மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிலப்பதிகாரத்தில் காலக்கணிதரும், காலக்கணக்கும்

முனைவர் மு.பழனியப்பன்

Dec 30, 2017

Siragu silappadhikaaram 3

பல்வகை இனக்குழுக்கள் இணைந்து வாழுகின்ற சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயம் தொன்றுதொட்டு விளங்கி வந்துள்ளது. ஒவ்வொரு இனக்குழுவும் தனிக்கென தனித்த அக, புற அடையாளங்களை அடையாளப்படுத்திக்கொண்டு தமிழகத்தில் வாழ்ந்துள்ளன. வாழ்ந்து வருகின்றன. இவ்வினக்குழுக்களை தமிழ் மொழி ஒன்றிணைத்துள்ளது. பல்வேறு இனக்குழுக்களுக்களுக்கான தனித்த அடையாளங்களைத் தாண்டி தமிழ்நிலம், தமிழ் மொழி என்ற இணைவு பொதுமைநிலையில் தமிழ்ச்சமுதாயத்தில் செயல்பட்டு ஒற்றுமையைக் காத்து வந்துள்ளது.

தமிழகத்தில் வாழ்ந்துவரும் பல்வேறு இனக்குழுக்களில் கணக்கீடு செய்யும் இனக்குழுவினர் முக்கிய இடம் பெறுகின்றனர். காலத்தை., பொருளின் அளவை, சமயத்தை இவை போன்றவற்றைக் கணக்கீடு செய்யும் தமிழர்கணக்கீட்டு முறைமை சங்ககாலந்தொட்டு இருந்து வந்துள்ளது. ஓலைக்கணக்கர், நாழிகைக் கணக்கர், மந்திரக்கணக்கர், அமயக் கணக்கர், ஆசிரியக் கணக்கர், பெருங்கணக்கர், கணக்கியல் வினைஞர், காலக்கணிதர், ஆயக்கணக்கர்போன்ற பல குழுவினர் கணக்கீடு செய்யும் குழுவினராகச் செம்மொழி இலக்கிய காலத்தில் இருந்து வந்துள்ளனர். இதற்கான சான்றுகள் பல செம்மொழி இலக்கியங்களில் உள்ளன.

இக்குழுவினருள் காலக்கணக்கீடு செய்யும் குழுவினர்பல்வேறு நிலைகளில் தமிழகத்தில் சங்ககாலந்தொட்டு வாழ்ந்து வந்துள்ளனர். தமிழர்க்கென தனித்த காலக்கணக்கீட்டு முறைமை இருந்துள்ளது. செம்மொழி இலக்கியங்களான தொல்காப்பியம், சங்க கால இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள், காப்பிய கால இலக்கியங்கள் ஆகியவற்றில் காலக் கணக்கீடு முறையும் கணக்கீட்டாளர்களும் இருந்துள்ளனர். காலக்கணிதர், நாழிகைக் கணக்கர், கணியர்போன்ற பல நிலையினர்இக்காலக் கணக்கீட்டை அவரவர்கள் தன்மைக்கு ஏற்பச் செய்துள்ளனர். இவ்வளர்ச்சியை அடியொற்றிச் சிலப்பதிகார காலத்தில் காணலாகும் காலக் கணக்கீட்டாளர் பற்றியும், காலக்கணக்கீட்டு முறை பற்றியும் இக்கட்டுரை தொகுத்துரைக்கிறது.

காலக்கணிதர்:

காலத்தைக் கணக்கீடு செய்பவர் காலக்கணிதர் ஆகின்றார். காலக்கண்கீட்டளார்கள் பூம்புகாரின் ஒரு பகுதியான பட்டினப்பாக்கத்தில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிக்கிறது. ‘‘ஆயுள் வேதரும் காலக்கணக்கரும் பால்வகை தெரிந்த பன் முறை இருக்கையும்” (சிலப்பதிகாரம், இந்திரவிழவூரெடுத்த காதை, அடி 44-45) என்று காலக்கணிதர் உறைந்த வீடுகள் பற்றி அறிவிக்கிறது சிலப்பதிகாரம்.

காலத்தை வகுத்துறைக்கும் நிலையில் நாழிகைக் கணக்கர்என்போர்சங்க காலத்தில் இருந்ததாகக் குறுந்தொகை பதிவு செய்துள்ளது. ‘‘வான்நோக்கிக் காலக்கணக்கை அறிந்தனர் நாழிகைக் கணக்கர்” (குறுந்தொகை, பாடல்எண். 261, அடி 6-7) என்ற இலக்கியச் சான்று இதனை மெய்ப்பிக்கும். பொழுது அளந்தறியும் பொய்யா மக்கள் (முல்லைப்பாட்டு, அடி 55) என்று முல்லைப்பாட்டு பொழுது அளந்தறியும் பணியாளர் பற்றிக் குறிக்கிறது. சிலப்பதிகாரத்திலும் நாழிகைக் கணக்கர் பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. கன்னல் என்னும் நாழிகைக் கணக்கு இயந்திரத்தைப் பயன்படுத்திய குறிப்பு அகநானூற்றில் காட்டப்பெற்றுள்ளது. (அகநானூறு 43, அடி 6)

‘நாழிகைக் கணக்கர் நலம் பெறு கண்ணுளர்” (சிலப்பதிகாரம், இந்திர விழவு+ரெடுத்த காதை, அடி 49) என்று நாழிகைக் கணக்கர் இல்லம் பூம்புகாரில் இருந்த நிலையைக் குறிக்கிறது சிலப்பதிகாரம்.

Siragu-silappadhikaaram-4கணியன்:

கணியன் என்ற இனக்குழு தமிழகத்தின் தொன்று தொட்டு இருந்துவரும் எதிர்காலத்தை அளந்து சொல்லும் இனக்குழுவாக விளங்கிவருகிறது. இன்றைக்கு கணியர்களுக்கென தனித்த கூத்து வடிவம் என்ற நிலையில் கணியான் கூத்து நடைபெறுகிறது. கணியர்க்குள் தனித்த குழுஉக்குறிச்சொற்கள் போன்றன விளங்கி வருகின்றன. சங்ககாலத்தில் இடம் பெற்றிருந்த இனக்குழுவான கணியர்கள் இன்றளவிலும் தம் அடையாளங்களுடன் நிலைபெற்றுவருகின்றனர் என்பது தமிழ்ச்சமுதாயத்தின் நிலைத்த பாங்கினை அறிவிப்பதாக உள்ளது.

சங்ககாலத்தில் கணியன் பூங்குன்றன் என்ற பெயரடையின் வழியாக கணியன் என்ற சொல்லை ஓர் இனக்குழு அடையாளமாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. காலத்தைக் கணித்துச் சொல்லும் மரபினராக சங்ககாலம் முதல் கணியக்குழுவினர் விளங்கிவந்துள்ளனர். கணியன் பூங்குன்றனார் எழுதிய இரு பாடல்களிலும் காலம் பற்றிய அறிவும், உலகிற்கு அறிவுரை சொல்லும் பொதுமொழி வெளிப்பாடுகளும் (புறம் 192, நற்றிணை 226) அமைந்துள்ளன. தொல்காப்பியத்தில் கணியன் என்ற சொல் அறிவர்என்ற நிலையில் இடம்பெற்றுள்ளது.

மூவகைக்காலமும் நெறியானாற்றும் அறிவர்(புறத்திணையியல். 74), ‘‘பாணன் கூத்தன் விறலி பறத்தை ஆணம் சான்ற அறிவர்கண்டோர்” (களவியல்-) என்ற நிலையில் அறிவர்என்று அறியப்பட்டவர்கள் சங்ககாலத்தில் கணியன் எனப்பட்டிருக்க வேண்டும். அறிவர் எனப்படுபவர்கள் அக, புற வாழ்க்கை நிலைகளில் உதவி புரிந்துள்ளனர். வெற்றியை நோக்கிச்செய்யப்படும் போரின் வெற்றிக் காலத்தை நிர்ணயித்துத் தரும் பொறுப்பும், தலைவிக்குத் தலைவன் வரும் பொழுது பற்றி உரைத்து அவளை ஆற்றுப்படுத்தும் நிலையிலும் அறிவர்தேவைப்பட்டுள்ளனர்.

இவ்வகையில் தொல்காப்பிய, சங்க இலக்கியங்களில் மக்களோடு மக்களாக வாழ்ந்த கணிய மரபினர் சிலப்பதிகார காலத்தில் அரசவையில் இருப்பிடம் பெறும் அளவிற்கும், அரசனுடன் ஒருங்கமையும் நெருக்கத்திற்கும் உரிய மதிப்பு பெற்றனர்.

மன்னரவையில் கணியர்:

மன்னர்களின் அவையில் கணியருக்குத் தனியிடம் தரப்பெற்றிருந்தது. சேர மனனர்; அவையில் கணியர்இடம்பெற்றிருந்த நிலையைச் சிலப்பதிகாரம் தெரிவிக்கின்றது. கணக்கியல் வினைஞர் என்று இவர்கள் போற்றப்பெற்றுள்ளனர். காலைப்பொழுதில் சேரன் செங்குட்டுவன் அரசவைக்கு வருகின்றான். அவனின் வரவறிந்துப் பல்லோரும் வாழ்த்துகின்றனர். அப்போது கணியரும் அவனை அவனின் ஆட்சியை வாழ்த்தி அமைகின்றனர்.

‘‘அறைபறை யெழுந்தபின் அரிமான் ஏந்திய
முறைமுதல் கட்டில் இறைமகன் ஏற
ஆசான்பெருங்கணி அருந்திறல் அமைச்சர்
தானைத் தலைவர்தம்மொடு குழீஇ
மன்னர்மன்னர்வாழ்கென்று ஏத்தி”
சிலப்பதிகாரம், கால்கோட்காதை,அடிகள் 1-7)

என்ற பகுதியின் வழி மன்னரை வாழ்த்தும் முறைமை, ஏற்றத்தை கணியர் பெற்றிருந்தனர் என்பது தெரியவருகிறது.

மன்னர் வடதிசை நோக்கிப் போர் நடைபெறும் என்பதை அறிவிக்கிறான். அப்போது வீரர்கள் மகிழ்ந்து ஒலியெழுப்புகின்றனர். அமைச்சர், கரும வினைஞர், கணக்கியல் வினைஞர் போன்றோர் அரசன் ஆணையை ஏற்று அவன் நீடு வாழ்க என வாழ்த்துகின்றனர். இவ்வாறு மன்னனின் ஒவ்வொரு செயலிலும் காலம் அறிந்து உணர்த்தும் கணியர் பங்களிப்பு இருந்துள்ளது.

மன்னருடன் உடன் இருத்தல்:

கணியர்கள் மன்னருடன் உடன் உறைந்துள்ளனர். சேரன் செங்குட்டுவன் வடதிசைக்குப் போர் எடுத்து வந்து முப்பத்தியிரண்டு மாதங்கள் ஆகின்றன. இந்நேரத்தில் அவன் நிலவை நோக்கிப் பார்க்கிறான். அப்போது அவனின் எண்ணம் அறிந்து அவனுக்குக் காலக்கணக்கினை அறிவிக்கிறான் ஒரு கணியன்.

‘‘அந்திச் செக்கர்வெண்பிறை தோன்றப்
பிறையேர்வண்ணம் பெருந்தகை நோக்க
இறையோன் செவ்வியிற் கணியெழுந்துரைப்போன்
எண்நான்கு மதியம் வஞ்சி நீங்கியது
மண்ணாள் வேந்தே வாழ்க என்றேத்த”
(சிலப்பதிகாரம், நீர்ப்படை காதை, அடிகள் 143-150)
என்ற நிலையில் மன்னன் எவ்விடம் சென்றாலும் அவ்விடத்திற்குக் காலக்கணக்கு செய்து வருவதுரைக்கக் கணியன் உடன் சென்றுள்ளான் என்பது புலனாகின்றது.

Siragu silappadhikaaram2

போர்வெற்றிக்கு உதவும் கணியன்:

ஆநிரை கொள்ளச் சென்ற வீரர்கள் தாம் கொண்டுவந்த செல்வங்களை ஒற்றர், கணியர்தம் வீட்டு வாசகல்களில் நிரப்பிய செய்தி ஒன்றையும் மதுரைக்காண்டத்தில் பதிவு செய்கிறார் இளங்கோவடிகள்.

‘‘முருந்தேர்இளநகை காணாய்நின்னையர்
கரந்தை அலறக் கவரந்த இனநிரைகள்
கள்விலை யாட்டி நல் வேய் தெரிகானவன்
புள்வாய்ப்புச் சொன்ன கணி முன்றில் நிறைத்தன”
(சிலப்பதிகாரம், வேட்டுவவரி, பாட்டு 15)
என்ற நிலையில் கரந்தை அணிந்த வீரர்கள் அலறத் தாம் கொண்டுவந்த செல்வங்களை வெட்சி வீரர்கள் கணியன் வீட்டின் முன் நிறைத்துள்ளனர். இதற்குக் காரணம் வெற்றி வரும் என்று அறிந்து சொன்ன கணியன் மொழிகள் ஆகும். இவ்வகையில் கணியர்குலத்தோர் வெல்லும் சொல் (சொல் பலிதம்) கொண்டவர்களாக விளங்கியுள்ளனர். பறவைகளின் இயக்கம், ஒலிக்குறிப்பு ஆகியன கொண்டு அவற்றின் நிமித்தத்தால் நன்மை விளையும் என்று உரைக்கும் தன்மை பெற்றவர்களாக கணியர்கள் இருந்துள்ளனர்.

இவ்வாறு வெல்லும்சொல் சொல்லும் அளவிற்கு ஆற்றல் பெற்றமைக்கு உரிய காரணங்கள் யாவை என்பது ஆராயப்படத்தக்கதாகும். தற்காலத்தில் கணியர்குலத்தார்திருநெல்வேலி சார்ந்த பகுதிகளில் பெருமளவில் வாழ்ந்து வருகின்றன. இவர்களின் கலை வடிவம் கணியான் கூத்து என்பதாகும். இக்கூத்து தனித்துவம் வாய்ந்த நாட்டார்கலையாக உள்ளது. கணியான் இனத்தாருக்கு மட்டுமே உரியதாக உள்ளது. தாம் வணங்கும் கடவுள் முன்னர் நேருக்கு நேராக ஆடும் ஆட்டமாக இது விளங்குகிறது.

கணியான் கூத்து நீலகதை, இசக்கியம்மன் கதை, சுடலை மாடன் கதை போன்ற நாட்டார் கதைகளை அடிப்படையாக வைத்து ஆடப்பெறுகிறது. இதனை மகுடஆட்டம் என்றும் அழைக்கின்றனர். இவ்வாட்டத்தில் மகுடம் என்ற தோற்கருவி பயன்படுத்தப்படுகிறது. இதனை இசைத்து இக்கூத்து ஆடப்படுவதால் இதனை மகுடாட்டம் என்கின்றனர். இக்கூத்தில் மொத்தம் ஏழுபேர் நடிக்கிறார்கள். இவர்களின் இருவர் பெண் வேடம் தரித்த ஆடவர்களாக இருப்பர். இக்கூத்தில் கணியன் என்பவன் முக்கியப் பாத்திரமாகக் கொள்ளப்பெறுகிறாள். அவனே முதன்மைப் பாத்திரத்திற்குத் துணைபுரிபவன் ஆவான். அரசனுக்கு உதவும் கணியன் போல இங்கு முதன்மைப் பாத்திரத்திற்கு உதவும் பாத்திரமாக கணியன் பாத்திரம் அமைக்கப்பெற்றிருப்பது கணியர்மரபின் தொடர்ச்சியாகும். கடவுள் முன் ஆடப்படும் இக்கூத்து இந்நடைமுறையில் சிலப்பதிகார கால அளவிலேயே நடைபெற்றிருக்க வேண்டும். இதன்வழி சொல்பலிதம் பெற்றவர்களாக கணியர்கள் விளங்கியிருக்க இயலும். குறிப்பாக கணியான் கூத்தின் நடுநிலைப்பகுதியில் சாமியாடிக்கு சாமி அருள் வந்து அவர் குறிப்பிடும் சொற்கள் அனைத்தும் நடக்கும் சொற்களாக ஏற்கப்படும் முறைமை காணப்படுகிறது. ஆகவே கணியர்கள் தம் சொல் பலிதம் பெற தெய்வ அருள் என்பதை முதன்மைப்படுத்தி வழிபட்டுள்ளனர் என்பதை உணரமுடிகிறது.

இவ்வகையில் காலக்கணக்கரும், கணியரும் அரச நடப்புகளில், சாதாரண மக்களின் வாழ்வில் கலந்து கொண்டு அவர்களை எதிர்காலம் நோக்கி நம்பிக்கையுடன் அழைத்துச் சென்றதை உணரமுடிகின்றது. இம்மரபு இன்னமும் தொடர்வது சிறப்பிற்குரியதாகும்.

சிலப்பதிகாரத்தில் காலக்கணக்கீட்டுக் குறிப்புகள்:

Siragu ilango1

சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோவடிகள் சில காலக்கணக்கீட்டு முறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். மணத்திற்குரிய நன்னாள், வைகறை காலம், மழைக்காலம், அழிவுக்காலம் போன்றன பற்றிய குறிப்புகள் காலக்கணக்கீட்டுக் குறிப்புகளாகச் சிலப்பதிகாரத்தில் காட்டப்பெற்றுள்ளன.

மணம் நடந்த நன்னாள்:

கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடந்த நன்னாளை நட்சத்திரக் குறிப்புகளுடன் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். இம்முறை தற்கால திருமண அழைப்பிதழ்களிலும் பின்பற்றப்படுவது குறிக்கத்தக்கது.

“வானூர்மதியம் சகடு அணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளை கோவலன்”
(சிலப்பதிகாரம், மங்கல வாழ்த்துப் பாடல், அடி 50-51)

என்பது திருமணம் நிகழந்த நல்ல பொழுதைக் குறிக்கும் அடிகள் ஆகும். வானத்தில் திகழும் நிலவு உரோகினி நட்சத்திரத்துடன் கூடிய நன்னாளில் அருந்ததி போன்ற கற்பினை உடைய கண்ணகியைக் கோவலன் மணந்தான் என்று இளங்கோவடிகள் குறிக்கிறார். இதன்வழி நாள், நட்சத்திரம் பார்த்து மணநாளை தீர்மானிக்கும் மரபு தமிழர்மரபாக விளங்குகிறது என்பதை உணரமுடிகின்றது.

வைகறைக் காலம்:

நாடுகாண் காதையில் கோவலனும் கண்ணகியும் வீட்டை விட்டு வெளியேறும் நிலையில் வைகறை வரவினைப் பின்வருமாறு குறிக்கிறார்.

‘வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
காரிருள் நின்ற கடைநாள் கங்குல்”
(சிலப்பதிகாரம், நாடுகாண்காதை, 1-3)

நட்சத்திரங்களோடு அழகுடன் விளங்கிய வெண்மதி நீங்கும் வைகறைப் பொழுதில் விதி துரத்த கோவலன் புகாரை விட்டு நீங்கினான் என்று இளங்கோவடிகள் இவ்வடிகளில் குறிப்பிடுகிறார். வானத்தில் இருந்து நிலவு விலகுவதுபோல கோவலன் புகாரை விட்டு நீங்கினான் என்று காலக்குறிப்பினோடு குறியீட்டையும் உட்படுத்தி உரைக்கிறார் இளங்கோவடிகள்.

மழைவரும் காலம்:

கால அளவில் சில நேர்வுகள் நிகழும்போது மழை பொழியும் என்பது காலக்கணிதம் ஆகும். அவ்வகையில்,

‘கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர்வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரலேற்றொடும்
சூல்முதிர்கொண்மூப் பெயல் வளம் சுரப்ப”
(சிலப்பதிகாரம், நாடுகாண்காதை, அடிகள் 102-105)

என்ற குறிப்பு இங்குக் கவனிக்கத்தக்கது. சனி என்ற கோள் கரிய நிறமுடையது. அதனின்று புகை தோன்றினாலும், புகைக்கொடியாகத் தோன்றும் தூமகேது வானத்தில் தோற்றம் பெற்றாலும், வெள்ளி என்னும் கோள் தென்திசைக்கு நகர்ந்தாலும் குடகுமலையின் மீது வானம் இடித்து மழை வரும் என்றக் காலக்குறிப்பினை இங்கு இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.

ஊர்அழியும் காலம்:

‘‘ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
அழல்சேர்குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத் தொள்ளெரி உண்ண
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும்
உரையும் உண்டே”
(சிலப்பதிகாரம், கட்டுரைக்காதை, அடி 131-136)

என்ற குறிப்பின்படி மதுரை அழியும் காலச் சூழல் விளக்கப்படுகிறது. கிருட்டிண பட்சத்து ஆடிமாதத்தில் வரும் அட்டமி நாளில் காரத்திகையின் குறையாக விளங்கும் ஆறு விண்மீன்களின் குறை சேர்ந்த வௌ்ளிக்கிழமையன்று மதுரை அழியும் என்பது பழைய மொழியாகும். அது மெய்யானது என்று சிலப்பதிகாரம் அழிந்ததற்குக் காலக்குறிப்பினைத் தருகிறது.

இவ்வாறு இளங்கோவடிகள் வானியில், காலக்கணக்கீடு போன்ற துறைகளில் ஈடுபாடு உடையவர் என்பதும், அவ்வாறு காலக்கணக்கீடு செய்யும் அறிஞர்களுடன் தொடர்புடையவர் என்பதும் சேர அரசு காலக்கணிதர்களால் வழிநடத்தப்பெற்றுள்ளது என்பதும் இதன் வழி பெறப்படுகின்றன.

தமிழ் நிலத்திற்கு என்று அமைந்திருந்த தனித்த காலக்கணிதம் தற்போது பிற நிலம் சார்கலப்பிற்கு ஆளாகி தேய்ந்து இல்லாததாகிவிட்டது என்பதை உணருகையில் அவை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற ஊக்கம் பிறப்பதை உணரமுடிகின்றது. அவற்றை காலக்கணிதம் குறித்தான கட்டுரைகள் முன்னெடுத்துச்செல்கின்றன.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிலப்பதிகாரத்தில் காலக்கணிதரும், காலக்கணக்கும்”

அதிகம் படித்தது