மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சாதியில்லாச் சான்றிதழ்

இராமியா

Mar 23, 2019

siragu saadhiyillaa1

திருமதி சிநேகா சாதியில்லாச் சான்றிதழைப் பெறுகிறார்

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் திருமதி எம்.ஏ.சிநேகா. இவருடைய பெற்றோர்கள் சாதி மத நம்பிக்கைகளைக் கடந்த மனிதநேயச் சிந்தனையாளர்கள். இவரும் பெற்றோர்கள் வழியில் சாதி மத நம்பிக்கைகள் இல்லாமல் வளர்ந்து, சட்டப்படிப்பை முடித்து, வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். இவருடைய கணவரும், தமிழ்ப் பேராசிரியருமான திரு பார்த்திபராசாவும், சாதி மத நம்பிக்கைகளைத் துறந்தவரே.

திருமதி சிநேகா 2010-ஆம்ஆண்டு முதல், தான் எந்த சாதியையும் மதத்தையும் சாராதவர் என்று சான்றிதழ் வழங்கும்படி கேட்டுப் போராடினார்.

இதற்கு முன் இதுபோன்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறி அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 2017-ஆம்ஆண்டு முதல் அவர் ஒவ்வொரு அதிகாரியையும் நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததன் பயனாக 5.2.2019 அன்று அவருக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்வாறு ஒரு சான்றிதழ் பெற்றதன் மூலம் சமூக முன்னேற்றத்தில் ஒரு படி ஏறி உள்ளதாக அவர் 13.2.2019 அன்று கூறினார்.

அவருடைய,அவருடைய குடும்பத்தினருடைய சாதி மத மறுப்பு உணர்வு பாராட்டுக்கு உரியது. ஆனால் சாதி ஒழிப்புப் போரில் இந்த அணுகுமுறை என்ன பயன் அளிக்கும் என்பது ஆழந்த பரிசீலனைக்கு உரியது.

சாதி என்பது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் மீது சுமத்தப்பட்டு உள்ள ஒரு கொடுமையான சுமை. பார்ப்பனர்களுக்குக் கிடைத்து இருக்கும் இனிமையான வாய்ப்பு.

அனைத்து வகுப்பு மக்களிலும் அனைத்துநிலைத் திறமை உடையவர்களும் இருப்பது மாற்றமுடியாத இயற்கை நியதி. அப்படி இருக்கையில் அனைத்துத் துறைகளிலும், அனைத்து நிலைகளிலும் அனைத்து வகுப்பு மக்களும் இருக்க வேண்டும். ஆனால் இந்தச் சாதிய அமைப்பு பார்ப்பனர்களை உயர்நிலைகளிலும், மற்றவர்களை அடுத்த நிலைகளிலும் தேர்ந்தெடுக்கும் கயமையை உள்ளீடாகக் கொண்டு உள்ளது.

இந்தக் கயமையைச் செயல்படுத்திக் கொண்டு இருப்பவர்கள் பார்ப்பனர்களே.

மனு அநீதி வெளிப்படையாக ஆட்சி செய்து கொண்டு இருந்த காலத்தில் பார்ப்பனர்கள் உயர்நிலைகளை அடைவதும், மற்றவர்கள் அடுத்த நிலைகளையே அடைவதுமான நிகழ்வு எவ்விதமான உராய்வும் இன்றி நடந்து கொண்டுஇருந்தது. மகாத்மா புலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர் ஆகியோருடைய போராட்டங்களால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கும் உயர்நிலைகளில் / அதிகார மையங்களில் வாய்ப்பு தர வேண்டியதாயிற்று.

அவ்வாறு வாய்ப்பு பெற்றவர்களில் பலர் பார்ப்பனர்களை விட திறமைசாலிகள் எனமெய்ப்பித்தனர்.இதனால் அரண்டுபோன பார்ப்பனர்கள் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இருப்பதால்தானே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு வாய்ப்பு தரவேண்டி இருக்கிறது? சாதியைப் பற்றிப் பேசாமலேயே இருந்துவிட்டால், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு அளிக்க வேண்டிய வாய்ப்பை முற்றிலும் தடுத்து விடலாம் என்று எண்ணமிட்டனர். உடனே சாதியை ஒழிக்க வேண்டும் என்றால், அதை பள்ளிக்கூடத்திலேயே தொடங்கிவிட வேண்டும் என்றும், பள்ளியில் சேரும்போதே சாதி என்ன என்று கேட்கும் பழக்கத்தை ஒழித்துவிட வேண்டும் என்றும் ஒரு பொதுக் கருத்தை ஏற்படுத்த முனைந்தனர். நோயை குணப்படுத்துவது என்றால் நோயைப் பற்றிப் பேசாமல் இருப்பதோ, அதற்கு சிகிச்சை அளிக்காமல் இருப்பதோ அல்ல என்றும் அதைப்பற்றிய புரிதலும் அதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதும்தான் என்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் பிரதிநிதிகள் கூறினர். பார்ப்பனர்களுக்கு இது புரியாமல் இல்லை. அவாளுடைய உள்நோக்கமே வேறு. ஆகவே தாங்கள் கூறியதைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டே இருந்தார்கள் / இருக்கிறார்கள்.

இப்பிரச்சாரத்தில் மயங்கிய / குழம்பிய சில ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும் சாதி பற்றிப் பேசுவதால்தான் சாதி உணர்வு இருக்கிறது என்று நம்பத் தொடங்கி விட்டனர். சாதி அடிப்படையில் தொழில் அமைவதுதான் சாதி உணர்வின் வேர் என்பதையும், அனைத்துத் தொழில்களிலும் அனைத்துச் சாதியினரும் இருக்கும் படியான நிலைமை ஏற்பட்டு விட்டால், சாதிய உணர்வின் வேர்கள் அறுக்கப்பட்டு விடும் என்பதையும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர்.

சாதி பற்றிப் பேசாமல் இருந்தால் அவாளுக்கு அது வசதியாகப் போய்விடும். உயர்நிலை வேலைகளுக்கு விண்ணப்பித்துவிட்டு நீங்கள் காத்துக்கொண்டு இருப்பீர்கள். அவாளும் விண்ணப்பித்துவிட்டு அதன் விவரங்களை அவாள் நடத்தும் மடங்களில் கொடுத்து விடுவார்கள். வேலைக்குத் தேர்வு செய்யும் அதிகாரிகளுக்கு யார் “நம்மவா” என்று செய்தி சேர்ந்து விடும். அவாள் திறமைசாலிகள் என்றும், நாம் திறமை குறைவானவர்கள் என்றும், முத்திரை குத்திவிட்டு உயர்நிலைகளுக்கு அவாளையும், அடுத்த நிலைகளுக்கு நம்மையும் தேர்ந்து எடுப்பார்கள். இப்படி செய்வதற்கு அவாளுக்கு எந்த உராய்வும் இல்லாமல் போய்விடும்.

சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு இருப்பதால்தான் நம்முள் உள்ள திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

இப்படி எல்லாம் நடக்காமல் சாதிய ஏற்றத்தாழ்வுகளை மாற்ற வேண்டும் என்றால், அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், அரசியல், சமூக, பொருளாதார நடவடிக்கைகளிலும், அனைத்து நிலைகளிலும் அந்தந்த வகுப்பு மக்களின் மக்கள்தொகை விகிதத்தில் வாய்ப்பு கொடுக்கும் விகிதாச்சாரப் பங்கீடு முறையைச் செயல்படுத்துவது ஒன்றுதான் வழி. இவ்வாறு செய்வதினால் சாதி அடிப்படையில் தொழில் அமையும் இன்றைய நிலை உருக்குலைக்கப்படும்;

சாதியின் பெயரால் எந்தவிதமான சலுகையையோ, ஒடுக்குமுறையையோ காட்ட முடியாத நிலை ஏற்பட்டு விடும். இந்நிலைதான் சாதிய உணர்வை வேரறுக்கும்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சாதியில்லாச் சான்றிதழ்”

அதிகம் படித்தது