மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சமயப் பின்புலத்தில் மக்கள் வாழ்க்கைமுறை

முனைவர் மு.பழனியப்பன்

Mar 13, 2021

siragu samana madham1

பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்ற இயல்புடைய வாழ்க்கையில் ஒரு இலக்கை ஏற்படுத்தி அவ்வழி நடக்க சமயங்கள் உதவுகின்றன. சாதாரண மனித உயிரை உயர்வு பெறும் ஆன்மாவாக உயர்த்தி உன்னத நிலையான வீடுபேற்றை அடைய வைக்கச் சமயங்கள் அடிகோலுகின்றன. வைதிக சமயங்கள், அவைதிக சமயங்கள் என்ற இரு நிலைப்பட்ட சமயங்களும் உயிர்களிடத்துள்ள தீய குணங்களை அகற்றி நற்குணங்களைப் புகட்டி அறங்கள் செய்யவைத்து முன்னேற்றும் முயற்சியில் முன் நிற்கின்றன. இதன் காரணமாக சமயப் பின்புலத்தில் மக்களின் வாழ்க்கை முறை நெறிப்படுத்தப்படுகிறது. அவ்வகையில் மணிமேகலைக் காப்பியம் மக்கள் உய்வு பெறும் நெறி பற்றிய விவாதங்களுக்கு இடம் தந்து முன்னேற்றம் மிக்க வாழ்க்கை முறை எதுவென அறியச் செய்ய முயல்கிறது.

“நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய்:
தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமைசால் நல்அறம் பெருகா தாகி
இறுதிஇல் நல்கதி செல்லும் பெருவழி
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண் அடைத்தாங்குச்
செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்என்று
உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டுஎன உணர்தல் அல்லது யாவதும்
கண்டுஇனிது விளங்காக் காட்சி போன்றது
சலாகை நுழைந்த மணித்துளை அகவையின்
உலாநீர்ப் பெருங்கடல் ஓடா தாயினும்
ஆங்குஅத் துளைவழி உகுநீர் போல
ஈங்கு நல்அறம் எய்தலும் உண்டுஎனச்
சொல்லலும் உண்டுயான் சொல்லுதல் தேற்றார்”

என்ற நிலையில் அறவாணர் உயிர்களுக்கு நல்லறம் போதிக்கும் நிலை பற்றி உரைக்கின்றார். வீட்டு நெறியானது அருகம்புல்லும், நெருஞ்சி முள்ளும் அடர்ந்த காடாகிக் கிடக்கிறது. அது தீ நெறிகளால் மூடப்பட்டுக்கிடக்கிறது. பனியால் மூடிய சூரிய மண்டலத்தைக் காண இயலாது. ஆனால் சூரிய மண்டலம் இருப்பதை உணரமுடியும். அதுபோல வீட்டு நெறி உணரத்தக்கது. மணியின் உள் செல்லும் துளையில் கடலை அடைக்க முடியாது. சிறிது சிறிதாகவே நீர் மணித் துளையில் செல்லும். அவ்வாறே நன்னெறி சிறிது சிறிதாகவே அடையத்தக்கதாகும். ஆனால் வீட்டுநெறிப்படி யாரும் செல்ல விரும்புவதில்லை என்று அறவாணர் உயிர்கள் அடைய வேண்டிய உயர் வாழ்க்கை பற்றி அறிவிக்கிறார். இவ்வாழ்க்கையை அடைய முயல்கிறாள் மணிமேகலை.

மணிமேகலை பௌத்த சமயம் சார்தல்

siragu manimegalai2

காவிரிப்பூம்பட்டிணத்து இந்திரவிழாவில் நடனம் ஆடும் குலத்தைச் சார்ந்தவள் மணிமேகலை. மாதவி, தன் காதலன் கோவலனுக்கு உள்ள துயரம் கருதி இந்திரவிழாவில் நடனமாட வரவில்லை. அவளின் மகளான மணிமேகலை நடனமாட வரவேண்டிய சூழல். இந்நிலையில் மாதவியின் தாய் சித்திராபதி மணிமேகலையை நடனமாட வரச் செய்ய பல முயற்சிகள் எடுக்கிறாள். தோழி வயந்தமாலையை அனுப்பி மணிமேகலையை அழைத்து வர முயற்சி செய்கிறாள்.

ஆனால் மாதவி மணிமேகலையைக் கற்புக்கரசி கண்ணகியின் மகள் அவள். அவள் தீத்தொழில் படாஅள் என்று மறுக்கிறாள். இதற்கு உரிய காரணமாக மாதவி குறிப்பது அறவணடிகளின் அறவுரையாகும். அறவணடிகள் அறவுரையை முன்வைத்தே மணிமேகலை தீத்தொழில் புரிய வரமாட்டாள். நல்திறம் படர்வாள் என்று மொழிகிறாள்.

‘‘அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து
மா பெருந் துன்பம் கொண்டு உளம் மயங்கி
காதலன் உற்ற கடுந் துயர் கூறப்
“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக!” என்று அருளி
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி
“உய் வகை இவை கொள்” என்று உரவோன் அருளினன்”

என்று சமயப் பின்புலம் காரணமாகவே மணிமேகலையை நல்வழிப்படுத்துகிறாள் மாதவி. ஐவகை சீல அமைதி காட்டி மணிமேகலை என்ற பெண்ணை நல்வழிப் படுத்துகிறாள் மாதவி. இது முதல் தொடங்கி மணிமேகலை என்ற பெண்ணை மெல்ல மெல்ல நல்வழிப் படுத்தும் போக்கு காப்பியத்தில் இடம்பெறுகிறது. காமம் அற்றவளாக, களவு அற்றவளாக, சொல் தூய்மை மிக்கவளாக அவள் காப்பியத்தில் வளர்த்தெடுக்கப்படுகிறாள்.

(தொடரும்)


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சமயப் பின்புலத்தில் மக்கள் வாழ்க்கைமுறை”

அதிகம் படித்தது