மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிலப்பதிகார முப்பொருள்

முனைவர் மு.பழனியப்பன்

Jun 27, 2020

Siragu silappadhigaaram2

முத்தமிழ்க் காப்பியம் என்ற பெருமையைப் பெற்றது சிலப்பதிகாரம். இதன் இயல், இசை, நாடகப் பங்களிப்பிற்கு இணையாக இன்னொரு படைப்பு இனி எழ இயலாது என்ற அளவிற்கு முத்தமிழிலும் துறைபோகிய அளவில் இக்காப்பியம் செய்யப்பெற்றுள்ளது. இளங்கோவடிகள் இக்காப்பியம் படைப்பதற்கு முன்னால் இக்காப்பியக் கருப்பொருள்களாக மூன்றினை வடிவமைத்துக் கொள்கிறார்.

‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்

சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்

சிலப்பதி காரம் என்னும் பெயரால்

நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்என”

என்ற நிலையில் காப்பியம் செய்யப்படுவதற்கு முன்பே காப்பியச் செயல் திட்டம் உருவாக்கப்பெற்றுள்ளது என்பதைப் பதிகம் காட்டுகின்றது. காப்பியத்திற்கான பெயர், நோக்கம், காதைத் தலைப்புகள் எல்லாம் முடிவு செய்யப்பெற்ற நிலையில் ஒரு திருந்திய செயல் திட்டம் இளங்கோவடிகளால் உருவாக்கப்பெற்றிப்பதைப் பதிகம் காட்டுகின்றது.

அறமே முதல்

அரசியல் பிழைத்தோருக்கு ‘‘அறம் – கூற்று” என்பதே இளங்கோவடிகள் கொண்டிருந்த முதல் கருத்தாக விளங்குகின்றது. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றல், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டல் போன்றன அதற்கு அடுத்து அமையும் துணைக் கருத்துகளாக அமைகின்றன.

அறம் என்பதற்கு அகராதிகளால் தரப்பெற்ற பொருள்களுள் ஒன்றான எமன் என்ற பொருள் இங்குச் சிறப்பதாக உள்ளது. வல்லமைகள் பல படைத்த அரசியல் தலைவனான அரசனுக்கு அறம் வழிகாட்டுவதாக அமைகின்றது. அவ்வறவழிப்படாத அரசியலாளர்களுக்கு அதுவே கூற்றமாக அமைகிறது என்ற நிலையில்  இம்முதல் கருத்து சமுதாய நலம் சார்ந்த கோட்பாடாக விளங்குகின்றது.

சங்க காலத்தில் அறம் தவற வேண்டாம் என்ற நிலைப்பாடு இருந்தது. சங்கம் மருவிய காலத்தில் அறத்தினால் வரும் நன்மைகள் கருதி அனைவரும் அதனைச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தது. ஆனால் அறமே முதல், அதுவே அரசியலின் அடிப்படை. அதுவே தலையாய கோட்பாடு, அதனை மீறினால் அழிவு உறுதி என்ற நிலையில் அறத்தைக் கோட்பாடாகக் காட்டிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்.  அறத்தின் வலிமையை, அறத்தின் வழி அரசியல் தூய்மையை மக்களுக்குக் காட்டிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்.

அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கும் காப்பிய இலக்கணம் என்றால் சிலப்பதிகாரம் அதனையும் ஏற்றுக் கொண்டு தனக்கான மூன்று இலக்குகளையும் நிர்ணயித்துக் கொள்கிறது. அறம் பொருள் இன்பம் வீடு என்பன பொது நிலைப்பாடு என்றாலும் அறம், கூற்று, பத்தினியை ஏற்றல் ஊழ்வினை வலிமை போன்ற மூன்று கருத்துகளும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் சிறப்ப நிலைப்பாடுகளாக விளங்குகின்றன.

பதிகம் என்பது  காப்பியத்தின் தொடக்கப் பகுதியாக அமைகின்றது. காப்பியம் முழுவதும் அக்கோட்பாடு விளக்கம் பெற்று நிறைவில் அக்கோட்பாடே தலையாயது என்ற நிலையில் அறக்கோட்பாடுகளைக் கட்டளைகளாகவே தருகிறார் இளங்கோவடிகள்.

காப்பியக் கருப்பொருளின் முதல் கருத்தாக விளங்கும், அறம் தலை நிறுத்தல் காப்பியத்தின் நிறைவடிகளிலும் விளக்கம் பெற்றுள்ளது.அறம் என்றால் என்ன, அதனை எவ்வாறு செய்தல் வேண்டும் என்பதெல்லாம் அதனுள் சொல்லப்பெற்றுள்ளன.

‘பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்

தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்

பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின்

ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்

தானஞ் செய்ம்மின் தவம்பல தாங்குமின் 190

செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்

பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்

அறவோ ரவைக்களம் அகலா தணுகுமின்

பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்

பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்

அறமனை காமின் அல்லவை கடிமின்

கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்

வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்

இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா

உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது

செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்

மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென்”

என்ற இந்தக் கட்டளை வாசகங்கள் இளங்கோவடிகளின் அறக்கோட்பாட்டு நெறிகளாக விளங்குகின்றது. இக்கட்டளைகளில் பொதுமை அறம் குறிக்கப்படுகிறது. உலக மக்களுக்கான பொதுமை அறம் குறிக்கப்பெற்றுள்ளது. எம்மதம் சார்ந்தோ, எவ்வினம் சார்ந்தோ, எம்மொழி சார்ந்தோ இவ்வறங்கள் சொல்லப்படவில்லை. இளங்கோவடிகள் உலக மக்களுக்குத் தம் காப்பியம் இவ்வறங்களைத் தான் உலக நலத்திற்காக முன்வைக்கிறது என்பதைக் காட்டும் அறவுரைகள் இவையாகும்.

இவ்வறத்தின் உண்மையைப் புரிந்து கொண்டுச் சிலப்பதிகாரக் காப்பியத்தினைக் கற்க முயலும் ஒருவன் இவை அனைத்தும் சிலப்பதிகார அடிகள் அனைத்திலும் எதிரொலிப்பதை உணர இயலும்.

Siragu silappadhigaaram1பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்

பிறருக்குக் கவலைகளையும், துன்பங்களையும் விளைவிக்கும் செயல்களைச் செய்யாது தவிர்த்திடுக என்பது இளங்கோவடிகள் உலக மக்களுக்கு சொல்லும் முதல் அறக் கருத்து.  இந்த உலகியல் வஞ்சமும், பொய்மையும், அழிப்பதற்காக திட்டமிடலும் நிமிடங்கள் தோறும் நடைபெற்று வருவதை அறிந்து கவலையில்லா வாழ்வைத் தாம் வாழவும், பிறர் வாழவும் பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நிலையை இவ்வறக் கருத்து உணர்த்துகிறது. நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்ற சங்க இலக்கிய அறம் இங்குக் கவலைகளை ஒழிக்கவும் துன்பங்களைக் களையவும் பயன்படுகிறது.  பொற்கொல்லன் கோவலன் என்பவனுக்குத் துன்பங்களைச் செய்யத் திட்டமிடுகிறான். அவனின் திட்டமிடுதலே எக்குற்றமும் செய்யாத கோவலனைப் பலி கொள்கிறது. கோவலனின் இழைக்கப்பட்ட துன்பம் அவனின் குடும்பத்தை, அரசனின் குடும்பத்தை, மதுரைக் குடும்பங்களை அழித்து விடுகிறது. பிறருக்கு நன்மை செய்யும் பாங்கே உலக மக்கள் நிலைத்து மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான வழியாகும்.

தெய்வம் தெளிமின்

தெய்வம் பலப்பல என்று சொல்லித் திரியும் மனிதர்களைப் பார்த்து எது தெய்வம் என்று தெளிந்து அத்தெய்வத்தை அடையுங்கள் என்ற கருத்தினை இளங்கோவடிகள் முன்வைக்கிறார். தெய்வம் பலப்பலச் சொல்லி அலையும் அறிவிலிகாள், சுத்த அறிவே தெய்வம் என்று மகாகவி பாரதியார் காட்டும் வழி இதன் மரபுத் தொடர்ச்சியே ஆகும். உண்மையான தெய்வத்தைத் தெளிந்து அது உண்டென எண்ணும் எண்ண  வலிமை வேண்டும் என்கிறார் இளங்கோவடிகள்.

தெளிந்தோர் பேணுமின்

தெளிவாக தெய்வம் இதுதான் என்று அறிந்தவர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்கள். அவர்களைக் கண்டு, அவர்களின் சொற்கள் கேட்டு, அவர்கள் பதிந்த அறவுரைகளை மனதில் ஏற்று வாழ்தல் வாழ்க்கையின் தலையாய அறமாகின்றது.

பொய்யுரை அஞ்சுமின்

மனதின் தூய்மையே அறம். மனதில் தீமையே பொய். பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை நன்று. பொய்மையே உலக அழிவுகளுக்குக் காரணம். பொய்யே மனிதர்களிடத்தில் போலித்தன்மையை உருவாக்குகின்றது. பொற்கொல்லனின் பொய்யே பாண்டியப் அரசின் அழிவிற்குக் காரணம் ஆகின்றது.

புறஞ்சொல் போற்றுமின்

புறங் கூறும் பண்பு தவறானது. மற்றவர்களைப் பற்றிய செய்திகளை, கருத்துகளை, விமர்சனங்களை அவர்கள் இருக்கும்போதே உரைக்க வேண்டும். அவர்கள் சென்றபின் உரைப்பது என்பது புறஞ்சொல் போற்றாத தன்மையாகின்றது. மற்றவர்களைப் பற்றிய செய்திகளைப் பகிரும்போது அறம் தேவை. அளவுக்கு அதிகமாக கெடுதாலான சொற்களைக் கொண்டு ஒருவரை விமர்சிக்கும்போது புறஞ்சொல் தன் தூய்மையை இழக்கிறது. மதிப்புகளை குறைக்கிறது. மனித மதிப்புகள் மற்றவர்களிடத்தில் ஏற்படவேண்டுமானால் புறஞ்சொல்லில் தூய்மை வேண்டும்.

கோவலனைப் பற்றி அவன் அறியாமலேயே அவனைத் திருடன் என்று முடிவு செய்ய வைப்பது பொற்கொல்லனின் தீமையான புறஞ்சொற்களே.  அவற்றை அவன் கோவலன் முன்னிலையில் சொல்லியிருந்தாலோ, ஒரு அவையத்தின் முன் சொல்லியிருந்தாலோ பொய் என்பது புலப்பட்டிருக்கும். எனவே தனி மனித அழிவுக்கும், ஒரு நாடு அழிதற்கும் காரணம் புறச்சொற்களைக் காக்காமையே ஆகும்.

ஊண் உண் துறமின்

மனித உயிர்களிடத்தில் மட்டும் இல்லாது உலகின் அனைத்து உயிரினங்களிடத்திலும் அன்பு செய்தல் வேண்டும். பிற உயிர்களைத் தம் உயிர் போல் காக்க வேண்டும். அவை இன்னலுறும் போது அவ்வின்னலைத் துடைக்க கண்களும், கரங்களும், மனமும் உதவ வேண்டும். பிற உயிர்களை நேசிப்பவரால் உயிர்க்கொலை புரிய முடியாது. கொலை செய்யப்பட்ட உயிரினங்களை உண்ண இயலாது. உலக மக்கள் அனைவரும் ஊண் உண்ணாமல் இருக்கும் நிலையில் உயிர்க்கொலையே உலகில் இல்லாமல் மறைந்துவிடும். எவ்வுயிரும் துன்பமுறாது. இதனால் கொல்லாமை என்ற அறத்தை உலக அறமாகக் காட்டுகிறார் இளங்கோவடிகள்.

உயிர்க்கொலை நீங்குமின்

தன்னால் ஓர் உயிரினம் கொலை செய்யப்பட்டது என்பது யாருடைய வாழ்விலும், எதனுடைய வாழ்விலும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று கருதுகிறார் இளங்கோவடிகள். பொற்கொல்லன் செய்த தவற்றினால் கோவலன் உயிர்க்கொலைச் செய்யப் பெறுகிறான். அவன் கள்வன் அல்லன் அவனுடைய முகக்குறிப்பு உணர்த்தினாலும் அவன் கள்வனாகவே கருதப்பட்டு உயிர்க்கொலை செய்விக்கப் பெறுகிறான். உயிர்க்கொலை என்பது தண்டனையாகாது. அது பாவத்தின் தொடர்ச்சி. ஒருவனைக் கொல்லும் உரிமை யாருக்கும் எவராலும் வழங்கப்படவில்லை. எனவே உயிர்க்கொலை நீங்குதல் உலக அறங்களில் சிறந்தது என்கிறார் இளங்கோவடிகள்.

தானம் செய்மின்

உலக மக்களிடம் இளங்கோவடிகள் வைக்கும் அறம் சார்ந்த வேண்டுகோள் தனாம் செய்யுங்கள் என்பது. எவ்வெவ்வழிகளில் எல்லாம் தானம் செய்ய இயலுமோ அவ்வவ்வழிகளில் எல்லாம் தானம் செய்யுங்கள் என்கிறார் வள்ளுவர். செல்லும் வாயெல்லாம் செயல் என்ற அவரின் கருத்துக்கு ஏற்ப தானங்கள் நடைபெறவேண்டும். அறிவு தானம், உணவுதானம், கண்தானம், உடல் உறுப்பு தானம் இவை உயிர்களை மீட்டெடுக்கின்றது. அழிகின்ற உயிர்களை அழியாமல் காக்கின்றன. தர்மம் தலை காக்கிறது. தலையை மட்டும் இல்ல்hமல் உடல் உறுப்பு தானம் அனைத்து உயிர்களையும் காக்கிறது. எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் தானம் செய்யும் நன்முறையை உலகம் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் இதனை உலக  அறமாகக் கொள்கிறார் இளங்கோவடிகள்.

தவம் பல தாங்குமின்

தவம் செய்வர்கள் காலந்தோறும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களையும் அவர்களின் தவத்தையும் தாங்கி நிற்றல் மக்களின் கடமையாகும். தவத்தோர் ஒரு பொருள் குறித்து உன்னதத்ததுடன் அதனை நோக்கியே தன் நினைவுகளைச் செலுத்துகின்றனர். தன்னலமற்று உண்மையைத்தேடி உழைக்கின்றனர். கோவலனுக்கும், கண்ணகிக்கும் வாழ்க்கையில் தாழ்வு வருகையில் தவத்தவராகிய கவுந்தியடிகள் பக்க துணையாக இருக்கிறார். கோவலன் கண்ணகி இருவருக்கும் அவரும், அவருக்கு இவ்விருவரும் வாழ்வில் பற்றும் துணையாகின்றனர். ஞான வாழ்க்கையை அடைய விரும்பும் அனைவரும் தவம் செய்வாருடன் தொடர்பில் இருப்பதும் அவர்களைத் தாங்குதலும் வேண்டும் என்ற சிலப்பதிகார வேண்டுகோள் உலகின் நன்மை கருதியதே ஆகும்.

செய்ந்நன்றி கொல்லன்மின்

செய்த நன்றியை மறக்காத தன்மை மனிதருக்குக் கட்டாயம் வேண்டும். நன்றி மறப்பது நன்றன்று. நன்றல்லது அன்றே மறப்பது நன்று. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டு. செய்ந்நன்றி கொன்றவருக்கு உய்வு இல்லை. எனவே நன்றியை மறக்காத தன்மை வேண்டும். ஒருகாலத்தில் நன்றி பெற்றவர் மறந்த காலத்தில் அவரிடத்தில் சென்று நான் இந்நன்றியை உனக்குச் செய்தேன் என்றுச் சொல்லிக்  காட்டலும் செய்ந்நன்றி கொல்லலே ஆகும். நன்றியை செய்த அன்றே செய்தவர் மறக்கவேண்டும். பெற்றவர் என்றும் மறக்கக் கூடாது. நன்றி செய்தவர்க்கு அன்றே மறக்கும் தன்மையும், நன்றி பெற்றவர்க்கு என்றும் மறக்காத தன்மையுமே செய்நன்றி அறிதல் ஆகும்.

தீ நட்பு இகழ்மின்

நட்பு என்பது உலக உன்னதங்களில் ஒன்று. நல்ல நட்பு என்பது உயிர் காக்கும். தீ நட்பு என்பது உயிர் போக்கும். நட்பில் அன்பு இருக்க வேண்டும். கரவு இருத்தல் கூடாது. நட்பினைக் காசாக்கும் உலக நடைமுறை இப்போது பெருகி விட்டது. ஒருவரிடம் நட்பு கொள்வது என்பது இது கிடைக்கும் என்பதற்காக என்று அமையக் கூடாது. மாறாக கைம்மாறு கருதாத நட்பாக அது அமையவேண்டு;ம். கைமாறு கருதும் நட்பு தீ நட்பாகிறது. துன்பம் வரும்போது விலகும் நட்பு தீ நட்பாகிறது. இந்நட்பினை நேருக்கு நேராக இகழ்தல் வேண்டும் என்கிறார் இளங்கோவடிகள்.

பொய்க்கரி போகன்மின்

பொய் சாட்சி சொல்லாது இருப்பது அறங்களுள் சிறந்தது என்கிறார் இளங்கோவடிகள். பொய் சாட்சிக்கு மனிதர்கள் மட்டுமல்ல அஃறிணை பொருட்கள் கூட துணை போகலாம்.  மாணிக்கச் சிலம்பு பொய் சாட்சிக்கு துணை போனதால் உடைபட்டு நிற்கிறது. தான் உடைபட்டதும் அல்லாமல், தன்னைக் கொண்டு நீதி சொன்ன அரசனையும் அது உடைத்துப் போடுகிறது. ஆனால் பொய்சாட்சியாகச் சிலம்பினைக் கொண்டுவந்தவன் கண்ணகி மதுரையை எரித்தபோதுதான் இறந்திருக்க முடியும். எனவே பொய்சாட்சிக்கு  காலம், இடம், பொருள், மனிதர் எதுவும் இலக்காக முடியும். இவற்றை மனிதன் தன் நன்மைக்காக தன் சுயநலத்திற்காக பயன்படுத்தாக நிலை வேண்டும் என்று இளங்கோவடிகள் கருதுகிறார்.

பொருள்மொழி நீங்கன்மின்

உண்மையான மொழிகளை கைவிட்டு நீங்கக் கூடாது. உலக உண்மைகளை ஏற்று நடக்க வேண்டும்.

அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்

சான்றோர்களின் நட்பு சிறந்தது. குறிப்பாக சான்றோர்கள் உள்ள அவைக்களத்தினை அகலாது அணுக வேண்டும். அறங்கள் உரைக்கும் அவைக்களத்தவர்களின் தொடர்பு நன்மையைப் பயக்கும். அறம் சார்ந்த அவைகள் சிலப்பதிகார காலத்தில் இருந்தன என்பது இதனின்று தெரியவருகிறது.

பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்

அறவோர் அல்லாத பிறரின் அவைக்களத்திற்குச் சென்று சேறுதல் கூடாது. அறமல்லாத நிலையில் எதையும் மறத்தால் அடைந்துவிடலாம் என்று எண்ணுவோர் அவைக்களத்திற்குச் சென்றுவிடக் கூடாது. இதனால் பல தீமைகள் நேரும்.

பிறர் மனை அஞ்சுமின்

மற்றவரின் மனைவியை நேசிக்கக் கூடாது. அவரகளுடனான நட்பு, காதல், காமம் விலக்கப்பட வேண்டும். பிறன் மனை நோக்காப் பேராண்மை என்று இதனை வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

பிழை உயிர் ஓம்புமின்

துன்பமுறும் உயிர்களைக் காத்தல் என்பதும் அறமாகும். ஆற்றுதல் என்பது அலர்ந்தார்க்கு உதவுதல் என்கிறது கலித்தொகை. உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் சொட்டுதடி என்ற பாடுகிறார் பாரதியார். துன்பப்படும் உயிர்களுக்காக அவ்வுயிர்களின் துன்பம் போக்குவதற்காக செயல்படுவது அறமாகின்றது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் இப்பாங்கே அறமாகும்.

அறமனை காமின்

அறத்துடன் வீடுகள் வாழ வேண்டும். வீடுகளில் உள்ள அறங்களையும் காத்தல் வேண்டும். பெற்றோரைக் காத்தல், இல்லத்தாரைக் காத்தல், உறவினரைக் காத்தல், துறவோரைக் காத்தல் என்று அறமனை காப்பு விளங்குகிறது.

அல்லவை கடிமின்

அறம் அல்லாதனவற்றை விலக்கிட வேண்டும். எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் தீயவைகளை கடிந்த நன்மைகளை பெருகிடச் செயலாற்ற வேண்டும்.

கள்ளை ஒழிமின்

மனிதனை விலங்கு நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் கள்ளை ஒழித்திடுக. அதனை உண்ணாமல் தவிர்க்க.

களவு ஒழிமின்

மற்றவர்களுக்கு உரிய பொருள்களின் மீது ஆசை கொள்ளாது அதனை அடையவேண்டும் என்ற எண்ணம் இல்லாது தூய்மையான மனதுடன் வாழ வேண்டும்.

காமம் ஒழிமின்

நுகர்வின்பம் தரும் காமமும் ஒரு நிலையில் விலக்கப்பட வேண்டியதே ஆகும். முறையற்ற காமம், அளவற்ற காமம், அணுதினமும் காமம் போன்றன களையப்பட வேண்டியனவாகும்.

பொய் ஒழிமின்

பொய் சொல்லுதலை ஒழிக்க வேண்டும். ஒரு  பொய் பல பொய்களுக்கு வழி வகுக்கின்றது. பின்பு வாழ்வே பொய்யாகிக் போகின்றது. இதன் காரணமாக பொய்யைத் தவிர்த்தல் அறமாகின்றது.

வெள்ளைக் கோட்டி ஒழிமின்

பயனற்ற சொற்களைச் சொல்லுதலை ஒழிக்க வேண்டும் என்கிறார் இளங்கோவடிகள். இதன் காரணமாக சொற்கள் பயனுள்ளவையாகவும், செயல்கள் பயன்தருவனவாகவும் அமையும்.

விரகினில் ஒழிமின்

சூழ்ச்சியையும் ஒழிக்க வேண்டும். பிறன் வாழப் பொறுக்காத நிலையில் அவனைக் கீழிறக்கச் செய்யும் சூழ்ச்சியையும் விடுத்து வாழ வேண்டும் என்பது இளங்கோவடிகளின் இனிய அறம்.

இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா

நிலையாமை என்ற இயல்பினை மக்கள் உணர வேண்டும். செல்வம், இளமை, உடல்நிலை ஆகியன நிலையில்லாதன. நிலையில்லாத இவற்றை ஒழித்து நிலையானவற்றை எண்ணி வாழ்க்கையை நடத்த வேண்டும்.

உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது ஆகலான் செல்லும் தேஎத்துக்கு  உறுதுணை தேடுமின்

இவ்வுலகில் உயிர்கள் எத்தனை நாள்கள் வாழப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது. இந்த உயிர் இறந்தபின் எங்கு செல்லும் என்பதும் யாருக்கும் தெரியாது. இந்த உயிர் உடலை விட்டு நீங்கியபின்  மற்றொரு தேசத்திற்குச் செல்லும் என்று நம்பும் நிலையில் அத்தேசத்திற்குச் செல்வதற்கு உரிய உறுதுணைகளைத் தேடிக்கொள்ள வேண்டும். உயிருக்கு நிறைவு வரை உறுதுணையாக அமையப் போவது எதுவமில்லை.அறம் ஒன்றுதான் உயிர் செல்லும் இடங்களிலுக்கு எல்லாம் துணையாகச் செல்லப் போவது. எனவே அறத்தினைச் செய்து உயிர்க்கு துணையாக்கிக் கொண்டால் அதுவே மக்களுக்கு நன்மையைத் தருவதாகும்.

இவ்வாறு சிலப்பதிகாரக் காப்பியத்தின் வரந்தருகாதையான நிறைவுப்பகுதி இளங்கோவடிகளால் அறங்கூறும் பகுதியாக அமைக்கப்பெற்றுள்ளது. காப்பியத்தைப் படித்து முடிப்போர் நெஞசில் ஆழமாக இவ்வறங்கள் பதிந்திட இப்பகுதி பெரிதும் உதவுகின்றது.

இவ்வறங்கள் திருக்குறள் கருத்துகளின் பிழிவாக அமைந்திருப்பதையும் உணரமுடிகின்றது. திருவள்ளுவர் சொன்ன அதிகாரக் கருத்துகளை ஒவ்வொரு தொடரில் அமைத்துச் சிலப்பதிகாரம் அறங்களைத் தெளிவு படுத்தியுள்ளது. பின்வரும் பட்டியல் திருக்குறள் காட்டும் அதிகாரங்களுடன் இக்கருத்துகளை ஒப்பு நோக்கிக் காண்கிறது.

எண் சிலப்பதிகாரக் அறக்கருத்துத் தொடர் தொடர்புடைய திருக்குறள் அதிகாரத் தலைப்பு 
1 தெய்வம் தெளிமின் கடவுள் வாழ்த்து 
2 தெளிந்தோர் பேணுமின் நீத்தார் பெருமை
3 பொய்யுரை அஞ்சுமின் வாய்மை
4 புறஞ்சொல் போற்றுமின் புறங் கூறாமை 
5 ஊண் உண் துறமின் புலால் மறுத்தல்
6 உயிர்க்கொலை நீங்குமின் கொல்லாமை
7 தானம் செய்ம்மின் இல்வாழ்க்கை
8 தவம் பல தாங்குமின் தவம்
9 செய்நன்றி கொல்லன்மின் செய்ந்நன்றி அறிதல்
10 தீ நட்பு இகழ்மின் கூடா நட்பு
11 பொய்க்கரி போகல்மின் நடுநிலைமை
12 பொருள் மொழி நீங்கல்மின் பயனில  சொல்லாமை
13 அறவோர் அவைக்களம் அணுகாது அணுகுமின் பெரியாரைத் துணைகோடல்
14 பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின் சிற்றினம் சேராமை
15 பிறர்மனை அஞ்சுமின் பிறனில் விழையாமை
16 பிழை உயிர் ஓம்புமின் ஒழுக்கம் உடைமை
17 அறமனை காமின் இல்வாழ்க்கை
18 அல்லவை கடிமின் குற்றம் கடிதல், தீவினை அச்சம்
19 கள் ஒழித்தல் கள்ளுண்ணாமை
20 களவு ஒழிதல் கள்ளாமை
21 காமம் தவிர்த்தல் வரைவில் மகளிர்
22 வெள்ளைக் கோட்டி ஒழிதல் பயனில சொல்லாமை

இவ்வாறு இருபத்தியரண்டு அறங்களும் திருக்குறள் ஓர் அதிகாரத்தில் சொன்னவற்றை ஓரடியால் சொல்லும் நிலையில் அறத்தினைக் கூர்மைப் படுத்தி உரைத்துள்ளார் இளங்கோவடிகள்.

மேலும் நிறைவான அறமான

                                இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா

                                உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது

                                செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்

                                மல்லன்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு என்”

என்ற பகுதியை

                                வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின்  அஃது ஒருவன்

                                வாழ்நாள் வழிஅடைக்கும் கல்

என்ற குறளுடன் ஒத்து அமைவதாக உள்ளது. இவ்வகையில் உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளின் அறக்கருத்துகளின் வழிப்பட்டு தேர்ந்த அறங்களைச் சிலப்பதிகார ஆசான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் நிறைவில் வழங்கியுள்ளார் என்பதை உணரமுடிகின்றது.

இதுகுறித்து “சிலப்பதிகாரம் மழையை வாழ்த்தும் வான்சிறப்பில் தொடங்கிற்று. இடையிடையே திருக்குறளின் கருத்துக்களைப் பல நிகழ்ச்சிகளிலே அமைத்துக் காட்டிற்று. இறுதியிலே திருக்குறளிலே உள்ள பல அதிகாரங்களின் கருத்துகளை அறவுரைகளாகத் தொகுத்துக் கூறிற்று. முடிவில் பிறவா நெறிக்கு வழிகாட்டும். வீழ்நாள் படாஅமை என்னும் அருமைக் குறளின் பொருளைக் கொண்டு முடிந்தது”  என்று திருக்குறளின் கருத்துகளுடன் சிலப்பதிகாரம் இணைந்து செல்லும் முறைமையைக் காட்டுகிறார் சாமி. சிதம்பரனார்.

இளங்கோவடிகள் காப்பியத்தின் நிறைவில் அறங்களைச் சுட்டியிருப்பது குறித்து “இளங்கோவடிகள் இக்காப்பியத்தின் தெளிபொருளாகவுள்ள அறங்களை உலகத்தாருக்குக் கூறி இதனை முடித்திருப்பது அவர்க இதனை இயற்றியதன் குறிக்கோளை இனிது புலப்படுத்தும்”   என்று கருத்துரைக்கிறார் ந. மு. வேங்கடசாமி நாட்டார். இதன்வழி அறங்களை, அறக்கோட்பாடுகளைத் தலையாயதாகக் கொண்டு சிலப்பதிகாரக் காப்பியம் தொடங்கி  அவற்றையே வலியுறுத்தி முடிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.

———————————————————————————————————————-

  இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், பதிகம், அடி 55-60
இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், வரந்தரு காதை, அடிகள் 186- 202
திருவள்ளுவர், திருக்குறள், குறள். 38
சாமி சிதம்பரனார், சாமி சிதம்பரனார் நூற் களஞ்சியம், ப. 194
ந.மு. வேங்கடசாமி நாட்டார்(உரையாசிரியர்), சிலப்பதிகார உரை ப. 161


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிலப்பதிகார முப்பொருள்”

அதிகம் படித்தது