மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சித்த மருத்துவமனைகள் எங்கே இருக்கின்றன? நிலவிலா, செவ்வாய் கிரகத்திலா?

சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

Sep 5, 2015

sidhdha 3“டாக்டர்… சென்னை அரும்பாக்கம் தவிர வேறு எங்கேயும் சித்த மருத்துவமனைகள் கிடையாதா…?“ இப்படி கேட்டார் மத்திய அரசு பணியில் இருக்கும் ஒருவர். ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன். அரசு சித்த மருத்துவமனைகள் பற்றிய மக்களுக்கான அறிமுகம் அவ்வளவுதான்.
இந்த கட்டுரையில் நிறுவனமயமாக்கப்பட்ட சித்த மருத்துவமனைகள் பற்றியும், அதன் வரலாற்றையும் சுருக்கமாக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

எல்லாத் துறைகளிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மிடத்தில் அறிவு இருந்து வந்திருந்தாலும், அறிவைக்கூட தனியுடைமையாகவே கருதி வந்திருக்கிறோம். யாரோ ஒரு வள்ளுவரையும், ஒரு கணியன் பூங்குன்றனாரையும், ஒரு தேரையரையும், ஒரு யூகியையும் தவிர பெரும்பான்மையானவர்கள் சிறிய வட்டம் போட்டு அதற்குள்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.

நாளந்தா பல்கலைக்கழகம் போன்று விரல்விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள் தோன்றியிருந்தும், மூடநம்பிக்கை என்பதையே மூலதனமாகக் கொண்ட பெரும்பான்மை வாதம், அறிவை ஆடிமாதத்தில் ஆற்றில் கொட்டிவிட்டது. இதற்கு உலகை சுற்றி வந்த பல பயணிகள் நம்மைப்பற்றி கூறியவைகள் சாட்சிகளாக வரலாற்றில் இருக்கின்றன.

எது எப்படியோ, வெள்ளைக்காரன் வந்தானோ இல்லையோ நிர்வாகம் வந்தது. சித்த மருத்துவம் பிழைத்தது. நான் இப்படிச் சொல்வது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான்.

பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியில் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் இந்தியாவின் கலை மற்றும அறிவியலைப் பற்றிய ஒரு ஆர்வம் அவர்களுக்கு ஏற்பட்டது. அந்தப் போக்கில் இந்திய மருத்துவமும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இந்திய அளவிலும், பிரதேசங்கள் அளவிலும் இந்திய மருத்துவத்தின் நிலை பற்றி அறியவும் அதை முன்னேற்றுவதற்கும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன.

1918 ஆம் ஆண்டு சித்த மருத்துவத்தில் ஒரு மைல்கல் எனலாம். ஏனென்றால் அப்போதைய மதராஸ் மாகாணத்தில் (Madras Presidency) இந்திய மருத்துவத்தின் நிலை பற்றி அறிய ஒரு குழு Dr.கோமன் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்டது.

1919ஆம் ஆண்டு அந்தக்குழு தனது அறிக்கையை அளித்தது.

1921ஆம் ஆண்டை இன்னொரு மைல்கல் எனலாம். அந்த ஆண்டு சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாக இருந்த பனகல் ராஜா அவர்களால் சர் முகம்மது உஸ்மான் சாகிப் பகதூர் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதன் நோக்கம் சித்த மருத்துவத்தை அங்கீகரிப்பதும் வளர்ப்பதும் ஆகும்.

1924 ல் மதராஸ் மாகாணத்தின் கவர்னராக லார்டு கோஷன் (Lord Goschan) இருந்தபோது அரசு இந்திய மருத்துவ பள்ளி(Government Indian Medical School) என்ற பெயரில் ஒரு சித்த மருத்துவ பள்ளியை சென்னை எக்மோரில் பாத்தியன் சாலையில் ஒரு வாடகை கட்டிடத்தில் ஆரம்பித்தனர்.

1925 ஆம் ஆண்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவ படிப்புகளுடன் நவீன மருத்துவத்தின் உடற்கூறுகளும் (Anatomy) உடல் இயங்கியலும் (Physiology) கற்றுக் கொடுக்கப்பட்டன.→ இது 3 வருட படிப்பு →பின்னர் அந்த பள்ளி கீழ்ப்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.

1926 ஆம் ஆண்டு வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் உள் நோயாளிகள் பிரிவுடன் கூடிய மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது.
அடுத்து ஆண்டு 3 ஆண்டுகள் படிப்பு, 4 ஆண்டுகள் படிப்பாக மாற்றப்பட்டது. இதில் நவீன மருத்துவத்தின் அறுவை சிகிச்சையும், கண் மருத்துவமும் மகப்பேறு மருத்துவமும் பயிற்றுவிக்கப்பட்டன. இதில் ஓராண்டுக்கு 120 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

1927ல் சர் உஸ்மான் முகம்மது சாகிப் பகதூர் தலைமையில் ஒரு ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.

1928ல் தேர்வுக்குழுவும் பாடத்திட்டக்குழுவும் அமைக்கப்பட்டது.

இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு ஆங்கில மருத்துவ பயிற்சியுடன் கூடிய பட்ட மேற்படிப்பும் வழங்கப்பட்டது.

sidhdha 2

1933 ஆம் ஆண்டு நான்கு வருட படிப்பு, 5 வருட படிப்பாக உயர்த்தப்பட்டது.

1940 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு குழு அமைக்கப்பட்டு சில மாறுதல்கள் கொண்டுவரப்பட்டது.

1947 ‘அரசு இந்திய மருத்துவ பள்ளி’ என்பது ஒரு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் இந்திய மருத்துவத்தினை ஆராய்ச்சி செய்வதற்காக வருடத்திற்கு 50 ஆராய்ச்சி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர், மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை 210 ஆக உயர்த்தப்பட்டது.

1949ல் ஒரு அரசாணை பிரப்பிக்கப்பட்து. அதன்படி இந்திய மருத்துவம் (Indian Medicine) என்ற பெயர் Indigenous Medicine என மாற்றப்பட்டது. College of Indigenous Medicine என்ற பெயரில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற அரசு முயற்சித்தது. ஆனால் தனி அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்த கல்லூரியில் படித்து முடித்தவர்களுக்கு G.C.I.M (Graduate of the College of Indigenous Medicine) என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

1953 ஆம் ஆண்டு கல்லூரியின் முதல்வர் – Principal என்ற பதவி நீக்கப்பட்டு ‘Dean’என்ற பதவி உண்டாக்கப்பட்டது.

1955 ஆம் ஆண்டு அதுவரை இருந்த Honorary director of Indigenous Medicine என்ற பதவி நீக்கப்பட்டு அந்த கல்லூரி Director of Medical Service ன் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போது மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி (Madras Medical College) ஸ்டான்லி மருத்துவ கல்லூரி போன்ற கல்லூரியிலிருந்து பேராசிரியர்கள் வந்து வகுப்பெடுத்தார்கள். அதன் பிறகு 5 ஆண்டுகள் படிப்பு 5 ½ ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. ஒரு வருடம் பயிற்சி மருத்துவ பணி கொடுக்கப்பட்டது (House Surgeon).

1956 ஆம் ஆண்டு இன்னொரு மைல்கள் . கல்லூரியின் பெயர் College of Integrated Medicine எனவும் அதில் கொடுக்கப்பட்ட பட்டம் L.I.M. (Licentiate of Integrated Medicine) எனவும் ஆனது. இந்த படிப்பை முடித்தவர்கள் அரசு மருத்துவர்களாக பணியாற்ற தகுதி பெற்றவர்களாக ஆகினர்.

1964 ஆண்டு மிக முக்கியமான மைல் கல்லாகும். மேத்தா கமிட்டியின் பரிந்துரையில் அலோபதி மருத்துவ முறைகளை முற்றிலும் தவிர்த்து முழுவதும் இந்திய மருத்துவ முறைகளை மட்டும் பயிற்றுவிக்கக்கூடிய ஒரு கல்லூரி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது.

அதில் B.I.M (Bachelor of Indian Medicine) என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. 75 ரூபாய் மாத உதவித் தொகையும் கொடுக்கப்பட்டது. பயிற்சி மருத்துவர்களுக்கு ரூபாய் 175 மாத சம்பளமும் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த பட்டப்படிப்பே B.S.M.S (Bachelor of Siddha Medicine and Surgery) என பெயர் மாற்றப்பட்டது.

1968 ல் சென்னை அரும்பாக்கத்தில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது.

1972 ஆம் ஆண்டிலிருந்து பட்ட மேற்படிப்பும் (MD) அதன் பின்னர் ஆராய்ச்சி நிலையங்களும் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் பழனியில் மேலும் ஒரு சித்த மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அது சென்னைக்கு மாற்றப்பட்டது.

2005 ஆம் ஆண்டு தேசிய சித்த மருத்துவ நிறுவனமும், பண்டிதர் அயோத்தி தாசர் மருத்துவமனையும் சென்னை தாம்பரத்தில் துவங்கப்பட்டது.
சரி மீண்டும் அவர் கேட்ட கேள்விக்கு வருவோம்.

இன்றைய தேதியில் தமிழகத்தில் உள்ள 17 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவ பிரிவு உள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள பொது மருத்துவமனைகளிலும்(GH) சித்த மருத்துவப் பிரிவு உள்ளது. தமிழகத்தில் உள்ள 153 வட்டார மருத்துவ மனைகளிலும்(Taluk Hospitals) சித்த மருத்துவ பிரிவுகள் உள்ளன. மேலும் 69 வட்டாரமல்லாத (Non Taluk) மருத்துவமனைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் 432 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவ மனைகள்(PHC) உள்ளன. 8 அரசு மலைப்பகுதி(Tribal) சித்த மருத்துவப் பிரிவும், 45 கிராமப்புற சித்த மருத்துவப் பிரிவும்(Rural Dispenseries), 14 முழு நேர மருந்தகங்களும் உள்ளன. மேலும் தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின்கீழ் இயங்கும் 275 சித்த மருந்தகங்கள் உள்ளன. தொழிலாளர் அரசு மருத்துவமனைகள் (ESI) 28 இயங்கி வருகின்றன.

மருத்துவ ஆலோசனைக்கு:

Dr.Jerome -FI

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D

சித்தமருத்துவ மையம்,

டாக்டர்ஸ் பிளாசா,

சரவணா ஸ்டோர் எதிரில்,

வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,

வேளச்சேரி, சென்னை.

அலைபேசி எண்: 9444317293


சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சித்த மருத்துவமனைகள் எங்கே இருக்கின்றன? நிலவிலா, செவ்வாய் கிரகத்திலா?”

அதிகம் படித்தது