மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சான் ஓசேயில் மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வு

க.தில்லைக்குமரன்

Dec 7, 2015

“நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.” – வேலுப்பிள்ளை பிரபாகரன்

உங்கள் உடல்கள் சாய்ந்ததால், எங்கள் தலைகள் நிமிர்ந்தன.. இன்று.. நாங்கள் வெறும் கவிதை பாடிக் கொண்டிருக்கிறோம்..நீங்களோ.. காவியமாகி விட்டீர்கள்.. – இராஜ் சுவர்ணன்

உலகம் முழுதும் தத்தம் நாட்டு விடுதலைக்காகப் போராடி மரணித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். அமெரிக்காவில் மே மாதத்தில் அந்த அஞ்சலி நிகழ்வு நடைபெறும். இங்கிலாந்து, ஆத்திரேலியா, கனடா போன்ற பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளில் நவம்பர் 11-ம் நாள் இறந்த வீரர்களுக்கு (The Glorious Dead) அஞ்சலி செலுத்தப்படுகிறது.

தமிழீழ மக்களுக்கும், உலகெமெங்கும் பரந்துபட்டு வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் நவம்பர் 27-ம் நாளில் ஈழமண்ணிற்காக தம் இன்னுயிரை ஈன்ற மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செய்யப்பட்டு வருவது வழக்கமாகிவிட்டது. அந்நாள் செ. சத்தியநாதன் எனும் லெப்டினெண்ட் சங்கர் தம் உயிரை தமிழ்மண்ணிற்காக தியாகம் செய்த நாள்.

1982-ம் ஆண்டு அக்தோபர் திங்கள் அதிகாலையில் ஒரு இளைஞன் முற்றுகையிட்டிருந்த சிங்கள வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டு ஓடுகிறான், அப்பொழுது சிங்கள் காடையனின் குண்டொன்று அவனது வயிற்றை கிழிக்க, அங்கிருந்த தோழர்கள் அவனைக் காப்பாற்றி மருத்துவ சிகிச்சைக்காக தாய்த்தமிழகத்திற்கு அழைத்து வருகின்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கண் கலங்கி நின்ற தலைவரின் முன்னிலையிலும், தோழர்களின் முன்னிலையிலும் 1982 நவம்பர் 27-ம் நாள் மாலை 6:05 மணியளவில் லெப்டனெண்ட் சங்கர் நம்மை விட்டு பிரிகிறான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற்களப்பலி இவன். இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூறப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு வருகிறது.

தமிழ் மக்கள் போரையோ போர்வீரர்களின் மரணத்தையோ கொண்டாடுபவர்களில்லை. போரின் துயரம் அவர்களுக்கு தெரியாததல்ல, இருந்தாலும் மண்ணிற்காக மரணித்தவர்களை தமிழர்கள் மறப்பவர்களுமில்லை, அவர்களை நினைவுகூறுவது சங்ககாலம் தொட்டு வரும் வழக்கம்தான். நடுகல் வைத்து வீரனை நெஞ்சிலேற்றி அவனுக்கு நன்றி கூறுவதுதான் தமிழர் பண்பாடு. அந்த பண்பாட்டின் வழியில்தான் 1987-ம் ஆண்டு முதல்  நவம்பர் 27-ம் நாள் மாலை 6:05 மணியளவில் தமிழீழ மக்கள் அந்த மாவீர்ர்களை நெஞ்சில்நிறுத்தி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.
அமெரிக்க மக்கள் எப்படி Arlington Cemetery-ல் மரணித்த போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்களோ அதுபோலவே தமிழீழ மக்கள் இறந்த மாவீரர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் பல ‘துயிலும் இல்லங்கள்’ அமைத்து அவ்வீரர்களைப் போற்றிவருகின்றனர்.

maaveerar5

“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” – வேலுப்பிள்ளை பிரபாகரன்
maaveerar6
2009-ம் ஆண்டு மே திங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை உலகநாடுகளெல்லாம் சேர்ந்து அழித்துவிட்டாலும், அவர்கள் ஏற்றிவைத்த விடுதலை நெருப்பு இன்றும் கொழுந்துவிட்டுதான் எரிந்துவருகின்றது. ஆயுதப்போராட்டத்தை உலகம் அடக்கிவிட்டிருக்கலாம், ஆனால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சில் தமிழீழ விடுதலையின் தாகம் மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது. ஒவ்வொராண்டும் மாவீரர்நாள் மெம்மேலும் சிறப்பாகத்தான் நடைபெற்றுவருகிறது கண்கூடு. தமிழகத்தில் சிறு கிராமங்கள் முதல் பெருநகரங்கள்வரை மாவீரர்நாள் வெகுசிறப்பாக நடைபெற்றுவருகிறது. தமிழீழ மக்கள் மட்டுமல்ல தாய்த்தமிழகத் தமிழர்களும் தமிழர்க்கென ஒரு நாடில்லையே என்று ஏங்குவதுதான் இதன் வெளிப்பாடு.

உலகமெங்கும், அமெரிக்காவெங்கும் மாவீரர்நாள் நிகழ்வு நடைபெற்றுவந்தாலும், இடைவிடாமல் தொடர்ந்து மாவீரர்நாள் நடைபெற்றுவருவது கலிபோர்னியாவின் விரிகுடாப்பகுதியில்தான் என்றால் அது மிகையாகாது. அதுவும் நவம்பர் 27-ம் நாள்தான் அதை செயல்படுத்த வேண்டுமென்று கடந்த 3 ஆண்டுகளாக வாரநாளாக இருந்தாலும் அந்த வீரவணக்க நிகழ்வு அந்நாளிலே சரியாக 6:05 மணியளவில் அஞ்சலி செலுத்திவருகின்றனர் விரிகுடாப்பகுதித் தமிழர்கள். கடந்த ஆண்டு அமெரிக்காவின் நன்றி நவிலும் நாளன்றே (Thanksgiving day evening) இவ்வீரவணக்கத்தை நாங்கள் செலுத்தினோம். இதுவே தமிழ்மக்களின் மனதில் அணையாது இன்றும் எரிந்து கொண்டிருக்கும் விடுதலைத் தாகத்தின் சான்று.

maaveerar1

இந்த ஆண்டு (2015) மாவீரர்நாள் வெள்ளியன்று சான் ஓசே நகரில் உணர்ச்சிகளின் நடுவில் நடைபெற்றது. சரியாக 6:06 மணியளவில் கோவில் மணியடிக்க மாவீரரின் தாயார் ஒருவர் விளக்கை ஏற்றிவைத்தார்.

maaveerar2
தொடர்ந்து இளைஞர் ஒருவர் மாவீரர் அர்ப்பணிப்பு குறித்து ஒரு சிற்றுரையாற்றியபின், தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் உரை ஒலிப்பெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது. அதன்பின் குழந்தைகள் முதல் பெரியோர் வரை வரிசையாக வந்து விளக்கேற்றி, மலர்த்தூவி அஞ்சலி செய்தார்கள்.

maaveerar3
இரவு உணவுடன் இந்த நிகழ்வு முடிந்தது. அனைவரின் நெஞ்சிலும் விடுதலைத்தாகம் மேலும் அதிகமாகி மேலும் உழைக்கும் நெஞ்சுறுதியுடன் தத்தம் இல்லம் சென்றனர்.
தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்!


க.தில்லைக்குமரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சான் ஓசேயில் மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வு”

அதிகம் படித்தது