மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிலை வழிபாடு இறைவனுக்கு உகந்ததா? (பகுதி- 29)

முனைவர். ந. அரவிந்த்

Oct 23, 2021

உலக நாகரிகங்களில் மிக பழமையானவை பாபிலோனிய, எகிப்து மற்றும் சிந்து நாகரிகங்கள் என வரலாறு கூறுகிறது. இவைகள் அனைத்திலும் ஆரம்ப காலகட்டங்களில் நூற்றுக்கணக்கில் தெய்வங்களை வணங்கினார்கள். சிலை வழிபாடும் மிக பிரபலமாக இருந்துள்ளது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் வளைகுடா, எகிப்து மற்றும் பாபிலோனிய நாகரிகங்களின் தற்போதைய பகுதிகளில் சிலை வழிபாடு அறவே இல்லை மற்றும் அவர்கள் அனைவரும் ஒருவனே இறைவன் என்பதையும் பின்பற்றுகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டின் நிலைமை இன்று தலைகீழாக உள்ளது. மூலை முடுக்கெல்லாம் சிலைவழிபாடு தலைவிரித்தாடுகிறது. கிமு 3000 ல் திருமூலர் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று பாடல் 2104 ல் பாடியுள்ளார். இந்தியாவில் முக்கியமாக தமிழ்நாட்டில், இதுவரை தோண்டப்பட்ட பழங்கால நாகரிகங்களில் முக்கியமானவைகள் கீழடி, கொற்கை, ஆதிச்ச நல்லூர் மற்றும் சிவகளை ஆகும். கி.மு.வில் தோன்றிய இந்த நாகரிகங்களில் ஒரு இடத்தில்கூட எந்த ஒரு தெய்வத்தின் அல்லது இறைவனின் சிலையும் இல்லை. இதிலிருந்து, ஆதியிலிருந்து சங்க காலம் வரை தமிழர்கள் சிலை வழிபாடு செய்ததில்லை என்று தெரிகிறது. கி.பி.யில் ஆரியர்கள் சிலை வழிபாட்டினை திணித்தினர் என்று வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன.

இன்று தமிழகத்தில் நூற்றுக்கணக்கான தெய்வங்களுக்கு சிலை வடித்து வணங்குவது வழக்கத்தில் உள்ளது. இதைவிட இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் தங்களை தாங்களே தெய்வங்கள் என்று கூறிக்கொள்கின்றனர். அவர்கள் பின்னாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.

சிலை வழிபாட்டினை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று இறைவன் பல சித்தர்களை வெவ்வேறு காலகட்டங்களில் நம் நாட்டிற்கு தந்துள்ளான். அவர்களில் முக்கியமானவர்கள் சிவவாக்கியர் மற்றும் வள்ளலார் ஆவார்கள்.

சிவவாக்கியர் என்பவர் ஒரு சித்தர். இவர் பதினெண் சித்தர்களில் ஒருவராக எண்ணப்படுகிறார். அவரது காலம், கி.பி.9 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் சிலை வழிபாட்டினைப்பற்றி கூறியுள்ள பாடல் ஒன்று வருமாறு:

நட்ட கல்லைத் தெய்வமென்று காலுபுட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொண் மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? – ⁠சிவவாக்கியர் பாடல் 520

இதன் அர்த்தம், நாம் ஒரு கல்லை நட்டு, அதை தெய்வம் என்று சொல்லிக் கொண்டு, பூக்களை அதற்கு சூட்டி, அந்த கல்லை சுற்றி வந்து, தான் நினைத்த காரியம் நிறைவேறுவதற்காக மந்திரங்களை சொல்லி, தனது காரியத்தை நிறைவேற்றச் சொன்னால் நட்ட அந்த கல் பேசுமோ?இறைவன் என்பவன் நமக்குள் இருக்கிறான். அவனை கல்லுக்குள் இருக்கிறான் என்று பேசச் சொன்னால் அந்த கல் பேசுமா?மேலும் சாப்பிடுவதற்காக சட்டியில் காய்கறிகளைப் போட்டு செய்யும் குழம்பு சுவையை சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் சட்டி எப்படி அறியாதோ, அதைப் போலவே தெய்வம் என்று நம்பி நட்ட கல் நம்முடைய உணர்வுகளை உணர்ந்து கொள்ள முடியாது என்கிறார். கடவுள் நம் உள்ளே இருக்கிறான் என்று உணராமல் கடவுளை கல்லில் தேடிக் கொண்டு அலையும் மனிதர்களின் செயல்களையே சிவவாக்கியர் கண்டிக்கிறார்.

நம் நாட்டினில், உருவ வழிபாடு வேண்டாம் என மக்களிடம் எடுத்துரைத்த மற்றொருவர் ‘திருவருட்பிரகாச வள்ளலார்’ என்று சிறப்பு பெயர் பெற்ற ‘இராமலிங்க அடிகளார்’. இவர், அக்டோபர் 5, 1823ல் பிறந்த ஓர் ஆன்மீகவாதி ஆவார். வள்ளலார் தன்னுடைய தாய்மொழியான தமிழ்மொழி மீது தாளாத பற்று கொண்டிருந்தார். வள்ளலார் பல பாடல்களையும் ‘திரு அருட்பா’ உட்பட பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். அதன்படி, வள்ளலார் சிலை வழிபாட்டை நிராகரித்துள்ளார் என்று தெரிகிறது. உருவமற்ற வழிபாடு, மத மறுப்பு கொள்கையால் அவருக்கு பல எதிரிகள் உருவாகினர். அவருக்கு எதிராக அவர்கள் பிரசாரத்தை துவங்கினர். வள்ளலாரின் “திரு அருட்பா’ வை அவர்கள் “மருட்பா’ என வர்ணித்தனர். அவருக்கு எதிராக தமிழறிஞர் ஆறுமுக நாவலர் என்பவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் அவதூறு வழக்கை, 1869 ம் ஆண்டு தாக்கல் செய்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு எதிராக சிலர் செயல்பட்டதை இது காட்டுகிறது.

அவர் உருவாக்கிய வழிபாட்டுத் தலத்தில் விக்கிரகம் எதுவும் இருக்கக் கூடாது என்றும் ‘ஜோதி வழிபாடு’ மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அந்த விளக்குக் கூட தகரத்தினால் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி, அந்த வழிபாட்டு தலங்களில், நிரந்தரமான பூசாரி யாரும் இருக்கக் கூடாது என்றும், வயதில் மிக இளையவர் அல்லது முதியவர் அன்றன்று ஜோதியை ஏற்ற வேண்டும் என்றும் வள்ளலார் வகுத்திருந்தார். அவர் காலத்திலேயே சிலர், சபையில் லிங்கம் வைத்து அதை ஒரு கோவில் போல உருவாக்க முயன்ற நிலையில், சபையினை பூட்டி சாவியை எடுத்துச் சென்றுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

siragu silai vazhipaaduஅருட்பெரும் ஜோதி

பண்ரூட்டியில் வாழ்ந்த வள்ளலாரின் பக்தரான ஒரு ஓவியர், வள்ளலாரின் உருவத்தைச் சித்திரமாகத் தீட்டிக்கொண்டு வந்து, அதனை அவருடைய கைகளில் கொடுத்தார். அந்தப் படத்தை பார்த்த வள்ளலார், அதனை கீழே போட்டுவிட்டார். தம்முடைய கொள்கைகளை மட்டுமே மக்கள் பின்பற்ற வேண்டும் மற்றும் சர்வ சமய சமரச நெறிகளில் மக்கள் ஒன்றுபட்டு ஆன்மீக வாழ்க்கை வாழ வேண்டும் என்று வள்ளலார் நினைத்தார். ஆனால், இறைவனுடைய அல்லது தன்னுடைய உருவத்தை மக்கள் போற்றுவதை அவர் ஒருநாளும் விரும்பவில்லை.

இறைவன் வெறுக்கும் காரியங்களில் முதல் இரு செயல்கள் விபச்சாரம் செய்வதும், சிலை வழிபாடும் ஆகும். சிலை வழிபாடு மட்டுமின்றி இறைவனின் படைப்புகளை வணங்குவதையும் இறைவன் வெறுக்கிறார். சிலை வழிபாடும், இயற்கை வழிபாடுகளான சூரியன், சந்திரன், விலங்குகளை வணங்குதல் தவறு என்றும் அவைகள் இறைவனுக்கு விருப்பமானதை அல்ல என்றும் பல ஆகமங்களும் இறை தொண்டர்களும் கூறுகின்றனர். அவைகளின்படி, இறைவன் மனிதர்களை படைத்தான். அந்த மனிதனால் இறைவனை உருவாக்க முடியுமா?மனிதனுக்கு உருவம் தந்தது இறைவன். இறைவனுக்கு மனிதன் உருவம் கொடுக்க முடியுமா?அப்படியே காணாத இறைவனுக்கு கற்பனை உருவம் கொடுத்தால் அது இறைவனை அவமதிப்பதாகாதா?

இந்த கணினி காலத்திலேயே கண்ணால் பார்க்கக்கூடிய ஒரு நபர் இறந்து போனால், அவரைப்போல் ஒரு சிலை வடிக்க முடியவில்லை. அப்படியே செய்தாலும் அது வேறு யாரோ போலுள்ளது. இப்படியிருக்கையில், காணாத இறைவனுக்கு எப்படி சிலை வடிக்க முடியும். இறைவனை கண்டவன் ஒருவனுமில்லை. இறைவனை தமிழில் ‘சிவன்’ என்றும், சமஸ்கிருதத்தில் ‘கர்த்தர்’ என்றும், இந்தியில் ‘பரமேஷ்வர்’ என்றும் ஆங்கிலத்தில் ‘லார்ட்’ என்றும் அரேபிய மொழியில் ‘அல்லா‘ என்றும் உலக மக்கள் அழைத்தாலும். இறைவன் ஒருவனே. இதனையே, மாணிக்கவாசகர், ‘தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்று பாடியுள்ளார். இதன் அர்த்தம் உலகம் அழைக்கும் இறைவனை தமிழர்களாகிய நாங்கள் ‘சிவன்’ என்று அழைக்கிறோம் என்பதாகும். ஆனால், ஒருவனும் சிவனாகிய இறைவனை கண்டதில்லை. இருந்தபோதிலும், இறைவனுக்கு மனிதன் உருவம் கொடுத்து அந்த உருவத்திற்கு சிலையும் வடித்து வணங்குகிறான்.

திருநெல்வேலியில் 1995 ம் ஆண்டில் என்னுடைய தொழில் நுட்பக் கல்லூரி ஆசிரியர் ஒருவர் சிலை வழிபாட்டின் அவசியம் பற்றி வகுப்பறையில் எடுத்துக் கூறினார். அவர் கூறிய காரணம், ‘சிறு குழந்தைகள் கல்வி பயிலும்போது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதை கை விரல்களை வைத்து எண்ண வேண்டுமென மழழையர் பள்ளியில் கற்றுத்தருவார்கள்.அதுபோல்தான், சிலையை காட்டி அதற்குள் இறைவன் இருக்கிறான் என்று கூறினால்தான் இறை நம்பிக்கை வரும்’ என்பதாகும்.

இதைப்பற்றி, சுமார் 12ஆண்டுகள் சென்ற பின்னர் சென்னையில் உள்ள என்னுடைய நண்பனிடம் உரையாடினேன். அதற்கு என் நண்பனின் கருத்து இதோ. சிறு குழந்தையாக இருக்கும்போது விரல்களைவைத்து கணக்குபோடும் குழந்தை வளர்ந்த பின்னர் அப்படி செய்வதில்லை. அவன் வளர்ந்த பின்னர், தன்னுடைய மூளையையும், நினைவாற்றலையும் பயன்படுத்தி பெரிய கணக்குகளையும் தீர்த்துவிடுகிறான். பொதுவாகவே, சிறுகுழந்தைகளுக்கு இறைவன் மீது நம்பிக்கை வருவதற்கு சிலை வழிபாடு உறுதுணையாக இருப்பது உண்மைதான். அதே நேரத்தில், இறைவன் என்று கருதப்படும் சிலையின்மீது ஒருவித ஈர்ப்பும் வரும். அந்த உருவமும் மனதில் பதிந்துவிடும். ஆனால், அவன் வளர்ந்த பின்னரும் சிலைக்குள்தான் இறைவன் இருக்கிறான் என்று நம்புவது வேடிக்கையானது. நாம் வளர வளர, இறைவனை நம் உள்ளத்திற்குள் கொண்டுவர வேண்டும். நம் உடலும் உள்ளமும் இறைவன் வாழும் கோயிலாக மாற வேண்டும். நாம் மீண்டும் மீண்டும் சிலைதான் கடவுள் என நினைத்தால், அது நாம் வளரவில்லை, இன்னும் சிறுபிள்ளையாகவே இருக்கிறோம் என்பதை காட்டுகிறது என்றான்.

விக்கிரக வழிபாடு என்பது சிலை வழிபாடு மட்டுமின்றி உருவங்கள், சித்திரங்கள் மற்றும் ஏதாவது ஒரு பொருளை இறைவனாக வணங்குவதை குறிப்பிடுகிறது. இதுபற்றி ஒரு அழகான தமிழ் கதை ஒன்று செய்தி தாளினில் வெளிவந்தது.

ஒரு மடாலயத்தின் வெளியே கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு முதியவரை, உள்ளே தங்கிக்கொள்ள அனுமதி கொடுத்திருந்தார் மடாலய நிர்வாகி. உள்ளேயும் குளிர் வாட்டி எடுத்தது. முதியவர் உறக்கம் வராமல் வெளியே வந்தார். மடாலயத்தின் பல பகுதிகளில் மரத்தால் செய்யப்பட்ட இறைவனின் சிற்பங்கள் இருந்தன. அவற்றை எடுத்து வந்த முதியவர், ஓரிடத்தில் குவித்தார். பின்னர் அவற்றிற்கு தீவைத்து, அந்தத் தீயில் குளிர்காயத் தொடங்கி விட்டார். சிலைகள் படபடவென வெடித்துச் சிதறி எரியும் ஓசை கேட்டு, அங்கு வந்தார் மடாலய நிர்வாகி.

அங்கு கண்டகாட்சி அவரை கோபம் கொள்ளச் செய்தது. என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறீர்?என்றார் ஆத்திரத்துடன். பார்த்தால் தெரியவில்லையா?, குளிர் காய்கிறேன். இறைவன் என் குளிரைப் போக்கிவிட்டார். அவர் கருணாமூர்த்தி அல்லவா?என்றார் முதியவர். நிர்வாகி கோபம் கொண்டார். என்ன உளறுகிறீர்கள்?தெய்வத்தை எரித்து குளிர்காய்கிறீர்களா?என்று பதறினார்.

முதியவரோ ஒரு குச்சியை எடுத்து நெருப்பில் உருவான சாம்பலை கிளறினார். அதைக் கண்ட நிர்வாகி, இப்போது என்ன செய்கிறீர்?என்று கேட்க, ‘நான் இறைவனின் எலும்புகளைத் தேடுகிறேன்’என்றார் முதியவர். மடாலய நிர்வாகிக்கு எரிச்சல் வந்தது, இதில் எப்படி எலும்பு இருக்கும்? என்றார் நிர்வாகி. நான் எரித்தது இறைவனை என்றால், அவரது எலும்புகள் இதில் இருக்க வேண்டுமே! என்று பதிலளித்தார் முதியவர். முதியவரின் பேச்சைக் கேட்ட நிர்வாகி, ‘இனி ஒரு கணமும் நீ இங்கே இருக்கக் கூடாது. தொலைந்து போ’என்று கூறிவிட்டு கதவை இழுத்து சாத்தினார்.

மறுநாள் காலையில் எழுந்து வெளியே வந்தார் மடாலய நிர்வாகி. அங்கு அந்த முதியவர், ஒரு மைல் கல்லின் முன்பாக அமர்ந்து, பூக்களை அதன் மீது தூவி வழிபட்டுக் கொண்டிருந்ததை கண்டார். நிர்வாகி அவரிடம் சென்று, ஏய் என்ன செய்கிறாய்?மைல் கல் என்ன இறைவனா?என்று கேட்டார்.

அதற்கு முதியவர், ‘மரம் இறைவன் என்றால், மைல் கல் இறைவனாகக் கூடாதா?நேற்று இரவு குளிர் காய்ந்தது, எனக்குள் இருக்கும் இறைவனைக் காப்பாற்றத்தான். நேற்றிரவு அவர் எனக்குள் நடுங்கிக்கொண்டிருந்தார். அதனால்தான் மரச் சிற்பங்களை எரித்தேன். ஆனால், ‘நீங்கள் அந்த உணர்ச்சியற்ற இறை சிற்பங்களுக்காக, உங்கள் உள்ளத்திற்குள் இருந்த உயிருள்ள இறைவனை வெளியில் துரத்தி விட்டீர்கள்’என்றார். மரத்திலும் கல்லிலும் இறைவன் இல்லை, உள்ளத்தினுள் உள்ளான் இறைவன் என்ற கருத்துடன் இக்கதை முடிகிறது.

இறைவன் தனக்கென ஒரு சிலைவடிக்க எந்த ஒரு பக்தனிடமும் கேட்கவில்லை. ஆனால், மனிதர்கள்தாம் பலபல உருவங்களை உண்டுபண்ணி தமக்குள் சண்டையிட்டு அழிகின்றனர். கோயிலில் கற்சிலை இருந்தால் அதனை இறைவனாக மனிதன் வணங்குகிறான். அதே சிலை வெளியே அருங்காட்சியகத்தில் இருந்தால் அது கலைப்பொருள், அதுவே சிற்பியின் கூடத்தில் இருந்தால் கல்.

இதேபோன்று ஒத்த கருத்தினை திருவிவிலியம், ஒரு பகுதியில், ‘மனிதர்கள் செய்யும் சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்’ என்று கூறுகிறது.

மற்றொரு பகுதியில் இறைவன், ‘வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி’,ஆனால், நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது?நான் தங்கியிருக்கும் இடம் எப்படிப்பட்டது?என்று கூறியுள்ளார். வானுலகில் இருக்கும் இறைவனுக்கு நாம் வாழும் பூமி கால் பாதம் வைக்கும் இடம் என்றால், இறைவன் எவ்வளவு உயர்ந்தவன்?அவனுக்கு சிலை வடிக்க ஒரு சிற்பியால் முடியுமா?ஆனால் நாம், நம் உயரத்தில் அல்லது அதைவிட சற்று சிறியதாக அல்லது உயரமாக ஒரு சிலை செய்துவிட்டு அதற்குள் இறைவன் இருக்கிறான் என்று அவனை ஒரு சிலைக்குள் அடைக்க நினைக்கிறோம். இது எப்படி நியாயம்?

இறைவன் மோசேயுடன் வந்த மக்களிடம் உருவ வழிபாட்டினைப்பற்றி மோசே மூலமாக கீழ்கண்டவாறு கூறினார். நீங்கள் சேர்ந்துவந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது. இறைவன் ஒரேபில் என்ற இடத்தில் மலைமேல் அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு உருவத்தையும் காணவில்லை. ஆகையால் நீங்கள் ஆண் உருவம், பெண் உருவம், பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவம், பறவையின் உருவம், ஊரும் பிராணியின் உருவம், தண்ணீரிலுள்ள யாதொரு மீனின் உருவமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவத்திற்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதிருங்கள். அதுமட்டுமின்றி, இறைவன் மக்களுக்காக படைத்த சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்களையும் வணங்காதபடி மிகவும் எச்சரிக்கையாயிருங்கள் என்றார்..

தொடரும்


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிலை வழிபாடு இறைவனுக்கு உகந்ததா? (பகுதி- 29)”

அதிகம் படித்தது