மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சனாதனம் கொளுத்த நினைத்திட்ட காமராசர் !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jul 14, 2018

siragu kamarajar1

‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முசுலிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.

தோழர்களே! நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”

(1961, தேவகோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார்.)

ஜூலை 15 காமராசர் பிறந்த நாள். காமராசரை நன்றியோடு நினைத்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கின்றோம். ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை 1953 ஆம் ஆண்டு கொண்டு வரும் போது அதனை ஒழித்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்தடுத்த பெரியார், காமராஜர் அவர்களை ஆட்சிக்கட்டிலில் ஏற்றி ராஜாஜி மூடிய 6000 பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்க வைத்து, குலக்கல்வி திட்டத்தால் நம் மாணவர்கள் கல்வி உரிமை பறிபோகாது தடுத்தார். எனவே தான் தந்தை பெரியார் அவர்கள் காமராசர் மீது தனி அன்பு கொண்டிருந்தார்.

திமுக ஆட்சியில் கலைஞர் அவர்கள் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் இவ் விழாவையொட்டி, அனைத்துப் பள்ளிகளிலும், பல்வேறு வகையான போட்டிகளை முன் கூட்டியே நடத்தி, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஜூலை 15ம் தேதி பரிசுகள் வழங்கி, விழா கொண்டாடப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இதற்காக, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு தனி நிதி உதவியும் வழங்கப்பட்டது. இந்த விழாவை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்காக, தி.மு.கழக அரசு தனி சட்டமும் கொண்டு வந்து அமல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டின் கல்விக் கண் திறந்தவர் அல்லவா? அதனால் தான் மிகச்சரியாக அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என கொண்டாடுகின்றோம்.

எளிமையின் அடையாளமாக, எடுத்த செயலை உத்வேகத்துடன் செய்யும் திறன் பெற்றவராக, காமராசர் திகழ்ந்தார். தொழில் வளம், உள்கட்டுமானம், பொதுச் சேவைகள், மருத்துவம் என்று அவர் தடம்பதித்த துறைகள் ஏராளம். இந்திய அளவில் ஓர் முன்னோடி அரசியல் ஆளுமையாக திகழ்ந்தவர் காமராசர் அவர்கள்.

1956 இல் சட்டசபையின் சார்பாக, தமிழ் மக்களின் சார்பாக தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதாவைத் தமிழன்னையின் மடியில் சமர்ப்பிக்கின்றேன் என பெருமையுடன் நிதி அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் அறிமுகம் செய்ய அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதுவரையிலும் ஆங்கிலத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டு வந்த வரவு செலவு, அறிக்கை முதன் முறையாக காமராசர் ஆட்சியில் 1957-1958 ல் தமிழில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக காமராசர் ஆட்சியில் தான் கலைக் களஞ்சியம் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்டது. தமிழை மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் கட்சி பேதமின்றி தமிழின் மீது பற்று கொண்ட அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன், ஜீவானந்தம், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், நாராயணசாமி பிள்ளை போன்றவர்களை அங்கத்தினர்களாக நியமித்தார். ஆகில இந்திய அளவில் தேர்வுகளை அவரவர் தாய் மொழியில் எழுதும் வாய்புகளை உருவாக்கித் தந்ததில் காமராசர் பங்கு மிக முக்கியமானது. பத்தாவது பாட நூலில் திருக்குறள் இடம் பெறுவது கட்டாயமில்லை என்ற நிலையை மாற்றி கட்டாயம் இடம் பெறச் செய்தவரும் காமராசர் அவர்கள் தான். பல்துறை பாடங்களை தமிழில் மொழி பெயர்க்கச் செய்து தமிழ் நாடு அரசு பாடநூல் விற்பனைக் கழகம் மூலம் அவை குறைந்த விலையில் கிடைக்கவும் வழி செய்து தந்தவர். இப்படி மொழிக்காக காமராசர் ஆட்சியில் பல்வேறு முயற்சிகளை வெற்றிகரமாக முடித்து காட்டினார்கள். தமிழ் நாட்டின் சிற்றூர்களுக்கு மின் வசதி செய்து தந்த முதல் ஆட்சி காமராஜர் ஆட்சி தான். நீர்மூலம் மின் சக்தி உற்பத்தி செய்து அவை சிற்றூர்களுக்கு வழங்கிட வழிச் செய்தார்.

காமராசாரின் எளிமைக்கும் மக்கள் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கைக்கும் ஒரு எடுத்துக்காட்டுச் சொல்ல வேண்டும் எனின், ஒரு முறை முதுகுளத்தூர் கலவரம் மூண்டிருந்த சமயத்தில், பாதுகாப்பு கருதி காமராசரின் வாகனத்தின் முன்னும் பின்னும் பைலட்டும் எஸ்கார்டும் போட்டிருந்தார்கள். காவல் துறையின் இந்த ஏற்பாடு காமராசருக்கு தெரியாது. சைரன் ஒலி வந்தவுடன் விவரம் கேட்டறிந்தார். ” நான் என்ன வேறு நாட்டிலா பயணம் செய்கின்றேன்? நம் நாட்டில் தானே பயணம் செய்கின்றேன். நான் உசுரோட தானே இருக்கேன்? பின்ன எதுக்கு முன்னாடி சங்கு ஊத்திட்டு வெட்டி செலவு பண்ணிக்கிட்டு இருக்கீங்க? என்று கடிந்து கொண்டார். அதன் பின் எப்போதும் அவருக்கு அத்தகைய பாதுகாப்பு வசதிகள் செய்து கொள்ள அவர் விரும்பியதுமில்லை அனுமதித்ததுமில்லை.

தொண்டர்களை மதிக்கும் பண்பு காமராசரிடம் உண்டு, ஒரு முறை, தன்னுடைய அம்மா அழைத்ததற்கு வீட்டில் உணவு உண்ணாமல், எளிய தொண்டர் அழைத்தார் எனும் காரணத்திற்காக அங்குச் சென்று உணவருந்தினார்.

1967 ஆம் ஆண்டு காந்தியின் 98 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒட்டி, குமரி ஆனந்தன் தலைமையில் குமரியிலிருந்து சென்னை வரை 98 காங்கிரஸ் தொண்டர்கள் பாத யாத்திரை மேற்கொள்ளாத திட்டமிட்டு காமராசரின் ஒப்புதலையும் பெற்றனர். தொண்டர்கள் சென்னை வரும்போது காமராசர் அவர்களை வாழ்த்தி வரவேற்கவும் முடிவு செய்யப்பட்டது. அக்டோபர் 2 ஆம் தேதி புறப்பட தொண்டர்கள் 550 மைல்கள் கடந்து திண்டிவனத்தை தாண்டியபோது அவர்களைச் சென்னையில் வரவேற்கும் தினமான நவம்பர் 14 இல் அரசியல் பணி காரணமாக அவசரமாக டெல்லி செல்லப்போகிறார் என்ற தகவல் தொண்டர்களுக்கு கிடைத்ததும் தொண்டர்கள் உற்சாகம் இழந்தனர். ஆனால் தொடர்ந்து வந்தவர்கள் அச்சிறுப்பாக்கத்தை நெருங்கும் போது வியப்பு மேலோங்க உற்சாகமானார்கள். காமராசர் அவர்களை வரவேற்க வந்திருந்தார். உங்களை சென்னையில் வரவேற்றுப் பாராட்ட முடியாத நிலை, அவசரமாக டெல்லிக்கு செல்ல வேண்டி உள்ளது ,அதனால் தான் இங்கு வந்து பாராட்டுகின்றேன் என்றார். தொண்டர்கள் மனமகிழ்ந்து போனார்கள்.

இடிந்திருக்கும் தன் வீட்டுச் சுவரை கட்டிக்கொடுக்குபடி அவர் அம்மா கேட்டபோது, “மந்திரியா போனான் வீட்டைக் கட்டிக்கிட்டேன்னு சொல்வாங்க , அதெல்லாம் இப்ப அவசரம் இல்லை என்று கூறி மறுத்து விட்ட நேர்மையாளர் தான் காமராசர் அவர்கள்.

இப்படி காமராசரின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவர் எந்த அளவிற்கு நேர்மையாக, எளிமையாக வாழ்ந்தார் என்பதை நமக்கு விளக்கும்.

இப்படி மக்களோடு மக்களாக வாழ்ந்த காமராசரைத் தான் ஆர் எஸ் எஸ் கொளுத்த நினைத்தது. 7 – 11 – 1966 ஆண்டு புது தில்லியில் காமராசர் இருக்கின்றார். அன்று தான் இந்தியப் பாராளுமன்றத்தின் மீது சங்கராச்சாரியார்களின் தலைமையில் சாதுக்கள் என்று அழைத்துக் கொள்வோர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங்கம் போன்ற மத அமைப்புகளின் துணையுடன் தாக்குதல் நிகழ்த்துகின்றனர். காந்தியைக் கொன்ற அதே கூட்டம் தான் கருப்புக் காந்தியையும் கொலை செய்ய முயன்றது. . ‘பசு வதைத் தடுப்புச் சட்டத்தினை’ இந்திய நாட்டில் சட்டமாக அமுலாக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையே வலியுறுத்தி தில்லியின் வீதிகளில் சூலாயுதங்கள், பெட்ரோலில் நனைக்கப்பட்ட துணிகளோடு இன்னும் பல ஆயுதங்களுடன் ‘ நிர்வாண சாமியார்கள் கூட்டம் அன்றுக் கூட்டம் போடுகின்றது. அப்போது மதிய உணவினை அருந்தி விட்டு காமராசர் ஓய்வு எடுக்கும் பொழுது அந்தத் தாக்குதலை நடத்துகின்றது . அதில் மயிரிழையில் உயிர் பிழைத்து இருக்கின்றார் காமராசர்.

இந்த சம்பவத்திற்கு முன்னர் அவர் ஆற்றிய உரைகளில் நாட்டின் சில பணக்காரர்களுக்கும் மத அமைப்பாளர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்றும் கூறி இருக்கின்றார். அதுவே இந்தத் தாக்குதலுக்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.

“பணக்காரனும் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களும் தான் சோசியலிசத்திற்கு எதிரிகள். பிறப்பால் உயர்ந்தவர்கள் ஏன் சோசியலிசத்தை எதிர்கின்றார்கள் தெரியுமா? பணக்காரர்களோடு சேர்ந்து சோசியலிசத்தை வர விடாது தடுத்து விட்டால் தங்களுடைய சாதியின் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டிக் கொள்ளலாம் என்று நினைகின்றார்கள். நாம் விட்டு விடுவோமா என்ன?” – நவசக்தி (3-11-1966)

பின்னர் அவர் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்திற்கு பின்னர் சேலத்தில் ஆற்றிய உரையில்,

“குறிப்பாக அவர்களுக்கு பயம் என்னைப் பற்றித்தான். இந்த காமராஜ் தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல்கின்றான். அவன் தான் அதிலே தீவிரமாக இருக்கின்றான் என்று நினைகின்றார்கள். என் வீட்டுக்கு தீ வைக்கின்றான். ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். கடமையை நான் செய்தே தீருவேன்…” – 11-12-1966 சேலம் பேரூரை – நவசக்தி – 15-12-1966

இப்படி தன் இறுதி மூச்சு வரை சனாதனத்தை எதிர்த்த கூட்டத்தோடு தான் இன்று அவர் சமூக மக்கள் கூட்டணி என்று காமராசர் வந்த வழியினை மறந்து விட்டு பதவிக்காக தமிழ் நாட்டின் அமைதியை புதைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த காமராசரின் பிறந்த நாளில் ஆவது காமராசரின் கதர் ஆடைக்குள் இருந்த கறுப்புச் சட்டை கொள்கையினை புரிந்து தம் வழிகளை மாற்றிக்கொள்ளட்டும் சிலர்.

ஆதாரம் :
காமராசர் வாழ்வும் அரசியலும் (மு. கோபி சரபோஜி)


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சனாதனம் கொளுத்த நினைத்திட்ட காமராசர் !!”

அதிகம் படித்தது