மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிபிஐ -ல், மத்திய பா.ச.க ஆட்சியின் தலையீடும், உச்சநீதிமன்ற உத்தரவும்.!

சுசிலா

Oct 27, 2018

Siragu avasara kaala2

பா.ச.க கட்சியின், திரு மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் ஆட்சி, கடந்த நான்கரை ஆண்டுகளாகவே, பலவித ஊழல் பிரச்சனைகளில் சிக்கி, விமர்சிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.  பணமதிப்பிழப்பில் கறுப்புப்பணம் திரும்பி வராததை மத்திய ரிசர்வ் வங்கியே தெரிவித்துவிட்டது. இதன்மூலம் பலகோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டிருக்கின்றன. மேலும், வியாபம் ஊழலில், பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், சம்பந்தப்பட்டவர்கள் மர்மமான முறையில் கொலையும் செய்யப்படுகிறார்கள் என்பதுவும் நமக்கு  தெரிந்த ஒன்று தான். இந்நிலையில் தான், பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக,  ரபேல் பற்றிய ஊழல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெடித்திருக்கிறது. இந்த ரபேல் விமான ஊழல் ஒப்பந்தத்தின் மூலம், ஒரு லட்சத்து, 71 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மேலும், ரிலைன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அவர்களே, நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை, முன்னாள், பிரான்ஸ் அதிபர் காய்ஸ் ஹாலண்டே, டஸ்ஸால்ட் முத்த அதிகாரி, லொயிக் சிகலான் ஆகியோரின் வாக்குமூலங்கள் உறுதி செய்கின்றன. எதிர்க்கட்சித்தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் இதனை வெளிகொண்டுவந்து, அதற்கான போராட்டங்களையும் கையில் எடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Siragu rafele 1

இந்நிலையில் தான், ரபேல் ஊழல் வழக்கில், ஒரு புதிய திருப்பமாக, அக்டோபர் 4-ஆம் தேதி,  பா.ச.க முன்னாள் முக்கிய தலைவர்களான, யஸ்வந்த்சின்ஹா, அருண்சோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் , சி.பி.அய்.விசாரிக்க வேண்டுமென்று, அதன் இயக்குனர் அலோக் வர்மாவிடம் புகார் கொடுத்திருந்தனர். (இதற்கு முன்னரே, கடந்த மார்ச் மாதம், ஆம் ஆத்மி கட்சியினர், சி.பி.அய் விசாரணை வேண்டும் என்று இந்த வழக்கிற்கு கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.) இதன் அடிப்படையில், சி.பி.அய். இயக்குனர் அலோக் வர்மா தலைமையில், அதற்கான பூர்வாங்க  விசாரணைகள் தொடங்கப்பட்டன. ஆனால்,  சில தினங்களுக்கு முன், திடீரென்று, அவசரம் அவசரமாக, நள்ளிரவில், திரு, அலோக் வர்மாவை, கட்டாய விடுப்பில் போகுமாறு பணிக்கப்பட்டுள்ளார். இது, நாடளவில், பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. ரபேல் விவகாரம் குறித்து, அலோக்  வர்மா விசாரணையில், பல உண்மைகள் வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில், அவருடைய விசாரணையை, தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தவேண்டுமென்ற நோக்கத்தில், அவரை விடுப்பில் அனுப்பியதாக எதிர்கட்சிகள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகின்றன.

மீண்டும் ஒரு திருப்பு முனையாக, யஸ்வந்த்சின்ஹா, அருண்சோரி, பிரசாந்த் பூஷன் குழுவினர், களத்தில் குதித்துள்ளனர். ஆனால், இம்முறை, உச்சநீதிமன்றத்தை நாடி, தங்களின் மனுவை தாக்கல் செய்துளளனர். மேலும், உச்சநீதிமன்ற கண்காணிப்பில், விசாரணை நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த ரபேல் ஊழல் முறைகேடு குறித்து,  உச்சநீதிமன்றம் விசாரணையை  முடுக்கிவிட்டு, தன்னுடைய கண்காணிப்பில் நடத்தவேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.  இவர்களின் இந்த நடவடிக்கை, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க-வை பெரும் அச்சத்தில் உள்ளாக்கியிருக்கிறது.

மனுவில் குறைபட்டுள்ள  செய்தி என்னவென்றால்,

“பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து, 36 ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2015 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில், பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதற்கு முகாந்திரங்கள் இருக்கின்றன. மோடி, தன்னுடைய  ஆட்சி, அதிகார பலத்தை பயன்படுத்தி, கோடிக்கணக்கான ரூபாய், தனியார் நிறுவனம் பயன்பெறுவதற்கு உதவி செய்திருக்கிறார். இதன் மூலம், உயர்பதவி வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளும், தங்களின் பதவியை கொண்டு, தவறாக பயன்படுத்தி, அணில் அம்பானி மூலம் ஆதாயங்கள் அடைய முற்பட்டிருக்கிறார்கள். இது குறித்து, கடந்த அக்டோபர் 4 ந்  தேதி, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திரு, அலோக் வர்மாவிடம் மனு அளித்திருந்தோம். அந்த மனு, 132 பக்கங்கள்  அடங்கிய,  தக்க ஆதாரங்களுடன் கூடிய ஒரு மனு.  இது தொடர்பாக, அவரும் விசாரணைக்கான, தகவல்களை சேகரித்துக்கொண்டிருக்கும் வேளையில், திடீரென, அவரை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டு,  துணை இயக்குனரையும் மாற்றி விட்டு, ஒரு புதிய இயக்குனரை தற்காலிகமாக நியமித்திருப்பது, அதிர்ச்சியை அளிக்கிறது. சிபிஐ அமைப்பிற்கே, மறைமுகமாக அழுத்தங்களை, அரசு அளிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. ஆதலால், தற்போது, விசாரணை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நடக்க வேண்டும். மேலும் இதில், மோடி அரசின்  தலையீடு இருக்கக்கூடாது” என்று கூறப்பட்டிருக்கிறது.

இதன்பிறகு தான் ஒரு வரலாற்று திருப்புமுனையாக, உச்சநீதிமன்றம் நேற்று ஒரு நோட்டீசை மத்திய அரசிற்கு அனுப்பியுள்ளது. அதில்,  சிபிஐ. இயக்குனர் அலோகவர்மாவை, கட்டாய விடுப்பில் அனுப்பியது ஏன் என்றும், முன்னாள் நீதிபதி முன்னிலையில், அலோக் வர்மாவை விசாரணை நடத்தவேண்டுமென்றும் உத்தரவிட்டுளள்து. மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிபிஐ. இயக்குனர் நாகேஸ்வரராவ், முக்கிய கொள்கை முடிவு எதுவும் எடுக்கக்கூடாது என்றும் தடை விதித்திருக்கிறது என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்தது.

இதற்கு முன்பு, இதுமாதிரி தலையீடுகள் அரசிடமிருந்து, சிபிஐக்கு வந்ததாக வரலாறே இல்லை என, மூத்த ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரிகளே கூறுகின்றனர்.!

இந்த பா.ச.க ஆட்சியில் தான், உச்சநீதிமன்ற நீதிபதிகளே தாமாக முன்வந்து, மத்திய அரசின் தலையீடு உள்ளதாகவும், அது சனநாயகத்திற்கு கேடு எனவும், ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர் என்பதுவும் மறந்து விடவோ, மறுத்துவிடவோ முடியாது என்பது முற்றிலும் உண்மை. நாட்டிலுள்ள, அனைத்து, தனித்தியங்கும் அமைப்புகள் எல்லாம் மத்திய அரசின் கீழ்  செயல்பட துவங்கினால், அது ஒரு சர்வாதிகார ஆட்சியாக இருக்குமேயல்லாமல், மக்களுக்கான, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சனநாயக ஆட்சியாக இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்வோம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிபிஐ -ல், மத்திய பா.ச.க ஆட்சியின் தலையீடும், உச்சநீதிமன்ற உத்தரவும்.!”

அதிகம் படித்தது