மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 22

கி.ஆறுமுகம்

Aug 16, 2014

subaash13-5இந்த திரிபுரா மாநாட்டில் தமிழகத்தில் இருந்து எஸ்.சீனிவாச ஐயங்கார், முத்துராமலிங்கத் தேவர், ருக்மணி லட்சுமிபதி, டி.செங்கல்வராயன், பக்தவச்சலம், யாகுப் ஹாசன், காமராஜர் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். படுத்த படுக்கையில் இருந்த நிலையிலேயே போசு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். அவர் உடல் அதிகமான காய்ச்சல் இருந்ததினால் நெற்றியில் ஈரத்துணியை மாற்றி மாற்றி வைத்தும் அருகில் விசிறியால் விசிறிக் கொண்டிருக்கும் இரண்டு சேவாதள பெண் தொண்டர்கள் இருந்தனர். இந்த நிலையிலும் கூட்டத்தில் விவாதம் அத்து மீறும் போது கட்டுப்படுத்திக் கொண்டு இரண்டு நாள் கூட்டத்தை நடத்தினார். பின் மேலும் உடல் நலம் குன்றியவுடன் கூட்டத்தை தமக்குப் பதிலாக மௌலானா அபுல்கலாம் ஆசாத்தை தலைமை வகிக்கும்படி கேட்டுக்கொண்டார் கூட்டம் நடக்கும் நாட்களிலேயே காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட செய்தி வந்தவுடன் போசு திரிபுரா காங்கிரசு மாநாட்டில் கலந்து கொள்ளும்படி தந்தி ஒன்றை அனுப்பினார். அதற்கு காந்தியின் பதில் தந்தி “மருத்துவர்களின் ஆலோசனையை நீங்கள் மீறலாம், என்னால் முடியாது” என்று இருந்தது. திரிபுரா மாநாட்டிற்கு மருத்துவர்கள் பலர் செல்லக்கூடாது என்று போசை எச்சரித்தும் அவர் காய்ச்சலோடு வந்து விட்டாராம்.

காந்தியின் உடல்நிலை பலவீனமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியதால் அதை மீறி அவரால் வரமுடியவில்லையாம் அதற்கு அர்த்தம் என்ன? காங்கிரசு மகாசபை பிளவுபடுவதைக் காட்டிலும் தம்முடைய உடல்நலத்தைப் பெரியதாக எண்ணிய சுயநலவாதியா காந்திஜி! என்று அவரது சீடர் பட்டாபி குறிப்பிடுகிறார். கூட்டத்தில் போசின் தலைமை உரையை அவரது அண்ணன் சரத் சந்திரபோசு படித்தார். அதன் விவரம் வருமாறு.

bosu 22-1தோழமையுள்ள தலைவர் அவர்களே, சகோதர சகோதரிப் பிரதிநிதிகளே என்னை மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுத்தற்கு நான் என் இதயத்தில் எழும் ஆழமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கூட்டத்தை நடத்த அதிகமான ஆடம்பரமான செலவுகள் செய்வதை குறைக்கும்படி நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இங்கு நல்ல சிக்கனமான முறையில் கூட்டம் நடந்தது மற்றும் அனைவரின் உபசரிப்பிலும் எந்த குறையும் இல்லாமல் இருந்தது. மிக்க மகிழ்ச்சி. இந்த மாநாடு மிகவும் சிறப்பு பெற்ற ஒன்றாக உள்ளது. காந்தியின் உண்ணாவிரத போராட்டம் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு தேர்தல் மிக பரபரப்பான சூழலில் நடந்து முடிந்துள்ளது. காரியகமிட்டி உறுப்பினர்கள் பன்னிரண்டு பேர் ராஜினாமா செய்துள்ளனர். நேரு நேரடியாக ராஜினாமா செய்யாவிட்டாலும் அதற்கு இணையான ஒர் அறிக்கையை வெளியிட்டுவிட்டார். காங்கிரசு தலைவர் உரையாற்ற முடியாமல் நோய்வாய்ப்பட்டிருக்கிறேன். 1938ல் ஹரிபுரா காங்கிரசு கூட்டத்திற்குப் பிறகு சர்வதேச அரங்கில் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளது. அதை கவனிக்கும் பொழுது ஐரோப்பாவிலும் சரி, ஆசியாவிலும் சரி பிரிட்டிசு தங்கள் பலமும் கௌரவமும் குறைந்த நிலையில் உள்ளது. இதில் சந்தேகமே இல்லை.

இந்த சூழல்களை சரியாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரிட்டிசு அரசுக்கு நாம் சிலமாத காலக்கெடு கொடுத்து நமது பூரண சுதந்திர கோரிக்கையை வைக்க வேண்டும். அந்த காலகட்டத்திற்குள் நமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை எனில் மீண்டும் நாம் கைக்கொள்ளக்கூடிய போராட்ட முறைகள் ஒத்துழையாமை அல்லது சத்தியாக்கிரகம்தான். இன்றைய நிலையில் பிரிட்டிசு அரசாங்கம் அகில இந்திய அளவில் நடக்கும் போராட்டம். எதையும் தாக்குப் பிடிக்கும் நிலையில் இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். பிரிட்டிசு ஏகாதிபத்தியத்தின் மீது ஒரு இறுதிப் பெரும் போராட்டத்தை தொடங்குவதற்கு இன்னும் காலம் கணியவில்லை என்று கருதும், தோல்வி மனப்பான்மை உடையவர்கள் பலர் நம்மிடையே இருப்பதைப் பார்க்கும் பொழுது எனக்கு எல்லையற்ற வேதனை உண்டாகிறது. நம் நாட்டில் காங்கிரசு பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது. நமது கருத்துக்களும் மக்களிடம் சிறப்பாக சென்றுள்ளது. இந்த நிலையில் நாட்டிலும் சரி, சர்வதேச நிலையிலும் சரி நமக்கு சாதகமான சூழல் உள்ள பொழுதே நமது பூரண சுதந்திரப்போராட்டத்தை நாம் தொடங்க வேண்டும். நாம் நமது சக்தியனைத்தையும் ஒன்றுபடுத்தி நம் பலம் அனைத்தையம் தேசியப் போராட்டத்தில் செலுத்தி பிரிட்டிசு ஏகாதிபத்தியத்தின் மீது தாக்குதல் தொடுத்தால், அதனால் திருப்பித் தாக்கவே முடியாது என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

ஒரு நாட்டின் வரலாற்றில் மிக அரிதாக வரும் இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த போராட்டத்தில் விவசாய மக்கள் மற்றும் நாட்டின் அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார் போசு. காந்தியின் ஆதரவாளர்கள் அனைவரும் இரவில் தத்தம் மாநில பிரதிநிதிகள் தங்கி இருந்த முகாம்களுக்குச் சென்று கூட்டம் போட்டு பேசி மறுநாள் காலையில் சிறப்பு ஆலோசனைக் கமிட்டி கூட்டத்தில் ஆலோசனைக்கு வர இருந்த பண்டித கோவிந்த வல்லபந்தின் தீர்மானத்திற்கு ஆதரவு தேடினார்கள்.

பண்டிதபந்தின் தீர்மானமானது.

காங்கிரசு தலைவர் தேர்தலில் ஏற்பட்ட பரபரப்பால் காங்கிரசிலும் நாட்டின் மக்களிடமும் தவறான கருத்துகள் நிலவுகிறது. இதனைப் போக்க காங்கிரசு தன் நிலையான பொதுவான நிலைபாடு என்னவென்று தெரிவிக்க வேண்டும். காந்தியின் தலைமையில் காங்கிரசு கட்சி வகுத்துக் கொண்ட அடிப்படைக் கொள்கைகளையே தொடர்ந்து பின்பற்றுவதென்றும், அதிலிருந்து சிறிதும் விலகவில்லை என்றும் இந்த காங்கிரசு மகாசபை கருதுகிறது. உறுதி அளிக்கிறது. பின் பழைய காரியகமிட்டி மீது முழுநம்பிக்கை உள்ளது, புதிய காரிய கமிட்டி உறுப்பினர்கள் மீது கூறப்படும் புகார்களுக்கு வருந்துகிறது. நெருக்கடி மிகுந்த இந்த ஆண்டில் காங்கிரசையும் தேசத்தையும் காந்திதான் வழிநடத்திச் செல்ல முடியும் என்று நம்புவதால் புதிய காங்கிரசு தலைவர் புதிய காரியகமிட்டி அமைக்கும் பொழுது காந்தியின் ஆலோசனையின் அவரின் நம்பிக்கைக்கு உரியவர்களை காந்தியின் விருப்பப்படி அமைக்கும் காரிய கமிட்டியை தலைவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த மகாசபை கோருகிறது.

இந்தத் தீர்மானத்தை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டும் என்று காந்தியவாதிகள் துடித்தனர், ஆதரவு திரட்டினர். கூட்டம் கூடியதும் 160 பேரின் கையெழுத்தோடு பந்தின் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதை போசே சபையில் கூறினார். பின் விவாதம் நடந்தது. பின் பண்டித பந்தின் தீர்மானம் சிறப்பு ஆலோசனைக் கமிட்டியிலேயே முன்மொழியப்பட்டிருக்க வேண்டும் என்றும் அப்படிச் செய்யாமல் அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டத்தில் முன்மொழியப்பட்டது தவறு என்று போசு சுட்டிக்காட்டி விதிமுறைகளுக்கு புறம்பானது என்று நிராகரித்துவிட்டார். ஆனால் பிற்பகலில் அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டத்தையே சிறப்பு ஆலோசனைக் கமிட்டியாகக் கூட்டி முன்மொழிய வழிசெய்து கொடுத்தார். சுபாசு சந்திரபோசின் ஜனநாயக உள்ளத்தைக் கண்டு அவரது ஆதரவாளர்கள் மனம் உருகினார்கள். பண்டிதபந்த் கூட்டத்தில், தேசமக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் காந்தியின் தலைமையை போசு மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.

bosu19-2காரியகமிட்டி உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததற்கு தலைவர் போசின் போக்கே காரணம் என்று பேசினார். அன்று கூட்டம் முடிந்தது மீண்டும் போசின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மறுநாள் அவர் கூட்டத்தில் இல்லை மீண்டும் பந்தின் தீர்மானம் பரிசீலிக்கப்பட்து. மௌலானா அபுல்கலாம் ஆசாத் தலைமை வகித்தார் தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது, தீர்மானம் வெற்றிபெற்றது. பம்பாயைச் சேர்ந்த கே.எப். நரிமன் என்ற காங்கிரசு தலைவர் போசின் உடல்நிலை கவலையளிப்பதாக உள்ளது. காங்கிரசு கட்சி, அகிம்சையும், சத்தியமும் அதன் கொள்கை என்கிறார்கள். போசு என்ன நமது எதிரியா? அவர் உடல்நலம் இல்லாத இந்த தருணத்தில் இப்படி தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம். அவர் உடல்நிலை சரியானதும் தீர்மானம் நிறைவேற்றலாம் என்று எவ்வளவோ உருக்கமாக கூறியும் காந்தியவாதிகளின் காதில் விழவில்லை. பின் தீர்மானம் நிறைவேறியது. இந்த செய்தியை போசு மறுநாள் படுத்தபடுக்கையிலிருந்தே கேள்விப்பட்டார். இறுதிவரை திரிபுரா காங்கிரசு முடிகின்றவரை காந்தி மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 22”

அதிகம் படித்தது