசியல்

இரத்தம் சிந்தாத யுத்தம்………

யுத்தம்

இரத்தம் சிந்தும் அரசியல் என்று

தமிழருக்கும் சாலப்பொருந்தும்

அரசியல்சித்தாந்தம்!

போர்துகேயரும்

டச்சுகாரனும்

ஆங்கிலேயனும்

சிறையிட்ட சனநாயகம்

தூக்கிலிடப்பட்டது

நான்காம் நாள் மாசி 1948 அன்று

தமிழரின் சுதந்திரங்களையும் சேர்த்து!

அன்று விடுவிக்கப்பட்டது

பொய் முகம் கொண்ட

போலி சனநாயகம்………………..

இன்றும் தொடர்கிறது

ஆறு தசாப்தங்கள் கடந்தும்…………….

புனிதமான சனநாயகம்

என்றும் தொடு வானம்தான்………….

இன, மத, மொழி கடந்து

தேசத்தின்

ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும்

தூய மாற்றமொன்றை நோக்கி

மாறாதவரை!

அதுவரை

சனநாயகம் தூக்கில்!

- ஈழன்-


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சனநாயகம் தூக்கில்! (கவிதை)”

அதிகம் படித்தது