மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சருகு (கவிதை)

குமரகுரு அன்பு

May 15, 2021

siragu tree1

சாளரங்கள் படபடக்கும் மனிதரற்ற வீட்டுக்குள் தைக்கப்பட்டிருக்கும் சிலந்தி வலைகளில் சிக்கிய பூச்சிகளும்
வலை தப்பி பல்லியிடம் சிக்கிய பூச்சிகள் தவிர
தப்பியவை மட்டும்
சன்னல் வழியே வெளியே பறந்து கொண்டிருக்கின்றன!!

மனிதர்கள் இல்லாத வீட்டிற்கு வெளியே சென்று திரும்பி வரும் பூச்சிகள்  சன்னல்களிடமும் கதவுகளிடமும்
பகிரும் செய்தியெலாம் அவர்களின் தாய் மரங்களைப் பற்றியது!!
********
ஈரம் உலர்த்தி வற்ற செய்யும் காற்றின் கரங்களைத் தவ்வி பிடிக்கும் கண்களின் முன் தான் பறந்து தொலைகின்றன பட்டாம்பூச்சி நினைவுகள்.

ஒவ்வொரு மலராக அமர்ந்தமர்ந்து தேனுறிய முற்பட்டு அழ செய்கின்றன.

ஒவ்வொரு நினைவையும் உறிஞ்சும் போது ஒட்டி கொள்ளும் மகரந்தங்கள்தான் எவ்வளவு வலி புகுத்தி பரவுகின்றன.

காற்றில் பறக்கவிட்ட பின்
அலைகின்ற காகிதம்
தாங்கியிருக்கும் ஓவியம் கண்களுக்கு புலப்படவேயில்லை.
காகிதம் தூரமாக பறந்து திரிந்து முட்செடியில் பட்டு கிழிவதைக் காண்பதைப் போல் வலி மிகுந்த ஒன்றுண்டா?

கழுத்தில் கூர் முனையுள்ள கத்தி
கைப்பிடியைக் கைகள் இறுகப் பற்றி கொண்டிருப்பதை என் கண்கள் பதற்றத்துடன் காண்கின்றன.

பிறகு என் கைகளிடம்
கத்தியைக் கைவிடுமாறு பார்வையால் கெஞ்சுகின்றன!!

இறுதியில்…

*********
எதற்காகவும் என் பின் வராதீர்கள்
நான் நீச்சலறியாதவன்
ஆனால் கடலுக்குள் விழுவேன்
எனக்கு பறக்க தெரியாது
ஆனால் எப்போதும் வானத்தை நோக்கியே செல்ல முயல்வேன்
எனக்கு பேச தெரியாது
ஆனால் நீண்ட உரைகள் நிகழ்த்துவேன்
எனக்கு வெல்ல தெரியாது
ஆனால் தோல்வியை விட்டு விலகவே மாட்டேன்
எனக்கு முன் நீங்கள் செல்லுங்கள்
நான் விழுந்தெழுந்து விழ பழகி முடித்த பின்
எழுந்து விழுந்து எழ பழகிய பின்
உங்களின் தோள் மீது கை போட்டு உடன் வருவேன்!!

*********

துயரத்தின் திரி எரிந்து கொண்டிருக்கிறது
அணையாதிருக்கவென எண்ணெயை ஊற்றி கொண்டிருக்கிறேன்.
மெல்லிய
துயரம் படர்ந்த இருள்தான்  எத்தனை சுகமாக இருக்கிறது?
நதியில் குளித்த பின்
உடம்பில் ஒட்டி காய்ந்து கொண்டேயிருக்கும் ஈரம் போல…

**********
கசந்து போன வாழ்வின் இனிப்பு நொடிகளைப் பற்றி கொள்ளவே முடியவில்லை!

அவ்வப்போது அசைபோட மட்டும் அவற்றை நினைத்து
சிறிது நேரம் சிரிக்கும் போதுதான் எனக்கு பைத்தியம் பிடித்து விடுகிறது.

காற்றில்லாத ஒரு வெளியில்
மெல்ல
மிதந்தபடியிருக்கும் சருகால்
மேலேயும் செல்ல முடியாது
கீழேயும் விழ முடியாது

நொறுங்கித்தான் ஆக வேண்டும்!

 


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சருகு (கவிதை)”

அதிகம் படித்தது