மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சாதி எனும் மாயை (சிறுகதை)

சுசிலா

Dec 28, 2019

siragu saadhi1

“அம்மா… வந்துட்டீங்களா, என்ன ஐயா, பாப்பாவுக்கு இப்ப எப்படி இருக்கு?” என்று கேட்டபடியே வள்ளி வீட்டினுள் நுழைந்தாள். அவள் வந்ததும், கேட்டதும் எதுவுமே காதில் விழவில்லை சுந்தரத்திற்கு. சிந்தனை முழுவதும் மகள் பூங்குழலி பற்றித்தான் ஓடிக்கொண்டிருந்தது.

அடுப்பாங்கரை உள்ளே நுழைந்த வள்ளி, அங்கே புளி கரைத்தபடியே ஏதோ யோசனையில் இருந்த பாரதியைப் பார்த்து, “அம்மா… பாப்பாவுக்கு உடம்பு தேவலையா?” என்று கேட்டாள். பதில் வராததால், மீண்டும், “அம்மா…” என்று கூப்பிட்டாள்.

உடனே, சுயநினைவிற்கு வந்தவளாய், “வா.. வள்ளி, நல்லா இருக்கியா? குழலிக்கு தான் உடம்பு சரியில்லை, அதான் உங்கிட்ட கூட சொல்லமுடியாம போயிட்டோம்..” என்றாள்.

“எனக்கு என்னமா, நல்லா தான் இருக்கேன். பரவாயில்ல அம்மா, அதனால் என்ன, நேத்து வந்து பாத்தா வீடு பூட்டியிருந்தது, அதான், பக்கத்துல கௌரி அம்மாவை கேட்டேன். அவங்க தான், பாப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்தது, அதனால் அவசரமா போயிட்டீங்கனு சொன்னாங்கமா….
என்னாச்சு மா திடீர்னு, இப்ப உடம்பு எப்படி இருக்கு, அழைச்சுக்கிட்டு வந்திட்டிங்களா.. பாப்பாவ?” என்று கேட்டாள்.

“ஆமா.. வள்ளி, முந்தாநாள் ராத்திரி திடீர்னு ஹாஸ்டலேருந்து போன் பண்ணாங்க, உங்க பொண்ணுக்கு உடம்பு சரியில்ல, ஜுரம் அதிகமா இருக்கு, வந்து பாருங்க, அப்படினு சொன்னாங்க. அதான் உடனே கிளம்பிட்டோம்”

“அச்சச்சோ… எல்லாம் சரியாயிடும் மா. இப்ப தான் எல்லாருக்கும் ஜுரம் வருதே. இங்கே அழச்சிகிட்டு வந்தது நல்லதா போச்சு, அதன் ஐயா முகத்துல ஈயாடலையா.. நான் கேட்டுக்கிட்டே வரேன். திரும்பிக்கூட பாக்கல மா… ஒரே பொண்ணு, ரொம்ப பாசமா வளத்தீங்க. இப்ப படிக்க வெளியூர் போனவுடனே, உடம்பு சரியல்லைனா மனசு பதைபதைக்கும் தானே.. அதுவும் ஐயா ரொம்ப பாப்பா மேல பாசம். எல்லாம் சரியாயிடும் மா.. கவலைப்படாதீங்க…”
என்று சொல்லியபடியே ‘சிங்’கில் உள்ள பாத்திரங்களை விலக்க ஆரம்பித்தாள். பாரதிக்கு அவள் சொல்லும் எதுவும் மண்டைக்குள் முழுவதுமாக செல்லவில்லை. நேற்று நடந்த சம்பவம், அவள் மற்றும் கணவன் சுந்தரத்தையும் உலுக்கித்தான் போட்டுவிட்டது. நேற்று காலை முதல், இன்று காலை வரை மகளுடன் இருவருமே பேசவில்லை. மகள் குழலியும் இவர்களுடன் பேசவில்லை. வீடே நிம்மதி குலைந்த நிலையில் இருந்தது. இதுவரை மகளை அடிக்காத சுந்தரம், நேற்று, ஹாஸ்டல் வார்டன் முன்னிலையிலேயே ‘பளார்’ என மகளின் கன்னத்தில் அறைந்ததை நினைக்கும்போதே பாரதிக்கு கண்ணில் நீர் கசிந்தது. இதைப் பார்த்த வள்ளி,

“என்னம்மா, சின்னபுள்ளையாட்டம்… பாப்பாவுக்கு ஒண்ணுமில்லை மா. நீங்களே இப்படி அழுதிங்கன்னா, ஐயா என்னமா பண்ணுவாரு, டாக்டர் என்னமா சொன்னாங்க?”

“ஒண்ணுமில்ல.. சாதாரண காய்ச்சல் தான்… சரியாயிடுமுனு சொன்னாங்க .” என்றாள், தன்னை சற்று சுதாரித்துக்கொண்டு.

“அதான், நான் சொன்னேன்ல… கவலைப்படாதீங்க.. சரியாயிடும்” என்றாள்.

உடனே, “வள்ளி, இன்னைக்கு கூட்டி துடைக்கவேண்டாம். பாத்திரம் மட்டும் கழுவுனா போதும், நாளைக்கு பாத்துக்கலாம்” என்று சொல்லியபடியே, காபியை கொடுத்தாள் பாரதி.

“ஏன்மா, பாப்பா படுத்திருக்கும் ரூமை மட்டும் கூட்டல.. மத்த இடத்த பெருக்கி தொடைக்கிறேமா”

“வேண்டா வள்ளி, நாளைக்கு பாத்துப்போம்… இன்னைக்கி ஒன்னும் சமைக்கல.. ரசம் தான், உனக்கு குடுக்க கூட ஒண்ணுமில்லியே… ”
என்றாள்.

“பாப்பா உடம்ப கவனிங்க முதல.. எனக்கு ஒன்னும் வேண்டாம்மா..” என்றவள், எதோ நினைவு வந்தவளாய், “பாத்திங்களா அம்மா, சொல்லணும்னு நெனச்சத மறந்துட்டேன், அடுத்தமாசம் எனக்கு ஒரு பத்துநாள் லீவு வேணும்மா. பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு..” என்றாள்.

“என்ன.. பொண்ணுக்கு நிச்சயமாயிருக்கா? என்கிட்ட சொல்லவேயில்லை…” பாரதி.

“மன்னிச்சிக்கோங்கமா.. திடீர்னு தான் நிச்சயமாச்சு. நேத்து சாயந்திரம் மாப்பிளை வீட்டுக்காரங்க திடுதிப்புனு வந்துட்டாங்க. ஒரு வருசமா பொண்ணுக்கு அந்தப் பையன் கூட பழக்கம் தான், ஒரே ஆபிசலதா வேலை செய்யிதுங்க… ஆறுமாசம் முன்னாடி என்கிட்டே சொன்னுச்சி… நான் தான் அவ அப்பன்கிட்ட சொல்லாத, குடிச்சிட்டு வந்து எதாவது தகராறு பண்ணுவாரு, அவங்க வீட்டுல ஒத்துக்கிடப்போறவு, வந்து பாக்கசொல்லுனு சொல்லியிருந்தேன். இப்ப ஒத்துக்கிட்டாங்க போல.. அதான் நேத்து திடீர்னு வந்து நிக்கிறாங்க.. நல்ல குடும்பம் தான்மா. அம்மா, அப்பா, அக்கா, இந்த பையன் அவ்வளவு தான். அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சி.. குழந்தை கூட இருக்காம். நல்ல இடம், அவங்களுக்கும் நம்ம பொண்ண புடிச்சிருக்கு.. அப்புறம் என்னமா.. உடனே வெத்தலை, பாக்கு தட்ட மாத்திகிட்டோம்..” என்றாள் வள்ளி ஒரே மூச்சாக…

“மாப்பிள்ளை உங்க ஆளா..?” பாரதி.

“உங்க ஆளு … ன்ன்னா? ஓ.. சாதிய கேக்கறீங்களாமா, அதெல்லாம் இல்லமா.. அவங்க வேற சாதியைச் சேத்தவுங்க…” வள்ளி.

“உங்க குடும்பங்களுள், உங்க சொந்தக்காரங்க, இதுக்கு ஒத்துக்குவாங்களா… வள்ளி?”

“நம்ம சொந்தக்காரங்க பத்தி நமக்கு எதுக்கு மா கவலை… நாம நல்லா இருந்தா கிட்ட வருவாங்க… கஷ்டப்பட்டா தூரமா போயிடுவாங்க. பொண்ணு ஆசை படுறா. அந்த பையனும் நல்லவனா தான் இருக்கான். குடும்பமும் ஒன்னும் சோடையில்ல.. பொண்ணை நல்லா புரிஞ்சு வைச்சிருக்கான் அந்த பையன். இதவிட வேற என்னமா வேணும்?
என் பொண்ணைவிட சொந்தக்காரங்க எனக்கு பெருசு இல்ல மா. புடிச்சவுங்க வரட்டும், புடிக்காதவுங்க கல்யாணத்துக்கு வரவேண்டா, அப்பன்காரன் ஒரு மொடாக்குடிக்காரன். வீட்டுக்கு ஒரு பைசா தரமாட்டான். நான் நாலுவீடு பத்துபாத்திரம் தேய்ச்சு ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு பொண்ண படிக்கவைச்சேன். அதுவும் கருத்தா, நம்ம அம்மா கஷ்டப் படுறாளேனு நல்லா படிச்சு, பி.காம் முடிச்சிடுச்சி, இதோ, இரண்டு வருசமா வேலைக்கு போயி, குடும்பத்தையும் பாத்துக்கிட்டு, அதுக்கு வேண்டியதையும் கொஞ்சம் சேத்துவைச்சிருக்கு. எனக்கு எங்க வூட்டுல பாத்து தான் கல்யாணம் பண்ணி வைச்சாங்க, என்ன ஆச்சி.. பாருங்கம்மா …”

ஒருவாய் காபியை வாயில் ஊற்றியபடி மேலும் தொடர்ந்தாள் வள்ளி,

“சாதி எல்லாம் நமக்கு தேவையில்ல மா. நல்ல மனுசங்க தான் முக்கியம். சின்னசிறுசுங்க ஒன்னுக்கொன்னு புரிச்சிக்கிட்டு, வாழ ஆசப்படுதுங்க சேத்து வைக்கிறதுல நமக்கு என்ன மா புடிவாதம் இருக்கு? சேந்து சந்தோசமா வாழட்டுமே. அது தான் எனக்கு வேணும்மா, நீங்க என்ன மா சொல்றீங்க, சரி தானே நான் சொல்றது!” என்று முடித்தாள் வள்ளி.

எதுவுமே, சொல்ல தோன்றாமல், வாயடைத்துப் போய் சிலையாய் நின்று கேட்டுக்கொண்டிருந்தாள் பாரதி. தன்னுடைய அவசரத்தில், அதனை கவனிக்காதவளாய்,
‘நாளைக்கு வரேன் மா’ என்று விடைபெற்றாள் வள்ளி.

அவள் போவதைக் கண்டு, பின்னாலேயே சென்றாள் வள்ளி. அதற்குள் அவள் காம்பவுண்ட் கேட்டை திறந்துகொண்டு வெளியே போய்க்கொண்டிருந்தாள். அவளையே வச்ச கண் வாங்காம பார்த்தபடியே நின்றுகொண்டிருந்த பாரதியை, கொஞ்சம் இடித்தவாறு, சட்டை பட்டனை போட்டபடியே காலை செருப்பிற்குள் நுழைத்துக்கொண்டிருந்தான் சுந்தரம். அதைப்பார்த்த பாரதி,

“எங்கே வெளியிலே போறீங்க.. சமையல் ஆயிடுச்சி, சாப்பிட்டு போகலாம்ல..” என்றாள்.

அதற்கு, திரும்பிப்பார்க்காமலேயே, “இதோ வந்துடுறேன்..” என்றபடியே, அவசரமாக கேட்டை திறந்து வெளியே சென்றான் சுந்தரம்.

siragu piravikkadal2அப்படியே, வராந்தாவில் கன்னத்தில் கைவைத்தபடி, உட்கார்ந்தாள்… பாரதி.

நினைவுகள் கடந்தகாலத்தை நோக்கிச் சென்றது.
பூங்குழலி பிறந்தபோது சுந்தரம் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தான். அவன் பெண் குழந்தைகளோடு பிறக்கவில்லை. இரு அண்ணன்கள், இவன் தான் கடைக்குட்டி. அண்ணன் இருவர்களுக்கும் பெண்குழந்தை பிறக்கவில்லை. ஆதலால், பூங்குழலி பிறந்தவுடன், ஒரு தேவதை பிறந்ததாகவே எண்ணி, அக்குடும்பத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர். மகள் என்ன குறும்பு செய்தாலும் ரசிப்பானே தவிர, ஒரு அடிகூட இதுவரை அடித்ததில்லை. பாரதி அடித்தால்கூட பெரிய பிரளயமே வெடிக்கும். இப்பபடியே மகிழ்வுடன் நாட்கள் கடந்தன. குழலி ப்ளஸ்டூ முடித்தவுடன், கோவையில் உள்ள நல்ல ரேங்கில் இருக்கும் கல்லூரியில், அவளுக்கு பிடித்த பிரிவில் பொறியியல் படிப்பில் இடம் கிடைத்தது. குழலி அங்கு தான் படிப்பேன் என அடம்பிடித்தாள். முதலில் பெற்றோர் இருவருக்கும் விருப்பமில்லை. இருந்தாலும், மகளின் விருப்பத்தை முதலில் ஏற்றது சுந்தரம் தான். பாரதியை சமாதானம் செய்து, அக்கல்லூரியில் சேர்த்தான். அதன் பிறகு, மாதம் ஒருமுறையாவது அவள் வந்துவிடுவாள் அல்லது இவர்கள் போய் பார்த்துவிட்டு வருவார்கள்.

மூன்று ஆண்டுகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியாகி இருக்கிறாள் குழலி. இது நான்காம் ஆண்டு. இந்நிலையில் தான் இந்த பிரச்சனை வெடித்திருக்கிறது. நேற்றைக்கு முதல்நாள் ராத்திரி பத்தரை மணிக்கு, ஹாஸ்டல் வார்டனிடமிருந்து போன் வந்தது.
“உங்கள் மகள் நைட் பத்து மணிக்கு, ஒரு பையனுடன் வந்து பைக்கில் இறங்குகிறாள். கேட்டால் ஏதோதோ காரணம் சொல்றா, நீங்க வந்து பாத்துட்டு போனீங்கன்னா நல்லது. நான் காலேஜ் மேனஜ்மெண்ட்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி உங்கிட்ட சொல்றேன் சார்… வந்துட்டு போங்க…” என்றார்.

அவ்வளவு தான், சுந்தரம் எரிமலையா வெடித்தான். “ஏன் இந்த பொண்ணுக்கு இப்படி புத்தி போவுது. நல்லா தானே படிச்சுக்கிட்டு இருந்தா… எவன் வந்து இவ மனச கெடுத்தானோ… நாளைக்கு காலையிலேயே முதல கிளம்பி போறோம்..” என்று இரவு முழுவதும் தூங்காம புலம்பிக்கிட்டே இருந்தான்.

‘போய் விசாரிப்போம்ங்க… அப்படியெல்லாம் ஒண்ணும் இருக்காது’ என்று பாரதி எவ்வளவு சொல்லியும் அவன் மனம் அமைதியடையவில்லை.

அங்கு போனதும், மகளிடம் கேட்ட முதல் கேள்வியே,

‘நீ ராத்திரி பத்து மணிக்கு ஒரு பையனுடன் வந்தியா?” என்று தான்.

அதற்கு குழலி,
“அப்பா, அது வந்து…. அவன் என்னுடைய கிளாஸ்மேட் தான்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்து,

“நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு, அவன்கூட ராத்திரி லேட்டா ஹாஸ்டலுக்கு வந்தியா?” என்றான் கடும் கோபத்துடன்.

“ஆமா..” என்று சொன்னது தான் தாமதம், அடுத்த வினாடியே,

குழலியின் கன்னத்தில் இடி இறங்கியது போல் பளார் என அறைந்தான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத, குழலி அழுதபடியே அம்மாவைப் பார்த்தாள். பாரதியும் இதை எதிர்பார்க்கவில்லை.. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து தான் போயிருந்தாள்.

உடனே,

ஹாஸ்டல் வார்ட்டன்,

“என்ன சார் நீங்க,…. உங்க பொண்ணு கிளாஸ்லேயே முதல் ரேங்கல இருக்கா. என்னனு விசாரிங்க. வீட்டுக்கு வேணா அழைச்சுக்கிட்டு போங்க. உடம்பு சரியில்லைன்னு லெட்டர் கொடுத்துட்டு, 4 நாள் லீவு சொல்லிட்டு போங்க. நிதானமா விசாரிங்க. பதட்டப்படாதீங்க.. இந்தகாலத்துல பிள்ளைங்கள பக்குவமா கையாளுனும் சார்..” என்றார்.

அதன் பிறகு, காரில் வரும்போதும் சரி, வீட்டிற்கு வந்தபிறகும் சரி, ஒரு வார்த்தைகூட மகளிடம் பேசவில்லை. அவளும் பேசவில்லை, நேற்று ராத்திரி ரூமில் போய் படுத்தவள் தான். மூவரும் இப்போது வரை சாப்பிடவுமில்லை. பாரதிக்கு இருதலைக்கொள்ளி போல இருந்தது. இருவரிடமும் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், இருவருமே பேசுவதற்குத் தயாராக இல்லை. இப்படி நினைத்துக்கொண்டிருக்கும் போதே, சுந்தரம் கையில் ஒரு பையுடன் அவசரமாக உள்ளே வந்தான். வரும்போதே,

“குழலி உள்ளே தானே இருக்கா..” என்று கேட்டான்.

” ஆமாங்க..”

அறையின் கதவை திறந்தபடியே, “அம்மா குழலி … எழுந்திருமா, அப்பாவை மன்னிச்சுடு மா..” என்றான்.

அப்பாவின் இந்தக் குரலை கேட்ட மாத்திரத்தில், அதற்காகவே காத்திருந்தது போல, ஏக்கம் கலந்த மகிழ்ச்சியுடன் சிறு குழந்தைப்போல திரும்பி, சுந்தரத்தைப் பார்த்து, துள்ளி எழுந்து உட்கார்ந்தாள்.
பாரதிக்கு என்ன நடக்கிறதென்றே விளங்கவில்லை.

கட்டிலில் அமர்ந்த சுந்தரம், குழலியின் கையைப் பிடித்த படி, தான் அடித்ததினால் சிவந்திருந்த கன்னத்தை தடவியபடி,

“என்னை மன்னிச்சிடுமா… நான் உன்ன அடிச்சிருக்கக் கூடாது … தப்பு முழுக்க என் மேல தான்.. கோபம் என் கண்ணை மறைச்சிடுச்சி, … குழலி!” என்று சொன்னான் கண் கலங்கியவாறே,

“ஏன்பா… இப்படி பேசுறீங்க, என்னை அடிக்க உங்களுக்கு உரிமை இருக்கு அப்பா. ஆனா, என்ன நடந்ததுன்னு கேக்காம அடிச்சிட்டீங்க.. அதான் மறுபடி உங்கிட்ட பேச தோணல… என்ன நம்பாம, எல்லோர் முன்னாலேயும் என்னை அவமானப்படுத்திட்டீங்கனுதான் வருத்தம்..பா…” சொல்லும்போதே கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது குழலிக்கு.

உடனே, பாரதி, மகளின் பக்கத்தில் உட்கார்ந்து, கண்ணில் வழியும் நீரை துடைத்துவிட்டு, தலையை இதமாக கோதி, அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டாள். இவ்வளவு நேரம், அம்மா இருதலைகொள்ளியாக இருந்திருக்கிறாள் என்பதை உணர்ந்த குழலி, அவளின் மார்பில் முகம் புதைத்து இன்னும் அழுதாள். அப்போது, பாரதி தன்னுடைய இரு கைகளால், அவளின் முகத்தை நிமிர்த்தி, வழியும் கண்ணீரை துடைத்துவிட்டு, கலந்திருக்கும் கூந்தலை சரிசெய்து,

“உன்மேல எந்த தப்பும் இருக்காது என்ற நம்பிக்கை எப்பவும் எங்களுக்கு உண்டு மா. வார்ட்டன் சொன்னதை, கொஞ்சம் கூட வேற வழியில நாங்க யோசிக்கல.. அதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் குழலி…” என்று சொன்னாள்.

அதற்கு குழலி, ” ராகுல் என்னுடைய கிளாஸ்மேட் தான் மா. காலேஜ் சேந்ததிலிருந்து எனக்கு அவன் ஒரு நல்ல பிரெண்ட். எந்த உதவியும் செய்வான். எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் செய்வான். ரொம்ப நல்லவன்.”

சில வினாடிகள் இடைவெளி விட்டு, தன் அப்பாவைப்பார்த்து,

“அப்பா, போன வருஷம் வரை நாங்க இரண்டுபேரும் பிரெண்ட்ஸா தான் பழகினோம். இந்த நாலாவது வருசம் வந்தபிறகு தான் என்னை அவன் லவ் பண்றதா சொன்னான். எனக்கு ஆரம்பத்துல கொஞ்சம் குழப்பம் தான். அப்புறம் யோசிச்சு பார்க்கும்போது, முன், பின் தெரியாத ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்கறத்துக்கு பதிலா, என்னோட நல்லா பழகின, என்னை நல்லா புரிஞ்சிகிட்ட ஒரு பிரண்ட் ராகுல், எனக்கு வாழ்நாள் முழுக்க நல்ல துணையாக இருப்பானு தோணிச்சி. அதுக்கு அப்புறம் தான், நான் ஓகே சொன்னேன். இந்த விசயத்தை, அடுத்த மாசம் இங்கே வரும்போது உங்கிட்ட சொல்லலாம்னு தான் இருந்தேன் பா.”

கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்ட குழலி, மீண்டும் தொடர்ந்தாள்.

“அன்னைக்கு, சாயந்திரம் ப்ராஜெக்ட் சம்பந்தமா வெளியே போயிருந்தோம். வேலைய முடிச்சிட்டு வரும்போது, சைக்கிள் ஓட்டிட்டு வந்த ஒரு ஸ்கூல் பையன் மேல பைக்ல வந்தவன் மோதிட்டு நிக்காம போயிட்டான். உடனே, ராகுல் தான் அந்த வண்டி நம்பரை குறிச்சிக்கிட்டு, போலீசுக்கும் போன் செய்தேன். அப்பறம், அந்த பையனை ஹாஸ்பிடல்ல சேத்திட்டு, அவங்க வீட்டுக்கு தகவல் கொடுத்து, போலீசுக்கு தேவையான தகவலையும் கொடுத்துட்டு வர மணி பத்து ஆயிடுச்சி..பா. இது தான் நடந்துச்சி..”

அப்பா மற்றும் அம்மாவின் கண்களை கூர்மையாகப் பார்த்துவிட்டு, மீண்டும், “ராகுல் ரொம்ப நல்லவன் பா, நீங்க பாத்திங்கனா உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்..” என்றாள்.

இதையெல்லாம் கேட்டுக்கிட்டுயிருந்த சுந்தரமும், பாரதியும், உதட்டில் புன்னகை தவழ, ஒருசேர சொன்னார்கள்.
“என் செல்லத்தைப்பத்தி எங்களுக்கு தெரியாதா என்ன … கவலைப்படாதே, எல்லாம் நல்லதா நடக்கும்”

சுந்தரம், “இனிமே இதைப்பத்தி கவலைப்படாதே குழலி. நல்லபடியா இரண்டுபேரும் படிச்சி முடிங்க. நல்ல வேலையில் சேருங்க. பொருளாதாரத்தில் இரண்டு பேரும், ஒருத்தர ஒருத்தர் சாராம ஸ்டேடி ஆனதுக்குப்புறம் நாங்களே அந்தப் பையன் வீட்டுக்கு போய் பேசுறோம் ..மா. என்ன இப்ப சந்தோசம் தானே…” என்றார் சிரித்தபடி.

அதுவரை அம்மாவின் மேல் சாய்ந்திருந்த குழலி, அப்பாவின் அருகில் நகர்ந்து உட்கார்ந்து,
“ரொம்ப சந்தோசம் அப்பா. நிச்சயமா நாங்க நல்லா படிச்சி, நல்ல வேலைக்கு போவோம் பா. இதை கேட்டா ராகுல் ரொம்ப ஹாப்பி ஆயிடுவான்… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அப்பா.” என்றாள் மிகவும் பரவசமாக!

” இந்த தேங்க்ஸ் எல்லாம் நம்ம வள்ளிக்குத் தான் போய் சேரணும்…” என்றாள் பாரதி கணவனைப் பார்த்து கண்ணடித்தவாறே.

ஒன்றும் புரியாமல், குழலி இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள்.

சிறு புன்முறுவல் புரிந்தபடி, சுந்தரம், “ஆமாம்மா … எனக்குள்ள இருந்த ஆணாதிக்கத் தன்மையையும், சுய சாதிப்பற்றையும் தூக்கியெறிய வைச்சது நம்ம வள்ளி தான்..” என்று கூறிக்கொண்டே, மகளுக்கு பிடித்த ஸ்வீட்டை, அவளுக்காக வாங்கி வந்த பால்கோவை நீட்டினார். பால்கோவா மட்டுமல்ல, மூவரின் மனமும் ஒருசேர அங்கே இனித்திருந்தது!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சாதி எனும் மாயை (சிறுகதை)”

அதிகம் படித்தது